கிளிநொச்சிக்கான இறுதி யுத்தம்


கிளிநொச்சி நகர் மீது படையினர் எவ்வேளையிலும் இறுதித் தாக்குதலை ஆரம்பிக்கக்கூடும். கடந்த ஒரு வாரமாக அங்கு அகோர ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் இரவு பகலாக நடைபெற்று வருகையில் குண்டு வீச்சு விமானங்களும் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

மிகப்பெரும் படைநகர்வொன்றுக்கு முன்னதாக இறுதிக் கட்டத் தயாரிப்புகளாகவே இவையிருப்பது போல் தெரிகிறது.

இதனால் அடுத்து வரும் நாட்களில் கிளிநொச்சி நோக்கி படையினர் மீண்டுமொரு முறை பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு முயற்சி கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்படுகிறது.

மன்னார் - பூநகரி வீதியில் (ஏ 32) நாச்சிக்குடாவுக்கு தெற்கேயும், ஏ- 32 வீதிக்கும் ஏ- 9 வீதிக்கும் (யாழ்-கண்டி வீதி) இடையிலும் நிலைகொண்டிருக்கும் படையினர் இரு முனை முன்நகர்வுகளை மேற்கொண்டும் அவை சாத்தியப்படவில்லை. ஏ -32 வீதியில் மன்னாரிலிருந்து நாச்சிக்குடாவின் எல்லை வரை மிக வேகமாக வந்த படையினரால் நாச்சிக்குடாவுக்குள் நுழைய முடியவில்லை.

அதேபோல் ஏ- 32 வீதிக்குச் சமாந்தரமாக, ஏ- 32 வீதிக்கும் ஏ- 9 வீதிக்கும் இடையில் வந்தவர்களால் வன்னேரி, அக்கராயன்குளத்தைத் தாண்ட முடியவில்லை.

நாச்சிக்குடாவைக் கைப்பற்றி அதற்கப்பால் வடக்கே சென்று பூநகரி நோக்கிய நகர்வை மேற்கொள்வதா அல்லது வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன்குளத்திற்கும் இடையில் ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி வடக்கே சென்று கிளிநொச்சி நோக்கிய நகர்வை மேற்கொள்வதா என்பதில் படைத்தரப்புக்கு சிக்கல் நிலவுகிறது. நாச்சிக்குடாவைக் கைப்பற்றி வடக்கே நகர்ந்து விட்டால் நாச்சிக்குடாவுக்கு கிழக்கே வன்னேரிக்குளம் முதல் அக்கராயன்குளம் வரையான பகுதியில் முன்நகர்வு முயற்சி குறித்து படையினர் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அதேபோல் நாச்சிக்குடாவுக்கும் ஏ -9 வீதியில் திருமுறிகண்டிக்குமிடையில் ஏதாவதொரு பகுதியில் ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி மேலும் வடக்கே முன்னேறிவிட்டால் நாச்சிக்குடாவைக் கைப்பற்றி முன்நகர வேண்டுமென்ற தேவையில்லை.

பூநகரி நோக்கி ஒரு முனையிலும் கிளிநொச்சி நோக்கி இன்னொரு முனையிலும் முன்னேறும் படையினர் ஏ- 9 வீதியையும் கைப்பற்றி அதனூடாக அல்லது அதற்குக் கிழக்கால் முன்னேறலாமா என்று தீவிரமாக முயற்சித்து வருகையில் கிளிநொச்சிக்கான போர் உக்கிரமடைந்துள்ளது.

சகல முனைகளிலும் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி படையினரின் முன்நகர்வு முயற்சிகளை தடுத்து நிறுத்தியுள்ள புலிகள், படையினரை கிளிநொச்சி நோக்கி அல்லது பூநகரி நோக்கி முன்நகர அனுமதிப்பதென்பது வன்னியில் ஏ-9 வீதிக்கு மேற்குப் புறத்தை முற்றாக இழப்பதென்பதுடன் ஏ- 9 வீதியின் கிழக்குப் புறத்திற்கான அச்சுறுத்தலை உடனடியாகவே அதிகரிப்பதற்கு அனுமதியளிப்பதாகவும் அமைந்துவிடும்.

