இயக்குநர்கள் சீமான், அமீருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இரத்து - ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

பிணையில் விடுவிக்கப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ராமநாதபுரம் செசன்சு நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் ராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனை தொடர்ந்து கடந்த 24.10.2008 அன்று சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 30.10.08 அன்று இவர்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது. நீதிமன்ற நிபந்தனையின் படி இவர்கள் மதுரையில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு வந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி ராமநாதபுரம் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் சீமான், அமீர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "சீமான், அமீர் ஆகியோர் பிரபல இயக்குநர்களாக இருந்து வருகின்றனர். அமீர் சொந்தமாக 'யோகி' என்ற படத்தை தயாரித்து இயக்கி வருவதுடன் அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதனால் இவர்களது சினிமா தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே நிபந்தனைகளை இரத்து செய்ய வேண்டும்'' என்று அவர்களது வழங்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி ஜெயபாலன், இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முழுவதுமாக இரத்து செய்து உத்தரவிட்டார். நிபந்தனைகள் இரத்து செய்யப்பட்டதால் இருவரும் மீண்டும் சென்னை சென்று வழக்கமான பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Comments