தமிழீழ தேசியத் தலைவருக்கு கிழக்கு பல்கலைக்கழகம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 54 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"உலகத் தமிழரின் வேதனையும் மறுபுறம் பல எதிர்பார்ப்புகளும் நிறைந்த ஆண்டாக 2008 ஆம் ஆண்டு இருக்கின்றது.

ஒரு புதிய அகவையில் கால் பதிக்கும் எமது தேசியத் தலைவருக்கு தென் தமிழீழத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சார்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மடி கொடுத்த அன்னை தலைவைத்து சாயவும் தமிழருக்கு என்று ஒரு இடம் இல்லை என்பதனையும் உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் வேதனைப்படுவதனை அனைத்துலகமும் அறியும்.

மாய லோகத்தில் சஞ்சரிக்கும் எம் சகோதர உறவுகளையும், எம்மையும், எமது உணர்வுகளையும் தவறாகப் புரிந்துகொள்வது வேதனை தருகின்ற வேளையில், காலத்தின் கட்டாயம் எம்மை ஒரு தர்ம போருக்கு இட்டுச் சென்றுள்ளதனையும் எவரும் மறுப்பதற்கில்லை.

தாய் மண் மீட்க எம் உறவுகளோடு சத்தியத்தின் பாதையில் பயணிக்கும் உங்களுக்கு உலகத் தமிழரின் இதயங்களில் நிரந்தரமான இடம் என்றுமே உண்டு.

எமது விடுதலைப் பயணத்தில் வேதனைகள் தரக்கூடிய இடர்கள் வருகின்ற போதெல்லாம் உங்களின் தீர்க்க தரிசனமான சிந்தனையால் அவற்றை வெற்றிகொள்வதனை நாம் அறிவோம்.

எமது தேசியத் தலைவர் 54 ஆவது புதிய அத்தியாயத்துடன் மலரும் புதுவருடம் தமிழீழம் மலரும் ஆண்டாக அமைய மனமார வாழ்த்துகின்றோம். அதற்காக உங்கள் வழியில் பயணிக்க என்றுமே நாங்கள் தயாராவே உள்ளோம்.

எமது தேசியத் தலைவரின் காலத்தில் தமிழீழம் மலரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதற்காக ஓரணிதிரள தென் தமிழீழம் வாழ் மக்கள் என்றுமே பின் நிற்கப்போவதில்லை.

மலரும் 2009 ஆம் ஆண்டு தமிழீழ சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஆண்டாக தடம் பதிக்கவேண்டும் என மனதார வாழ்த்துகின்றோம்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments