தகிக்கும் தாமரை! --''எங்கே போனது இறையாண்மை?''


நீரலை மேல் பச்சை இலைகள் படர்ந்திருக்க... நீர்ப் பரப்புக்கு மேல் சற்றே தலைநீட்டி இதழ் விரித்துச் சிரிக்கும் தாமரை மலர்கள்... ஆனால், ஒரு தாமரை சீறிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் சீறியிருக்கும் தாமரை, மலரல்ல; திரைப் பாடலாசிரியை தாமரை!

கடந்த 5-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தாமரை, ''ஈழத் தமிழர்களின் பெயரைச் சொல்லி தமிழக அரசு திரட்டும் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசாகூடக் கொடுக்க மாட்டேன்!'' என்று சீறியிருப்பது, பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தாமரையை சந்தித்தோம்.

''நிதி கொடுக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன?''

''இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்ற நம்முடைய குரல், எந்த அரசின் செவிக்கும் எட்டவில்லை. ஆனால், போரால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறார்களாம். ஒரு பக்கம் குண்டு... மறு பக்கம் தொண்டா? ஆட்டுக்கிடைக்குள் நுழைந்திருக்கும் ஓநாயிடம் புல்லையும் செடிகொடிகளையும்



கொடுத்து ஆடுகளைக் காப்பாற்றச் சொல்வது போலத்தான் இந்த நிதி வசூல்! செஞ்சிலுவைச் சங்கமும் இன்னபிற சேவை நிறுவனங்களும் சிங்கள அரசால் துரத்தி அடிக்கப்பட்டுவிட்ட நிலையில், இங்கே திரட்டப்படும் நிதி யார் மூலம் ஈழத் தமிழர்களைப் போய்ச் சேரும்? (இதற்கிடையில் தமிழக அரசு திரட்டிய நிவாரணப் பொருட்களை தமிழக முதல்வர் மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகி ஆகியோர் பார்வையிட்டு, இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெறுகின்றன) ராஜபக்ஷே மூலமாகவா? உண்மையாகவே நாம் கொடுக்கிற நிதி, சிங்கள அரசின் அக்கிரம வேலைகளுக்குத்தான் பயன்படப் போகிறது! பாமர மக்களுக்குக் கூட இது தெரிந்திருப்பதால்தான், பெரிய அளவில் நிதி சேரவில்லை. இல்லாவிட்டால், இந்நேரம் எத்தனையோ கோடிகள் குவிந்திருக்கும். நம்முடைய நிதியால் நம்முடைய இனமே அழிந்துவிடக் கூடாது என்பதால்தான் நிதி கொடுக்காதீர்கள் என்கிறேன்.''

''ஈழ மக்களுக்காக நம்முடைய அரசு எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறீர்கள்?''

''சில மாதங்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஆயுத வாகனத்தை, புலிகளுடையது என்றெண்ணி போலீஸ் மடக்கிப் பிடித்தது. ஆனால், அந்த வாகனத்தை அனுப்பிவைத்ததே மத்திய அரசுதான் என்பது பிறகே தெரிந்தது. தமிழகம் வழியாகவே சிங்கள அரசுக்கு உதவி செய்யும் மத்திய அரசு, எப்படி தமிழர்களைக் காக்கும்? ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஒவ்வொரு முறையும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிடுவார். அவரும் 'கண்டிப்பாக இலங்கைக்கு உதவ மாட்டோம்' என உறுதி கொடுப்பார். ஆனாலும், நம்முடைய விரலைக் கொண்டே நம் கண்ணைக் குத்துகிற வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது! கொள்கை, கோட்பாடுகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டுத் துடிக்கவேண்டிய தமிழக அரசியல்வாதிகள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகக் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் சட்டையைப் பிடித்துத் தமிழக அரசு, சிங்களப் போரைத் தடுக்கச் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு, உண்டியல் குலுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? நம்முடைய குடும்பத்தில் ஒருவர் குண்டடிபட்டால், நாம் என்ன செய்வோமோ... அதைத்தான் ஈழத் தமிழர்கள் விஷயத்திலும் செய்யவேண்டும்!''

''ஈழ விவகாரத்தில் தி.மு.க. அரசின் ஒட்டுமொத்த நிலைப்பாடு பற்றி...''

