கொழும்பு வரை வந்த வான்புலிகள் அரசுக்கு ஏற்படுத்தியுள்ள அழுத்தங்கள்

விடுதலைப் புலிகளின் விமானப்படை 9 ஆவது தடவையாகவும் தாக்குதல் நடத்தி விட் டுப் பத்திரமாக தரையிறங்கியிருப்பது அரச, பாதுகாப்பு வட்டாரங்களைப் பெரும் திகைப் புக்குள்ளாக்கியிருக்கிறது.

கடந்த 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இரண்டு இலகு ரக விமா னங்கள் ஐந்தே நிமிடங்களில் மன்னார் வான் பரப்பை அடைந்தன.
இரவு 10.20 மணியளவில் முதலாவது குண்டு தள்ளாடிப் படைத்தளத்தின் மீது வீசப் பட்டது. அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வீசப் பட்டன.

தள்ளாடியில் இருந்த 58 ஆவது டிவிசன் தலைமையகத்தின் ஆட்லறி ,பல்குழல் பீரங்கி களே இந்த விமானங்களின் இலக்காக இருந் தன எனக்கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் படையினர் தரப்பில் 3 பேர் காயமுற்றதாகவும் இரண்டு கட்டடங்கள் சேதமுற்றதாகவும் படைத்தரப்பு தெரிவித்தது.

அத்துடன் படையினரின் இராணுவ உபகர ணங்கள் சிலவும் சிறியளவிலான சேதங்களைச் சந்தித்திருப்பதாக படைத்தரப்பு ஒப்புக்கொள் ளத் தொடங்கியிருக்கிறது. ஆனால் முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை. முன்ன ரங்க களத் தலைமையகம் என்பதால் அங்கு ஏற்பட்ட சேதங்களை படைத்தரப்பு வெளியிட மறுக்கிறது.

தள்ளாடி மீதான தாக்குதலுக்குப் பின்னர் புலிகளின் விமானங்களில் ஒன்று மீண்டும் இரணைமடு நோக்கிப் பறந்து சென்றிருக்கிறது.

இதை மல்லாவிப் பகுதியில் நிலைகொண்டி ருந்த படையினர் அதன் ஒலியைக் கொண்டு உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆனால், வவுனியாவில் உள்ள விமான கண்காணிப்பு ராடர் கருவிகளில் புலிகளின் விமானங்கள் மேற்கிளம்பியதோ திரும்பிச் சென்றதோ பதிவாகவில்லை.

அதேவேளை மற்றைய விமானம் மேற்கு கடற்பரப்பின் ஊடாக கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் என்று யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை. மன்னார் தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோது கொழும்பில் முக்கிய இடங்களின் பாதுகாப்புக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு விமான எதிர்ப்புப் பொறிமுறை கள் தயார்படுத்தப்பட்டன.

ஆனால், மன்னாரில் தாக்குதல் நடத்திய விமானங்கள் இரணைமடு நோக்கிச் சென்றதை உறுதி செய்து கொண்ட பின்னர் கொழும்பு வழமைக்குத் திரும்பியது. புலிகள் எங்கே கொழும்புக்கு வரப் போகின்றனர், அவர்க ளுக்கு அந்தத் தைரியம் கிடையாது என்றும் மன்னாரில் தாக்குதல் நடத்திவிட்டு இரண்டா வது தாக்குதலை நடத்தமாட்டார்கள் என்றும் பலர் எண்ணியிருந்திருக்கலாம்.

ஆனால், திடீரென புத்தளம் பாலாவியில் இருந்த விமானப்படையின் ராடரில் மேற்குக் கடலில் ஒரு மர்மப்புள்ளி அசைவதை காட்டி யது. அது புலிகளின் விமானம் தான் என்பதும் கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் சற்று நேரத்தில் அதுவும் மறைந்து போனது. பாலாவியில் விமானம் தென்பட்ட துமே கொழும்பு உஷார்படுத்தப்பட்டது. கட்டு நாயக்க விமானப்படைத்தளத்தில் இருந்து எவ்7 விமானங்கள் கிளம்பின. அனுராதபுரத் தில் இருந்து பி.ரி6 பயிற்சி விமானங்கள் புறப்பட்டன. அத்துடன் எம்.ஐ.24 தாக்குதல் ஹெலிகளும் அனுப்பப்பட்டன.

