திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் பூநகரிக்கான யுத்தம்

வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பூநகரியையும் கிளிநொச்சியையும் கைப்பற்றி மன்னார் - பூநகரி வீதியூடாக யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை மிக விரைவில் திறக்கப்பட்டுவிடுமென படையினர் கூறுகின்றனர்.


புலிகள் தொடர்ந்தும் பதில் தாக்குதலையே நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்கள் தாக்குதல் சமர் எதனையும் நடத்தாததால் இந்தக் களமுனையில் இனிப் புலிகளால் தாக்குதல் சமரையோ அல்லது ஊடறுப்புத் தாக்குதலையோ நடத்த முடியாதென்று படையினர் பெரும்பாலும் தீர்மானித்து விட்டனர்.

வவுனியா - மன்னார் வீதியிலி ருந்து வடபகுதி நோக்கி ஆரம்பிக்கப் பட்ட படை நடவடிக்கை மூலம் வன்னியில் ஏ-9 வீதிக்கு மேற்குப் புறமான பெரும்பாலான பகுதி படையினர் வசமாகியுள்ளது.


பூநகரியையும் கிளிநொச்சியையும் கைப்பற்றிவிட்டால், யாழ்.குடா நாட்டுக்கு, மேற்குக் கரையோரத்தால் (மன்னார்-பூநகரி வீதி - ஏ-32 ) தரை வழிப் பாதையை திறந்து விடமுடியுமென்பதுடன் வவுனியாவிலிருந்து யாழ்.குடா நாட்டுக்கான ஏ-9 வீதியையும் முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துவிட முடியுமென்றும் படைத்தரப்பு கருதுகின்றது.


இதனால் கிளிநொச்சியை முதலில் கைப்பற்றா விட்டாலும் பூநகரியைக் கைப்பற்றுவதன் மூலம் கரையோரப் பாதையைத் திறந்து பின்னர் கிளிநொச்சியை கைப்பற்றுவதன் மூலம் ஏ -9 வீதியையும் திறந்து விட முடியுமென அவர்கள் நம்புகின்றனர்.


களமுனையில் ஏற்பட்டு வரும் மாற்ற ங்களை விட அரசும் படைத்தரப்பும் மேற்கொள்ளும் பெரும் பிரசாரங்கள் மூலம் மக்கள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தி விட முயற்சிக்கப்படுகிறது. இதனால் களமுனையில் ஏற்படும் வெற்றிச் செய்திகள் மட்டுமே அவர்களால் வெளியிடப்படுகின்றன.

படையினருக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் பின்னடைவுகள் குறித்த தகவல்கள் படை நடவடிக்கையை மட்டுமல்லாது படையினரின் மனோ நிலையையும் பாதித்துவிடுமென்பதால் அவை குறித்து எதுவும் தெரிவிக்கப்படாததுடன் இம்முறை வரவு - செலவுத் திட்டமும் யுத்தத்திற்குரியதாயுள்ளது.


படையினரதும் அவர்களது குடும்பத்தவர்களதும் நலன்களே முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த வரவு - செலவுத் திட்டத்தின் மூலம், படையினருக்கு புதிதாக மேலும் பெருமளவானோரை சேர்க்க அரசு முற்பட்டுள்ளதுடன் இதன் மூலம், படைகளிலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கையையும் குறைக்க முடியுமெனவும் அரசு நம்புகிறது.


புலிகளுக்கெதிரான போர் எண்பது வீதம் முடிவடைந்து விட்டதாக இராணுவத்தளபதி கூறுகையில் இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போரில் படையினர் பெரும் வெற்றிகளைப் பெற்று வருகிறார்களென்றால் படைகளிலிருந்து இத்தனை பேர் ஏன் தப்பியோடுகின்றனர் என்ற கேள்வி எழுவதுடன் படைகளில் இணைய முன் வருவோரின் தொகையும் ஏன் பெருமளவில் குறைகிறதென்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

வன் னிக் களமுனையில் படையினரின் முன் னேற்றமானது படையினரின் வெற்றியாக இருக்கின்றதென்பதை விட, புலிகளின் தொடர்ச்சியான பின்நகர்வாயிருப்பதாக கீழ் மட்ட படையினர் கருதுவதாலேயே எதிர்விளைவுகளையெண்ணி இவ்வாறான தொரு நிலைமை ஏற்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.

