ஈழத்தமிழர்களுக்கு கெட்டுப்போன அரிசியா? - பகீர் புகாரில் சிக்கிய குமரி செஞ்சிலுவைச் சங்கம்




உலகம் முழுக்க நம்பகமான சேவை அமைப்பாகக் கருதப்படுவது செஞ்சிலுவைச் சங்கம்தான். அந்த செஞ்சிலுவைச் சங்கமே தனது பணியில் அலட்சியமாக இருந்துவிட்டதாகவும், அதன் செயல்பாடுகளில் முறைகேடுகள் முளைவிட்டிருப்பதாகவும் கிளம்பியிருக்கும் புகார்கள், குமரியில் பல்வேறு தரப்பினரையும் அதிர வைத்திருக்கிறது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குமரியும் ஒன்று. அப்போது இங்கு மொத்த உடைமைகளையும் இழந்து தவித்த கடலோர மக்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான துணிமணிகள், அரிசி, ஸ்டவ், பாத்திரங்கள், பேட்டரிகள் போன்றவற்றை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால், செஞ்சிலுவைச் சங்கத்தின் குமரி மாவட்ட கிளை, அந்த நிவாரணப் பொருட்களை உரிய முறையில் சப்ளை செய்யாமல், ஆண்டுக்கணக்கில் ஸ்டாக் வைத்து, அவற்றில் சிலவற்றை கெட்டுப்போக வைத்துவிட்டதாக இப்போது புகார் கிளம்பியிருக்கிறது. தவிர, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இதன் திட்டப்பணிகளிலும் முறைகேடுகள் தலைதூக்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதுதான் பெரும் அதிர்ச்சி!

இதுபற்றிய தகவல்களை நம் கவனத்துக்குக் கொண்டு வந்தவர், செஞ்சிலுவைச் சங்க குமரி மாவட்ட கிளையின் ஆயுட்கால உறுப்பினரான விவேகானந்த் என்பவர். அவரிடம் பேசினோம். "செஞ்சிலுவைச் சங்கத்தின் மிக முக்கியமான குறிக்கோளே பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்வதுதான். இதற்காக நம் மத்திய, மாநில அரசுகள் ஏகப்பட்ட சலுகைகளை இந்த அமைப்புக்குச் செய்கின்றன. அவற்றில் ஒன்று, நிவாரணப் பொருட்களை ரயிலில் இவர்கள் இலவசமாகவே எங்கும் கொண்டு செல்லலாம் என்பது. அப்படித்தான் சுனாமி தாக்கிய, அடுத்த சில நாட்களிலேயே இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்து ஏகப்பட்ட துணிமணிகள், அரிசி, பாத்திரங்கள், பேட்டரிகள் போன்றவற்றை ரயில் மூலமாக குமரிக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் குமரி கடலோரப் பகுதி மக்கள் மாற்றுத்துணிக்குக்கூட வழியில்லாமல் தவித்தது அனைவருக்கும் தெரியும். தமிழகம் முழுக்க பொதுமக்களிடம் இருந்து சேகரித்துக் கொண்டு வரப்பட்ட பழைய துணிகளைத்தான் அப்போது அவர்கள் வாங்கி அணிய வேண்டியிருந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் குமரி செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஒரே ஒரு நாள் கலெக்டரை அழைத்து மக்களுக்கு துணிமணிகள், அரிசி வழங்குவதாக போஸ் கொடுத்ததோடு சரி..! எஞ்சிய மொத்த நிவாரணப் பொருட்களையும் அப்படியே பதுக்கிக் கொண்டனர்.

