ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக நடிகர்- நடிகைகள் உண்ணாநிலைப் போராட்டம்



ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும் தமிழக திரையுலக நடிகர்- நடிகைகள் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று நடத்தியுள்ளனர்.
சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டட வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை 8:00 மணிக்கு நடிகர், நடிகைகளின் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது.

இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு சுமார் ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. நடிகர், நடிகைகள் அனைவரும் கறுப்பு உடை அணிந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

காலை 8:00 மணிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நடிகர் சரத்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இலங்கையில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காக நடிகர்- நடிகைகள் எழுந்து ஒரு நிமிடம் மௌனமாக நின்றனர்.

உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பில் நிருபர்களிடம் நடிகர் சரத்குமார் கூறியதாவது:

"இலங்கையில் அமைதி ஏற்பட்டு, ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடக்கிறது. அந்த வகையில் இன்று நம் உணர்வுகளை பதிவு செய்யும் நாள் ஆகும். ஈழத் தமிழர்களுக்கு எல்லா வகை நிவாரண உதவிகளும் சென்று சேரும் வகையில் நடிகர், நடிகைகள் கருத்துக்களை பதிவு செய்வார்கள்" என்றார் அவர்.

உண்ணாநிலைப் போராட்ட மேடையில் இருந்த நடிகர், நடிகைகளை நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி ஒவ்வொருவராக அழைத்து உரையாற்ற வைத்தார். முதலில் பல்வேறு மாவட்ட நாடகக் கலை மன்ற நிர்வாகிகள் உரையாற்றினர். அதன் பின்னர் நடிகர், நடிகைகள் உரையாற்றினர்.





ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி பேசும் போது, உணர்ச்சிவசப்பட்டு விடுதலைப் புலிகள் பற்றியோ அல்லது மத்திய-மாநில அரசுகளை விமர்சனம் செய்தோ உரையாற்றக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே நடிகர், நடிகைகள் எல்லாரும் சுருக்கமாக உரையாற்றினர். உண்ணாநிலைப் போராட்டத்துக்கு தங்களது தார்மீக ஆதரவை தெரிவித்து மட்டுமே உரையாற்றினர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவர் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்க முற்பகல் 11:15 நிமிடத்துக்கு சென்றார். அவர் தன் சட்டையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கறுப்புப்பட்டி அணிந்திருந்தார்.

அவர் நிருபர்களிடம் தெரிவிக்கையில், "நடிகர் என்ற முறையில் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்கிறேன். இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வழிபிறக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் முற்பகல் 11:30 மணிக்கு உண்ணாநிலைப் போராட்ட மேடைக்கு சென்றார்.

நடிகர் கமலஹாசன் பிற்பகல் பிற்பகல் 12:35 நிமிடத்துக்கு உண்ணாநிலைப் போராட்ட மேடைக்கு சென்றார்.

மாலை 4:00 மணியளவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் சென்றார். இவருடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் சென்றனர்.








உண்ணாநிலைப் போராட்டத்தில் நடிகர்களான

வி.எஸ்.ராகவன், சிவகுமார், விஜய்குமார், விசு, விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சத்யராஜ், பிரபு, பிரகாஷ்ராஜ், முரளி, அர்ஜூன், விக்ரம், பார்த்தீபன்,ஜெயராம், பிரபுதேவா, கார்த்திக், பாண்டியராஜன், சரண்ராஜ்,

பசுபதி, ஸ்ரீகாந்த், கார்த்தி, பரத், நெப்போலியன், மணிவண்ணன், சந்திரசேகர், ஜெயம் ரவி, எஸ்.ஏ.சந்திரசேகர், சுந்தர்.சி., பிரசாந்த், பிரசன்னா, சாந்தனு, அருண்விஜய், சி.பி.ராஜ், கரண், எஸ்.ஜே.சூர்யா, ராஜேஷ், அருண்பாண்டியன், வினு சக்கரவர்த்தி,

நிழல்கள் ரவி, ஆசீஷ் வித்யார்த்தி, அஸ் வின்சேகர், ரியாஸ்கான், பிருதிவிராஜ், சரவணன், மன்சூர் அலிகான், ஸ்ரீமன், ரித்தீஸ், பாபுகணேஷ், ராஜ்கபூர், ராஜ்கிரண், தலைவாசல் விஜய், சரண், அப்பாஸ், சியாம், உதயா, நரேன், நகுல், ஜெய் ஆகாஷ்,

மனோஜ், இளவரசன், ஐஸ் அசோக், எஸ்.வி.சேகர், வை.ஜி. மகேந்திரன், கவுண்டமணி, விவேக், வடிவேல், எம்.எஸ்.பாஸ்கர், தாமு, குமரிமுத்து, சார்லி, சின்னி ஜெயந்த், கருணாஸ், அலெக்ஸ், மதன்பாப், கஞ்சா கறுப்பு, பாண்டு,

குள்ளமணி, சிசர் மனோகர், போண்டா மணி, தியாகு, மயில்சாமி, லாரன்ஸ்ராகவ், மோகன், தியாகராஜன், கவிஞர் பிறைசூடன், அபிராமி இராமநாதன், கலைப்புலி சேகரன், வி.சி. குகநாதன்,

நடிகைகள் மனோரமா, சச்சு, லதா, ராதிகா, ஸ்ரீபிரியா, ரேகா, மீனா, குஷ்பு, நயன்தாரா, திரிஷா, சிநேகா, சந்தியா, கீர்த்தி சாவ்லா, லட்சுமி ராய், லிசி, சத்யபிரியா, மும்தாஜ், கோவை சரளா, குயிலி, தாரிகா, மோனிகா, சபீதா ஆனந்த், கே.ஆர்.வத்சலா, பசி சத்யா, மயிலை கே.தேவி உட்பட திரையுலகமே திரண்டு வந்தது.

நடிகர், நடிகைகள் மேடைக்கு வர மக்கள் தொடர்பாளர்கள் டைமன் பாபு, மௌனம் ரவி, சிங்காரவேலன், நிகில், இராமதாஸ், கீர்த்தி செல்வகுமார், பெரு துளசி பழனிவேல், கோவிந்தராஜ், ரியாஸ், கடையம் ராஜூ ஆகியோர் உதவி செய்தனர்.

உண்ணாநிலை அறப் போராட்டத்தின் இடையே தமிழக அரசு திரட்டும் நிவாரணத்துக்கு நிதி திரட்டப்பட்டது. நடிகர்- நடிககைகள் ஆர்வத்துடன் நிதி வழங்கினர்.

மாலை 4:00 மணிக்கு உண்ணாநிலைப் போராட்டம் முடிவடைந்தது. பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் உண்ணாநிலைப் போராட்டத்தினை நிறைவு செய்தார்.


Comments