ஏ -32 வீதியால் பூநகரி நோக்கியும் ஏ -32 க் கும் 'ஏ -9' வீதிக்கும் இடையில் கிளிநொச்சி நோக்கியும் வேகமாக முன்னேறி வந்த படையினரைப் புலிகள் ஏ -32 வீதியில் நாச்சிக்குடா முதல் வன்னேரி- அக்கராயன் ஊடாக ஏ -9 வீதியில் தெரு முறிகண்டிவரை தடுத்து நிறுத்தினர்.

புலிகளின் பாரிய மண் அணைகளையும் முன்னரங்க காவல் நிலைகளையும் தாண்டிச் செல்ல முடியாது இரண்டரை மாதங் களுக்கும் மேலாக படையினர் தடுமாறிய போது, இதற்கப்பால் புலிகள் தங்களை முன்னேறவிடமாட்டார்களோ என்ற ஐயம் படைத்தரப்புக்கிருந்தது.

யாழ்.குடாவிலுள்ள படையினர் கிளாலி - முகமாலை - நாகர்கோவில் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளைத் தாண்ட முடியாது எப்படி வழிமறிக்கப்பட்டுள்ளனரோ அப்படியே, நாச்சிக்குடா -அக்கராயன்குளம் - தெருமுறிகண்டியிலும் புலிகள் தங்களை வழிமறித்துவிடலாமென்ற சந்தேகம் படைத்தரப்புக்கிருந்தது.

இந்த முன்னரங்க நிலைகளைப் படையினர் தாண்டிச் சென்றால் ஏ -32 வீதியில் பூநகரி நோக்கியும் ஏ-9 வீதிக்கும் அதற்கிடைப்பட்ட பகுதியிலும் கிளிநொச்சி நோக்கியும் படையினர் முன்னேறி விடுவது சாத்தியமென்றதொரு நிலையிருந்தது.

தற்போது படையினர் இந்தத் தடையைத் தாண்டிவிட்டனர். ஏ-32 வீதியால் பூநகரி நோக்கி 58 ஆவது படையணி நகர்கையில் ஏ -32 வீதிக்கும் 'ஏ-9' வீதிக்குமிடையில், நாச்சிக்குடாவுக்கும் அக்கராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியால் முன்னேறிய அதிரடிப்படை- 1 பூநகரி - பரந்தன் வீதியை நோக்கி முன்னேறுகிறது.


ஏ-9 வீதிக்கு மேற்கால் கிளிநொச்சியை நோக்கியபடை நகர்வை புலிகள் தடுத்து வருகையில் பூநகரி நோக்கியும், பூநகரி-பரந்தன் வீதியை நோக்கியும் வேகமாக நகர படையினர் முற்படுகின்றனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் வன்னியில் கடும் மழை பெய்ததால் தடுமாறிப்போன படையினருக்கு தற்போது அங்கு மழையற்ற கால நிலை வாய்ப்பாயுள்ளது. இதனால் கடும் மழை பொழியத் தொடங்குவதற்குள் பூநகரிக்கும் பூநகரி - பரந்தன் வீதிக்கும் சென்றுவிட வேண்டுமென படைத்தரப்பு முனைகிறது. ஏ-32 வீதியூடாகச் செல்லும் படையினரை விட ஏ-32 வீதிக்கு கிழக்கால் பூநகரி - பரந்தன் வீதியை நோக்கிச் செல்லும் படையினர் மிக வேகமாக நகர முற்படுகின்றனர்.

ஏ-32 வீதியில் செல்லும் படையினர் நாச்சிக்குடாவுக்கு வடக்கே 8 ஆவது மைல்கல்லில் நிற்கின்றனர். இங்கிருந்து பூநகரி சுமார் 12 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. ஆனால் இந்தப் படையணிக்கு பக்கவாட்டாக பூநகரி - பரந்தன் வீதியை நோக்கி நகரும் படையினர்இ இந்த வீதிக்கு தெற்கே சுமார் ஏழு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளனர்.