அவற்றில் விலை உயர்ந்த கட்டில்கள் சிலவற்றை காணவே இல்லை. துணிமணிகள், பேட்டரிகள் உள்ளிட்ட சுமார் இரண்டு லாரி அளவுக்கான பொருட்கள் நாகர்கோயிலில் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு செயல்படும் திட்ட அலுவலகத்தின் கார் ஷெட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. தலா ஐம்பது கிலோ எடை கொண்ட 110 மூட்டை அரிசி நாகர்கோயில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கிறது. தவிர, ஏராளமான பாத்திரங்களை குமரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க செயலாளர் நடராஜனுடைய மகனது அலுவலகத்தில் வைத்துள்ளனர். அங்கு மலிவு விலையில் அந்தப் பொருட்கள் விற்கப்படுவதாகவும் தெரிய வருகிறது. ஸ்டாக் வைக்கப்பட்ட பொருட்களில் அரிசியும், பேட்டரிகளும் தற்போது முழு அளவில் கெட்டுப்போய் விட்டன.

சமீப காலமாக நான் இதுபற்றி நிர்வாகிகளிடம் கேட்கத் தொடங்கியதால், அவர்கள் ஸ்டாக் வைத்திருந்த பொருட்களை எல்லாம் இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக கலெக்டரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதற்காக கெட்டுப்போன அரிசியை, தற்போது வேலை ஆட்களை வைத்து சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கணக்கில் ஸ்டாக் வைக்கப்பட்ட அந்த அரிசியைச் சாப்பிடுவதும், விஷத்தைச் சாப்பிடுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். எனவே, இந்த அரிசியை இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பக்கூடாது. மேலும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ மக்கள் ஒருவேளை கஞ்சிக்கு அல்லாடிக்கொண்டிருக்க... இங்கு இப்படி டன் கணக்கிலான அரிசியை கெட்டுப்போக விட்டவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தில் இருக்கவே லாயக்கில்லை.

இன்னொன்று, செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் எந்த ஆதாயத்தையும் எதிர்பாராத சமூக சேவகர்களாக இருக்க வேண்டும். ஆனால், குமரியில் இந்த அமைப்பின் செயலாளரான நடராஜன், தனது மகன் நடத்தும் `ஷயாநெட்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரிலேயே லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செஞ்சிலுவைச் சங்க காண்ட்ராக்டுகளை எடுத்திருக்கிறார். இதுவே பெரும் முறைகேடு இல்லையா?

இந்த முறைகேடுகளை எல்லாம் நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு எப்படிக் கிடைத்ததென்றால், நானும் ஒருவகையில் இவர்களால் பாதிக்கப்பட்டவன் என்பதால்தான். நான் மத்திய அரசுத் துறை ஒன்றில் பணியாற்றுபவன். எனது மனைவி சொந்தமாக பல கார்களை வைத்து டிராவல் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். சுனாமி பாதித்த பகுதிகளில் பணியாற்ற கடந்த 2006_ம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் இங்கு வந்ததில் இருந்தே அவர்களுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் எனது மனைவிதான் கார்களை சப்ளை செய்தார். பின்னர் அவர்கள் சுமார் ஐந்து கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை (கல்வி வளர்ச்சி, உளவியல் பயிற்சி சம்பந்தப்பட்டவை) குமரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்ததும், இவர்களுக்கும் கார்கள் சப்ளை செய்தோம். இந்த சாக்கில் செயலாளர் நடராஜன் அடிக்கடி தனது சொந்த உபயோகத்துக்காக வாடகையின்றி எங்களிடம் கார் எதிர்பார்த்தார். அதற்கு எனது மனைவி சம்மதிக்கவில்லை. இதற்காக கார் வாடகை பாக்கிக்கான நான்கு லட்ச ரூபாய் `செக்'கை அவரிடம் இருந்து வாங்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும். இதன்பிறகு இப்போது அங்கு கார் வாடகை சம்பந்தப்பட்ட டெண்டர்களில் பங்கேற்க, எனது மனைவியின் நிறுவனத்துக்குத் தகவலே தருவதில்லை. தற்போது அங்கு ஓடிக்கொண்டிருக்கும் எங்களது ஐந்து கார்களையும்கூட நிறுத்தும் முடிவில் இருக்கிறார்கள்.