வவுனியா - மன்னார் வீதியிலிருந்து கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வடபகுதி நோக்கி படைநகர்வு ஆரம்பிக்கப்பட்டபோது புலிகள் மிகக் கடும் எதிர்ப்பைக் காட்டவில்லை. இது படையினரை இலகுவாக கிளிநொச்சி வரை செல்ல வைத்தது.

தற்போது கிளிநொச்சி எல்லைவரை வந்துவிட்ட படையினருக்கு கிளிநொச்சிக்குள் நுழைய முடியாதிருக்கிறது. கிளிநொச்சிக்கு வெளியே தற்போது கடும் போர் நடைபெறும் முனைகளில் ஏதாவதொரு பகுதியை உடைத்துக் கொண்டு படையினர் உட்புகுந்தாலும் அது கிளிநொச்சியையும் பூநகரியையும் மட்டுமல்ல ஆனையிறவையும் அதற்கப்பால் முகமாலையையும் புலிகள் இழக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

இதனால்தான் நாச்சிக்குடாவிலிருந்து கிழக்கே திருமுறிகண்டி வரையான சுமார் 30 கிலோ மீற்றர் பிரதேசத்தில் புலிகள் பாரிய மண் அணைகளை அமைத்து மிகப் பெரும் எதிர்ச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதென்பது கிளிநொச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, அதற்கப்பால் யாழ்.குடாவை கிளிநொச்சியுடன் இலகுவாக இணைப்பதற்கான மார்க்கமென்பதை படைத்தரப்பு அறிந்துள்ளதால், கிளிநொச்சியை கைப்பற்றுவதென்பது உடனடியாகவே யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறக்கக் கூடியதொரு வாய்ப்பை உருவாக்கக் கூடிய சமராகவே படைத்தரப்பு பார்க்கிறது.

இதனால்தான் கிளிநொச்சி மீதான போர் வெறுமனே கிளிநொச்சியைக் கைப்பற்றும் போராக மட்டுமல்லாது முழு வட பகுதியையுமே கைப்பற்றும் போராக அரசும் படைத்தரப்பும் பார்க்கின்றன.

இதற்காகவே படையினர் தங்கள் முழுப் படை பலத்தையும் தற்போது கிளிநொச்சிப் போர் முனையில் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதற்கேற்ப அயல் நாடுகளிலிருந்தெல்லாம் அள்ளிக் குவிக்கப்படும் ஆயுதங்களெல்லாவற்றையும் அரசு வன்னிக்களமுனைக்கு அனுப்பி வருகிறது.

கிளிநொச்சிக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டுமென்பதில் அரசு மிகுந்த தீவிரம் காட்டுகிறது. இதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியை பெற்று அதனைப் பயன்படுத்தி அரசியல் வெற்றிகளைப் பெற்று விடவேண்டுமென்பது அரசின் திட்டம்.

இதனால், படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றும் பட்சத்தில் ஜனவரிமாதத்தில் பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற இரு மாகாண சபைத் தேர்தல் கூட போரின் வெற்றியை அடிப்படையாகவே கொண்டிருந்தது. இதைப் போன்றே, கிளிநொச்சியை படையினர் கைப்பற்றினால் பொதுத் தேர்தலில், புலிகளை முற்றாக அழிப்பதற்கு மக்கள் ஆணையை முழுமையாகப் பெற்று மிகப்பெரும் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றி விடலாமென அரசு கருதுகிறது.

இதனால் கிளிநொச்சியைக் கைப்பற்ற என்ன விலையையும் கொடுக்க அரசு தயாராயுள்ளதால் கிளிநொச்சிக்கான இறுதிப் போர், பேரழிவை ஏற்படுத்தலாம். நாச்சிக்குடா முதல் திருமுறிகண்டி வரையான புலிகளின் வலுவான பாதுகாப்பு நிலைகளை அழிக்கும் முயற்சியில் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதில் ஏதாவதொரு முனையூடாக முன்நகர்ந்தால் மட்டுமே கிளிநொச்சிக்குள் நுழைய முடியும். இதனால் தான் நாச்சிக்குடா முதல் திருமுறிகண்டி வரை ஆங்காங்கே பல்வேறு பகுதிகளிலும் நிலைகொண்டிருக்கும் புலிகளை அந்தந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளில் படையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர்.

