இலக்கை எட்டுமா படைத்தரப்பு?

வன்னி படை நடவடிக்கையின் விளைவுகள் எதிர்காலத்தில் நிகழப் போகின்ற போரின் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாகவே கடந்தவார நிகழ்வுகள் தென்படுகின்றன.

ஏனெனில் மேற்கு வன்னியின் வடக்குப்புறம் நிகழ்ந்த முன்னகர்வின் போது ஏற்பட்ட மூர்க்கமான சண்டைகளும், அதனால் ஏற்பட்ட பாரிய இழப்புகளும் மற்றும் வான்வழித் தாக்குதலில் புலிகள் கடைப்பிடித்த நவீன உத்திகளும். இப்போரின் இன்னொரு பரிணாமத்துக்குள் இட்டுச் சென்றிருக்கிறது.


அரசபடைகள் கிளிநொச்சியை நோக்கி நகருவதாகவும் அதே வேளை மாங்குளத்திற்கும் முறிகண்டிக்கும் இடைப்பட்ட ஏ9 வீதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காகவும் மிகக் கடும் பிரயத்தனத்தைப் பிரயோகித்து ஏ9 வீதிக்கு சமாந்தரமாக ஆனால் நெருக்கமாக நிலை கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில் படைத்தரப்பு கூறுவது போல இரணைமடுக்காட்டுப் பகுதியில் உள்ள புலிகளின் வான்தளத்திலிருந்து கிளம்பிய விமானங்கள் கொழும்பிலும், தள்ளாடிக் கூட்டுப் படைத்தளத்திலும் தாக்குதலை நடத்தி பாதுகாப்பாக வன்னி தளத்திற்கு திரும்பியது தற்போதைய இராணுவச் சூழலில் இலகுவான காரியம் அல்ல.

ஏனெனில், படைத்ததரப்புக் கூறும் புலிகளின் இரணைமடு வான் தளப் பிரதேசம் தற்போது இராணுவம் நிலை கொண்டுள்ள ஏ9 வீதிப்பக்கம் உள்ள இராணுவ முன்னரங்க நிலையிலிருந்து ஏறக்குறைய 10 தொடக்கம் 15 மைல் தொலைவினுள்ளே உள்ளது என்பது பெரும்பாலானோர் அறியாத உண்மை.

எனவே இரணைமடுப் பகுதியிலிருந்து வான்புலிகளின் விமானம் கிளம்பினால் வன்னிப் பிரதேசத்தின் மிக உயர்ந்த பகுதியாகிய கொக்காவில் பகுதியில் நிலைகொண்டிருக்கும் படையினரால் இலகுவாக இனங்காண முடியும். அத்தோடு சீனா, இந்தியா போன்ற நாடுகளிடமிருந்து பெற்ற வான்பாதுகாப்பு சாதனங்கள் மூலமும் வான்புலிகளின் பறப்பை இனங்காண முடியும். ஆனால், படைத் தரப்புக்கு இவ்வளவு சாதகத்தன்மை நிறைந்த சூழ்நிiயிலும் வான்புலிகள் மிகவும் இலாவகமாக தமது இலக்குகள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு பாதுகாப்பாக தரையிறங்கியிருக்கிறார்கள்.

அது மடடுமல்லாது அதற்கு முன்னர் காங்கேசன் துறையில் மேற்கொண்ட கடற்கரும் புலிகளின் தாக்குதலிலும் ராடர் திரையின் கண்ணில் மண்ணைத் தூவிச் செல்லக்கூடிய நவீன பொறிமுறைகளைப் பயன்படுத்தி உருவாக்கபட்ட மிகச் சிறிய கடற்கலங்களை பயன்படுத்தியிருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது வான்புலிகளும் அதே வகையான நவீன பொறிமுறைகளைப் பயன்படுத்தி சிறியரக விமானங்களை தயாரித்திருக்கிறார்களா? என்ற கேள்வி வலுவடைந்திருக்கிறது.

