இரகசியக் கூட்டத்தில் கொங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேசியது என்ன?

இலங்கைத் தமிழர்களைக் காக்க மத்திய அரசு தலையிட வேண்டும் எனத் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டத்தில் திரைத்துறையினர் சிலரின் பேச்சை முன்வைத்து, வழக்கம்போல தங்கள் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிகானத்தை வாசிப்பதற்காகத் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு காங்கிரஸ்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா முடிவு அறிவிக்கப்பட்டதுமே ஒரு கோஷ்டி முணுமுணுக்கத் தொடங்கியது. கூட்டத்தில் கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு, சட்டமன்றக் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் கலந்துகொண்டபோதும், தங்களுக்கு சம்பந்தமில்லாததைப் போல எதிர்ப்பு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். வேலூர் எம்.எல்.ஏ.வும் துணை கொறடாவுமான ஞானசேகரன்.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸுக்குப் பங்கு என்ற லோக்கல் காங்கிரஸாரின் நீண்டகால கோரிக்கைக்கு சோனியாவே முடிவு கட்டிவிட்டதைத் தொடர்ந்து, சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும் கதையாக, தி.மு.க. கூட்டணியால் இனி பயனில்லை என்று கருதியவர்கள், எப்படியாவது உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருவதாகவே தெரிகிறது.

இந்த நிலையில்தான் ராமேஸ்வரப் பேச்சு விவகாரத்தைக் கையிலெடுத்தனர். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனியா காந்திக்குத் தந்தி அனுப்பியவர்கள், இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் நிலைப்பாட்டை முடிவு செய்ய உடனடியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஞானசேகரன் போன்ற சிலர் வற்புறுத்த, சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் போன்றோர் தள்ளிப்போட, ஞானசேகரன் தலைமையில் புதன்கிழமையன்று `ரகசியமாக' ஒரு கூட்டத்துக்கு, எம்.எல்.ஏ.வான அருள் அன்பரசு ஏற்பாடு செய்துவிட்டார். ஆன்ட்டி கிளைமாக்ஸாக இந்தக் கூட்டத்தில் சுதர்சனமும் வந்து கலந்துகொண்டார்!

மொத்தமுள்ள 35 எம்.எல்.ஏ.க்களில் 15 எம்.எல்.ஏ.க்களே கூட்டத்துக்கு வந்தனர். பெண் எம்.எல்.ஏ.க்கள் ஒருவரும் வரவில்லை. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் அப்படி என்னதான் பேசினார்கள் என்று அதில் கலந்து கொண்ட மூவரிடம் கேட்டோம். அவர்கள் நம்மிடம் கூறியபடி உள்ளே நடந்த உரையாடல்களை இங்கே தருகிறோம்...

பழனிச்சாமி: விடுதலைப் புலிகள் விஷயத்தில் காங்கிரஸ் வழிகாட்டு முறை ஏதாவது இருந்தா கொடுங்கப்பா. விடுதலைப் புலிகளை நாம் ஆதரிக்கிறோமா? இல்லையா? தெளிவா சொல்லுங்க. இப்ப இருக்கிற சூழ்நிலையில் என்ன பண்றது?

அசன் அலி: ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய பேரணியைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டேன், போலீஸார் கொடுக்க மறுத்துட்டாங்க.

அருள்அன்பரசு: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்த கவர்மெண்ட் பெர்மிஷன் கொடுத்து இருக்கு. அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த எப்படி அனுமதி கிடைக்கும்? நீங்க தைரியமா ஆர்ப்பாட்டம் நடத்துங்க. கைது பண்ணுனாங்கன்னா அதன் விளைவை அவுங்க சந்திக்கட்டும்.

சுதர்சனம்: இந்த மாதிரி விஷயங்களுக்கு `மேலிட'த்தில் பெர்மிஷன் கேட்கணும். உணர்ச்சி வசப்பட்டு நீங்க ஏதும் பண்ணிடாதீங்க. ஞானசேகரன்: ஆ... ஊ...னா, மேலிடம், மேலிடம்னு சொல்லுறீங்க. யார் அந்த மேலிடம்?

சுதர்சனம்: மேலிடப் பார்வையாளர் அருண்குமாரைத்தான் சொல்றேன்.

ஞானசேகரன்: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு வேணும்னு எல்லா எம்.எல்.ஏ.க்களும் லெட்டர் எழுதி அருண்குமார்கிட்டதான் கொடுத்தோம். மேலிடத்தில் சொன்னா தாரேன்னும், அப்படி எதுவும் எங்கிட்ட கேட்கலேன்னும் சொல்லி சி.எம்.மும் நம்மள அசிங்கப்படுத்திட்டாரு.

