ராஜபக்ஷவிடம் ஏமாந்துவிடாதீர்: மன்மோகனுக்கு கருணாநிதி வேண்டுகோள்

இலங்கையில் விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும் ஒருசேர அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அந் நாட்டு அதிபர் ராஜபக்ஷ சொல்வதை நம்பி பிரதமர் மன்மோகன் சிங் ஏமாந்துவிடக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் கூறினார்.

போரை நிறுத்த மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷ தில்லியில் வியாழக்கிழமை கூறியிருப்பது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பேசினர்.

அதிமுக சார்பில் பேசிய அதன் பேரவைக் குழு துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், ஏற்கெனவே எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வதாக எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதால், மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் அளித்த பதில்:

தமிழனுக்கு தீங்கு வந்தால் அதைச் சகித்துக் கொண்டு பதவியில் நீடிக்கும் பதவி வெறி, கடந்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட எந்தக் கட்சித் தலைவருக்கும் கிடையாது.

அந்தத் தீர்மானப்படி நடந்திருந்தால் திமுக மட்டுமே விலகி இருக்க முடியும். பா.ம.க.வும் கூட விலகி இருக்கும்.

மற்ற கட்சிகள் கூட்டம் முடியும் முன்பே தங்கள் தலைமையிடம் கேட்டு முடிவு எடுக்கப் போவதாகக் கூறிவிட்டனர். அதனால் சற்று தயக்கம் ஏற்பட்டது.

இடையில் பல நிகழ்ச்சிகள் இலங்கையில் தொடர்ந்து நடக்கிறது. இப்போது போர் நிறுத்தம் இல்லை என முடிவாக ராஜபக்ஷ கூறிவிட்டார்.

அதே நேரத்தில் உலகில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க மாட்டோம் என "சுவைபட' கூறியுள்ளார். அப்படிச் சொன்னால் இங்குள்ள தமிழர்களை ஏமாற்ற முடியும் என கருதி இருக்கிறார்.

இது மத்திய அரசுக்குத் தெளிவாகப் புரியும் என நம்புகிறேன். ஏனென்றால், இலங்கைப் பிரச்னையை ராஜபக்ஷ இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்.

1. தீவிரவாத இயக்கமாக உள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தர முடியாது.

2. தமிழர் குடும்பங்கள் மீது ராணுவத் தாக்குதல் இருக்காது.

இதில்தான் இந்தியா மிகுந்த எச்சரிக்கையோடு கையாள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கையும், ஆட்சியை வழிநடத்தும் சோனியா காந்தியையும் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகள் என்று கருதினால் அதை வேறு வகையில் கையாளட்டும். அதேசமயத்தில் தமிழர் குடும்பங்களை வேறு மாதிரி கையாள வேண்டும்.

அதேசமயத்தில் தமிழர்களின் வீடு, ஆலயம், வீதி, ஊர்களில் ஒரு குண்டுகூட விழாது என உத்தரவாதம் தர ராஜபக்ஷ தயாராக இல்லை.

விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் ஒருசேர அழிப்பதற்குதான் ராஜபக்ஷ போர் நடத்துகிறார் எனப் புரிகிறது. இதில் நாம் ஏமாந்துவிடக் கூடாது என மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லா நாடுகளிலும் தீவிரவாதப் பிரச்னை உள்ளது. அதற்காக அந் நாட்டு மக்கள் மீதெல்லாமா குண்டு வீசப்படுகிறது? இதை நம் பிரதமர், நமது சார்பாக ராஜபக்ஷவிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதை ராஜபக்ஷ கேட்க வேண்டும்.

பதவி விலக தயார்: கேட்காவிட்டால் பிறகு என்ன செய்வோம் என யோசிப்போம் என பிரதமர் கூற வேண்டும். பிரதமர் சொல்வதை நாமும் செயல்படுத்த வேண்டும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து அறப்போர் முறைகளை அறிந்தவர்கள் நாம். ஈழத் தமிழர்களைக் காக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பதவி துறக்கவும் தயாராக இருக்கிறோம் என்றார் முதல்வர்.

Comments