இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என பழ.நெடுமாறன் கோரிக்கை



ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என இந்.கம்யூனிஸ் கட்சி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈழத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்றுகையில் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில், தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டி வலியுறுத்தும் கடமையை இந்திய அரசு தவறிவிட்டது. அந்நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு அமைதியான அரசியல் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், இந்திய அரசு அந்நாட்டுக்கு இராணுவ உதவி அளித்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை மறுத்து இந்திய இராணுவம் தரப்பில் அபத்தமான பதில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சகோதர உணர்வோடு முன்முயற்சி மேற்கொண்டு தமிழகம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளது.

தமிழக அளவில் உள்ள கட்சிகளை தமிழர்கள் நலனுக்காக ஒன்று சேர்த்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடுத்த கட்டமாக அகில இந்திய அளவில் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தி மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்றார்.

Comments