அதேநேரம், கிளிநொச்சிக்கு சமீபமாக அக்கராயனுக்கு வடகிழக்கே நிற்கும் படையினரின் முன்னேற்ற முயற்சி, புலிகளின் கடும் எதிர்ப்பால் பெரிதும் தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் பூநகரி - பரந்தன் வீதியை நோக்கி நகரும் படையணி முழுவேகத்துடன் செயற்பட முனைகிறது.

எனினும் அந்தப் படையணியின் நகர்வு வேகத்துக்கு இணையாக ஏ-32 வீதியில் படையணிகள் நகரவில்லை. இது பூநகரி - பரந்தன் வீதியை நோக்கிய நகர்வில் ஈடுபடும் படையணிக்கு ஆபத்தானது.

ஏனெனில், இந்த முனையில் நக ரும் படையணிக்கு பக்கவாட்டில் (மேற்குப்புறம்) ஏ-32 வீதியில் நகரும் படையணியுமிருந்தால்தான் ஒன்றுக்கு ஒன்று பக்கவாட்டுத் துணையை வழங்க முடியும். இல்லையேல் பூநகரி- பரந்தன் வீதியை நோக்கி முன்னேறும் படையணி மீது புலிகள் ஊடறுப்புத்தாக்குதலை நடத்தக்கூடிய வாய்ப்புள்ளது.


எனினும், முன்னரும் இது போன்ற பல சந்தர்ப்பங்களில் புலிகள் எவ்வித ஊடறுப்புத் தாக்குதலையும் நடத்தாததால் இம்முறையும் அதற்கான வாய்ப்புகள் குறைவாயிருப்பதாகக் கருதி பூநகரி - பரந்தன் வீதியை நோக்கிய முன்நகர்வில் படையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர். இதற்கு பல காரணங்களுண்டு.

ஏ-32 வீதியில் நிலைகொண்டுள்ள புலிகள், பூநகரி நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். மேற்கு கரையோர விநியோகப் பாதையை முடிந்த வரை தக்க வைக்க வேண்டுமென்பதால் ஏ-32 வீதியில் படையினரின் முன்னேற்ற முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.


இதன் மூலமே தமிழகத்திற்கும் வன்னிக்குமிடையிலான கடல்வழிப் போக்குவரத்தை தொடர்ந்தும் பேண முடியும். அதேநேரம் இந்த வீதியில் படையினரின் முன்நகர்வு முயற்சியை தடுத்து நிறுத்தியவாறு பூநகரி - பரந்தன் வீதியை நோக்கி படையினரை நகர அனுமதித்தால் ஏ-32 வீதியில் நிலைகொண்டுள்ள புலிகளுக்கு ஆபத்தாகிவிடும்.

பூநகரி - பரந்தன் வீதியை படையினர் கைப்பற்றி விட்டால் ஏ-32 வீதியில் நிலைகொண்டுள்ள புலிகள் பொறிக்குள் சிக்கி விடுவர். அவர்கள் தப்பிச் செல்வதற்கு தரைவழிப்பாதை இல்லாது போய்விடும். பூநகரி - பரந்தன் வீதியை படையினர் கைப்பற்றுவதன் மூலம் ஆனையிறவை அண்டிய கிளாலி வாவியை படையினர் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துவிடுவதுடன் மேற்குக் கரையோரமும் முற்று முழுதாக படையினரின் பூரண கட்டுப்பாட்டினுள் வந்துவிடும்.


இதனால் தற்போதைய நிலையில் ஏ-32 வீதியில் படையினரை முன்னேற அனுமதித்தாலும் அந்த வீதிக்கு கிழக்கே முன்னேறும் படையினரை பூநகரி - பரந்தன் வீதிக்குச் சென்றுவிட அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதித்தால் ஏ-32 வீதியில் முன்னேறும் படையினர் பின்னர் தங்கள் முன்நகர்வை மேற்கொள்ளவேண்டிய தேவையிராது.

ஏ -32 வீதியில் நிலை கொண்டிருக்கும் புலிகளை பொறி க்குள் சிக்க வைத்துவிட முடியும். அத்துடன் மன்னார் முதல் யாழ்.குடா நாட்டில் தீவுப் பகுதிவரையான மேற்குக் கரை யோரமும் படையி னரின் பூரண கட்டுப் பாட் டினுள் வந்து விடும். மேற்குக் கரை யூடான கடல் வழி விநியோகப் பாதையை புலிகள் இழந்து விடுவர். தமிழகத்துடனான கடல் வழித் தொடர்பும் இல்லாது போய் விடும்.

இதுஇ தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக எழுந்துள்ள உணர்வலை தொடர்வதையும் பெரிதும் பாதித்து விடுமென் பதுடன் தமிழக த்திற்கு தமிழ் அகதிகள் செல்வ தையும் நிறுத்திவிடும். இதன் மூலம் ஈழத் தமிழர் விடயத்தில் தமிழகத்தின் நெருக்குதலை இல்லாது செய்து விடமுடியுமென இலங்கை அரசு கருதுகிறது.

இதை விடஇ பூநகரி - பரந்தன் வீதியை படையினர் கைப்பற்றிவிட்டால்இ எதுவித எதிர்ப்புமின்றி படையினரால் பூநகரிக்குச் சென்று அங்கிருந்து சங்குப்பிட்டி - கேரதீவு ஊடாக யாழ்.குடாநாட்டுக்கு தரைவழிப் பாதையையும் திறந்து விட முடியும்.


இதன் மூலம் யாழ்.குடாநாட்டுக்கு இதுவரை காலமும் கடல் வழியால் புலிகளிடமிருந்து எழுந்த பாரிய அச்சுறுத்தல் இல்லாது போகும். பூநகரி கல்முனைப் பகுதியிலிருந்தே புலிகள் பலாலி விமானப்படைத்தளம் மீதும் காங்கேசன்துறை துறைமுகம் மீதும் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தி பெரும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.


அந்த நெருக்கடியும் உடனடியாக இல்லாது போய்விடும். அத்துடன், புலிகளின் கடல் வழி தாக்குதல் அச்சுறுத்தலால் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உடனடியாக நீக்கி விடலாம்.

குறிப்பாக, பூநகரியிலிருந்து புலிகளால் ஏற்பட்டுவந்த கடல் வழி அச்சுறுத்தலைத் தடுக்க தென்மராட்சியின் கரையோரமெங்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கி கிளாலி-முகமாலை -நாகர்கோவில் பகுதிகளில் இருப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவையும் இதன் மூலம் தேவையற்றதாகிவிடும்.


மேலும் பூநகரியையும் பூநகரி-பரந்தன் வீதியையும் கைப்பற்றி விட்டால் ஏ-9 வீதியில் பரந்தன் சந்தி நோக்கிய படை நகர்வு இலகுவாகிவிடும். இதன் மூலம் பரந்தனுக்கு வடக்கே கிளாலி மற்றும் முகமாலை பகுதியில் மட்டுமல்லாது வடமராட்சி கிழக்கிலும் நிலைகொண்டுள்ள புலிகளுக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டு விடும்.

யாழ்.குடாநாட்டிலிருந்து மட்டுமல்லாது பரந்தன் பகுதியிலிருந்தும் வடக்கு நோக்கி படையினர் முன்னேற முயல்வரென்பதால் அங்கும் பொறிக்குள் சிக்குவதைத் தவிர்ப்பதற்காக எதுவித மோதலுமின்றி பல மைல் பிரதேசங்களைக் கைவிட்டு புலிகள் பரந்தனுக்கு கிழக்கே நகர வேண்டிய நிலையேற்படும்.


இதன் மூலம் ஆனையிறவு, இயக்கச்சி, பளை, கிளாலி, முகமாலை மட்டுமன்றி புலிகள் வசமிருக்கும் வடமராட்சி கிழக்கும் எதுவித மோதல்களுமின்றி படையினர் வசமாகிவிடும். அத்துடன், பரந்தனிலிருந்து தெற்கு நோக்கி முன்னேறி கடும் எதிர்ப்பின்றி கிளிநொச்சியையும் கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கருது கிறது.