ஆனால், இதற்காக நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் கார் இங்கு இல்லையென்றால் இன்னொரு பக்கம் வாடகைக்குப் போய்விடும். அதேசமயம் எங்களை டெண்டரில் பங்கேற்காமல் இருக்கச் செய்வதன் மூலம் அதிக வாடகைக்கு அல்லவா வேறு இடங்களில் கார் எடுக்கிறார்கள்?. ஆக, தனி மனிதர் ஒருவரின் காழ்ப்புணர்ச்சியால் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணம் அல்லவா இழப்புக்குள்ளாகிறது? இதற்கு கமிஷன் இருக்காது என நாம் எப்படி நம்புவது? இதையெல்லாம் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றவரும், அதன் தலைவர் பொறுப்பில் உள்ளவருமான மாவட்ட ஆட்சியர்தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார் விவேகானந்த்.

இந்தப் புகார்கள் சம்பந்தமாக செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திலேயே அதன் செயலாளர் நடராஜனைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். "நான் மாவட்ட கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன். எவ்வித சம்பளமும் இல்லாத இந்தப் பணியில் சேவை நோக்குடன் ஈடுபட்டு வருகிறேன். சுனாமி நிவாரணமாக இந்தப் பொருட்கள் வந்ததாகச் சொல்வதெல்லாம் பொய். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இவை வந்தன. தற்போது இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கு கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக அவற்றை தரம் பிரித்துக்கொண்டிருக்கிறோம். எனது மகன் டெண்டரில் பங்கேற்று இங்கு காண்ட்ராக்ட் எடுத்திருப்பது பெரிய தவறா? எனது மகனாக இருக்கும் காரணத்தால் அவன் தொழிலே செய்யக்கூடாதா? காண்ட்ராக்டை முடிவு செய்வது அதற்கான குழு என்பதால், அதில் நான் தலையிட வாய்ப்பே இல்லை.

விவேகானந்தின் நிறுவன கார் டிரைவர்களிடம் மரியாதையுடன் பேசும் பழக்கம் இல்லை. கார் ஓட்டிக்கொண்டே எப்போதும் செல்போன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவரது கார்களை நிறுத்த வேண்டியிருக்கிறது. இங்கு கனடா நாட்டு செஞ்சிலுவைச் சங்க நிதி உதவியுடன் நடைபெறும் பணிகளுக்கான கார் ஒன்று எனது பயன்பாட்டில்தான் உள்ளது. எனவே, இவரிடம் நான் சொந்த உபயோகத்திற்கு கார் கேட்கவேண்டிய அவசியமே இல்லையே? தனது வருமானம் பாதிக்கப்போகிறது என்றதும்தான் அவர் இதுபோன்ற அபாண்டங்களை என் மீது சுமத்துகிறார்'' என தன் தரப்பைச் சொன்னார் நடராஜன்.

`நிவாரணப் பொருட்கள் வந்து இரண்டே மாதங்கள்தான் ஆகின்றன' என நடராஜன் அடித்துச் சொன்னதால் குழப்பமான நாம் வெளியே வந்து, அங்கு ஊழியர்கள் தரம் பிரித்துக்கொண்டிருந்த பொருட்களை மெல்ல எட்டிப் பார்த்தோம். துணிமணிகள், பாத்திரங்கள் ஆகியவற்றில் பெரிதாக எந்த வித்தியாசத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால், ஓர் அட்டைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த தரமான `நிப்போ' கம்பெனி பேட்டரிகள் அனைத்துமே துரு ஏறிப்போய் இருந்தன. அவற்றின் `பேக்கேஜ்' தேதி 3.1.2005 என அந்த அட்டைப்பெட்டியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, சுனாமி தாக்கிய ஒரு வாரத்திற்குள் `பேக்கேஜ்' செய்யப்பட்டவை அவை. தயாரிப்பு தேதியிலிருந்து பதினெட்டு மாதங்களுக்குள் பயன்படுத்தவேண்டிய அந்த பேட்டரிகள், நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்டதால் காலாவதியாகி பயனற்றுப் போயிருப்பதும் தெளிவாகவே தெரிந்தது. அதற்குள் அங்கு வந்துவிட்ட செஞ்சிலுவைச் சங்க செயலாளர் நடராஜனிடமே இதுபற்றி நாம் கேட்டபோது, "இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தவைதான் இவை. அங்கிருந்து வரும்போதே இப்படி துரு ஏறிப்போய் வந்திருக்கிறது. ஆனாலும் இதைச் செய்தியாகப் போடாதீர்கள். அப்புறம் இதற்கு மேல் நமக்கு பொருட்களை அனுப்பமாட்டார்கள்!'' என்றார் அவர்.