அருள் அன்பரசு: தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா கடிதத்தை சி.எம்.கிட்ட கொடுத்து இருக்காங்க. அதவச்சு வர்ற 28-ம் தேதி கெடு வெச்சு இருக்குறாரு. மத்திய அரசோட சிக்னல் எங்கிட்ட இருக்குன்னு திரட்டன் பண்ணிக்கிட்டு இருக்கறாப்ல இருக்கு. இதுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 35 பேரும் ராஜினாமா கடிதத்தை சோனியா மேடத்தைச் சந்திச்சுக் கொடுப்போம். ஆல்பார்ட்டி மீட்டிங்குல காங்கிரஸ் நிலைப்பாடு இதுதான்னு நம்ம கருத்தை ஆழமா பதிவு பண்ணிட்டு நீங்க ரெண்டுபேரும் வெளிநடப்புப் பண்ணியிருந்தா இந்தப் பிரச்னையே இல்ல. கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு நீங்களும் கையெழுத்துப் போட்டதால தானே இப்ப சி.எம். மனிதச் சங்கிலிப் போராட்டம் அறிவிச்சுருக்குறாரு.

சுதர்சனம்: நாங்க தீர்மானத்துல கையெழுத்துப் போடல, வருகைப் பதிவேட்டுல மட்டும்தான் கையெழுத்துப் போட்டுள்ளோம்.

அருள் அன்பரசு: அப்புறம், எப்படி அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்தின்படி மனிதச் சங்கிலிப் போராட்டம்னு சி.எம். அறிவிச்சுருக்காரு?

ஞானசேகரன்: சி.எல்.பி. தலைவர் என்ற முறையில் நீங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை எப்ப கூட்டப் போறீங்க?

சுதர்சனம்: இதெல்லாம் மேலிடத்துல கேட்டுத்தான் செய்யணும்பா.

அருள் அன்பரசு: அதுக்குள்ள தி.மு.க.காரங்க விதிச்ச கெடு முடிஞ்சு போகும். அவுங்களுக்கு முந்தி நாம் ஏதாவது பண்ணணும்.

ஞானசேகரன்: ஆமாம், யார ஏமாத்துறதுக்காக ஆறு மாசத்துல காபந்து ஆகப்போற எம்.பி. பதவிய ராஜினாமா செய்யப்போறோம்னு நம்மள மிரட்டணும்? அதுக்கு முன்ன, விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற தி.மு.க. கூட்டணி தேவையில்லைன்னு நாம ராஜினாமா செய்து டெல்லிக்கு அனுப்புவோம்.

பீட்டர் அல்போன்ஸ்: நாம உணர்வுபூர்வமா முடிவு எடுத்து டில்லிக்குப் போனா, அங்க ரெஸ்பான்ஸே பண்ண மாட்டாங்க. எதையாவது சொல்லி நம்மள அசிங்கப்படுத்திடுவாங்க.

ஜெயக்குமார்: உலகத் தமிழினத் தலைவராக பிரபாகரனை அறிவிக்க வேண்டும்னு இயக்குநர் சீமான் பேசுறாரு. இப்படிப் பேச ஸ்டேட் கவர்மெண்டும் அனுமதிச்சு இருக்கு. இதை ஏ.ஐ.சி.சி.யின் கவனத்துக்கு நாம எடுத்திட்டுப் போகணும்.

ஞானசேகரன்: அதனாலதான் நாம ரொம்ப சைலண்ட்டா இருக்க வேணாம், ஆக்கபூர்வமாக ஏதாவது நடவடிக்கை எடுக்கணும்.

சுதர்சனம்: தீபாவளி பண்டிகை வர்றதால, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டினாலும் எல்லோரும் வரமாட்டாங்க. மேலிடத்தில் கேட்டுட்டு, தீபாவளி கழிச்சு கூட்டலாம். புலிகளை ஆதரிச்சுப் பேசின இயக்குநர்கள் சீமான், அமீர், சேரன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்துல நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லி தீர்மானம் கொண்டு வரலாம். இவங்க மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மத்திய உளவுத்துறைக்கு நான் இப்ப தகவல் சொல்லிடுறேன்.

- இப்படிப் போனதாம் அந்த உரையாடல்.

``மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியை, ராஜீவின் மகள் பிரியங்காவே வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போகிறார். அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதில் தனக்கு விருப்பமில்லை என்று சோனியா காந்தியே குறிப்பிட்டதாகத் தகவல்கள் இருக்கின்றன. தாங்கள்தான் அதிகபட்சமான விசுவாசிகள் என்று காட்டிக்கொண்டு, பதவி கிடைக்காத ஏக்கத்தில், தி.மு.க.வுக்குப் பாதகமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கின்றனர்'' என்று தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஸீ
ஸீ இரா. முருகேசன்
குமுதம் - ஐப்பசி 30, 2008


Comments