கிளிநொச்சியை கைப்பற்றும் கனவு இலகுவாக நிறைவேறுமா?

"கிளிநொச்சி நகர எல்லையில் இருந்து மிகக் குறுகிய தூரத்திலேயே நிற்கிறோம். அங்குள்ள கட்டடங்களைக் கூட எம்மால் பார்க்க முடிகிறது. கிளிநொச்சி மீதான முதல்தாக்குதல் அடுத்தவாரம் ஆரம்பிக்கும்' என்று இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன.

இதன்பின்னர் கடந்த வாரத்தில் கிளிநொச்சி நகர மையப் பகுதிகளைக் குறிவைத்துவிமானப்படையின் கிபிர், மிக்27 போர் விமானங்களும் பல்குழல் பீரங்கிகள்மற்றும் ஆட்டிலறிகளும் குண்டுகளைக் கொட்டித் தீர்த்தன. இப்பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்த போது கூட,

கிளிநொச்சியை அதிர வைக்கும்வகையிலான ஷெல் தாக்குல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், நூற்றுக்கணக்கான ஷெல்கள் வீழ்ந்து வெடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

இவையெல்லாம் கிளிநொச்சி மீதான இறுதித் தாக்குதலுக்கான முன்னோட்டமாகவே தெரிகிறது. எப்படியாவது புலிகளின் நிர்வாகத் தலைநகராகப் பார்க்கப்பட்டு வந்த கிளிநொச்சியை இந்த வருட இறுதிக்குள் பிடித்து விடுவது என்று இலங்கையின் அரசியல், இராணுவத் தலைமைகள் முடிவு கட்டியிருக்கின்றன. இந்தநிலையில், அடுத்து வரும் நாட்களில் கிளிநொச்சிக்கான உக்கிர சமர்வெடிக்கப் போவது மட்டும் உறுதியாகியிருக்கிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் இலக்கிற்காக, புலிகளை முறியடிக்கும் நோக்கில் புதிய படையினரையும் படைப்பிரிவுகளையும் முன்னரங்க நிலைகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்ற போதிலும், படைத்தரப்பு பாரிய ஆளணிப் பற்றாக்குறையைச்சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.

வன்னியின் மேற்கு களமுனையில் படையினர் அகலக்கால் விரித்து நிலைகொண்டிருக்கின்ற நிலையில் புலிகளின் எதிர்த்தாக்குதல்களின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. இதனால் படைத்தரப்புக்கு ஆளணிப் பற்றாக்குறை தீவிர மடையத்தொடங்கியிருக்கிறது. கைப்பற்றிய பிரதேசங்களின் பாதுகாப்புக்கு பெருமளவு படையினரை நிறுத்தவேண்டியிருப்பதாலும், புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்படும் காயமடையும்படையினரின் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதாலும் 57ஆவது, 58ஆவது டிவிசன்கள்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 155 படையினர் கொல்லப்பட்டு 983 படையினர் காயமுற்றிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அறிவித்திருந்தார். இது அண்மைக்காலத்தில் படையினருக்கு ஏற்படுத்தப்பட்ட உச்சக்கட்ட இழப்பாகும். கிட்டத்தட்ட இராணுவத்தின் இரண்டு பற்றாலியன்கள் இந்த ஒரு மாதத்தில் களத்தில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றனர். இதில் குறைந்தது ஒரு பற்றாலியனாவது களத்துக்கு மீளத்திரும்ப வாய்ப்பில்லை. காயமுற்ற படையினர் களம் திரும்ப நீண்டகாலம் எடுக்கலாம். கடந்தமாதம், நிலைமை அதை விட மோசமானதாகவே இருந்தது.

குறிப்பாக மோதல்களில்காயமடையும், கொல்லப்படும் படையினரின் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதை படைத்தரப்பின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இது ஆளணிவளப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கின்ற நோக்கிலும், கிளிநொச்சியைக் கைப்பற்றுகின்ற நகர்வுகளைத் துரிதப்படுத்தும் நோக்கிலும் புதியதொரு பிரிகேட்உருவாக்கப்பட்டு 57ஆவது டிவிசனில் இணைக்கப்பட்டிருக்கிறது. மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் (சூல டயஸ்) தலைமையிலான 57ஆவது டிவிசனில் இதுவரை 3பிரிகேட்களே இருந்து வந்தன. கேணல் ரவிப்பிரிய தலைமையிலான 571 பிரிகேட், கேணல் சேனாரத் பண்டாரதலைமையிலான 572 பிரிகேட், லெப்.கேணல் பிரதாப் திலகரட்ண தலைமையிலான 573பிரிகேட் ஆகியனவே இதுவரையில் செயற்பட்டு வந்தன.