அடுத்து அரிசியை சுத்தம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட எஸ்.எல்.பி. பள்ளிக்கு நாம் சென்றோம். அங்கு மூன்று பெண்கள் ஐம்பது கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளைப் பிரித்து, அரிசியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். பக்கத்தில் நாம் போனதுமே அரிசி கெட்டுப்போனதற்கு சாட்சியாக, அதிலிருந்து வாடை குப்பென நம் மூக்கைத் துளைத்தது. அங்கிருந்த எல்லா அரிசி மூட்டைகளிலுமே செஞ்சிலுவைச் சங்கத்தின் முத்திரையுடன், 2005_ம் ஆண்டு `பேக்' செய்யப்பட்ட புழுங்கல் அரிசி என்பதையும் மிகத் தெளிவாகவே அச்சிட்டிருந்ததை நாம் பார்த்தோம். இந்த அரிசியை வேறு புதுப் பைகளில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் அங்கிருந்தவர்கள் நம்மிடம் கூறினர்.

மொத்த தகவல்களையும் குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திரக்குமாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். "கெட்டுப்போன பொருட்களை நிச்சயம் இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்ப மாட்டோம். இதுபற்றிய விஷயங்களை நான் உடனே கவனிக்கிறேன்'' என்றார் கலெக்டர்.

கலெக்டர் உடனடியாக கவனித்தால்தான், மக்கள் மனதில் உயரிய மதிப்பைப் பெற்றிருக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பெயர் காப்பாற்றப்படும். ஸீ

எங்களுக்கு அரசு வேலை கொடுத்தே ஆக வேண்டும் என்றெல்லாம் அரசிடம் கெஞ்சவில்லை. அந்தளவிற்கு தனியாரிடம் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தோம். `அரசு வேலை காத்திருக்கிறது. உடனே பணியில் சேருங்கள்' என ஆசை வார்த்தை காட்டி மோசம் செய்திருக்கிறார்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள்'' என வினோதக் குரல் எழுப்புகிறார்கள் உடற்கல்வி ஆசிரியர்கள்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரையரசன் மிகுந்த சோகத்தோடு நம் அலுவலகத்திற்கு வந்தார். "பட்டப் படிப்பு முடித்த கையோடு விைளயாட்டுத் துறை மீது இருக்கும் காதலில் உடற்கல்வித் துறை பட்டப் படிப்பில் சேர்ந்தேன். 95-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். பிறகு சென்னையில் உள்ள பிரபல மெட்ரிக் பள்ளியில் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கடிதம் வந்தது. `22.7.08 அன்று பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கான ஆள் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. தாங்கள் வரவும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்றேன். தகுதி அடிப்படையில் 29_ம் தேதி திருவாரூர் இடும்பாவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்தது. அதேநேரம் தமிழகம் முழுவதும் 450 ஆசிரியர்களை உடற்கல்விப் பிரிவில் நியமித்தனர். திருவாரூர், கரூர் மாவட்டங்களில் 20 பேருக்கு வேலை கிடைத்தது'' என்றவர்,

"நான்காயிரத்து ஐநூறு ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை அரசு கொடுத்தது. அரசு வேலை என்பதால் குடும்பத்தோடு இடும்பாவனத்திற்குச் சென்றோம். கடந்த அக்டோபர் 31-ம் தேதி பள்ளித் தலைமையாசிரியர் அழைத்தார். `இன்று முதல் பணியில் இருந்து விடுவிக்கச் சொல்லி உத்தரவு வந்துள்ளது' என்றார். நான் அதிர்ந்து போய் காரணம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்குத் தடை வாங்கியுள்ளதால் விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

