மீண்டும் கேள்விக்குறியான வான்பாதுகாப்புப் பொறிமுறை

நான்காவது ஈழப்போரில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகள் அதற்கு பயன்படுத்தும் பொறிமுறைகள் எல்லாம் நவீன போரியல் உத்திகளை சார்ந்தவை. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலின்போது நவீன தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்திய விடுதலைப்புலிகள் நடைபெற்றுவரும் போரில் வான்தாக்குதல் மற்றும் கடற்தாக்குதல் உத்திகளில் நவீன தாக்குதல் பொறிமுறைகளை புகுத்தி வருவது இலங்கை அரசின் போரை மிகுந்த செலவுமிக்க ஒரு போராக மாற்றம் காண வைத்துள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற விநியோகக் கப்பல் மீது தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகள் ஒரு வாரத்திற்குள் இரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த மையங்களை வான்புலிகளின் விமானங்கள் மூலம் (ஏறத்தாழ சம நேரத்தில்) தாக்கியுள்ளனர். இது இலங்கை வான்படைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த செப்டெம்பர் மாதம் வவுனியாவில் உள்ள இராணுவக் கட்டளைப் பீடத்தையும், வான்படையினரின் ராடர் மையத்தையும் வான்புலிகள், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி, சிறப்புப் கொமோண்டோ அணிகள் இணைந்து தாக்கியபோது வான்புலிகளின் விமானங்களில் ஒன்றை தமது எவ்7 தாக்குதல் விமானம் சுட்டுவீழ்த்தியுள்ளதாக இலங்கை அரசாங்கமும் சில ஊடகங்களும் பெருமெடுப்பிலான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன.

அதற்கான ஆதாரங்கள் எவையும் இலங்கை வான்படையினரால் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் தமது தாக்குதல் விமானங்கள் இரண்டும் பாதுகாப்பாக தளம் திரும்பிவிட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர். படையினரின் இந்த பிரசாரங்களுக்கு மத்தியில் வான்புலிகள் மீண்டும் ஒரே நாளில் இரு இலக்குகளை தாக்கிவிட்டு பாதுகாப்பாக தளம் திரும்பியது இலங்கை வான்படை வட்டாரங்களுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.05 மணியளவில் கிளிநொச்சியின் கிழக்குப்புறம் உள்ள வான்புலிகளின் தளம் ஒன்றில் இருந்து வானில் எழுந்த சிலின்143 ரக இரு தாக்குதல் விமானங்கள் வடமேற்குத் திசையில் பறந்து கடற்பகுதியின் ஊடாக மன்னார் மாவட்டத்தின் இராணுவத் தலைமையகமான தள்ளாடி தளத்தை 15 நிமிடங்களில் அடைந்திருந்தன.வான்புலிகளின் விமானங்களின் பறப்பை தாம் முன்கூட்டியே அவதானித்திருந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் அவர்களின் தாக்குதலை படைத்தரப்பினால் தடுக்க முடியவில்லை. மன்னாரின் கரையோரத்தில் உள்ள தளம் ஒன்றில் உள்ள ராடரில் வான்புலிகளின் விமானங்களின் பறப்பை 57 ஆவது படையணியைச் சேர்ந்த துருப்பினர் அவதானித்து தலைமையகத்திற்கு தகவல் அனுப்பியதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் வவுனியாவில் உள்ள இந்திராஐஐ ரக இரு பரிமாண ராடரில் தாம் வான்புலிகளின் பறப்பை 10.18 மணியளவில் அவதானித்ததாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எனினும் வவுனியாவில் உள்ள இந்தியாவினால் வழங்கப்பட்ட இந்திராஐஐ ராடர்கள் வான்புலிகளின் விமானங்களை கண்டறிந்த இரு நிமிடங்களில் தள்ளாடி பிரதான படைத்தளத்தை வட்டமிட்ட வான்புலிகளின் விமானங்கள் அங்கு மூன்று குண்டுகளை வீசிவிட்டு வந்த பாதையால் தளம் திரும்பிவிட்டன.