புலிகளின் விமானங்கள் எங்கே பறக்கின் றன என்பது தெரியாததால் இரணைமடு மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் தேடுமாறு உத்தரவிடப்பட்டது. எங்கு தாக்குதல் நடத் தினாலும் தரையிறங்க அங்கேதானே வர வேண்டும் என்ற கணிப்பு.

அதேவேளை புலிகளின் விமானம் ஒன்று களனி கங்கையின் முகத்துவாரம் வழியாக நிலப்பரப்புக்குள் பிரவேசித்தது. துறைமுகத் திலும் புறக்கோட்டை மற்றும் கோட்டை, கொள்ளுப்பிட்டி போன்ற பகுதிகளில் உயர மான கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த விமான எதிர்ப்புப் பீரங்கிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இந்தப் பாதையை அவர் கள் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

புலிகளின் விமானம் கொழும்பு வான்பரப் பில் பிரவேசித்ததுமே வானத்தை நோக்கி குண்டுகள் சீறின. "பரா' வெளிச்சங்கள் அவற் றைத் தேடின.

ஆனால், கடும் இருளுக்கும் மத்தியில் புலிக ளின் விமானி களனிதிஸ்ஸ மின் நிலையத்தை தேடிப் பிடித்தார். அடுத்தடுத்து இரண்டு குண்டுகளைப் போட்டு விட்டு விமானம் வந்த வழியே பறந்து போனது. இது நடந்தது சுமார் 11.30 மணியளவில்.

புலிகளின் விமானம் அடுத்த அரை மணி நேரத்துக்குள் பாதுகாப்பாக தரையிறங்கி விட் டது. ஆனால், அது எங்கே தரையிறங்கியது என்ற குழப்பம் இருக்கிறது. இரணைமடுவில் என்றும் முல்லைத்தீவில் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. விமானப்படை யின் ராடரில் தென்படாமல் மறைந்து போன தால் அது தரையிறங்கிய இடத்தை அடையா ளம் காண முடியவில்லை.

அதேவேளை, வன்னி வான்பரப்பில் விமா னப்படை விமானங்கள் இரணைமடு மற்றும் புதுக்குடியிருப்பு வான்பரப்பில் வெளிச்சக் குண்டுகளை ஏவி தேடுதல் நடத்திக் கொண்டி ருந்த சமயத்தில் கிளிநொச்சி மேற்கில் இருந்து இராணுவத்தினர் தொடர்ச்சியாக பல்குழல் மற் றும் ஆட்லறி ஷெல்களை இரணைமடு நோக்கி ஏவிக் கொண்டிருந்தபோது தான் புலிகளின் விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்கியிருக் கின்றன.

தள்ளாடியில் ஏற்பட்ட சேதங்கள் மிக மிகக் குறைவு. களனிதிஸ்ஸவில் சிறிதளவு சேதங் களே ஏற்பட்டன. அதனால் மின்விநியோகத் துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அரசு அறிவித்ததது. ஆனால், இப்போது களனி திஸ்ஸ மின்நிலையத்துக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் கனதியானது என்பது உறுதியாகியி ருக்கிறது. தாக்குதலுக்குள்ளான மின்நிலையத் தில் ஏற்பட்ட தீயை அணைக்க ஒரு மணி நேரம் வரை சென்றிருக்கிறது.



மின் நிலையத்தின் நிர்வாகக் கட்டடத்தின் மீது விழுந்த ஒரு குண்டு அதன் தடிப்பாக கொங்றீட் தளத்தை உடைத்துக் கொண்டு உட் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத னால் நிர்வாகக் கட்டடத்தில் சேதங்கள் ஏற்பட் டிருக்கின்றன.

அதேவேளை மற்றொரு குண்டு மின்பிறப் பாக்கி ஒன்றின் குளிரூட்டியருகே விழுந்து வெடித்திருக்கிறது. இதன் விசிறிகள் சேத மடைந்திருக்கின்றன. மற்றொரு மின்பிறப்பாக் கியிலும் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

முதலாவது மின்பிறப்பாக்கியில் இருந்து 110 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுவதுண்டு. இரண்டாவதில் 165 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இவை யிரண்டும் டீசலில் இயங்குவதால் உற்பத்திச் செலவு அதிகம். இதனால் நாளாந்த பாவனை யில் இருந்து ஒதுக்கப்பட்டு அவசர தேவைக் காகவே பயன்படுத்தப்பட்டு வந்தன.

