யுத்தய (யுத்தம்) சிங்கள மக்களுக்குச் சொல்லப்படுபவை

சிங்கள ஊடகங்களை கேட்கும் போதும் வாசிக்கும் பொழுதும் வடக்கு, கிழக்கில், இப்பொழுது வடக்கில் மாத்திரம் நடைபெறுவது ஒரு யுத்தம் என்றும் அந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிராக நடாத்தப்படும் போர் என்றும் கூறப்படுவதை அவதானிக்கலாம்.

இந்த யுத்தத்தில் இலங்கைப்படையின் போர் வீரர்கள் தாய்நாட்டை காப்பதற்காகவும் மீட்பதற்காகவும் போராடுகிறார்கள் என்று கூறப்படுகின்றது. போர் வீரர்களை "ரணவிறு" என்ற மரியாதை பன்மை பயன்பாடே பேசப்படுகிறது. அதுவும் கிளிநொச்சி தாக்குதல் தொடங்கியதன் பின்னர் நடப்பது மனிதாபிமானப் போர் என்றும் தமிழ் மக்களை விடுவிப்பதற்காக நடைபெறும் போர் என்றுமே சுட்டிக்காட்டப்படுகிறது.

அதற்கு மேல் விடுதலைப் புலிகளின் ஆட்கொல்லி தலைமையே இப்போருக்கு காரணம் என்று வலுவாக எடுத்துக் கூறப்படுகிறது. நேற்று, இன்று அழுத்தம் சற்று வித்தியாசப்பட்டு சர்வதேச புகழிடத் தமிழர்கள் இந்தப் போராட்டத்திற்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. பத்திரிகைத் தலையங்கங்கள் முதல் வானொலிச் செய்திகள் வரை இந்தக் கோஷமே முன்வைக்கப்படுகிறது.

இவற்றை ஒரு புன்முறுவலுடன் ஒதுக்கி விட்டு, "களத்தில் நடப்பது என்ன" என்று சிந்திக்கும் போக்கே பல தமிழ் வாசகர்களிடையேயும் கேட்போர்கள் இடையேயும் காணப்படுகிறது.

ஆனால் இது ஒரு பாரதூரமான தமிழர்களின் போராட்டம் பற்றிய அபிப்பிராயத்தையே சிங்கள மக்கள் இடையே மாற்றுவதற்கான முயற்சி என்பதையும் அந்த முயற்சியில் அரசாங்கம் கணிசமான வெற்றியை ஈட்டியுள்ளது என்பதையும் நாம் புறம்தள்ளிவிட முடியாது.

சிங்கள மக்கள் இதனை உண்மையாகவே ஒரு தர்மயுத்தமாகவே பார்க்கிறார்கள். விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற மிக, மிக குறைவான சிங்கள இடதுசாரி தலைவர்களை விட வேறு எவருமே இந்த விடயத்தில் எதிர்ச்சொல்லு கூறுவது கிடையாது. சுதந்திர சிங்கள பத்திரிகையான "ராவய" கூட இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறது. நடப்பது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்கின்ற நிலைப்பாடு அந்தப் பத்திரிகையில் தெரிவதை எவருமே மறுப்பதில்லை.

இது மிக சுவாரசியமான சில அரசியல் முடிவுகளுக்கு இடம் ஏற்படுத்தியுள்ளது. அதில் பிரதானமானது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முதல் சந்திரிகா பண்டாரநாயக்க வரை எந்த ஒரு பிரதமராலும் ஜனாதிபதியாலும் செய்ய முடியாத காரியத்தை இப்போதைய ஜனாதிபதி செய்து காட்டுகிறார் என்பதுவே பொதுவான அபிப்பிராயமாக வளர்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் பொதுமக்களின் ஆணை (ஜனவரம) உண்டு என்று சொல்லப்படுகிறது. சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அரச, தனியார் சிங்கள ஊடகங்கள் கூறுவதை அவர்கள் முற்றுமுழுதாக நம்புகிறார்கள். நடப்பது ஒரு யுத்தம் தான் என்பதை எவருமே மறுத்துவிட முடியாது.

ஆனால் இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் இந்தப் போரின் அடித்தளமாக அமையும் காரணம் இலங்கையின் இனப்பிரச்சினை தான் என்ற கருத்து படிப்படியே சிங்கள மக்களிடம் அகற்றப்படுகிறது. இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு எதிராக இது சென்றுவிடலாம் என்ற பயமும் ஒர் அளவு இல்லாமல் இல்லை. இதனாலேயே இந்த யுத்தம் குறிப்பாக வவுனியாவிற்கு கிழக்கே மனிதாபிமான போராக சித்திரிக்கப்படுகிறது.

விருப்பு வெறுப்பு இன்றி நோக்கினால் அரசாங்கம் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக இதனை (இவற்றை) செய்கிறது என்பது உண்மை.