இந்த தாக்குதலின் போது தளத்தில் உள்ள இரு கட்டடங்கள் பலத்த சேதமடைந்ததாகவும், 3 படையினர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவிக்கின்றபோதும் இழப்புக்கள் அதிகமாக இருக்கலாம் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வான்புலிகளின் பிரதான இலக்கு தள்ளாடித் தளப்பகுதியில் இருந்த பல்குழல் உந்துகணை செலுத்திகளும், பீரங்கித் தொகுதிகளுமே எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

தள்ளாடித் தளம் மீதான தாக்குதல் இலங்கை அரச படையினரை உஷார்நிலைக்கு கொண்டுவந்திருந்த சமயம், கிளிநொச்சிக்கு கிழக்கே உள்ள வான்புலிகளின் தளப்பகுதியில் இருந்து மேலெழுந்த வேறு இரு சிலின்143 ரக தாக்குதல் விமானங்கள் மீண்டும் கிளிநொச்சிக்கு வட மேற்குத் திசையில் பறந்து கடற்பகுதியை அடைந்து இந்து சமுத்திரத்திற்கு மேலாக தாழப்பறந்து கற்பிட்டி கடற்கரை மற்றும் புத்தளம் பகுதிகளுக்கூடாக வத்தளைப் பகுதியை அடைந்து கொழும்பு வான்பரப்பை 10.45 மணியளவில் அடைந்துள்ளன.

வான்புலிகளின் விமானங்கள் மன்னாரில் இருந்து கொழும்புவரை பயணித்ததை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் நிறுவப்பட்டிருந்த ராடர்களின் மூலம் தாம் அவதானித்ததாகவும், காலநிலை பாதகமாக இருந்ததனால் தொடர்ச்சியான அவதானிப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை எனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு வான்பரப்பை அடைந்த வான்புலிகளின் விமானங்கள் புறக்கோட்டைப் பகுதியை நோக்கிய பறப்பில் ஈடுபட்டபோது, அங்குள்ள முக்கிய நிலையங்கள் மீதான தாக்குதல் அச்சம் அரச வட்டாரங்களை சூழந்து கொண்டன.எனினும் தமது பாதையை திடீரென மாற்றிய வான்புலிகள் கொழும்புத் துறைமுகத்தின் திசையில் பறப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும் பரபரப்படைந்த கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்புப் படையினர், வானை நோக்கி சரமாரியான தாக்குதலை ஆரம்பித்ததுடன், துறைமுகப்பகுதியில் நங்கூரமிட்டிருந்த கப்பல்களின் விளக்குகளும் உடனடியாக அணைக்கப்பட்டன.ஆனால் மீண்டும் தமது பாதையை மாற்றிய வான்புலிகளின் விமானங்கள் களனிதிஸ்ஸ அனல்மின்நிலையத்தின் வான்பரப்பை அடைந்த போது அங்கு இருந்த விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் சரமாரியான தாக்குதலை ஆரம்பித்திருந்தன. எனினும் வான்புலிகள் மின்நிலையத்தின் மீது இரு குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் கடற்பகுதிக்கு மேலாக பறந்து பாதுகாப்பாக தளம்திருப்பிவிட்டனர்.

மன்னார் மற்றும் கொழும்புத் தாக்குதல்களில் வான்புலிகள் நான்கு தாக்குதல் விமானங்களை பயன்படுத்தப்பட்டதாக வன்னியில் உள்ள விடுதலைப்புலிகளின் வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.களனிதிஸ்ஸ அனல் மின்நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வான்புலிகள் வீசிய குண்டுகளில் ஒன்று மின்பிறப்பாக்கிகள் நிறுவப்பட்டிருந்த கட்டடத்தொகுதிகளின் கொங்கிரீட் கூரையை உடைத்து கொண்டு வீழ்ந்து வெடித்துள்ளதாக களனிதிஸ்ஸ அனல் மின்நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏறத்தாழ ஒரு அடி தடிப்புடைய கொங்கிரீட் கூரையை உடைத்து கொண்டு வீழ்ந்த குண்டின் வெடிப்பதிர்வினால் 165 மெகாவோட் சக்தி கொண்ட ஒரு மின்பிறப்பாக்கியும், 110 மெகாவோட் சக்தி கொண்ட ஜிரீ7 மின்பிறப்பாக்கியும் சேதமடைந்துள்ளன.