ஆனால் கடந்த புதன்கிழமை (01) முதல் புதிதாக உருவாக்கப்பட்ட 574 பிரிகேட் உத்தியோகபூர்வமாக இயங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக, 11ஆவது இலகு காலாற்படை பற்றாலியனின்தளபதியாக இருந்த லெப்.கேணல் சேனக விஜேசூரிய நியமிக்கப்பட்டிருக்கிறார். லெப்.கேணல் சேனக விஜேசூரிய கடந்த 2006 ஓகஸ்ட் மாதம் புலிகள் மூதூரில் பாரியதாக்குதலைத் தொடங்கிய போது கட்டைபறிச்சானில் இருந்த 7ஆவது இலகு காலாற்படை பற்றாலியனின் துணைத் தளபதியாகப் பணியாற்றியவர். அந்த முகாம் மீதான தாக்குதலை முறியடிப்பதில் தீவிர பங்காற்றியதால், இவர் வன்னிக் களமுனையில் 11ஆவது இலகு காலாற்படையின் பற்றாலியன் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது படைப்பிரிவு பாலம்பிட்டி, கல்விளான், துணுக்காய்,முழங்காவில், கரம்பைக்குளம் போன்ற பகுதிகளில் முன்னகர்வுகளை மேற்கொண்டுவந்தது.

57-4 பிரிகேட்டில் 2500 படையினர் இருப்பதாகவும், இத்தோடு சேர்த்து மேஜர்ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான 57ஆவது டிவிசனின் ஆளணிப் பலம் 10,000 ஆகஅதிகரித்திருப்பதாகவும் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருப்பது சுத்தப் பொய். அதுமட்டுமன்றி இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்ற 574 பிரிகேட்டில் ஆக மொத்தம்3 பற்றாலியன்களே இணைக்கப்பட்டிருக்கின்றன. லெப்.கேணல் ரஞ்சித் அபேரட்ண தலைமையிலான 7ஆவது இலகு காலாற்படை, லெப்.கேணல் ஜெகத் கொடித்துவக்கு தலைமையிலான 10ஆவது இலகு காலாற்படை, மேஜர் தம்மிக்க திசநாயக்க தலைமையிலான 16ஆவது சிங்கறெஜிமென்ட் ஆகியனவே அவை.

கல்விளான், துணுக்காய், உயிலங்குளம் வரையானநகர்வுகளில் 572 பிரிகேட்டில் இருந்த 7ஆவது இலகு காலாற்படையும், கடந்த மாதஇறுதிவரை அதே பிரிகேட்டில் இருந்த 10ஆவது இலகு காலாற்படையும் இந்தக் களமுனைக்குப் புதியவை அல்ல. 1997இல் உருவாக்கப்பட்ட 16ஆவது சிங்க றெஜிமென்ட் மட்டுமே இந்தப் போர் முனையில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்ற பற்றாலியன் ஆகும். இலங்கை இராணுவத்தில் ஒரு பற்றாலியனில் ஆகக் கூடியது 650 படையினருக்கு மேல்இல்லை. அதுவும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற 574 பிரிகேட்டில் 2000பேர் கூடக்கிடையாது. அவற்றில் இரு பற்றாலியன்கள் அதே டிவிசனைச் சேர்ந்தவையாக இருக்கின்ற போது, 57ஆவது டிவிசனில் 2500 மேலதிக படையினர் சேர்க்கப்பட்டு அதன் பலம் 10,000 ஆகஅதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதெல்லாம் வெறும் பிரசாரமே.

இந்த ஆளணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் நோக்கில், இராணுவத்தால் கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட 3ஆவது கட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்த போதும் பெரியளவில் அதற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. 10,136 பேர் மட்டுமே புதிதாக இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இதனால் இம்மாதம் 1ஆம் திகதி முதல் டிசம்பர் வரையான காலத்தில் மேலும் 14,000படையினரை படைகளில் சேர்க்கின்ற புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியிருக்கிறது. இது வன்னிச் சமரில் படைத்தரப்பு எதிர்கொண்டு வரும் பாரிய ஆளணிச் சிக்கலையும், புலிகளின் தரப்பில் இருந்து எதிர்கொள்ளப்படும் நெருக்கடியையும் தெளிவாக உணர்த்துகிறது.

