ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் பின்னணியில் இந்தியா: வைகோ குற்றச்சாட்டு

கடந்த 4 ஆண்டு காலமாக சிங்கள அரசு நடத்துகின்ற இனப்படுகொலை தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து இந்திய அரசு இயக்கி வந்திருக்கிறது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை வானூர்தி நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசால் கொடூரமான இனப்படுகொலைக்கு ஆளாகி வருகின்ற பெருந்துயரத்துக்கு, பின்னணியில் இருந்து இராணுவ தாக்குதலை இயக்கி வருகிற, ஆயுதங்களை வழங்கி வருகிற, 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சிறிலங்காவுக்கு நிதி உதவி செய்த இந்திய அரசுதான் முழுக்க, முழுக்க காரணமாகும்.

கடந்த 4 ஆண்டு காலமாக சிங்கள அரசு நடத்துகின்ற இனப்படுகொலை தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து இந்திய அரசு இயக்கி வந்திருக்கிறது என்பதை ஆதாரங்களோடு நான் குற்றஞ்சாட்டுகிறேன்.

இந்தியா - சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் செய்து அறிக்கை தந்தபோது அதை கடுமையாக நான் எதிர்த்து போராடினேன். நேரடியாக மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கடும் முயற்சி செய்தபோது ஒப்பந்தம் போடப்படுவதில்லை என்று சொன்னார்களே தவிர, ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்று ஒரு மாதம் கழித்து 2005 ஜனவரியிலேயே யுத்தத்தை நடத்திவிட்டனர்.

பலாலி வானூர்தி தளத்தை புதுப்பிக்க இந்தியா ஏற்பாடு செய்கிறது என்று அறிந்த உடன் இந்த இராணுவ தாக்குதலுக்கு பலாலி வானூர்தி தளத்தைத்தான் சிறிலங்கா அரசு பயன்படுத்தி வந்தது. இந்த தளத்தில் இருந்துதான் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டு 168 பேர் கொல்லப்பட்டார்கள்.

அதனால் அந்த வானூர்தி தளத்தை பழுதுபார்த்து கொடுக்கக்கூடாது என்று நான் கூறினேன். பழுதுபார்த்து கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு 2005 டிசம்பரில் இந்திய அரசு அவர்களுடைய செலவில் தளத்தை புதுப்பித்தார்கள் என்று சிறிலங்கா அரசின் வானூர்தி படை தளபதி தெரிவித்தார்.

வானூர்தி தளத்தை புதுப்பித்து கொடுத்து வானூர்தி தாக்குதலுக்கும், கதுவீகளை கொடுத்தும் வானூர்தி தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ததால்தான் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் குண்டு வீச்சிலே கொல்லப்பட்டார்கள். இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி கொடுத்து வந்தார்கள். இந்த யுத்தத்தை பின்னாலே இருந்து இயக்குவதே இந்திய அரசு என்பதால்தான் போரை நிறுத்துங்கள் என்று அழுத்தம் கொடுக்க இந்தியா தயாராக இல்லை.

எனவே இதுவரை தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், தமிழர்கள் சிந்திய ரத்தத்திற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாளி.

சிறிலங்காவிடம் இந்தியா போர் நிறுத்தம் செய்ய சொல்லி கேட்கவில்லை என்பதோடு, இராணுவ உதவியை தொடர்ந்து செய்துவிட்டு, இப்போது நிவாரணத்துக்கு நிதி திரட்டுகிறோம், உணவும், மருந்தும் திரட்டுகிறோம் என்பது தமிழக மக்களை ஏமாற்றுகிற வேலை.

சில அதிகாரிகளை அங்கே கொண்டு வந்து நிறுத்தி நாங்கள் நேரடியாக நிவாரணம் கொடுக்கப்போகிறோம் என்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு 90 சதவீதத்துக்கு மேல் சிறிலங்கா அரசுக்கு, சிங்கள இராணுவத்துக்கு, சிங்கள மக்களுக்கு தான் நிவாரணம் உதவப்போகிறது.

இந்த போரை இயக்கிக்கொண்டே இருக்கிற இந்திய அரசு நினைத்தால், முதலில் போரை நிறுத்துகிறாயா? இல்லையா? கொடுத்த கடனை திருப்பிக்கொடு, கதுவீகளை திருப்பிக்கொடு என்று கூறுவதோடு, வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தையும் இரத்து செய்வோம் என்று பொருளாதார தடையை விதித்து நிர்ப்பந்தம் ஏற்படுத்தினால் சிறிலங்கா தானாக வழிக்கு வரும்.

இந்திய அரசுக்கு சரியான பாடம் புகட்டுவதற்காக தமிழக மக்களை தயார் படுத்தும் வேலையில் நாங்கள் ஈடுபடுவோம்.

நாளை (இன்று) முதல் ஒருவாரத்திற்கு மத்திய அரசை கண்டித்து நாங்கள் கண்டன வாரமாக கடைப்பிடிக்கிறோம். உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்துகிறோம் என்றார் வைகோ.


Comments