விரைவான தேர்தல் ஏற்பாடுகள் களமுனையின் உறுதியற்ற நிலையை காட்டுகின்றது

சிறிலங்கா இராணுவம் மிகவும் தரமான ஒரு அபிப்பிராயத்தை உலகில் ஏற்படுத்தி உள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்கள் மிகவும் தரமான செயற்பாடுகளையும், அதற்குரிய தகமைகளையும் கொண்டிருக்க வேண்டும். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அமெரிக்க படைகளின் பசுபிக் பிராந்திய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் திமூதி கீதிங் தனது பாராட்டுக்களை இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தொடர்பான அமெரிக்காவின் தெளிவான நிலைப்பாட்டை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. போருக்கு ஆதரவான போக்கையும், தமிழ் மக்களுக்கு எதிரான கொள்கையையும் அமெரிக்கா கொண்டிருப்பதை புரிந்து கொள்வது கடினமானது அல்ல. அமெரிக்காவின் தற்போதைய புதிய கூட்டாளியான இந்தியாவும் அமைதி முயற்சிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

நோர்வேயின் அனுசரணையுடன் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்தத்தை சிதைத்ததில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசே முக்கிய பங்கு வகித்ததாக பெரும்பாலான தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்திய மத்திய அரசு முக்கிய பங்கு வகித்து வருகின்றது. ஆனால், இந்த போரினால் தமிழ் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டு வருவதுடன், அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளிடம் இருந்து பெற்று வரும் அதிக உதவிகளினால் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் வன்னி மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. அங்கு 300,000 மக்கள் எதுவித மனிதாபிமான உதவிகளும் இன்றி வாழ்கின்றனர். தினமும் அங்கு மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத்தாக்குதல்கள் அந்த மக்களை மேலும் பாதித்து வருகின்றது.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட போது இருந்ததை விட விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டதாக சிறிலங்கா அரசும் அதன் கூட்டணி நாடுகளும் வலுவாக நம்புகின்றன. எனவே, போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசு மறுத்து வருகின்றது. தமிழகத்தின் பொதுவுடமை கட்சி விடுத்த வேண்டுகோளுக்கே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயார் என சாதகமாக பதிலளித்திருந்தனர்.

தற்போதைய படைத்துறை அனுகூலங்களை தக்கவைப்பதே சிறிலங்கா அரசிற்கு தற்போது முதன்மையாக உள்ளது. இந்த நிலையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக எந்தவொரு தீர்வுக்கும் முன்வரப்போவதில்லை. இந்த சூழ்நிலையை இந்தியா, அமெரிக்க நாடுகளின் கூட்டணி நாடுகளே உருவாக்கியுள்ளன என்பது நன்கு உணரப்பட்ட ஒன்று.

அரசின் இந்த போரியல் உத்திகளுக்கு பதில் உத்திகளை வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் கருத்துக்களில் இருந்து உணர முடிகின்றது. கடந்த 21 மாதங்களாக வன்னியில் நடைபெற்று வரும் படை நடவடிக்கைகளின் நோக்கம், விடுதலைப் புலிகளை பல முனைகளில் போருக்கு இழுத்து தமது பலத்தை அழித்து விடுவதே என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் உத்திகள் வேறுபட்டவை, இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான பதில் நடவடிக்கைகள் சிறிலங்கா இராணுவத்தின் போரிடும் தகமையை அழித்துவிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதவாது, இராணுவத்தை விரட்டியடிப்பதை விட அவர்களை அழித்துவிடுவது என்பதே அதன் பொருள்.

இது சாத்தியமானதா? என்றால் அதனை அடைவதற்கான சமர் இரு பகுதிகளை கொண்டது. ஒன்று தற்காப்பு சமர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த இந்த சமர் தற்போது வரை தொடர்ந்து வருகின்றது. இரண்டாவது தாக்குதல் சமர் இது விரைவில் ஆரம்பிக்கக்கூடும். இந்த நடவடிக்கைகளுக்கு ஐந்து அம்சங்கள் முக்கியமானவை.