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கும் நோக்குடன் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த களனிதிஸ்ஸ மின்நிலையம் வான்புலிகள் வீசிய சீ4 அதிசக்திவாய்ந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட 35 கிலோ குண்டின் தாக்குதலில் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சேதமடைந்த இந்த மின்பிறப்பாக்கிகளால் நாள் ஒன்றிற்கு 24 மில்லியன் ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு 6 மாதங்கள் எடுக்கலாம் எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.எரிவாயு மூலம் இயக்கப்படும் இந்த மின்பிறப்பாக்கிகள் மீதான தாக்குதலின் போது அதிகாரிகள் எரிவாயு விநியோகத்தை உடனடியாக நிறுத்தியதனால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலின் அதிர்ச்சியினால் அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவரும் உயிரிழந்திருந்தார்.

கொழும்பு நகரை அண்டிய வான்புலிகளின் இந்த தாக்குதலை தொடர்ந்து படைத்தரப்பு உடனடியாக கொழும்புக்கான மின் இணைப்பை துண்டித்ததுடன், கொழும்புத் துறைமுகம், கட்டுநாயக்கா வான்படை தளம், அரச தலைவர் இல்லம், இராணுவத்தலைமையகம் ஆகிய பகுதிகளில் இருந்து வானை நோக்கி சரமாரியாக விமான எதிர்ப்பு கனரக துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளினால் தாக்குதலை நடத்தியதுடன், பரா வெளிச்சக்குண்டுகளையும் வானை நோக்கி ஏவியிருந்தனர்.

சில சந்தர்ப்பங்களில் காவல் கடமைகளில் இருந்த இலங்கை முப்படையினரும் தமது கைகளில் இருந்த ரீ56 ரக துப்பாக்கிகளினால்கூட வானை நோக்கி தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. படையினரின் பதில் தாக்குதலினால் பல பொதுமக்களின் வதிவிடங்கள் சேதமடைந்ததுடன், வத்தளை ஹுனுப்பிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது விமான எதிர்ப்பு பீரங்கியின் எறிகணை ஒன்று வீழ்ந்ததனால் அங்கு உறங்கிகொண்டிருந்த இரு பிள்ளைகளின் தாயார் ஒருவர் காயமடைந்திருந்தார்.

கொழும்பின் மையப்பகுதியில் உள்ள அதி உயரமான கட்டடங்களில் நிறுவப்பட்டிருந்த விமான எதிர்ப்புப் பீரங்கிகளினாலும் படைத்தரப்பு சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தின் ஓசை அவதானிக்கப்பட்ட திசையை நோக்கியே செறிவான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.படையினரின் இந்தத் தாக்குதல் கொழும்பு பகுதியை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியதுடன், கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை நோக்கி வந்த இரு பயணிகள் விமானங்களும் சென்னை நோக்கி திருப்பி அனுப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகளின் விமானங்கள் மன்னார் தள்ளாடி படைத்தளத்தை தாக்கிய பின்னர் ஏறத்தாழ ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அரச கட்டுப்பாட்டில் உள்ள வான்பரப்பில் பறப்பில் ஈடுபட்டிருந்த போதும் இலங்கை வான்படையினரின் எவ்7 போன்ற போர் விமானங்களாலும், எம்.ஐ.24 தாக்குதல் உலங்குவானூர்திகளாலும் வான்புலிகளின் விமானங்களை இடைமறித்து தாக்க முடியாது போனது வான்படைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.படை வட்டாரங்களின் தகவல்களின் படி இரு எவ்7 மிகையொலி தாக்குதல் விமானங்கள், எம்.ஐ.24 ரக உலங்குவானூர்திகள், மற்றும் கே8 ரகத் தாக்குதல் விமானங்கள் என மொத்தமாக 7 விமானங்கள் வானில் எழுந்த போதும் அவைகளால் வான்புலிகளின் விமானங்களை இடைமறித்து தாக்கமுடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து வன்னி வான்பரப்பு வரையிலும் இரவு 11.00 மணியில் இருந்து ஏழு விமானங்களும் மாறி மாறி பறப்பில் ஈடுபட்டிருந்ததாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதகமான காலநிலை காரணமாக வான்புலிகளின் விமானங்கள் மீதோ அல்லது வன்னிப் பகுதியில் உள்ள அதன் ஓடுதளங்கள் மீதோ தாக்குதலை நடத்தமுடியவில்லை என அவை மேலும் தெரிவித்துள்ளன.