இவ்வாறானதொரு நிலையேற் படுமானால் வவுனியா ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ஏ-9 வீதியையும் மிக இலகுவாக கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து விட முடியுமென படையினர் கருதுகின்றனர். இதன் மூலம் படையினரின் அடுத்த நடவடிக்கை இலக்காக முல்லைத்தீவு மாறும். இதனால் தற்போதைய நிலையில் படையினர் மேலும் முன்நகர்ந்து பூநகரி-பரந்தன் வீதியைக் கைப்பற்ற முனைவர்.


என்ன விலை கொடுத்தாவது இந்த வீதியைக் கைப்பற்றி விட்டால் வன்னிப் போரின் பெரும் பகுதி முடிவுக்கு வந்துவிடுமெனப் படையினர் கருதுகின்றனர். இதனால் ஏ-32 வீதிக்கு கிழக்கே பூநகரி-பரந்தன் வீதியை நோக்கி நகரும் படையினர் அடுத்த ஏழு கிலோ மீற்றர் தூரத்தையும் எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென நினைக்கின்றனர்.


இதற்காக அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இராணுவத் தலைமைப் பீடம் செய்துள்ளது. இந்தப் படை நகர்வுக்கெதிராக புலிகள் பாரிய தாக்குதலை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினாலும் அதற்கெதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை படையினர் தயார்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரந்தன் வீதியைக் கைப்பற்றுவதும் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துமென இரு தரப்பும் நன்கறிந்துள்ளன. பூநகரியை அல்லது பூநகரி-பரந்தன் வீதியை இழப்பதன் மூலம் யுத்தம் உடனடியாக முல்லைத்தீவை நோக்கித் திரும்புமென்பதைப் புலிகளுமறிவர். இதனால் பூநகரியை அல்லது பூநகரி-பரந்தன் வீதியை படையினர் கைப்பற்றுவதை அவர்கள் முடிந்தவரை அனுமதிக்க மாட்டார்களென்பது படையினருக்கும் தெரியும்.


இதனால் இந்தப் பகுதியில் அடுத்துவரும் நாட்களில் நடைபெறப் போகும் மோதல்கள் மிக முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துமென்பதால் இரு தரப்பும் இதற்காகத் தயாராகி வருகின்றன. வன்னியில் இதுவரை காலமும் படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு அனுமதித்தது போல் இனியும் புலிகளால் அனுமதிக்க முடியாது.


அவ்வாறு அனுமதித்தால் என்ன நடைபெறுமென்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர். தற்போதைய நிலையில் கிளிநொச்சியை விட பூநகரியே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாயிருப்பதால் படையினரின் அடுத்த முன்நகர்வு முயற்சிகளை அவர்கள் தடுத்து நிறுத்தவே முயல்வர்.

படையினர் பூநகரியையும் கைப்பற்றி வன்னியை யாழ்.குடாநாட்டுடன் இணைத்துவிட்டால் யாழ்.குடாவில் நிலைகொண்டுள்ள சுமார் 40,000 படையினரில் மிகப்பெருமளவானோரை வன்னியில் (முல்லைத்தீவு) நடைபெறப்போகும் மிகுதிப் போருக்கு பயன்படுத்த முடியு மென படைத்தரப்புக் கருதுகிறது. இராணுவத்திற்கு பெருமளவுக்கு ஆட் பற்றாக்குறையேற்பட்டுள்ளது.

வன்னியில் படையினர் பிடித்த பகுதிகளைத் தக்க வைக்க போதிய படையினர் இல்லை. 2006இல் யுத்தம் தொடங்கிய பின்னர் 25,000 இற்கும் மேற்பட்ட படையினர் தப்பியோடிவிட்டனர்.