நோக்கம்: படையினரை திரட்டுவது, தாக்குதலை நெறிப்படுத்துவது என்பன இதில் அடங்கும், புலனாய்வு: இராணுவத்தின் பூரண திட்டம் மற்றும் அவர்களின் பலம் தொடர்பான தகவல்கள், காலம்: தாக்குதல் திட்டத்திற்கு தயார்படுத்தலுக்கான காலம், இரகசிய நடவடிக்கை: தற்காப்பு சமருடன் கூடிய தாக்குதல் தயார்ப்படுத்தல்கள் இதில் அடங்கும். தாக்குதல்களை உள்வாங்குதல்: இறுதிக்கட்ட வலிந்த தாக்குதலுக்கு இது முக்கியமானது, திட்டமிட்ட நடவடிக்கை என்பனவே இந்த ஐந்து நடவடிக்கைகளுமாகும்.

இந்த ஐந்து படிமுறைகளின் போதும் போராளிகளின்; வலிமை தக்கவைக்கப்பட வேண்டும் என்பதுடன் புதிதாக போராளிகளை இணைத்து கொள்ளவும் வேண்டும். பின்னர் வலிமை குறைந்த நீண்ட விநியோக வழிகளுடன் பரந்த நிலப்பரப்பில் படையினரை பரவலடைய விட்டு அவர்களை தாக்கி அழிக்க வேண்டும்.

இவை எவ்வாறு எட்டப்படலாம் என்பதை தற்போது பார்ப்போம் விடுதலைப் புலிகள் தமது படை வளங்களை தக்கவைத்து வருகின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது சூரியக்கதிர் மற்றும் வெற்றிநிச்சயம் படை நடவடிக்கைகளின் போது கூட நடைபெற்றவை தான். சூரியக்கதிர் நடவடிக்கையின் போது வன்னிக்கு நகர்ந்த விடுதலைப் புலிகள், வெற்றிநிச்சயம் படை நடவடிக்கையின் போது வன்னியில் வடகிழக்கு மற்றும் வட மேற்காக நகர்ந்திருந்தனர்.

தற்போது அவர்களின் பெருமளவான ஆயுத வளங்கள் வன்னியின் கிழக்கு பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. ஏ-9 வீதிக்கு கிழக்கு மற்றும் மேற்காக நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என இராணுவம் தெரிவித்து வரும்போதும் அது மேற்கு பகுதியில் தான் கவனத்தை குவித்துள்ளது.

1999 களில் வெற்றிநிச்சயம் படை நடவடிக்கை வெற்றி பெற்றிருந்தால் கூட வன்னியின் மேற்குப்புற பகுதி விடுதலைப் புலிகள் வசம் இருந்திருக்கும். தற்போது வன்னியின் கிழக்கு களமுனை அவர்கள் வசம் உண்டு.

மேலும், முல்லைத்தீவின் காடுகளை ஆக்கிரமிப்பது படைத்தரப்புக்கு இலகுவானதல்ல. இதனை இந்திய படையினர் 1980-களின் பிற்பகுதியில் உணர்ந்திருந்தனர்.

அதாவது, விடுதலைப் புலிகள் தமது வளங்களை பேணிவருவது இராணுவத்திற்கு ஒரு வெற்றி தோல்வியற்ற தொங்கு நிலையை ஏற்படுத்தியுள்ளது. படை பலத்தை பெருக்குவதும் விடுதலைப் புலிகளுக்கு அதிக சிரமமம் அற்றது. அவர்கள் வன்னியில் மக்கள் படையை உருவாக்கி உள்ளனர். கட்டாய இராணுவப் பயிற்சிகள் இஸ்ரேல், சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. அவர்களுக்கு பயிற்சிக்கு தேவையான பரந்த நிலப்பரப்பு வன்னியின் கிழக்குப்புறம் உள்ளது.

வன்னி தகவல்களின் படி விடுதலைப் புலிகள் பிரிகேடியர் பால்ராஜ் மற்றும் பிரிகேடியர் தமிழ்செல்வன் ஆகியோரின் பெயர்களில் இரு புதிய படையணிகளை உருவாக்கி உள்ளனர். இந்த படையணிகள் ஒவ்வொன்றும் 10,000 வீரர்களை கொண்டது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில், விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அங்கு அதிகரித்துள்ளது. இராணுவத்தினருடன் சேந்து இயங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் மற்றும் கருணா குழுவினர் கடந்த இரு மாதங்களில் 20 இற்கு மேற்பட்ட உறுப்பினர்களை இழந்துள்ளனர். அரச படையினரும் கணிசமான இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

எனினும் அரசு அதனை வெளியிடுவதில்லை. இது அவர்களின் அரசியல் நடவடிக்கைகளையும், படையினருக்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளையும் பாதிக்கலாம். கிழக்கில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொள்ளும் இளைஞர்களின் தொகையும் அதிகமாகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் தற்போதைய நகர்வுகள் என்ன?

