ஏமாறாதே! ஏமாற்றாதே!!

ஜெயவர்த்தனே காலத்திலிருந்து கூறப்படும் மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டு நமக்கெல்லாம் சலித்துவிட்டாலும், இந்திய அரசுக்கும், நமது முதல்வருக்கும் இலங்கை அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தனக்குத் திருப்தி அளிப்பதாகவும் முதல்வர் கூறி இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மத்திய அரசு அப்படி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. பாசில் ராஜபக்ஷவிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பலமுறை தந்த உதட்டளவு உத்தரவாதத்தை மறுபடியும் பெற்றிருப்பது முதல்வரைத் திருப்திப்படுத்தி இருப்பது ஆச்சரியம்தான்.

அல்லல்படும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பும், பாதிக்கப்பட்டால் நிவாரணமும் தர வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு. அதை அவர்கள் செய்யத் தவறி இருப்பதிலிருந்தே, எந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். அவதிப்படும் இலங்கைப் பிரஜைகளான தமிழர்களுக்குத் தங்களது செலவில் நிவாரணம்கூடத் தரத் தயாராக இல்லாமல் அதை இந்தியாவிலிருந்து கேட்டுப் பெறுகிறது அந்த அரசு என்றால், நாம் ஏமாளிகளாக இருக்கிறோம் என்றுதானே பொருள்?

தன்மான உணர்வு, சுயமரியாதை என்று ஊருக்கு உபந்நியாசம் செய்யும் முதல்வர், தன்மானமும், சுயமரியாதையும் இல்லாமல் தனது நாட்டுக் குடிமக்களுக்கு அன்னிய நாட்டின் நிவாரணம் கேட்கும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்காமல் இங்கே நிவாரண நிதி திரட்ட முற்பட்டிருக்கிறார். முன்பு, பழ. நெடுமாறன் திரட்டி வைத்திருந்த மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருள்களை வீணடித்தபோது இல்லாத உத்வேகம், இப்போது திடீரென்று முதல்வருக்கு வந்திருக்கிறதே, அது ஏன்? புரியவில்லை!

விடுதலைப் புலிகள் அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கவசங்களாகப் பயன்படுத்துவதால் அவர்கள், சிலவேளைகளில் பாதிப்புக்கு உள்ளாக நேர்கிறது என்பது இலங்கை அரசின் வாதம். நடத்துவது என்னவோ விமானக் குண்டு வீச்சு. அதில் எங்கிருந்து வருகிறது மனிதக் கவசம் என்று கேள்வி கேட்கக்கூடவா முதல்வருக்கும், மத்திய அரசுக்கும் தெரியாமல் போய்விட்டது?

கிளிநொச்சியில் இருக்கும் ஒரே மருத்துவமனையும் குண்டு வீச்சுக்கு இரையாகி விட்ட நிலையில் மருத்துவ வசதி இல்லாமல் அங்கே அப்பாவிகள் செத்து மடிகிறார்கள். போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு தான் பேச்சுவார்த்தை என்றல்லவா முதல்வர் இந்திய அரசை வற்புறுத்தி இருக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்னையில் அரசியல் தீர்வு என்று பேசுபவர்கள், முதலில் அதிகாரிகள் மூலம் இந்தப் பிரச்னையை அணுகுவதை நிறுத்த வேண்டும். இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்த தமிழக அரசியல்வாதி ஒருவரை உள்ளடக்கிய இந்தியக் குழுவால் மட்டும்தான் இலங்கையின் சமாதானத்துக்கு வழிகோல முடியுமே தவிர, அதிகாரிகளால் முடியாது என்று எடுத்துச் சொல்ல முதல்வர் ஏன் தயங்குகிறார்?

மத்திய அரசை வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதியும், இலங்கை அரசின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று மத்திய அரசும் நிலைப்பாடு எடுத்திருக்கும்போது, அங்கே அன்றாடம் செத்து மடியும் அப்பாவித் தமிழர்களுக்கு எப்படி நிவாரணமும் நியாயமும் கிடைக்கும்? நாம் அனுப்பும் நிதியும், நிவாரணமும் இலங்கை அரசால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நாற்பதாண்டுப் பிரச்னையை நான்கு நாள்களில் தீர்க்க முடியாது என்கிற முதல்வரின் கருத்து சிரிப்பை வரவழைக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போதும், எம்.பி.க்கள் ராஜிநாமாவின் போதும், மனிதச் சங்கிலி நடத்தியபோதும் தெரியாத இந்த உண்மை, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் வந்தவுடன்தான் முதல்வருக்குத் தெரிந்ததா என்ன? அது போகட்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இந்தப் பிரச்னைக்கு ஏன் தீர்வு காண முயற்சிக்கவில்லை?

பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கொழும்பில் பாகிஸ்தான் தூதராக அமர்ந்து ராஜபக்ஷ அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் நிலையில், சீனாவுடன் மிக நெருக்கமான உறவை இலங்கை அரசு வளர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசு உதட்டளவு உத்தரவாதத்தை நம்புவது சரியான ராஜதந்திரம் ஆகாது!

தினமணி

Comments