வெளிநாட்டு அரசுகளும் நிதி அமைப்புக்களும் கடந்த காலத்தில் அளித்த நிதி எமக்கு வந்து சேரவில்லை: பா.நடேசன்



வெளிநாட்டு அரசுகளும், நிதி அமைப்புகளும் சிங்கள அரசிடம் கொடுத்த பெருந்தொகைகள், தமிழரிடம் வந்து சேரவில்லை என்பதே கடந்த கால உண்மை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வாரமிருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் (19.11.08) இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

''இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படும் நிதி, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு போய்ச் சேராது என்று சொல்லப்படுவது உண்மையா?''

''போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான புனர்வாழ்வு, அபிவிருத்தி போன்றவற்றுக்காக வெளிநாட்டு அரசுகளும், நிதி அமைப்புக்களும் சிங்கள அரசிடம் கொடுத்த பெருந்தொகைகள், தமிழரிடம் வந்து சேரவில்லை என்பதே கடந்த கால உண்மை! ஆழிப்பேரலையால் தமிழீழம் பெரும் இழப்பைச் சந்தித்தபோது, இங்கே சமாதானச் சூழல் நிலவியது. அப்போது நோர்வே அரசின் தலைமையில் சிங்கள அரசுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே 'ஆழிப்பேரலை பொதுக் கட்டமைப்பு!' என்ற பெயரில் ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கென்று உலக நாடுகள் சிங்கள அரசிடம் பெருந்தொகை வழங்கியிருந்தன. இந்த நிதியில் பெருந்தொகையை சிங்கள அரசு சுருட்டிக்கொண்டது. உண்மை இப்படியிருப்பதால், தமிழக மக்களின் நிதி ஈழத்தமிழர்களின் கைகளுக்கு வந்து சேர்வதை இந்திய அரசுதான் உறுதிப்படுத்தவேண்டும். மாறாக, இந்த நிதி சிங்கள அரசின் கைகளுக்குப் போனால், அது போராயுதங்களாக மாறி ஈழத்தமிழர்களை அழிக்கும் என்பதுதான் உண்மை!''

''தமிழர் பகுதியில் இருந்த 'செஞ்சிலுவைச் சங்கம்' மற்றும் 'ஐக்கிய நாடுகள் குழு'க்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் நிவாரண உதவிகள் யார் மூலம் வழங்கப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?''

''ஈழத்தமிழரின் இடர் நிவாரணப் பணிக்கென எம்முடைய மண்ணிலேயே 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்!' என்ற கட்டமைப்பு இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் மனித நேயமுள்ள வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

தமிழக அரசு மத்திய அரசு வழியாக அனுப்பும் நிவாரண உதவிகள் இக்கழகத்தினூடாக வழங்கப்பட்டால், அது நூறு சதவிகிதம் தமிழ் மக்களைச் சென்றடையும்...

அல்லது ஐக்கிய நாடுகள் பொது அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டு, அது நேரடியாக வன்னிக்கு கொண்டுவரப்பட்டு வழங்கப்பட வேண்டும்!''

''ஈழப் பகுதியில் இருந்த தன்னார்வுக் குழுக்கள் திரும்பப் பெறப்பட்டது ஏன்?''

''இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தமிழ் மக்கள் மீது, சிங்கள அரசு கட்டவிழ்த்து விடும் இனப்படுகொலையை ஆதாரபூர்வமாக உலகுக்கு எடுத்துச் சொல்லி சிங்கள அரசின் போக்கை அம்பலப்படுத்தி வந்தன. எனவேதான், தமிழர் மீதான இனப்படுகொலையை மூடிமறைக்க உலகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளன.''

''ஈழத் தமிழர்கள் விடயத்தில் தமிழகம் தலையிட்ட பிறகு, இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றிருக்கிறதா?''

''இங்கே எந்த மாற்றமும் நிகழவில்லை. சிங்களப் படைகள் போரை தீவிரப்படுத்தியிருக்கின்றன. தமிழகத்தின் எழுச்சிக்கோ, இந்திய அரசின் முயற்சிக்கோ சிங்கள அரசு செவி சாய்த்ததாகத் தெரியவில்லை.''

''திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் 'முப்படைகளை வைத்துக்கொண்டு முப்பது வருடமா யுத்தம் செய்யுறீங்க... உங்களால் அவர்களை (புலிகளை) ஜெயிக்க முடிந்ததா?' என்று நடிகர் ரஜினி பேசியது பற்றி?''