58 ஆவது டிவிசன் பூநகரிக்கு நகர்ந்துள்ளது. அது தற்போது பரந்தன் சந்தியை நோக்கி நகர முற்பட்டு வருகின்றது.

எனினும் தற்போதைய இராணுவத்தின் முன்னனி காவல் நிலையில் இருந்து பரந்தன் சந்தி ஏறத்தாழ 9 கி.மீ தொலைவில் உள்ளது. 57 ஆவது படையணி கிளிநொச்சிக்கு தெற்கே நிலைகொண்டுள்ளது. அது கிளிநொச்சியை அடைந்து 58 ஆவது படையணியுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்து வருகின்றது.

இதனிடையே 62 மற்றும் 63 ஆவது படையணிகள் கிளிநொச்சியில் இருந்து மாங்குளம் வரையிலான பகுதிகளில் மேற்குப்புறமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நான்கு டிவிசன்களும் 50-60 கி.மீ நீளமான ஏ-9 பாதைக்கு மேற்குப்புறம் உள்ள பகுதியை கைப்பற்ற முனைகின்றன.

எனினும் அதற்கு கிழக்குப்புறம் உள்ள பகுதிகளை கைப்பற்ற விடாது விடுதலைப் புலிகள் உக்கிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்குளம், கிளிநொச்சி மற்றும் முகமாலை பகுதிகளில் கடந்த வாரம் மூன்று நாட்கள் (15-17) நடைபெற்ற கடுமையான மோதல்களில் இராணுவம் கடும் இழப்பை சந்தித்துள்ளது.

இந்த மூன்று நாட்களில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான படையினர் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அங்கு தமது நிலைகளை பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

59 ஆவது படையணி முல்லைத்தீவின் கிழக்குப்புறம் நகர மேற்கொண்ட முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படையினரை மேற்குப்புற பகுதிகளில் பரவலடைய விட்டு கிளிநொச்சியுடன் ஆனையிறவை இணைக்கும் அவர்களின் திட்டத்தை நிறைவேற விடாது தாக்கி அழிப்பதே விடுதலைப்புலிகளின் உத்தி.

வன்னி நடவடிக்கையில் இராணுவம் அதிக படை வலுவை பயன்படுத்தி வருகின்றது. அங்கு 5 முழுமையான டிவிசன்களும் (56, 57, 58, 59, 63) இரண்டு பகுதியான டிவிசன்களும் (61, 62) நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

63 ஆவது டிவிசன் கடந்த மாதமே உருவாக்கப்பட்டிருந்தது. பிரிகேடியர் சத்யபிரியா லியனகே தலைமையிலான இந்த படையணி 3 பிரிகேட்டுக்களைக் கொண்டது. இது கொக்காவில் தொடக்கம் மாங்குளம் வரையிலுமான பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றது. இந்த படையணி மாங்குளத்தின் எல்லையை கடந்த திங்கட்கிழமை (17) அடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இராணுவம் முகமாலை களமுனையில் மற்றுமொரு களமுனையை திறந்துள்ளது. 53 மற்றும் 55 ஆவது படையணிகள் கிளாலி, கண்டல் மற்றும் முகமாலை களமுனைகளில் நகர முயற்சித்திருந்தன.

எனினும் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு அங்கு கடுமையானது.

இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றது என்பது தெளிவானது. ஆனால் இந்த படையணிகள் நிலைகொண்டுள்ள புவியியல் அமைப்பை கருதினால், இராணுவம் கிளிநொச்சியை அடைய முன்னர் விடுதலைப் புலிகளின் வியூகத்திற்குள் தாமாக சிக்கி விடும் என்பது தெளிவு.

ஏனெனில் போர்முனையில் உள்ள முழுமையான படையணிகள் ஒவ்வொன்றும் 7,000 – 9,000 படையினரையும், பகுதியான படையணிகள் 3,500 - 4,000 படையினரையுமே கொண்டுள்ளன. வழமையாக ஒரு முழுமையான படையணி 15,000 வீரர்களை கொண்டிருக்க வேண்டும்.

தொடர்ச்சியான எதிர்த்தாக்குதல்கள் மற்றும் பதுங்கி தாக்குதல்களினால் இந்த படையணிகளின் கவனம் குறுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை பெரும் நிலப்பரப்பில் பரவலடைய விடுவதே விடுதலைப் புலிகளின் நோக்கம்.

