நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர்: நடிகர் கமல்ஹாசன்

நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர். வாஞ்சிநாதன் உட்பட பலரும் அந்த வரிசையில் சேர்ந்தவர்கள்தான். அதனால் போராடுபவர்கள் யார் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும் என்று பிரபல நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசி விடக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. உள்ளதைச் சொன்னாலே கோபித்துக்கொள்ளும் இந்த உலகில் உள்ளத்தில் இருப்பதைச் சொல்லியதால் நம்முடைய சகோதர்கள் சீமான், அமீர் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலையை அறிவோம்.

முள்கிரீடத்தோடு சிறை சென்ற அந்தச் சகோதரர்கள் மலர்க்கிரீடத்தோடு வெளியே வந்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழன் என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்து பேசுவது எனக்குச் சிரமம்.




இங்கே பேசிய திருமாளவன், இலங்கைத் தமிழரின் வரலாறை பல சான்றுகளுடன் சிறப்பாக எடுத்துரைத்தார். இலங்கையில் பாதிக்கப்பட்டு இங்கு அகதிகளாக வரும் தமிழர்களுக்கு உதவ நாம் தயாராக இருந்தாலும் தமிழர்களுக்கேயுரிய தன்மானம் காரணமாக அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் சிரமம் என நினைக்கிறேன்.

ஒரு சமூகத்தில் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது அங்கு தீவிரவாதம் பிறந்தே தீரும். நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர். வாஞ்சிநாதன் உள்பட பலரும் அந்த வரிசையில் சேர்ந்தவர்கள்தான். அதனால் போராடுபவர்கள் யார் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.

அங்கு சுமூகத் தீர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்படாத காரணத்தால் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தமிழர்களுக்காக உலகம் முழுக்க ஒட்டுமொத்தமாகக் குரல் எழும்பியுள்ளது. இதை உள்ளூரில் சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்கள் உணர வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தீர்வு காண உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அது உலக நாடுகளின் கடமை என்றார் கமல்ஹாசன்.

தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

1983 இல் நானும் ராதாரவியும், எஸ்.எஸ்.சந்திரன், சந்திரசேகர் ஆகிய நால்வரும் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாநிலைப் போராட்டம் இருந்துள்ளோம். ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம்.

நிதி திரட்ட நாடகம் நடத்தி உள்ளோம். இன்று வரை இந்த பிரச்சினைக்காக போராடுகிறோம். மத்திய- மாநில அரசை விமர்சனம் செய்யக்கூடாது என்கிறார்கள். நமக்கு விமர்சனம் செய்ய உரிமை உண்டு.

பாகிஸ்தானில் 200 பேர் செத்தால் பாவம் என்கிறோம். அது மனிதாபிமானம். அது போலத்தான் ஈழத்தமிழர்கள் மீது நாம் காட்டுவதும்.

ராஜபக்ச நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்தை மத்திய-மாநில அரசுகள்தான் தட்டிக் கேட்க வேண்டும். அங்குள்ள ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும்.





தே.மு.தி.க. இளைஞர் அணி மாநாட்டில், ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். ஈழத்தமிழர்கள் மீது தேவை இல்லாமல் குண்டு போடுகிறார்கள். அதை நிறுத்த வேண்டும்.

ராஜபக்ச மனிதாபிமானத்தை கொஞ்சமும் கடைப்பிடிக்கவில்லை. அங்கு மக்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் கறுப்புப் பட்டி அணிந்து வந்துள்ளோம். தே.மு.தி.க. சார்பில் மாவட்டம் தோறும் நிதி வசூலித்து கொடுத்து வருகிறோம்.

ஈழத்தமிழன் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?. இதில் நான் நிறைய பேசினால் அது அரசியலாகி வேறுவிதமாக போய் விடும். எனவே நான் இங்கு கட்டுப்பட்டுத்தான் பேச வேண்டியதுள்ளது.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையை மத்திய-மாநில அரசுகள் தீர்த்து வைக்க வேண்டும் என்றார் அவர்.