''ரஜினி அவர்கள் எம்முடைய மண்ணின் கள யதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்துள்ளார். இங்குள்ள ஒவ்வொரு தமிழரும் வீரத்தை வெளிப்படுத்தியபடி, தியாகங்கள் புரிந்தபடி போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த முப்பது வருட காலமாக எங்களுடைய சுதந்திரத் தீயை அணையவிடாது பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய தியாகங்கள் என்றைக்கும் வீண்போகாது!''

''தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, 'இலங்கைப் பிரச்னையில்... இந்தியா, இலங்கை அரசை எந்த வகையிலும் நிர்ப்பந்திக்க முடியாது. சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் உண்மையான ஈடுபாடு காட்டினால்தான் சண்டை முடிவுக்கு வரும்!' என்று சொல்லியிருக்கிறாரே...?''

''நோர்வே தலைமையில் நடந்த ஐந்து வருடகால சமாதானப் பேச்சில் அமைதி வழியில் அரசியல் தீர்வு என்பதை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். நோர்வே தலைமையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை இன்றைக்கும் மதிக்கின்றோம். இந்த உடன்பாட்டைச் சிங்கள அரசு ஒருதரப்பாக நிராகரித்துவிட்டது. எனவே, அமைதிக்கும் அமைதி முயற்சிகளுக்கும் தடையாக சிங்கள அரசே உள்ளது. தற்போது நடைபெறும் போரை நிறுத்தி, சிங்கள அரசுடன் பேசப் புலிகள் இயக்கம் தயாராகவே இருக்கிறது.''

''புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியைச் சுற்றிவளைத்து விட்டோம் என்று சிறிலங்கா அரசு சொல்லிக் கொண்டிருக்கிறதே...''

''கிளிநொச்சியைப் பிடிக்க சிங்கள அரசு பெரும் முயற்சிகளைச் செய்கிறது. நாள்தோறும் நடக்கும் சண்டைகளால் கிளிநொச்சி அதிர்ந்தபடியுள்ளது. என்ன விலை கொடுத்தேனும் கிளிநொச்சியைப் பாதுகாப்பதென்ற திட சங்கல்பத்துடன் நாம் போராடி வருகிறோம்.''

''முதல்வர் கருணாநிதி, 'இலங்கைப் பிரச்னையில் தலையிடுவதில் மத்திய அரசின் நிலையையும் அதிகார எல்லைகளையும் உணரவேண்டும். இன்னொரு நாட்டின் பிரச்னையில் ஓரளவுதான் தலையிட முடியும்!' என்று சொல்லியிருப்பது பற்றி?

''இங்கு நடைபெறும் போரை நிறுத்தி, அமைதியைக் கொண்டுவரும் ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு என்பது பொதுவான உண்மை. இனப்படுகொலை செய்யப்பட்டு ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்படுவதை, அயல்நாட்டு விவகாரம் எனக் கூறி ஒதுங்கியிருந்து விடலாமா? எது எப்படியிருப்பினும் தமிழ்நாட்டு மக்களுடைய இன எழுச்சியும் அந்த இன எழுச்சிக்குத் தலைமை வகித்த தமிழக அரசும் நன்றிக்குரியவர்கள்!''

''ராஜபக்ச, 'விடுதலைப் புலிகள் சரண் அடைந்தால்தான் போர்நிறுத்தம் செய்யப்படும்' என்று கூறியிருக்கிறாரே...?''

''புலிகளின் ஆயுதங்கள் என்பது தமிழ் மக்களின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் வரை புலிகளின் ஆயுதங்கள்தான் மக்களுக்கான கேடயங்கள்.''

''பிரபாகரன் பிடிபட்டதும், இந்தியா விரும்பினால் அவரை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம்' என்றும் ராஜபக்ச சொல்லி இருக்கிறாரே...''

''தமிழின அழிப்புக்கு எதிராக, இந்தியாவில் உருவாகி வரும் உணர்வலைகளைத் திசை திருப்புவதற்காக அவர் இத்தகைய கதைகளைப் பரப்பி வருகிறார்.''

''போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டதாகச் செய்தி வந்தது. ஆனால், அப்படி எந்தக் கோரிக்கையும் வைக்க வில்லை என்று ராஜபக்ச கூறியிருக்கிறாரே?''

''சிங்களப் படைகள் தொடுத்துள்ள பெரும் போரால் ஈழமக்கள் பெரும் அவலத்தைச் சந்தித்துள்ளனர். இடம்பெயர்ந்தோரின் அவலங்கள் எல்லை மீறியுள்ளது. உலகத் தொண்டு நிறுவனங்களையும் சிங்கள அரசு வெளியேற்றியுள்ளது. இந்த அவலத்திலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க போர் நிறுத்தம் அவசியம்!'' என்றார் நடேசன்.



Comments