வடக்கே நகர்வதை விட நாச்சிக்குடாவுக்கும் திருமுறிகண்டிக்குமிடையில் பக்கவாட்டில் நகர்ந்து இவற்றுக்கிடையிலான விநியோகப் பாதைகளை முழுமையாகக் கைப்பற்றுவதன் மூலமே நாச்சிக்குடாவுக்கும் திருமுறிகண்டிக்குமிடையில் வலுவான தாக்குதலை நடத்தலாமெனப் படையினர் கருதுகின்றனர்.

இதற்கான முயற்சிகளில் தற்போது படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் வன்னேரி மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. நாச்சிக்குடாவுக்கும் திருமுறிகண்டிக்குமிடையே ஊடறுத்துச் செல்வதில் நீண்ட தாமதமேற்படுவதால் படையினர் கிழக்கே நகர்ந்து கொக்காவிலைக் கைப்பற்றி ஏ- 9 வீதிக்குச் சென்று விட முனைந்தனர்.

அங்கு கடும் எதிர்ப்பைச் சந்தித்த அதேநேரம் ஏ- 9 வீதியை கைப்பற்றுவதன் மூலம் கிளிநொச்சி மீதான தாக்குதலை சற்று இலகுபடுத்தலாமென்றாலும் ஏ- 9 வீதிக்குச் செல்லும் படையினர் புலிகளின் தாக்குதல்களுக்கிலக்காகும் வாய்ப்புகள் அதிகமென்பதால் படையினர் கொக்காவிலைக் கைப்பற்றாது தொடர்ந்தும் வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன்குளம் பகுதியிலேயே தீவிர கவனம் செலுத்துகின்றனர்.

இந்தச் சமரில் படையினர் தினமும் பலத்த இழப்புகளைச் சந்திக்கின்றனர். புதிது புதிதாக வன்னிக் களமுனைக்கு படையினரை நகர்த்த வேண்டிய தேவையேற்பட்டு வருகிறது.

கிளிநொச்சி மீதான இறுதித் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டுமானால் நாச்சிக்குடாவுக்கும் திருமுறிகண்டிக்குமிடையிலான புலிகளின் தடுப்புச் சுவரைத் தகர்க்க வேண்டும். அதனைத் தகர்த்தால் மட்டுமே கிளிநொச்சிக்குள் நுழைய முடியும். ஆனால் புலிகளோ இந்த 30 கிலோமீற்றர் நீளப் பாதுகாப்பு நிலைகளை மிகவும் வலுவாக வைத்துள்ளனர்.

சிக்ஸாக் வடிவில் புலிகள் இந்தத் தடுப்பரண்களை வடிவமைத்துள்ளனர். மொத்தம் 3 கட்டங்களைக் கொண்டதாக இந்தத் தடுப்பரண் உள்ளது. முதலில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட தளம் வருகிறது. அடுத்து பெரும் அகழி (பள்ளம்) வருகிறது. இதைத் தொடர்ந்து, புலிகளின் படையணிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தக் கூடிய பதுங்கு குழிகள் உள்ளன.

இந்த மூன்றையும் சேர்த்தே இங்கு புலிகள் மிகவும் வலுவான நிலைகளை அமைத்து முன்னேற முயலும் படையினர் மீது கடும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இந்தப் பாதுகாப்பு அரண்களில் முதலில் வரும் கண்ணிவெடிப் பொறியிலிருந்து படையினர் சுலபமாகத் தப்ப முடியாது. கண்ணிவெடி வயலொன்று உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்குள் சிக்கிவிட்டால், சிக்குவோரின் உடலைக் கூட மீட்க எவராலும் வர முடியாது போய்விடும்.