அரசாங்கம் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு கூறுவதை தவிர்க்கவும் முடியாது. ஆனால் அரசாங்கமே எதிர்பாராத ஒரு உளவியல் பலாபலன் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பு உண்டு என்கின்ற ஆபத்தையும் அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. ஏனெனில் வவுனியாவிற்கு அப்பால் உள்ளவர்களை எதிரிகளாக தமிழர்களை பார்க்கும் ஒரு மனோ பாவத்தை இது ஏற்படுத்துகிறது. இதனை சற்று மறைமுகமாக இன் னொரு நிலைப்பாடு காட்டுகிறது.

கிழக்கிலிருந்து புலிகள் கலைக்கப்பட்டுவிட்டார்கள் என்று கூறும் அதேவேளையில் அங்கு ஏற்பட்டுள்ள புதிய அரசியல் அபிவிருத்தி நடவடிக்கைகள் எத்தகைய சிக்கல்களுக்கு இடம்கொடுக்கின்றன என்பது பற்றிய பேச்சே பெரும்பாலும் சிங்கள ஊடகங்களில் இல்லை. மட்டக்களப்பு மாவட்ட முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அதில் ஏற்பட்டுவரும் சிக்கல் குறித்தும் எதுவுமே பேசப்படுவதில்லை. உதாரணமாக அவர்கள் தங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்றே கூறிக்கொள்கிறார்கள் என்பது சொல்லப்படுவதில்லை. (கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் நிலைமையும் முன்னர் போல இல்லை என்பது இப்பொழுது தெரிய வருகிறது).

இத்தகைய சூழலில் பாராளுமன்ற தமிழ்த் தலைமை செய்ய வேண்டுவன பல உண்டு. தமிழ்க் கூட்டமைப்பினர் இன்னும்தான் பாராளுமன்றத்தை தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கான வலுவான ஒரு மன்று ஆக்கவில்லை என்பதனை கவலையுடன் ஒத்துக்கொள்ளவே வேண்டியுள்ளது. தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய விடயம் பாராளுமன்ற செய்திகளை கூட்டிக்குறைத்தோ மழுப்பியோ விடும் அதிகாரம் ஊடகங்களுக்கு இல்லை.

வானொலி, தொலைக்காட்சி ஆகியவை பேசோது விட்டாலும் அச்சு ஊடகங்கள் மிகச்சிறிய அளவிலேனும் பாராளுமன்றத்தில் நடப்பவற்றை பிரசுரித்தே ஆக வேண்டும். அது மாத்திரம் அல்ல.

முன்னாள் எம்.பி. கா.பொ.இரத்தினம் அவர்கள் தமிழர்கள் பற்றிய பாரபட்சங்கள், செயல் இன்மை ஆகியவற்றை வினாக்கள் மூலம் கேட்டுவிடுவார். சம்பந்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன் போன்றவர்களின் குரல் இவ்விடயத்தில் கேட்கின்றது என்றாலும் இது நிச்சயமாகப் போதாது என்றே கூறவேண்டியுள்ளது.

அரசாங்கத்திற்கு புத்திமதி என்று கூறாமல் ஒரு யதார்த்தமான அரசியல் உண்மையை அழுத்தம் திருத்தமாகக் கூறவேண்டியுள்ளது. அரசாங்கத்தின் இந்தச் செயல்கள் பெரும்பாலான சிங்கள மக்களிடையே வடக்கு, கிழக்கு வெல்லப்பட வேண்டிய இடங்கள் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது. இது நாட்டினுடைய இணைவுக் கோ சௌஜன்னியத்துக்கோ உகந்த ஒன்றல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகள் முழுவதையும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற ஒரு தள மட்டத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு அளவிட முயன்றால் பிரச்சினைகள் கூடுமே அன்றி குறையாது.

ஆனால், உண்மையான அடிப்படை நிலை என்னவென்றால் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தென்னிலங்கைக் கட்சிகளும் அரசாங்கங்களும் இன்னுமே தங்கள் இடத்து எவ்வித திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.

தமிழர் பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கு பதிலாக வடக்கு, கிழக்கு பற்றிய விரோத உணர்வை சிங்கள மக்கள் இடையே வளர்ப்பது இலங்கையின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல.

விடுதலைப் புலிகளோடு உள்ள கோபத்தை காட்டுவது வேறு, இலங்கைத் தமிழர் பிரச்சினையை பார்ப்பது வேறு என்ற உண்மையை கலைஞர் கருணாநிதி இந்தியாவின் தொழில் கட்சிகள் மூலம் அறிய வந்திருப்பது ஒரு நல்ல பாடமாகும். இத்தகைய போக்கு இலங்கைத் தமிழ்ப் போரில் விடுதலைப் புலிகளை இன்றுள்ள நிலையில் இன்றியமையாதவர்களாக்கிவிட்டுள்ளது என்ற யதார்த்தமே மேலோங்குகிறது.

-பீஷ்மர்-

Comments