சீக்கியனை மட்டும் மன்னிப்பீர்கள்... தமிழனை மட்டும் தண்டிப்பீர்களா?: இயக்குநர் பாரதிராஜா கேள்வி


மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சே இனத்தை அழித்தீர்களா? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா? என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து வாரமிருமுறை வெளிவரும் ஜூனியர் விகடனுக்கு பாரதிராஜா வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

"இராமேஸ்வரம் போராட்டம் எப்படி இருந்தது?"

"இதுவரை நடிகர்கள் கலந்துகொண்ட நெய்வேலி போராட்டமாகட்டும், ஒகேனக்கல் போராட்டமாக இருக்கட்டும், காவேரிக்கான போராட்டமாக இருக்கட்டும்... அந்தப் பிரச்சினைகளின் உள்ளார்ந்த அர்த்தத்தையே புரிந்துகொள்ளாமல், தமிழ் மக்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறோமே என்ற உணர்வில் வெறும் ஷோ காட்டும் நிகழ்ச்சியாகத்தான் இதுவரை நடிகர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால், இது உணர்வு ரீதியான போராட்டம். எந்த நடிகரையும், நடிகையையும் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் யாரும் இராமேஸ்வரத்துக்கு வரவில்லை. இன உணர்வால் மக்கள் திரண்டார்கள். எனவே, இது மற்ற போராட்டங்கள் போல அல்ல. ஆக இது அரிதாரம் பூசாத, முழுக்க முழுக்க ஓர் இனப்போராட்டமாகவே நடந்தது."

"நடிகர் சங்கம் தனியாக உண்ணாவிரதம் இருந்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறதே..?"

"ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... இராமேஸ்வரத்தில் உணர்வு ரீதியாக நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றால், நம்முடைய சுயரூபம் தமிழக மக்களிடையே அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சம் நடிகர்களை ஆட்டிப்படைக்கிறது. அதேநேரம், 'வசதியாக' போராட்டம் நடத்த வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் வேறு வழியில்லாமல் தனியாக சென்னையில் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். நெய்வேலியில் போராட்டம் நடந்தபோதே எங்களுக்கு வசதி இல்லையென்று குறைபட்டுக் கொண்டவர்கள் இவர்கள்.

அங்கே ஈழ மண்ணில் அடக்கம் செய்யக்கூட ஆளில்லாமல், தமிழன் தினம்தினம் அநாதைப் பிணமாக குவிந்து கிடக்கிறான். அவனுக்காகப் போராட்டம் நடத்த இவர்களுக்கு கேரவன் வேன் வேண்டுமா? சொகுசுகள் வேண்டுமா? நடந்த போராட்டம் ஒரு விழா அல்ல... இழவு... துக்கம் விசாரிக்கும் ஒரு நிகழ்வு. துக்கச் செய்தியைக் கேள்விப்பட்டு நாமாகத்தான் செல்லவேண்டும். 'எனக்கு அங்கே வர வசதிக் குறைவா இருக்கு. அதனால் பிணத்தை என் வீட்டு வாசலுக்குக் கொண்டுவா. நான் அஞ்சலி செலுத்துகிறேன்' என சொல்வதுபோல இருக்கிறது இது.

மேலும், இது இன ஒற்றுமையைக் குலைக்கும் செயல்! இத்தனை தூரம் சொகுசு, வசதி பற்றியெல்லாம் பேசும் நடிகர்-நடிகைகள், பணம் என்றவுடன் ஒரு பாட்டுக்காக ராஜஸ்தான் சென்று பாலைவனத்தில் குத்தாட்டம் போடுகிறார்கள். அங்கே என்ன வசதி செய்து கொடுக்கிறார்கள்? ஆக... பணம், சொகுசு, வசதி வாய்ப்புகளுக்கு முன்னால் உணர்வை சாகக்கொடுத்தவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்? குறிப்பாக, உணர்வில்லாத தமிழ் நடிகைகளை நினைத்தால், ஆத்திரத்தில் மனசு ரொம்பவே வலிக்கிறது..."

"போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ரஜினி, கமல் உங்களிடம் பேசினார்களா?"

"எதுவும் பேசவில்லை. ஒருத்தரை 'உலகநாயகன்' என்கிறார்கள்! இன்னொருத்தரை 'சூப்பர் ஸ்டார்' என்கிறார்கள்! எம்.ஜி.ஆர்-சிவாஜிக்குப் பிறகு இவர்கள்தான் இருபெரும் திலகங்களாக சித்திரிக்கப்படுகிறார்கள். இவர்களின் சினிமா மார்க்கெட் உலக அளவில் உயர்ந்து, சம்பளம் கோடிக்கணக்கில் கொட்டுவதற்குக் காரணம், பல நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள்தான். இந்த உண்மையை அவர்கள் மறந்துவிட்டார்கள். போராட்டத்துக்கு வருவது வராதது இருக்கட்டும். உன்னை இந்த அளவுக்கு உச்சத்தில் உயரவைத்து அழகு பார்க்கும் தமிழனின் தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழனுக்கு ஆதரவாக உன்னால் ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லையா? ரிக்சா கொடுத்து, தையல் மெசின் கொடுத்து போட்டோ போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் உனக்கு, தமிழனின் உணர்வு புரியவில்லையா? ஆயிரக்கணக்கில் மன்றம் வைத்து நடத்தும் உனக்கு, அவர்கள் மூலம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கிளர்ச்சி நடத்த முடியாதா?"

"சென்னையில் இளைஞரணி மாநாட்டை முடித்துவிட்டு மறுநாள் விஜயகாந்த் இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொள்வார் என செய்திகள் அடிபட்டதே..."

"வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லையே... விஜயகாந்த் பிறப்பால் தமிழன் அல்ல. வளர்ப்புத் தமிழன். உனக்கு உண்மையிலேயே தமிழ் உணர்வு இருந்தால், மாநாட்டை முடித்துவிட்டு மறுநாள் விமானமேறி இராமேஸ்வரம் வந்திருப்பாய். அங்கு வந்து, 'நான் அரசியல்வாதியாக வரவில்லை, கட்சித் தலைவனாக வரவில்லை. தமிழன் என்ற முறையில் வந்திருக்கிறேன்' என நீ சொல்லியிருப்பாயானால், உன்னை மேடையேற்றிப் பேசவைத்து, கைதட்டி அழகு பார்த்திருப்பேன். ஆனால், நீயோ வளர்ப்புத் தமிழன் கூட இல்லை என்பதை நிரூபித்துவிட்டாய்.

நீ முதலமைச்சர் நாற்காலிக்குக் கனவு காணாதே... அந்த இடம் தமிழனுக்குத்தான். நீ கிங்மேக்கராக வேண்டுமானால் இரு. ஆனால், கிங் ஆக வேண்டுமென நினைக்காதே. உன் கட்சியில் இருக்கும் பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழன்தான். நான் ஒப்புக்கொள்கிறேன். அவரை முதல்வராக்குவதாகச் சொல்... அதைவிட்டுவிட்டு நீ கனவு காணாதே..!"

"ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்ற பெயரில் ராஜீவ் காந்தி கொலையைக் கொச்சைப்படுத்தி இராமேஸ்வரத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோருக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?"

"அவர்கள் பேசியதில் என்ன தவறு? தேசியம் பேசுகிற தங்கபாலுவைக் கேட்கிறேன்... மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சே இனத்தை அழித்தீர்களா? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா? சீக்கியனும் உணர்ச்சிவசப்பட்டான். தமிழனும் உணர்ச்சிவசப்பட்டான். சீக்கியனை மட்டும் மன்னிச்சுடுவ... தமிழனைத் தண்டிச்சுக்கிட்டே இருப்பியா?" என்றார் பாரதிராஜா.


Comments