அதேநேரம் 2006 இற்குப் பின்னர் படைகளில் புதிதாக இணைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,000 இலும் குறைவாகும். இதனால் யுத்தம் தொடங்கிய பின் படையினர் மிகப் பெருமளவில் ஆட்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.

புலிகளின் எண் ணிக்கையும் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்குமென படையினர் கருதுவதால் இதுவரை தங்களுக்கு புலிகளால் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படவில்லையெனப் படைத்தரப்பு கருதுகிறது. புலிகளின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்திரு ந்தால் வன்னிக்குள் படையினரால் இந்தளவுக்கு முன்னேறியிருக்க முடியாது.

தற்போதைய நிலையில் பூநகரியையும் கைப்பற்றி அதன் மூலம் யாழ்.குடாநாட்டுடன் தரைவழித் தொடர்பை ஏற்படுத்திவிட்டால் குடாநாட்டிலுள்ள படையினரின் உதவியும் கிடைத்துவிடுமென்பதால் திடீரென பெருமளவு படையினர் வன்னிக்குள் வந்து சேர்ந்து விடுவர்.


இது படையினரை மேலும் வலுப்படுத்திவிடுமென்பதுடன் பூநகரியை கைப்பற்றி அதன் மூலம் பரந்தன் சந்திக்குச் சென்று விட்டால் அதற்கப்பால் வடக்கேயுள்ள பகுதிகள் யுத்தமெதுவுமின்றி தங்கள் வசமாகிவிடுமெனப் படையினர் கருதுவதால் முல்லைத்தீவு நோக்கிய பாரிய படை நகர்வுக்கு குடாநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட படையினரை புதுத் தெம்புடன் களமிறக்கலாமென படையினர் கருதுகின்றனர்.


இதனால் வன்னியில் இதுவரை காலமும் இடம்பெற்ற போரில் 57 ஆவது மற்றும் 58ஆவது படையணி களைத்துச் சலித்து சிதைந்து போயுள்ள நிலையில் குடாநாட்டிலிருந்து புதிதாக ஆயிரக்கணக்கான படையினர் வந்திணையும் போது புலிகள் அவர்களுடனும் இன்னொரு போரை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இது படையினருக்கு மிகவும் சாதகமாயிருக்கும்.

இதனால்இ படையினர் பூநகரியை கைப்பற்றி யாழ்.குடாநாட்டுடன் தரைவழித் தொடர்பை ஏற்படுத்துவதென்பது தங்களுக்கெதிரான போரில் புதிதாக திடீரென ஆயிரக்கணக்கான படையினரைக் களமிறக்கிவிடுமொரு நடவடிக்கை என்பதையும் புலிகள் அறிவர்.

குடாநாட்டிலிருந்து வரும் படையினர் பரந்தனுக்கு வடக்கே முகமாலை வரையிலும் வடமராட்சி கிழக்கில் பெரும் பகுதியிலும் மோதல்களின்றி வந்து முல்லைத்தீவு நோக்கிய தாக்குதலை ஆரம்பிப்பரென்பதையும் புலிகள் அறிவர்.


அத்துடன், தற்போதைய நிலையில் படையினருக்கெதிராக பாரிய தாக்குதல் சமரைத் தொடுத்து அல்லது ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி அவர்களது முன்நகர்வு முயற்சியை முறியடித்தாலன்றி பூநகரியை படையினர் கைப்பற்றி யாழ்.குடாவுடன் தரைவழித் தொடர்பை ஏற்படுத்திய பின்னர் இவ்வாறான தாக்குதலை புலிகளால் நடத்த முடியாது.

தற்போதைய நிலையில் இவ்வாறான தாக்குதலை தொடுப்பதென்பது ஒரு பெரும் படையுடன் மோதுவதாயிருக்கும். குடாநாட்டையும் படையினர் இணைத்த பின்னர் புலிகள் மோதுவதென்பது இரு பெரும் படைகளுடன் மோதுவதாயிருக்குமென்பதுடன் அவ்விரு படைகளுக்கும் பின்தள விநியோக ஆதரவும் இருக்குமென்பதால் அவ்வாறானதொரு மோதல் புலிகளுக்கு ஒரு போதும் சாதகமாயிராது.