''தி.மு.க., அ.தி.மு.க. என்ற பேதங்களைத் தூர வீசுங்கள்... எந்தக் கட்சி இங்கே உண்மையான உணர்வோடு செயல்படுகிறது? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆறு தீர்மானங்களில் முதன்மையானது, இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பது. இன்றளவும் அப்படி செய்யப்படாத நிலையில், தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே பாக்கி இருக்கும் பதவி யைக்கூட தூக்கியெறிய எந்தக் கட்சியும் தயாராக இல்லையே? முதல்வர் கலைஞரோ, 'எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டால், இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக மேற்கொள்கிற கொஞ்சநஞ்ச உதவிகளையும் செய்ய முடியாமல் போய்விடும்!' என்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றியபோது, இந்த விஷயம் அவருக்குத் தெரியாமல் போனது ஏன்?

நம்முடைய தயவில்தான் மத்திய அரசின் நாற்காலி ஆடாமல் நிற்கிறது. நம் இனத்துக்கு உதவாத அந்த அரசு இருந்தால் என்ன... கவிழ்ந்தால் என்ன? தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் கலந்துகொள்ளாத கட்சிகள்கூட அதனை வரவேற்றன. அந்த ஒருமித்த குரல் இப்போது வலுவிழந்து போய்விட்டது. தமிழக அரசின் மூலம் ஈழத் தமிழனுக்கு விடிவு கிடைத்துவிடும் என எண்ணிய என்னைப் போன்ற சாதாரண மக்களின் நம்பிக்கை இன்று வேரறுந்துவிட்டது.''

'' 'ஈழ விவகாரத்தில் இறையாண்மைக்கு உட்பட்டுதான் தீர்வு காணமுடியும்' எனத் தமிழகத்தைச் சேர்ந்த சிலரே வாத மிடுகிறார்களே?''

''இறையாண்மையைக் காரணம் காட்டி ஈழப் பிரச்னையை வேடிக்கை பார்ப்பவர்கள்- தமிழின துரோகிகள், மன்னிக்க முடியாத அயோக்கியர்கள்! நமது அனுமதி இல்லாமல் கச்சத்தீவை மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததே... மின் தட்டுப்பாட்டால் தமிழகமே வெந்து புழுங்கும் வேளையிலும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு போகும் மின்சாரம் மட்டும் எந்த பாதிப்புமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே... இது மட்டுமல்லாமல் தண்ணீர் பிரச்னைகளில் கர்நாடகா, கேரள மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தையே மதிக்காமல் தமிழகத்தின் உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கிக் கொண்டிருக்கின்றனவே... அப்போதெல்லாம் எங்கே போனது இந்த இறையாண்மை? அப்பாவி மீனவன் குண்டடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியாத நாம், இறையாண்மை பற்றிப் பேசுவது சகிக்க முடியாத கேவலம்! இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொறுப்பு தமிழகத்துக்கு மட்டும்தானா? மற்ற மாநிலங் களுக்குக் கிடையாதா? ஈழப் பிரச்னையில் மட்டும் இறையாண்மையின் பெயரைச் சொல்லி தமிழகத்தின் வாயை அடைப்பது எந்த விதத்தில் நியாயம்''

''இறையாண்மை பாதிக்கப்படுவதாகச் சொல்லி வைகோ, கண்ணப்பன், அமீர், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடிப் பேச்சுகளின் பலனாக உங்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் பாய்ந்தால்..?''

''அமீரும் சீமானும் கேள்வி கேட்டதால் உள்ளே தள்ளப்பட்டார்கள். ஆனால், அவர்களது கேள்விக்கு இன்று வரை தமிழக அரசு பதில் சொல்லவில்லை! மாறாக, கேள்வி கேட்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப் பார்க்கிறது அரசு. 'தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவதே தவறாகிவிடாது' என உச்ச நீதிமன்றமே பட்டவர்த்தனமாகச் சொல்லி விட்டது. அதையும் தாண்டி அடக்குமுறையை மேற்கொண்டு ஒரு தாமரையைக் கைது செய்தால், அதன் பின்னணியில் ஓராயிரம் தாமரைகள் முளைப்பார்கள்.

நான் சாதாரண குடிமகள்தான். தமிழ் மக்களின் அடிமனதில் கிளர்ந்தெழும் தகிப்பாகத்தான் என் குரல் ஒலிக்கிறது. மொத்தத்தில், தன்மானத்தை விட்டுவிட்டு இந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தெம்பற்ற குறுநில அரசாகத்தான் தமிழகம் இருக்கிறது. இதைச் சொல்வதற்காக என்னைக் கைது செய்வார்களேயானால், இப்போதே சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன். என்னை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யட்டும். ஆனால், என் கேள்விகள் அப்படியேதான் இருக்கும்! தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் டெல்லியின் எடுபிடி களாக இருக்கும்வரை ஈழத்துத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் இருக்கும் எந்த தமிழனுக்கும் விடிவு கிடைக்கப் போவதில்லை!''

- இரா.சரவணன்

Comments