புலிகளின் ஆளணி வளம் சிதைந்து குறைந்து போய்க் கொண்டிருப்பதாக இராணுவத்தரப்பு சொல்லிக் கொண்டே படைத்தரப்பின் ஆளணி வளத்தை அதிகரிப்பதானது விந்தையான செயலாகவே பார்க்கப்படுகிறது. தற்போது அக்கராயன்குளத்துக்கு தெற்கு மேற்குப் பகுதிகளில் 571 பிரிகேட்டும், அக்கராயன் குளத்துக்கு கிழக்கு மற்றும் கொக்காவிலுக்கு வடக்கே 572 பரிகேட்டும், கொக்காவில் மேற்கு மற்றும் அதற்கு தெற்காக 574 பிரிகேட்டும், மாங்குளம்நோக்கி 573ஆவது பிரிகேட்டும் இப்போது முன்னேற்ற நகர்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. கடந்தவாரம் மாங்குளத்துக்கு வடமேற்காக 7கி.மீ தொலைவில் உள்ளபனிக்கன்குளத்தில் புலிகளின் விமான ஓடுபாதையை லெப்.கேணல் ரஞ்சித் அபேரட்ணதலைமையிலான 7ஆவது இலகு காலாற்படை பற்றாலியன் கைப்பற்றியதாக படைத்தரப்புஅறிவித்திருந்தத��
�.

500மீற்றர் நீளமும், 50 மீற்றர் அகலமும் கொண்ட இந்தஓடுபாதை தமது விமானங்களின் அவசர தரையிறக்கலுக்காக புலிகளால்நிர்மாணிக்கப்பட்ட��
�ருக்கலாம் என்றும் படைத்தரப்பு கூறியிருக்கிறது. ஆனால் 500மீற்றர் ஓடுபாதை புலிகளின் எந்த விமானமும் தரையிறங்கவோ மேற்கிளம்பவோபோதுமானதல்ல என்பது படைத்தரப்புக்குத் தெரியாததல்ல. ஆகக் குறைந்தது மேற்கிளம்ப 640 மீற்றரும் தரையிறங்க 765 மீற்றரும் நீளமான ஓடுபாதை தேவை. அதைத் தெரிந்திருந்தும் புலிகள் 500 மீற்றர் நீளமான ஓடுபாதையை நிர்மாணித்திருக்க வாய்ப்பில்லை.

500 மீற்றருக்கு கொங்கிறீட் தளம் அமைத்தபுலிகள் இன்னும் 300 மீற்றருக்கு அதை விரிவுபடுத்தாமல் இருந்திருப்பார்களா?அத்தோடு இந்த கொங்கிறீட் தளம் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது. இதுவிமானப்படையின் கிபிர் விமானங்களின் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சேதம்என்றும் படைத்தரப்பு சொல்லியுள்ளது. ஆனால் முன்னெப்போதுமே படைத்தரப்பு இரணைமடுவுக்கு அடுத்ததாக, இரண்டாவது ஓடுபாதை இருப்பதாகச் சொல்லவும் இல்லை. அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறவும் இல்லை. அண்மையில் தான் முள்ளியவளைக்கு அருகே இரண்டாவது ஓடுபாதை இருப்பதை வேவுவிமானங்கள் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்படியிருக்க மூன்றாவது ஓடுபாதை பற்றிய கதைகள் கட்டப்படுவது எதற்காக என்றுபுரியவில்லை. இது புலிகளின் உண்மையான ஓடுபாதையாக இருந்தால் கூட, அது பயன்பாட்டில் இல்லாத ஒன்றாக அல்லது பணி இடையில் கைவிடப்பட்டதாகவே இருக்கவேண்டும். அதேவேளை கொக்காவிலைக் கைப்பற்றி விட்டதாகப் படைத்தரப்பை மேற்கோள்காட்டி வெளியான செய்திகள் தவறு என்பதைப் படைத்தரப்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. கொக்காவில் ரயில் நிலையத்துக்கு அண்மை வரை சென்ற படையினர் அங்கு நிலைகொள்ள முடியாமல் புலிகளின் தாக்குதலை அடுத்துப் பின்வாங்கியிருக்கின்றனர். தற்போது இவர்கள் கொக்காவில் நகரில் இருந்து அதாவது ஏ9 வீதிக்கு மேற்காக சில கி.மீ தொலைவிலேயே இருப்பதாகத் தெரிகிறது.

அதேவேளை கிளிநொச்சி நகரில் இருந்து 3.5 கி.மீ தொலைவில் 4ஆவது சிங்கறெஜிமென்ட் படையினர் நிலைகொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிளிநொச்சி நகர் என்று படைத்தரப்பு குறிப்பிடுவது 155ஆம் கட்டைப் பகுதியையேயாகும். இது கிளிநொச்சிக்கு தெற்காக உள்ள பகுதி. அக்கராயன் திருமுறிகண்டி வீதியை படையினரின் சில அணிகள் ஊடறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வீதியைப் படைத்தரப்பால் முழுமையாக இன்னும் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. அதேவேளை 572ஆவது பிரிகேட்டின் தளபதியான லெப்.கேணல் செனரத் பண்டார, கடந்த 21ஆம் திகதி முதல் கேணல் தரத்துக்குப் பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு லெப்.கேணல் அதிகாரியை தர முயர்த்தும் போது தற்காலிக கேணலாகவேசிறிது காலம் கருதப்படுவார்.

ஆனால் செனரத் பண்டார ஒரேயடியாக முழு நிலை கேணலாக பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். வன்னிப் படைநகர்வு ஆரம்பித்த காலம் முதல் இவர் திறமையாகச் செயற்பட்டதால் தான் இவருக்கு இந்தப் பதவி உயர்வுவழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டிருக்க��
�றார். வன்னேரி, அக்கராயன், கொக்காவில், மாங்குளம் ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றும் நோக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற 57ஆவது டிவிசன் இப்போது பெரிதும் சிக்கலான நிலையை அடைந்திருக்கிறது. முன்னர் புலிகளின் வலிந்த தாக்குதலுக்கு முகம் கொடுக்கக் கூடிய படைப்பிரிவாக 58ஆவது டிவிசனே கருதப்பட்டது.

அது முன்னேறியபோது ஓர் ஒடுங்கலான நிலப்பரப்பையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. 58ஆவது டிவிசன் இப்போது பெரிதும் பலவீனமுற்றிருக்கிறது. அதன் படைப்பிரிவுகள் பெரும்பாலும் சிதைவடைந்து போயிருக்கின்றன. இதனால்தான் நாச்சிக்குடாவைக் கைப்பற்றும் நடவடிக்கையை அவர்களால் முன்னரைப்போன்ற வேகத்துடன் முன்னெடுக்க முடியாதநிலை காணப்படுகிறது. ஆனால், இந்த டிவிசனுக்கு உள்ள ஒரே நிம்மதி என்னவென்றால், புலிகளின் வலிந்ததாக்குதலுக்கு உள்ளாகின்ற சந்தர்ப்பம் மிகக்குறைவு என்பதேயாகும். காரணம் ஒருபுறத்தில் பாக்கு நீரிணையையும் ஏனைய இரு புறங்களிலும் படைக்கட்டுப்பாட்டுப் பிரதேச நிலத் தொடர்ச்சியையும் கொண்டிருப்பதால் வலிந்த தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

ஆனால் 57ஆவது டிவிசனைப் பொறுத்தவரையில் நிலைமை அப்படியில்லை. வவுனிக்குளம் தொடக்கம் வடக்கே கொக்காவில், அக்கராயன், வன்னேரிக்குளம் என்று இதன் முன்னரங்க எல்லைகள் மிகவும் நீண்டு கிடக்கின்றன. புலிகள் நினைத்தால் எந்த நேரத்திலும் பக்க வாட்டிலாயினும் சரி, நெற்றிப்பொட்டிலாயினும் சரி வலிந்த தாக்குதல்களைத் தொடுக்கின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. 572ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த 8ஆவது இலகு காலாற்படை பற்றாலியனின் கட்டளை அதிகாயான லெப்.கேணல் எப்சித திசநாயக்க, புலிகளின் தாக்குதலை எதிர்பார்த்துப்பார்த்து தூக்கமின்றி இரவைக் கழிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