ஆனால் இலங்கை வான்படையின் அதிக தொழில்நுட்ப விமானங்களுக்கு பாதகமாக உள்ள காலநிலை விடுதலைப்புலிகளின் இலகு ரக விமானங்களுக்கு மட்டும் எவ்வாறு சாதகமாக உள்ளது என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பலப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு பொறிமுறைகளும், அதிக செலவுமிக்க ராடர் தொகுதிகளும் பலனளிக்கத் தவறியமை தென்னிலங்கையில் பல வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.ஏறத்தாழ இரு வருடங்களுக்கு மேலாக வான்புலிகள் நிகழ்த்தியுள்ள 9 தாக்குதல்களிலும் அவர்கள் தாக்கிய இலக்குகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுடன், அதி பாதுகாப்பானவையுமாகும்.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பலாலித் தளம் மீது உந்துகணைத்தாக்குதலை நிகழ்த்திய வான்புலிகள் அதன் பின்னர் கட்டுநாயக்க வான்படைத் தளம், மீண்டும் பலாலித் தளம், கொலன்னாவ, முத்துராஜவெல எண்ணெய்க் களஞ்சியங்கள், அனுராதபுரம் வான்படைத் தளம், மணலாறு 22ஆவது படையணியின் கட்டளை மையம், திருமலை கடற்படைத் தலைமையகம், வவுனியா படைத்தளம், மன்னார் இராணுவ தலைமையகம், களனிதிஸ்ஸ மின்நிலையம் என்பனவற்றை தாக்கியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான மேற்கூறப்பட்ட மையங்கள் எல்லாம் அதிக பாதுகாப்பு மிக்கவை என்பதுடன் அவற்றில் பலவற்றை அரச கட்டுப்பாட்டில் உள்ள வான்பரப்பில் அதிக தூரத்திற்கு பயணம் மேற்கொண்டே வான்புலிகள் தாக்கியுள்ளனர்.

மெதுவாக பறக்கக் கூடியதும் இரவு நேரத் தாக்குதல் வலிமை உள்ளதும், வான் தாக்குதலுக்கு வசதியாக வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளை (கஃ3 ச்ணஞீ கஃ5 ஐகீ ஞ்தடிஞீஞுஞீ ட்டிண்ண்டிடூஞுண்) கொண்டதுமான கே8 ரக விமானங்கள், வான் தாக்குதல் வலிமை மிக்க எம்.ஐ35 ரக உலங்குவானூர்திகள், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட வான் தாக்குதல் வலிமையுள்ள எவ்7எம் ரக விமானங்கள் என்பவற்றையும், நவீன விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும் கொண்டிருந்த போதும் அரச வான்படையினால் விடுதலைப் புலிகளின் வான்படையை எதிர்கொள்ள முடியவில்லை என்பது வெளிக்காட்டப்படாத உண்மையாக தற்போது பத்தாவது தடவையும் நிரூபணமாகியுள்ளது.எவ்7 விமானம் மிகையொலி வேகத்தில் பறப்பதனால் மெதுவாக பறக்கும் விமானங்களை இடைமறித்து தாக்க முடியாது என்ற வாதத்தை அரச தரப்பு முன்வைத்துள்ள போதும், எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தி மணிக்கு 335 கி.மீ வேகத்தில் பறக்கவல்லது.