அந்தளவிற்கு புலிகள் கண்ணி வெடிகள், மிதிவெடிகளை மிக நுட்பமாகப் புதைத்துள்ளதால் அந்தக் கண்ணிவெடி வயல்களைத் தாண்டுவது எப்படியென்பது குறித்து படையினர் குழம்பிப் போயுள்ளனர். தொடர்ச்சியான விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் மூலம் கூட இந்தக் கண்ணிவெடி வயல்களை அழிக்க முடியாதுள்ளது. படையினருக்கு வான்வழித் தாக்குதலும் கனரக ஆயுதங்களும் பக்க பலமாக இருக்கையில் புலிகள் தந்திரமான தாக்குதல்கள் மூலம் இங்கு படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒரு வேளை இந்தக்கண்ணி வெடி வயலைத் தாண்டிவிட்டால் அடுத்து பாரிய அகழிகள் உள்ளன. பத்தடிக்கும் மேற்பட்ட அகலத்தையும் பத்தடிக்கும் மேற்பட்ட ஆழத்தையும் கொண்ட இந்த அகழிகளை யுத்த டாங்கிகளாலும் கவசவாகனங்களாலும் கடந்துவிட முடியாது.

கண்ணிவெடி வயலை கடந்து அகழிப் பக்கம் வந்துவிட்டால் பதுங்குகுழிகளிலிருந்து கடும் தாக்குதலை நடத்தும் புலிகளின் அணிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இப்படி படையினரால் இலகுவில் தாண்டமுடியாதவாறு அமைத்துள்ள பாதுகாப்பு அரண்களைப் பயன்படுத்தியே பாரிய படை நகர்வைப் புலிகள் தடுத்து வருகின்றனர். எனினும் புலிகளின் இந்தப் பாதுகாப்பு அரண்களை தகர்த்தவாறு முன்செல்ல படையினர் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்,

வன்னேரிக்குளம் - அக்கராயன்குளம் பகுதியில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருகையில் கிளிநொச்சி நகர் மீதான தாக்குதலை விமானப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். புலிகளின் முக்கிய அலுவலகங்கள் மீதெல்லாம் கடும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு அந்தக் கட்டிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அகோர ஷெல் தாக்குதலிலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலிலும் கிளிநொச்சி நகர் சல்லடை போடப்படுகிறது.

கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதாயின் அங்கு கட்டிடங்கள் உருப்படியாக இருந்தால்தான் அது படையினருக்கு வசதியாயிருக்கும். ஆனால், கட்டிடங்களையெல்லாம் அழிப்பதென்பது கிளிநொச்சியைக் கைப்பற்றாவிட்டாலும் நகருக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தி புலிகளின் நிர்வாக செயற்பாடுகளை முழுமையாகச் சீர்குலைத்து விடவேண்டுமென்ற நோக்கம் கொண்டதாயிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

அதேநேரம், புலிகள் அண்மையில் களமுனையில் நச்சுவாயு அல்லது இரசாயன வாயுவைப் பயன்படுத்தியதாக பெரும் பிரசாரம் செய்த படைத்தரப்பு தற்போது வன்னிக்கள முனையில் எரிகுண்டுகளை வீசத் தொடங்கியுமுள்ளது.

மிக மோசமான உயிரழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த எரி குண்டு, யுத்த முனையில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசவும் வழிவகுக்கும். வளியிலுள்ள அனைத்து வாயுக்களையும் முற்றாக உறிஞ்சி சுவாசிக்க முடியாத நிலையொன்றைத் தோற்றுவித்து பாரிய உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

குண்டுப் பாவனையானது யுத்த முனையில் படையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புலிகள் பயன்படுத்தும் நச்சுவாயுக்களிலிருந்து படையினரைப் பாதுகாப்பதற்கு முகமூடிகள் பயன்படுத்தப்படுவதாக படைத் தரப்பில் கூறப்பட்டாலும் புலிகளுக்கேதிராக படையினர் பயன்படுத்தும் எரி குண்டுகள் மற்றும் இரசாயனக் குண்டுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவே தற்போது அவர்களுக்கு முகமூடிகள் வழங்கப்படுவதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