களனிதிஸ்ஸவில் மொத்தம் 550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சேத மடைந்த இரண்டு மின்தொகுதிகளும் 275 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டவை.

இவை இயங்காததால் நாளொன்றுக்கு 2.4கோடி ரூபா நட்டம் ஏற்படும் என்று மின் சாரசபை அறிவித்திருக்கிறது. இந்த நிலை 3 மாதங்கள் வரை நீடிக்கலாம்.

அதேவேளை களனிதிஸ்ஸ மின் நிலையத் துக்கு ஏற்பட்ட சேதங்களை திருத்தியமைக்க ஆறு மாதங்கள் தேவைப்படும் என்று மின் சக்தி அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தாக்குதலால் இரவு நேரத்தில் மின் வெட்டு நடைமுறைப்படுத்தபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரியவருகிறது.

ஆக, இந்த தாக்குதலில் புலிகள் ஏற்படுத்தி யிருக்கின்ற சேதம் கடந்த ஏப்ரலில் கொலன் னாவ எரிபொருள் குதங்கள் மீதான தாக்குத லில் ஏற்படுத்தப்பட்டதை விடவும் அதிகமா னது.

அதேவேளை புலிகளின் விமானங்கள் கொழும்பு வரை வந்து தாக்குதல் நடத்தி விட் டுப் போகும்வரை வேடிக்கை பார்த்திருந்ததா? எங்கே உங்களின் வான் பாதுகாப்பு சாதனங் கள் என்று கேள்விகள் அரசை நோக்கி வீசப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

வன்னி வான்பரப்பில் புலிகளின் விமானங் களைத் தேடிவிட்டு நள்ளிரவுக்குப் பின்னர் விமானப்படை விமானங்கள் தளம் திரும்பின.

சுமார் இரண்டு மணி நேரம் வரை புலிகளின் விமானங்கள் வானில் பறந்திருக்கின்றன. இது அசாத்திய துணிச்சல் நிறைந்தது.

அவர்கள் விமானப்படையின் விமான எதிர்ப்புப் பொறி?றை குறித்து அச்சம் கொண்டவர்களாக இருந்திருந்தாலோ, கடந்த முறை ஒரு விமானத்தை இழந்திருந்தாலோ இந்தளவுக்கு துணிந்து ஒரு தாக்குதலை நடத்தி யிருக்க மாட்டார்கள்.

இப்போது விமான எதிர்ப்பு ஏவுகணையை தயார் செய்தபோதும் அது இயங்கவில்லை என்றும் புலிகளின் விமானத்தில் வெப்பத்தை வெளியிடாத ஒரு வர்ணம் பூசப்பட்டிருக்க லாம் என்றும் இயந்திரத்துக்கு மேலாக ஒரு இரும்புக் கவசம் போடப்பட்டிருக்கலாம் என் றும் பலவேறு கதைகள் கூறப்படுகின்றன.

எது எப்படியோ, புலிகளின் விமானப் படைப் பலம் குறித்து அரசாங்கம் தெரிவித்து வந்த கருத்துகள் தவறானவை என்பதை சிங் கள தேசியவாத சக்திகளும் பு?ந்து கொள்ளத் தலைப்பட்டிருக்கின்றன. கடந்த முறை புலிக ளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகப் படைத்தரப்பு கூறியது பொய் என்பது இந்தத் தாக்குதலில் இருந்து உறுதியாகியிருப்பதாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச தெரிவித்திருக் கிறார்.

இது சிங்கள மக்களையே அரசாங்கத்தால் நம்ப வைக்க முடியாது போயுள்ளதைக் காட்டு கிறது. இந்த நிலையில் புலிகளின் வான் தாக்கு தல்கள் அடுத்தடுத்து நிகழக் கூடிய சாத்தியங் கள் இருப்பதாக எச்சரிக்கைகள் கொடுக்கப் பட்டு படையினர் உஷார்படுத்தப்பட்டிருக்கின் றனர். இது எந்தளவுக்குப் பயன் கொடுக்கும் என்பது தெரியவில்லை.

- சுபத்ரா


Comments