இலங்கை இனப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

இலங்கை இனப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அணியின் சார்பில் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் கலந்து கொண்டு தொல். திருமாவளவன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை இனப் பிரச்சினையில் மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25.11.08) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பது இந்த நேரத்திற்குப் பொருத்தமானதும், உகந்ததும் அல்ல. அவர்களின் உணர்வுகள் நியாயமானது என்றாலும் முதல்வர் கலைஞர் தலைமையில்தான் அதனை வலியுறுத்த வேண்டும்.

வேண்டுமானால், மருத்துவர் இராமதாஸ் தலைமையில் முதல்வர் கலைஞரைச் சந்தித்து மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தும்படி வலியுறுத்தலாம். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து இலங்கை இனப் பிரச்சினை குறித்த தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் கொட்டும் மழையில் 2 மணி நேரம் நின்று தனது உணர்வுகளை மருத்துவர் இராமதாஸ் காட்டினார். இதற்காக அவரைப் பாராட்டுகிறேன். இதேபோன்று இலங்கை இனப் பிரச்சினையில் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என்றார் திருமாவளன்.

முன்னதாகப் பேரணியைத் தொடக்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உரையாற்றிய போது கூறியதாவது:

இலங்கையில் புலிகள் பின்வாங்கிக் கொண்டிருப்பதாக சில ஊடகங்கள் கூறிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் தாங்களும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற்ற நினைக்க வேண்டாம். புலிகள் பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்பதை நான் நினைவுறுத்துகிறேன். இறுதி வெற்றி தமிழர்களுக்குத்தான் கிடைக்கும் என்றார் அவர்.


Comments