கிளிநொச்சியை கைப்பற்றுவற்காக அரசு எதனையும் செய்ய முனைகிறது. குறிப்பிட்டளவு படையினரை இழந்தாவது கிளிநோச்சிக்குள் நுழைய படைத்தரப்பும் முயல்கிறது. இந்தளவு தூரம் வந்த பின் கைக்கெட்டும் தூரத்திலுள்ள கிளிநொச்சியை விட்டுவிட அரசும் படைத் தரப்பும் தயாரில்லை.
கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டால் பூநகரியும் உடனடியாக தங்கள் வசமாகிவிடுமென படையினர் கருதுகின்றனர். இவ்விரு நகரங்களில் எதையாவது கைப்பற்றி விட்டால் அது வவுனியா - யாழ் வீதியில் மேற்குப் புறத்தை முழுமையாகத் தங்கள் வசமாக்கி விடுமென்பதையும் படையினர் அறிவர்.
அதனால்த்தான் கிளிநொச்சியை அல்லது பூநகரியைக் கைப்பற்ற அவர்கள் மிகத் தீவிர அக்கறை காட்டுகின்றனர். அதனை விரைவுபடுத்த வேண்டிய தேவையும் அவர்களுக்குள்ளது.

இல்லையேல், நீண்ட நாள் தாமதமேற்பட புலிகள் பாரிய தாக்குதல் சமரை அல்லது பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்திவிடலாமென்ற அச்சமும் படையினருக்குள்ளது. வன்னிப் போர் முனையில் நிலைமைக்கேற்ப தங்கள் யுத்த தந்திரத்தை மாற்றிவரும் புலிகள், ஆரம்பத்தில் கடும் பதில் தாக்குதலைத் தொடுத்தனர். பின்னர் படையினரை வேகமாக முன்நகர அனுமதித்தனர்.

தற்போது மீண்டும் கடும் பதில் தாக்குதலை நடத்துகின்றனர். இதுவரை காலமும் தந்திரோபாயமாகப் பின்நகர்ந்தது போல் இனியும் புலிகளால் பின்நகர முடியாது. அப்படி பின்நகர்வதென்பது கிளிநொச்சி, பூநகரியை மட்டுமல்லாது ஆனையிறவையும் அதற்கப்பால் முகமாலை வரையான பகுதிகளையும் படையினருக்கு தாரை வார்ப்பது போலாகிவிடும்.

இதனால்தான் படையினரின் கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வைப் புலிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது படையினருக்குத் தினமும் பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கிளிநொச்சிக்குள் விரைவில் புகுந்துவிட வேண்டுமென்ற அவசரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படையினர் தற்போது போரிடும் ஆற்றலுள்ள அணிகளையெல்லாம் கிளிநொச்சி நோக்கிய நகர்வில் ஈடுபடுத்தியுள்ளதால் புலிகள் கடும் பதில் சமரை தொடுத்தவாறு எங்காவது ஒரு பகுதியில் பாரிய தாக்குதல் சமரை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை நடத்தக் கூடுமென்ற அச்சம் படையினருக்குள்ளது.

ஆரம்பம் முதல் கிளிநொச்சியின் புறநகர்ப் பகுதி வரை படையினர் முன்னே றிய போது, புலிகள் தாக்குதல் சமரை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை நடத்தக்கூடிய வாய்ப்பை புலிகளுக்கு படையினர் வழங்கவில்லை.

புலிகள் பாரிய தாக்குதலுக்காக ஓரிடத்தில் அணிதிரள்வதைத் தடுக்கும் விதத்தில் தொடர்ச்சியாகவும் இடைவிடாதும் கடும் தாக்குதலை நடத்தி புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றியவாறு நகர்ந்ததால் புலிகள் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் தங்கள் வளங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்தியதுடன் பாரிய தாக்குதல் சமரையோ அல்லது பாரிய ஊடறுப்புத் தாக்குதலையோ நடத்தக் கூடியவாறு அணிதிரள முடியாதிருந்தனர்.

ஆனால் தற்போது பலமுனைகளிலும்படையினரின் பாரிய நகர்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. புலிகளின் அணிகள் படையினரின் முன்நகர்வுகளைத் தடுத்து நிறுத்தி ஒவ்வொரு முனைகளிலும் கடும் பதில் தாக்குதலை நடத்திவருகின்றன.