நடிகர் ரஜனிகாந்த் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

இது மிக அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு போராட்டம். பாதிக்கப்படுகிற தமிழ் மக்கள் குறித்த தங்கள் உணர்வுகளை கலைஞர்கள் வெளிப்படுத்தும் வகையில் நல்ல முறையில் ஏற்பாடுகளைச் செய்துள்ள நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவியை நான் பராட்டுகிறேன்.

இங்கே சில கட்டுப்பாடுகள் (பேசுவதற்கு) விதிக்கப்பட்டிருந்தன. நல்லதுதான். கட்டுப்பாடில்லாத மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.

இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை இங்கு விளக்கிய ராதாரவி மற்றும் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் பல இலங்கைத் தமிழர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் பேசுகிற தமிழுக்கு தனி இனிமை. அவர்கள் திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும்.

அந்த நல்ல மக்களுக்கு தங்கள் நாட்டில் வசிக்கிற உரிமை கூட இல்லை என்பது எத்தனை வேதனைக்குரிய விடயம்!.

அவர்கள் வேண்டுமென்றா இப்போது போரில் இறங்கினார்கள்...?. சாத்வீகமான முறையில் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பார்த்தவர்கள், வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள்.




இப்போது உடனடித் தேவை யுத்த நிறுத்தம்தான். போரை நிறுத்துங்கள், இங்கே ஒலிக்கிற இந்தக் குரல் ராஜபக்சவின் காதுகளுக்குக் கேட்க வேண்டும்.

ராஜபக்ச அவர்களே... உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தமிழ் மக்கள் கேட்பது என்ன? சம உரிமைதானே... அதைக் கொடுப்பதுதான் உங்களுக்கு நல்லது.

உங்கள் சிங்கள அரசிடம் இராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளும் உள்ளன. இந்த முப்படைகளை வைத்துக்கொண்டு, உரிமைக்காகப் போராடும் அந்த மக்களை உங்களால் அழித்துவிட முடிந்ததா? 30 ஆண்டுகளாக அவர்களை உங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அப்புறம் என்ன படை உங்களுடையது!. ஏன் இந்த நிலை... அந்த மக்கள் உண்மைக்காக, உரிமைக்காக போராடுகிறார்கள்.

உங்கள் இராணுவத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை உங்களால். காரணம் உங்கள் ஈகோ. உண்மையை ஒத்துக்கிட்டு அவர்களின் உரிமைகளைக் கொடுங்கள்.

ஏழை மக்கள், சாமான்ய, அப்பாவி மக்கள் கஷ்டப்பட்டால் ஒரு நாடு உருப்படாது. அவர்களது மூச்சுக்காற்று மண்ணில் பட்டால் கூட அந்த நாடு உருப்படாது. பல ஆண்டுகளாக கொத்துக் கொத்தாக உதிரம் சிந்தி மடிகிறார்கள் அந்த மக்கள்.

அவர்களது பிணங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நாளை இந்த விதைகள் மீண்டும் முளைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கான இடத்தை, உரிமையை அந்த மக்களுக்கு கொடுத்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.

இந்தக் குரலுக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை எனில் பெரிய நாடுகள் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிவரும் என்றார் ரஜினிகாந்த்.

நடிகர் சிவகுமார் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

நான் ஒரு கனவு கண்டேன். பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவுப்படி தமிழக தலைவர்கள் இலங்கை சென்று ராஜபக்ச மற்றும் ஈழத் தமிழர் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்ப்பது போல கனவு இருந்தது. இந்த கனவு மெய்ப்பட வேண்டும்.

நடிகர் பார்த்தீபன் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள். நாம் உணர்ச்சி வசப்பட்டு பேசினால் ஈழத்தில் இராணுவத்தினர் கூடுதல் தாக்குதல் நடத்துவதாக அறிந்தேன். எனவே நிதானம் தேவை.

ஈழத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். அதை பார்த்தால் மனம் தாங்க முடிய வில்லை.