அத்தோடு தள்ளாடி தளத்தின் மீது இரவு 10:50 மணிக்கு வான்புலிகள் தாக்குதல் நடத்தி விட்டு சென்ற கையோடு இரவு 11:00 மணி தொடக்கம் 11:30 மணிவரை விமானப்படையின் மிகையொலி விமானங்கள் வன்னி வான்பரப்பிரல் புலிகளின் விமானங்களைத் தேடி சல்லடை போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் இரவு 11:30 மணிக்கு வான்புலிகளின் விமானம் கொழும்பு களனிதிஸ்ஸவில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. மேலும், புலிகள் பல்வேறு விமானத்தளங்களை வைத்திருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. புலிகளின் வான்தளங்கள் புலிகளின் பூரண கட்டுபாட்டில் உள்ள கிழக்கு வன்னியின் வட அரைப்பாகத்தில் மாத்திரமே இயங்க முடியும். ஏனெனில் இப்பகுதிதான் புலிகளின் இறுக்கமான பாதுகாப்பினுள் அதாவது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினராலும் கூட நெருங்க முடியாத பகுதி. மேலே குறிபிட்ட கிழக்கு வன்னியின் வட அரைப்பாகம் என்பது மிகப் பெரிய விசாலமான நிலப் பகுதி என கற்பனை செய்துவிட வேண்டாம். வடக்குத்தெற்காக 25 மைல்களும், கிழக்கு மேற்காக 30 மைல்களும் கொண்ட ஒரு குறுகிய பிரதேசமே, இப்பிரதேசத்தில் புலிகள் பல விமாத்தளங்ளை வைத்திருப்பது சாத்தியமா? அத்தோடு இப் பிரதேசத்தை வான் வழியாகக் கண்காணிப்பதும் கடினமானதொன்றல்லவே. இந்நிலையில் புலிகளின் வான், கடல் தாக்குதல்கள் ஒருபடி வளர்ச்சியடைந்திருப்பதனைக் காட்டுகிறது. எனவே, எது எப்படியிருப்பினும் புலிகளின் கடல் மற்றும் வான் தாக்குதல்கள் இனிவருங்காலங்களில் படைதரப்புக்கு மிகப் பெரும் சவாலாக அமையக்கூடும்.

அடுத்து, மேற்கு வன்னியின் படை நகர்வுகளை நோக்குவோமாயின் படைத்ததரப்பு நாச்சிக்குடாவை கைப்பற்றிதாக பல தடைவை கூறியுள்ளது. ஆனால், ஏ32 வீதி ஊடாக நகர்நத படையினர் முழங்காவில் கிராமத்தின் அரைவாசிப் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள். முழங்காhவிலில் ஏ32 விதியில் இருந்து நாச்சிக்குடா செல்லும் வீதி ஆரம்பிக்கும் இடம் நாச்சிக்குடாச் சந்தி என்று (அனுராதபுரத்தில் உள் யாழ்ப்பாணச் சந்தி போல்) அழைக்கப்படுகிறது.

இவ்விடத்திலிருந்து கிழக்குப் புறமாக 2 மைல் தொலைவில் உள்ள கரியாலை நாகபடுவான் கிராமமும், குளமும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகவே உள்ளது.

ஆனால், வன்னேரிப்பகுதியைக் கைப்பற்றிய படையினர் படிப்படியாக முன்னேறி மணியங்குளம், ஜெயபுரம், அக்கராயனில் சில பகுதிகள் என்பவற்றைக் கைப்பற்றிதோடு சற்று வடக்காக நகர்ந்து பின்னர் மேற்குப் புறமாக நகர்ந்து ஏ32 வீதியில் பல்லவராயன் கட்டுச் சந்திப் பகுதிக்கு வடக்கே தொடங்கி வடக்காக ஏ32 வீதியிலிருந்து மேற்கே செல்லும் சுண்ணாவில் சந்திக்கு இடையில் இரண்டு மைல் தூரத்திற்கு வீதியைக் கைப்பற்றி பெட்டியடித்திருக்கிறார்கள். இதன்மூலம் நாச்சிக்குடாச் சந்தியில் முகாம் அமைத்திருக்கும் புலிகளை மூன்று பக்கமும் சூழ்ந்து மும்முனைத தாக்குதல் மூலம் அங்கிருந்து வெளியேற்ற முனைகின்றனா.