தற்போதைய நிலையில் படையினர் பூநகரியைக் கைப்பற்றி குடாநாட்டுடன் தரைவழித் தொடர்பை ஏற்படுத்துவதென்பது அவர்களது படைப்பலத்தை உடனடியாக இரு மடங்காக்கிவிடுமென்பதுடன் போர் முனையை பின்னர் முல்லைத்தீவுடன் மட்டுப்படுத்துவதாய் அமைந்துவிடும்.

ஆளணிப் பற்றாக்குறையால் தடுமாறும் படையினருக்கு இது மிகவும் சாதக மாகிவிடும். இதனைப் புலிகளும் நன்கறிவர். இதனால் படையினர் பூநகரியைக் கைப்பற்றுவதற்கு அல்லது பூநகரி-பரந்தன் வீதியைக் கைப்பற்றுவதற்கு புலிகள் அனுமதிக்க மாட்டார்களென்றே கருதப்படுகிறது.

எனினும், போர் முனை பூநகரிக்கு நெருங் கியும் பூநகரி-பரந்தன் வீதிக்குச் சமீபமாகவுமிருப்பதால் அடுத்து வரும் நாட்கள் ஈழப் போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாயிருக்கப்போகின்றன. இதனைப் படையினர் மட்டுமல்லாது புலி களும் நன்குணர்வர்.

வன்னிக் காலநிலை தற்போது படையி னருக்கு சாதகமாயுள்ளது. மழை பொழிய வேண்டிய நேரத்தில் கோடைக்குரிய காலநிலை நிலவுவதால் படைநகர்வுக்கு வாய்ப்பாயிருக்கிறது. கடும் மழை பொழியு மாயிருந்தால் இந்தக் களமுனைகளில் பாரிய படைநகர்வுகளை மேற்கொள்ள முடியாதிருக்கும்.


இதனாலேயே கடும் மழை பெய்வதற்கு முன்னர் இலக்குகளை அடைந்துவிட படையினர் அவசரம் காட்டுகின்றனர். இந்த அவசர நடவடிக்கைகளில் படையினர் பலத்த இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். எனினும், இழப்புகள் குறித்த தகவல்கள் படையினரை மட்டுமல்லாது படையினரின் குடும்பங்களையும் பெரிதும் பாதித்து வருவதால் அவை குறித்து அறிவிப்பதை படையினர் தவிர்த்தே வருகின்றனர்.


இதன் மூலம் களமுனைகளில் ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்கள் வெளிவராததால் கள முனையிலுள்ள படையினருக்கும் அவர்க ளது குடும்பத்தவர்களுக்கும் எதுவும் தெரிய வராதெனப் படைத்தரப்பு கருதுகிறது. தற்போதைய நிலையில் புலிகளின் நடவடிக்கை எப்படியிருக்கப்போகிறதென்ற கேள்வியே அனைவர் மத்தியிலும் எழுகிறது.

தொடர்ந்தும் படை நகர்வுக்கு அனுமதித்து களமுனையில் ஏற் படப்போகும் மாற்றங்களை எதிர்கொள்ள முனைவார்களா அல்லது படை நகர்வுகளைத் தடுத்து நிறுத்தி படையினரின் எண்ணங்கள் நிறைவேறுவதற்கு அனுமதி மறுக்கப் போகிறார்களா என்பதே புதிராக உள்ளது.


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பேரலை புலிகளுக்குப் பெரும் உற்சாகத்தையும் மனோபலத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் உலக வல்லரசின் தலைவராக, ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உணர்வுபூர்வமாக ஆதரவு நல்கும் சிறுபான்மையினத்தவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசியலிலும் ஈழத் தமிழர்களுக்கெதிரான விரோதப் போக்குகளில் விரைவில் (பொதுத் தேர்தல் மூலம்) மாற்றமேற்படலாமெனக் கருதப்படுவதால் புலிகளும் சர்வதேச மாற்றங்களுக்கமைய தங்கள் நடவடிக்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த முயல்வரென்றே அனைவரும் கருதுகின்றனர்.

விதுரன்


Comments