`இதென்ன புது வில்லங்கம்?' என்று விசாரித்தபோதுதான், பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம் தெரிந்தது. 13.6.08-ல் சிலர் நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளனர். இந்தத் தடையாணை இருப்பது தெரியாமல் எங்களுக்கு வேலை கொடுத்துள்ளனர். ஆனால், மற்ற மாவட்டங்களில் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆசிரியர்களை நியமித்துவிட்டதால் எந்தப் பிரச்னையுமில்லை. கரூர், திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் இரண்டு மாதம் கழித்துப் பணியில் நியமித்துள்ளனர். நீதிமன்றத் தடை இருப்பது அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.

இதில் கொடுமை என்னவென்றால், எங்களில் சிவானந்தம் என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது. அதற்குள் அரசின் உத்தரவு அவரைப் பெரிதும் பாதித்துவிட்டது. கிருஷ்ணன் என்பவரும் `திருமண நேரத்தில்' பாதிக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்றத் தடை இருக்கும் நேரத்தில் எங்களுக்கு வேலை கொடுத்ததால், ஒரு பிரிவினர் பள்ளிக் கல்வி இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்ய முயற்சித்துள்ளனர். அதற்குள் பிரச்னையை முடிக்க `மேலிடத்தில்' இருந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு வந்துள்ளது. இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால், நீதிமன்றத் தடை இருப்பது தெரியாமல் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் இளங்கோ, `உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்ததில் பணம் விளையாடியதாக' இந்த இரண்டு மாவட்டங்களில் விசாரணை நடத்தினார். ஒருசிலர் விருப்ப இடம் கேட்டு பெரிய தொகை கொடுத்ததாக என்னிடம் கூறினார்கள். இப்போது அவர்கள் பாடும் திண்டாட்டம்தான்'' என்றவர் இறுதியாக,

"நாங்கள் அரசிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறோம். எங்களுக்கு அரசு வேலை கொடுங்கள் என்று போராட்டம் நடத்தினோமா? கோரிக்கை வைத்தோமா? அரசு கொடுக்கும் சம்பளத்தைவிட தனியார் பள்ளிகள் எங்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுத்தனர். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்தோம். இப்போது வேலை இல்லை என்பதால் திரும்பவும் முன்பு வேலை பார்த்த பள்ளியில் சேர முடியாது. அரசின் தன்னிச்சையான உத்தரவுக்கு எதிராக நாங்களும் கோர்ட்டில் தடை வாங்கினோம். உடனே, எங்களைப் பணியில் சேர்ப்பதுதான் நடைமுறை. அதைக் கூட அதிகாரிகள் செய்ய மறுக்கின்றனர். இரண்டு நாள் முன்பு பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமியிடம் முறையிட்டோம். அவர், `நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும்' என்று திருப்பி அனுப்பிவிட்டார். நாங்கள் தடை பெற்றிருப்பதைக் கேட்கும் நிலையில்கூட அவர் இல்லை. கோர்ட் உத்தரவு வந்திருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளும் இயல்பான காரியங்களைக் கூடச் செய்யாமல், பள்ளிக் கல்வித்துறை சுணங்கியுள்ளது. முதல்வர்தான் இப்பிரச்னையில் தலையிட்டு எங்களுக்கு சரியான தீர்வைக் கொடுக்க வேண்டும்'' என்றார் ஆதங்கத்தோடு.

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமியிடம் பேசியபோது, " நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் எதுவும் கூறுவதற்கில்லை'' என்றதோடு முடித்துக் கொண்டார். பாதிக்கப்பட்டவர்கள் தடையாணை வாங்கியது குறித்தும் எதுவும் பேச மறுத்துவிட்டார்.

ஆனால், பாதிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களோ, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்குத் தொடுக்கத் தயாராகி வருகிறார்கள். இதற்கு அரசு என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை.


- குமுதம் ரிப்போட்டர்


Comments