57ஆவது டிவிசனின் பிரிகேட், பற்றாலியன், கொம்பனி கொமாண்டர்கள் அனைவருமேஎந்த நேரமும் தொலைத்தொடர்பு சாதனத்துடனும், பிரதேச வரைபடத்துடனும்தான் திரிகின்றனர். சாதாரண படையினரின் நிலையும் இதேதான். காரணம் புலிகள் கிளிநொச்சியைக்காப்பாற்றும் நோக்கில் தம் மீது பாரிய வலிந்த தாக்குதலை தொடுக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் மிகவும் தீவிரமாக அதிகரித்திருக்கிறது. உண்மையில் படையினர் ஓர் உளவியல் போருக்குள் சிக்கிப் போயிருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

லெப்.கேணல் எப்சித திசநாயக்க, புலிகளின் தாக்குதலை எதிர்பார்த்து தூக்கமின்றி இரவுகளைக் கழிப்பதாகக் குறிப்பிட்டதானது முன்னெச்சரிக்கையின் வெளிப்பாடாக தெரியவில்லை. இது அவர்களின் பயத்தின் பலவீனத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. எந்தவொரு இராணுவமும் 24 மணிநேரமும் விழிப்புநிலையில் இருக்கத்தான் வேண்டும். அதையே தூக்கமின்றி இரவுகளைக் கழிப்பதாக களமுனைக் கட்டளை அதிகாரி ஒருவர் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார் என்றால் அது சலிப்பின் வெளிப்பாடாகவே கருதவேண்டும். தொடர்ச்சியான போரால் படையினர் களைத்து விட்டனர். சலித்து விட்டனர் என்பதே உண்மை.

களமுனையில் உள்ள படையினர் ஓய்வின்றித் தவிக்கின்றனர். உடை மாற்றக்கூட அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. புதிய உணவு கூட படையினருக்கு ஒழுங்காகக்கிடைப்பதில்லை. ஒவ்வொரு 3 நிமிடத்துக்கு ஒரு தடவை ஆட்டிலறி பற்றாலியன்கள் தொடர்ச்சியாக ஷெல்களைப் பொழிந்து புலிகளின் நகர்வைத் தடுக்க மட்டும் முனையவில்லை, படையினர் கண் அயர்ந்து விடக் கூடாதென்பதற்காகவே அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தத்தில் கிளிநொச்சிக்கான சமர் என்பது, படையினரை களைப்படையச் செய்வதற்கான சமராக புலிகளால் நடத்தப்பட்டு வருகின்றது என்பதே உண்மை.

எந்த வலிமையுள்ள படையும் தொடர் நடவடிக்கையால் எப்போது சலிப்படைந்து, களைப்படைந்து போகிறதோ அப்போது தாக்குதல்திறனை மட்டுமன்றி தற்காப்புத் திறனையும் இழந்து விடும் என்பது உலகப் போரியல்நியதி. வன்னியில் தற்போது நடக்கின்ற சண்டைகளில் படைத்தரப்பு கடுமையான சேதங்களைச்சந்தித்து வருகிறது. இதை படைத்தரப்பின் அறிக்கைகளில் இருந்தே தெரிந்து கொள்ளமுடிகிறது. அதில் உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பினும், களநிலையின் போக்கு இறுக்கமடைந்திருப்பதை அந்தப் புள்ளி விபரங்களே போதியளவுக்கு உணர்த்துகின்றன. இதனால் படையினர் மத்தியில் சலிப்பும் வெறுப்பும் அதிகரித்து வருகின்ற போதும் கிளிநொச்சி என்ற கனவை நோக்கி படைத்தலைமை அவர்களை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது.

வன்னிப் போர்க்களத்தில் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாதளவுக்கு, தற்போது புலிகள் தொடர்ச்சியாக போராளிகளை அனுப்பி பதில் தாக்குதல்களை நடத்திக்கொண்டேயிருப்பதாக இராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். புலிகள் பெரும்பாலும் ஆர்பிஜி, எல்எம்ஜி, 50 கலிபர் அணிகளையே முன்னிறுத்திச்சமர் செய்வதானது இராணுவ படைப்பிரிவுகளுக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் இராணுவத்தின் கிளிநொச்சியைக் கைப்பற்றும் கனவு இலகுவாகவோ குறுகிய காலத்துக்குள் நிறைவேறக் கூடியதொன்றாகவோ தெரியவில்லை.

- சுபத்ரா-

Comments