வன்னி படை நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தாக்குதல் மேலும் ஒரு ஸ்ராலின்கிராட் சமராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சமர் இரண்டாம் உலகப்போரில் நடைபெற்ற முக்கிய சமர்களில் ஒன்று.

ஸ்ரலின்கிராட் சமர் 200 நாட்கள் இரவு பகலாக நடைபெற்ற சமர், இது இரு பகுதிகளைக் கொண்டது. தற்காப்பு சமர், இது 1942 ஜுலையில் இருந்து நவம்பர் வரை நடைபெற்றது.

தாக்குதல் சமர் இது நவம்பர் 1942 இல் இருந்து பெப்ரவரி 1943 வரை நடைபெற்றது.

இந்த சமரில் ஜேர்மன் அதன் மிகச்சிறந்த படையணிகளான ஆறாவது இராணுவம் (இது 17 டிவிசன்களை கொண்டது) மற்றும் பன்சர் படையணி (Pயணெநச யுசஅல) என்பவற்றை இழந்திருந்தது.

சோவியத்தின் குளிர், புதிதாக கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்ட மிக நீளமான வினியோக வழி, படையினர் பின்வாங்குவதை தடுத்த கிட்லரின் பிடிவாதம் என்பன இந்த அழிவுக்கான காரணிகளாக கணிக்கப்பட்டுள்ளன.

ரஸ்யா மீதான படை எடுப்பின் போது அச்சு நாடுகளின் கூட்டணிப் படைகள் அரை மில்லியன் படையினரை இழந்ததாக படைத்துறை அவதானிகள் கணிப்பிட்டுள்ளனர். ஆயுதங்களும் பெருமளவில் இழக்கப்பட்டிருந்தன. இது ஜேர்மன் படையினாரின் போரிடும் வலுவை உடைத்திருந்தது.

ஒரு படை நடவடிக்கையானது அது எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது, படையினரின் நவீன ஆயுதங்கள், படையினரின் சிறந்த பயிற்சிகள் என்பவற்றை விட கட்டளை அதிகாரிகளின் உளவுறுதியிலேயே அதிகம் தங்கியுள்ளது.

ஜேர்மன் இராணுவம் இவை எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்கியது. அதன் உளவுரண்; ரஷ்யா படைகளை விட அதிகம்.

படை பலத்தின் அடிப்படையில் கணிப்பிட்டால், ஜேர்மன் ரஷ்யா மீது மேற்கொண்ட படை நகர்வான பார்பரோசா நடவடிக்கையின் ஆரம்பத்தில் ரஷ்யா படைகள் ஜேர்மன் இராணுவத்துடன் தீவிர மோதலில் இறங்கியிருப்பின் ஜேர்மன் படை வெற்றி பெற்றிருக்கும். ரஷ்யா படை தந்திரோபயமாக பின்வாங்கி பின்னர் தாக்கியதனால் ஜேர்மன் படை தோல்வியை தழுவியது.

இதனை ஒத்த உத்திகளை தற்போதைய வன்னிப் படை நடவடிக்கையில் நாம் காண முடியும். விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தை தக்கவைக்க முற்பட்டிருந்தால் கணிசமான படை வளத்தை அங்கு இழந்திருப்பார்கள்.

அதேபோலவே தற்போதைய படை நடவடிக்கையை அது ஆரம்பமாகிய 2007-களில் தீவிரமாக எதிர்த்திருந்தலும் அவர்கள் அதிக படை வளங்களை இழந்திருப்பார்கள். ஆனால் இரண்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.

தந்திரோபாய பின்நகர்வுகள் என்பது படை வளங்களை தக்க வைத்தபடி பின்நகர்வதுடன் அவற்றை வேறு ஒரு களமுனையில் பயன்படுத்துவதுமாகும்.

இந்த கள யதார்த்தத்தை தற்போது சிறிலங்கா அரசு உணரத்தலைப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்னால் உள்ள பேரழிவு அரசுக்கு தெரிகின்றது.

களமுனை எந்த நேரமும் மாற்றமடையலாம். எனவே தான் ஆளும் அரச கூட்டணி விரைவான தேர்தல் ஒன்றிற்கு திட்டமிட்டு வருகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல் உத்தி படைத்துறை அனுகூலங்களை மட்டும் கொண்டதல்ல அதற்கு அரசியல் முக்கியத்துவமும் உண்டு

- அருஸ்-


Comments