இது ராடர்கள் மற்றும் இலத்திரனியல் போர்க் கருவிகளை கொண்டிருப்பதுடன், வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வான்புலிகளின் சிலின்143 ரக விமானத்தின் வேகம் மணிக்கு 266 கி.மீ ஆகும். எனினும் வான்படையின் எந்தவெரு விமானமும் வான்புலிகளின் விமானத்தை இடைமறித்து தாக்க முடியாமல் போயுள்ளது.வான்புலிகளின் விமானிகள் மிகச்சிறந்த பயிற்சி பெற்றவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டு. அதாவது அதிக தொழில்நுட்ப, அதிநவீன போரியல் சாதனங்களில் இருந்து தமது தாக்குதல் வான்கலங்களை பாதுகாக்கும் திறமை மிக்க விமானிகள் அவர்கள்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வான்பரப்பில் அதிக நேரம் பறப்பில் ஈடுபட்ட வான்புலிகளின் விமானங்களை இடைமறித்து தாக்க முடியாத வான்படையினரால் கடந்த செப்டெம்பர் மாதம் மிகவும் குறுகிய நேரத்தில் வவுனியா படைத் தளத்தை தாக்கிவிட்டு திரும்பிய வான்புலிகளின் விமானத்தை எவ்வாறு சுட்டுவீழ்த்தியிருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மேலும் சிறிய ஆயுதங்களின் மூலம் வான்புலிகளின் விமானங்களை கண்டதும் சுட்டுவீழ்த்திவிடலாம் என தென்னிலங்கையில் கட்டி எழுப்பப்பட்ட மாயைகளும் மெல்ல மெல்ல தகர்ந்து போக ஆரம்பித்துள்ளன.

2007 ஆம் ஆண்டு வான்புலிகளின் தாக்குதல் உச்சம் பெற்ற வேளையில் வான்புலிகளின் விமானங்களை சிறிய ஆயுதங்களால் எவ்வாறு சுட்டுவீழ்த்த முடியும்? என்பதற்கு சான்றாக பல பத்திகள் தென்னிலங்கை பத்திரிகைகளில் வரையப்பட்டிருந்தன.எனினும் அது சாத்தியமற்றது. ஏனெனில் வான்புலிகள் தற்போது கொண்டுள்ள சிலின்143 ரகத் தாக்குதல் விமானம் 1987களில் இலங்கை வான்படை கொண்டிருந்த சியாமாசெற்றி (குஐஅஐ Mச்ணூஞிடஞுttடி குஊ.260) தாக்குதல் விமானத்தை ஒத்த தகைமையுடையது.

எனவே விடுதலைப் புலிகளின் விமானத்தை கண்டதும் ரி56 ரக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திவிடலாம் என்றால், சியாமாசெற்றி விமானங்கள் அனைத்தையும் 1987ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தமது கைகளில் இருந்த ஏ.கே47 ரக மற்றும் 0.50 கலிபர் துப்பாக்கிகளால் இலகுவாக சுட்டு வீழ்த்தியிருக்க முடியும் என்ற வாதத்தை முன்வைத்து "வான் ஆதிக்கத்தின் விளைவு போரின் வியூகத்தை மாற்றும்' என்னும் தலைப்பில் 06.05.2007 அன்று வெளியாகிய வீரகேசரி வார வெளியீட்டில் கட்டுரை ஒன்றை வரைந்திருந்தேன்.

இன்று சிறிய ஆயுதங்கள் மட்டுமல்ல நவீன தொழில்நுட்பமுடைய ஆயுதங்கள் பலவற்றைக் கொண்டிருந்தும் இலங்கை வான்படையினரால் வான்புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடியாது போவது வான்புலிகளின் தாக்குதல் திறன் மற்றும் தப்பிச்செல்லும் உத்திகள் தொடர்பான மதிப்பீட்டை மேலும் உயர்த்தியுள்ளது.மேலும் இலங்கை வான்படையின் வான் ஆதிக்கம் பாரிய நெருக்கடி மிக்கதாக மாற்றம்பெறத் தொடங்கியுள்ளதையும் இறுதியாக நடைபெற்ற வான் தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது.

இதனால் இலங்கை வான்படையின் வான்பாதுகாப்புப் பொறிமுறைகள் மேலும் அதிக நிதிகளை விழுங்கப்போகின்றது. இது பொருளாதாரத்திலும், படை நடவடிக்கைகளிலும் பெருமளவான தாக்கத்தை உண்டு பண்ணலாம் என்பது தெளிவானது.

- அருஷ்-


Comments