ஜெயலலிதா - காங்கிரசார் நிர்ப்பந்தத்திற்கு பணிய வேண்டாம்!முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்துப் பேசினார்கள் என்பதற்காக கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்துப் பேசினார்கள் என்பதற்காக கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜெயலலிதா மற்றும் காங்கிரசில் ஒரு பிரிவினர் எழுப்பும் கூப்பாடுகளுக்குப் பணிந்து வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் ஆகியோரை முதலமைச்சர் கருணாநிதி கைது செய்ய உத்தரவிட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்காகும்.

தமிழ்நாட்டில் கிறித்துவ தேவாலயங்களையும் சிறுபான்மை கிறித்துவ மக்களையும் தொடர்ந்து தாக்கி வரும் மத பயங்கரவாதிகளின் செயலை ஜெயலலிதாவோ காங்கிரசுக்காரர்களோ கண்டிக்க முன்வரவில்லை. ஆனால் இலங்கையில் கொன்று குவிக்கப்படும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க வேண்டுமென கூப்பாடுப் போடுகிறார்கள்.

சிங்கள வெறியர்களின் கைப்பாவைகளாகச் செயல்படும் இவர்களைத் தமிழ் மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழ் நீரோட்டத்திற்கு எதிராகச் செயல்படும் இவர்கள் தமிழ் மக்களால் அடியோடு புறக்கணிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன். தமிழ்ப் பகைவர்களின் நிர்ப்பந்தத்திற்குப் பணிய வேண்டாம் என முதலமைச்சரை வேண்டிக் கொள்கிறேன்.

Comments