இது போன்ற பிரச்சினைகளை ஐ.நா. சபை தீர்க்க வேண்டும். ஆனால் அது டீக்கடை பெஞ்ச் போல உள்ளது. 30 வருடமாக ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் இன்னமும் தீரவில்லை. அமெரிக்கா நினைத்தால் இந்த பிரச்சினையை ஒரு நொடியில் தீர்க்கலாம்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். எல்லோரும் நிதி உதவி செய்கிறோம். இந்த நிதி ஈழத் தமிழர்களுக்கு எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரியவில்லை. இதற்கு ஒரு குழு அமைத்து, அதில் நடிகர் சங்கத்தினர் ஒருவரையும் சேர்த்து நிதி உதவியை பகிர்ந்தளிக்கலாம்.

சீமான், அமீர் கைதால் நம் போராட்டம் உத்வேகம் அடைந்துள்ளது. போரை நிறுத்தி அமைதி பேச்சை தொடங்க வேண்டும்.

நகைச்சுவை நடிகர் வடிவேல் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். உடனே போரை நிறுத்த வேண்டும். அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நிறைய பொருள் உதவி செய்யப்பட வேண்டும்.

நகைச்சுவை நடிகர் விவேக் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் தொன்மை மொழி. தமிழர்கள் உலகின் மூத்த குடி. கிரேக்கம், ரோமானிய நாகரீகத்துக்கு முந்தியது தமிழ் நாகரீகம். உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழன் உழைப்பான். ஆனால் எல்லா இடத்திலும் ஏமாறுவான்.

வெளிநாடுகளில் நட்சத்திர கலை விழாக்கள் நடைபெற ஈழத் தமிழர்கள் தான் காரணம். எங்களது ஒவ்வொரு உணவு பருக்கையிலும் அவர்கள் உள்ளனர். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

குணசித்திர நடிகர் மணிவண்ணன் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

ஈழத்தில் பள்ளிக்கூடம் மீது கூட சிங்களர்கள் குண்டுகளை போடுகிறார்கள். மாணவ-மாணவிகள் பதுங்கு குழிகளில் ஒளிகிறார்கள். அதைப் பார்க்கும் போது நெஞ்சு வலிக்கிறது.

வெடிச் சத்தத்தில் பிறந்து, வெடிச்சத்தத்திலேயே அவர்கள் வாழ்கிறார்கள். அங்கு சமாதானம் ஏற்பட வேண்டும். இனவெறி ஒடுக்கப்பட வேண்டும். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.

நடிகை கோவை சரளா ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

உலக அளவில் தமிழர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ் மீது திருஷ்டி விழுந்து விட்டது. ஈழத்தமிழர்கள் உடனே காப்பாற்றப்பட வேண்டும்.

நடன இயக்குனர் லோறன்ஸ் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் தமிழர்களுக்கு உதவ ரஜினி, விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் ரசிகர்களும் நிதி திரட்ட வேண்டும். நான் என் பங்குக்கு 10 லட்சம் ரூபாய் நிதி திரட்டி உள்ளேன்.

மேலும் என் சொந்த பணத்தில் இருந்து 2 லட்சம் ரூபா கொடுத்து மொத்தம் 12 லட்சம் ரூபா வழங்குகிறேன். ரசிகர்கள் நடிகர்களின் கட்- அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்வதை நிறுத்தி நிதி தர வேண்டும் என்றார் அவர்.

நடிகர் ஜெயராம் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழர்கள் இலங்கையில் நீண்டகாலமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதனை தீர்க்க அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்பதில் ஒரு உண்மையான இந்தியன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் பொன்வண்ணன் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கின்ற உறவு கருவறை உறவு. லெமூரியா கண்ட காலத்திலிருந்து இந்த உறவு தொடர்ந்து வருகிறது.

இலங்கை தமிழர்களின் உரிமைக்காக தந்தை செல்வா காலத்தில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 1983 ஆம் ஆண்டு இலங்கை வெலிக்கடை சிறையில் 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அது முதல் போராட்டம் தீவிரம் அடைந்தது.

அங்கே நம்முடைய சகோதரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று நடிகர்கள் நடத்தும் இந்த போராட்டம் அவர்கள் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

நடிகர் கார்த்திக் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

அப்பாவி தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்கே கூட தனிப்பட்ட முறையில் அனுபவம் உண்டு. அவர்களுடைய துயரங்களை தீர்க்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.


Comments