தற்போதைய சூழலில் பல்லவராயன் கட்டுப் பகுதியில் பெட்டியடித்து நிலைகொண்டுள்ள படையினர் நாச்சிக்குடாப் பகுதிக்கான புலிகளின் வழங்கல் பாதைகளை மூடுவதற்கான முயற்சியாக இராணுவ நிலைகளுக்கு இடைப்பட்ட ஏ32 வீதியில் உள்ள பல்லவராயன் கட்டுச்சந்தி, குமுழ முனைச்சந்தி, நாச்சிக்குடா ஆகிய மூன்று முக்கிய சந்திகளில் நிலைகொண்டிருக்கும் (முhகம் வியூகத்தில்) புலிகளை வெளியேற்றுவதற்கு கடந்த வாரம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்க வில்லை.

புலிகள் இவ்வாறு ஏ32 வீதியில் முகாம் அமைத்துத் தங்கியிருப்தனால் மேலும் பூநகரி நோக்கி நகர்வது ஆபத்தானது. ஆகையால் நாச்சிக்குடாச் சந்தியையும், நாச்சிக்குடவையும் கைப்பற்றிய பின்னர்தான் பூநகரி நோக்கி ஏ32 வீதிவழியே நகரமுடியும்.

பூநகரி வாடியடியை (ஒல்லாந்தர் கோட்டை உள்ள இடம்) இராணுவம் அடைவதற்கு இன்னும் 14 மைல்கள் தூரமே உள்ளது. இந்த 14 மைல் துர்ரத்தை கடக்க வேண்டுமாயின் நாச்சிக்குடா, பாலாவி ஆகிய பிரதேசங்களை படைகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் தான் நகர முடியும். இல்லாவிடத்து அக்கராயனில் இருந்து நேர்வடக்கே ஏற்குறைய 12 மைல் நீளமான தூரத்திற்கு நகர்ந்தால் பரந்தன் - பூநகரி வீதியில் உள்ள நல்லுர்ரை அடைந்து விட்டால் இந்தத் தரைவழிப்பாதை திறப்பு என்ற 'கேம் ஓவா' ஆகிவிடும்.

ஆனால் பூநகரி நோக்கிய இவ்விரண்டு நகர்வுகளும் இலகுவானதல்ல. மிகப் பெரும் விலையைப் படைத்தரப்பு கொடுக்க வேண்டியிருக்கும். அனுபவமுள் முன்னணிப் படைப்பிரிவுகள் கடும் இழப்புகளை எதிர்கொள்ளும். இது எதிர்கால படைநடவடிக்கைக்கு பாதகமானதொன்றாகவே இருக்கப் போகின்றது.

அடுத்து கிளிநொச்சி மீதான படைநடிவடிக்கையை எடுத்துக் கொண்டால் அக்கராயன் பகுதியில் படைத் தரப்பு சில இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. அக்கராயனுக்கும் திருமுருகண்டிக்கும் இடையிலுள்ள வீதியை ஊடுறுத்து ஓரிடத்தில் படையினர் நிலை கொண்டுள்ளார்கள் என்பதும் உண்மை. ஆனால் கிளிநொச்சி நோக்கி படைத்தரப்பு நகருகின்ற ஒவ்வொரு அங்குல நிலப்பரப்புக்கும் அதிகவிலை கொடுக்கவேண்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் நடந்த சண்டைகள் இப்பகுதியில் எதிர் காலத்தில் நிகழப்போகும் பாரிய மோதல்களுக்கு கட்டியம் கூறுவதாகவே உள்ளது.

கடந்த வாரம் ஏ9 வீதியை கைப்பற்றுவதற்காகக் கொக்காவில் பகுதியிலும் மாங்குளத்திற்கு 5 மைல் வடக்கேயுள்ள பனிக்கன்குளம் மற்றும் கிழவன்குளம் பகுதியில் படைகள் மேற்கொண்ட நகாவுகளும் வன்னி விளாங்குளத்திலிருந்து மாங்குளம் நோக்கிய நகர்வுகளும் பலத்த எதிர்த்தாக்குதலினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப புலிகள் அறிவித்துள்ளனர். எனவே படையினர் ஏ9 வீதியைக் கைப்பற்றி கிழக்கு வன்னியில் இராணுவம் பிரசன்னம் ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு புலிகள் மூர்க்கமாக சண்டையிடுவர் என்றே சொல்லலாம்.

Comments