இதனால் படையினருக்கெதிராக பாரிய தாக்குதலை அல்லது பாரிய ஊடறுப்புச் சமரை நடத்தக்கூடிய வகையில் புலிகள் அணிதிரளக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனைப் படைத்தரப்பும் நன்கறியும். இது வன்னியில் அகலக் கால் வைத்து அங்கிங்கெனாது அனைத்துப் பகுதிகளிலும் நிலைகொண்டுள்ள படையினருக்கும் பேராபத்தாகலாம். பல மைல் தூரத்திற்கு தொடர்ச்சியாக விநியோகப் பாதைகளை பாதுகாப்பாகப் பேணுவதென்பது சாத்தியப்படாதது.

பல இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலவீனமாகவேயிருக்கும். போரிடும் ஆற்றலுள்ள படையணிகள் முன்னரங்க நிலைப் பகுதிகளில் நிலைகொண்டிருப்பதால் ஏதாவது பலவீனமான பகுதியில் புலிகள் பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி விநியோகப் பாதைகளைக் கைப்பற்றி முன்நகர்ந்த படையினருக்கான தொடர்புகளைத் துண்டிக்கும் பட்சத்தில் படையினர் பலத்த நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். தற்போதைய நிலைமையில்தான் புலிகளும் இவ்வாறான பாரிய தாக்குதல் சமரை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை நடத்தக்கூடிய வாய்ப்பாயுள்ளது.

படையினர் கிளிநொச்சியை கைப்பற்றி அதன்மூலம் ஆனையிறவுக்கும் சென்று யாழ். குடாநாட்டுடன் தரைவழித் தொடர்பை ஏற்படுத்திவிட்டால் பின்னர் புலிகள் பாரிய தாக்குதல் சமரை மேற்கொண்டாலும் சரி அல்லது ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டாலும் சரி எந்தப் பகுதியிலிருந்தும் படையினருக்கு உதவி கிடைக்கும். அவர்களுக்கு இருபக்கங்களிலிருந்தும் விநியோகப் பாதைகளும் கிடைத்துவிடும். தாக்குதல் சமரை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொள்வோருக்கே மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

இதனால், தற்போது படையினரின் பாரிய முன்நகர்வுக்கெதிராக முறிடியடிப்புச் சமரில் ஈடுபட்டு வரும் புலிகள், படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதை தடுத்து நிறுத்துவதுடன் வன்னிக்குள் படையினரின் முற்றுகையை முறியடிப்பதாயின் அவர்கள் மீது தாக்குதல் சமரை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொள்ள வேண்டுமென்றதொரு நிலையுள்ளது. இதேநேரம், படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டால் பின்னர் ஆனையிறவும் முகமாலையும் அவர்களிடம் சுலபமாக வீழ்ந்து விடும்.

அவ்வாறானதொரு சூழ்நிலையேற்பட்டால் தற்போது கிளிநொச்சி மற்றும் பூநகரி நோக்கி மட்டுமே கவனம் செலுத்தும் படையினர் பின்னர் சகல முனைகளிலிருந்தும் ஒரேநேரத்தில் முல்லைத்தீவை நோக்கிய படைநகர்வை மேற்கொள்ள முனைவர். இது புலிகளுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கலாம். இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதென்பது பெரும் சிரமமாகவேயிருக்கும். இதனால், கிளிநொச்சியை புலிகள் தக்கவைப்பதும் கைவிடுவதும் வன்னி யுத்தத்தில் பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தலாம்.

இதனைப் படையினர் அறிந்திருப்பது போல் புலிகளும் நன்கறிந்துள்ளனர். இதனால் கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றுவதற்கு புலிகள் அனுமதிக்க மாட்டார்களென்றே கருதப்படுகிறது.

ஆனாலும் படையினர் தங்களது முழுவளங்களையும் பயன்படுத்தி எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்ற முயல்வர். அதற்கேற்பவே கடந்த சில தினங்களாக கிளிநொச்சி நோக்கிய தாக்குதலை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் அடுத்துவரும் நாட்களில் கிளிநொச்சிக்கான போர் மேலும் தீவிரமடையப் போகிறது.

-விதுரன் -

Comments