நிவாரண நிதியோடு முடங்குமா தமிழக எழுச்சி?

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் விடுதலைக்கு உரமாகி ஓராண்டு ஆகிறது. விமானக்குண்டு வீச்சிற்கு இலக்காகி, வீர மரணமுற்ற தமிழ்ச்செல்வனிற்கு, கலைஞர் கருணாநிதி இரங்கற்பாபாடியும் ஒருவருடகாலமாகிவிட்டது.

இடம்பெயரும் மக்கள் பாதிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. அவை நிறுத்தப்படுமெனக் கூறிய ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும், இளைய சகோதரருமான பசில் ராஜபக்ஷவின் உறுதிமொழியை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், கருணாநிதியும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசைக் காப்பாற்றி விட்டார்கள்.எந்த மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த, தமிழகமெங்கும் போராட்டத்தை தனது தலைமையின்கீழ் முன்னின்று கருணாநிதி நடத்தினாரோ அந்நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.எறிகணை வீச்சுக்களும், வான் தாக்குதல்களும் தொடர்கின்றன.

பரந்தனிலும், வல்லிபுனத்திலும் குழந்தைகளும் சிறுவர்களும் குதறப்படுகின்றனர்.இதனை நிறுத்துவதற்குரிய அழுத்தங்களை இலங்கை அரசின் மீது செலுத்துவதை விடுத்து, வன்னி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழகத்தில் நிதி சேர்ப்பதும், கொழும்பினைப் பலப்படுத்த டில்லியிலிருந்து ஆயுதங்களை அனுப்புவதும், இந்திய மத்திய கூட்டாட்சியாளர்களின் இரட்டை வேட தந்திரங்களை வெளிப்படுத்துகிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடிப் பங்களிப்பு இல்லாமல், பசிலும், பிரணாப் முகர்ஜியும், கருணாநிதியும் இணைந்து தமிழக எழுச்சியை தணிக்க வைக்க எடுத்த முயற்சி, 29ஆம் திகதி பதவி விலகல் நாட்டிய நாடகத்தோடு முற்றுப்பெறப் போவதில்லை.தமிழ் தேசியத் தலைமையை மிகக் கடுமையாக விமர்சித்து "இந்து' பத்திரிகையில் கட்டுரை வரைந்த மாலினி பார்த்த சாரதியும் ஒரு இலட்சம் ரூபாய் நிதியை கலைஞரிடம் வழங்கிய நிகழ்வு, புரியப்படாத விவகாரமல்ல.அதேபோன்று, புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவினால் கோடிகளைத் தொடும் உச்ச நட்சத்திரங்கள், உண்ணாவிரத மேடையில் ஊமைகளாக நடிப்பதற்கு இணங்கினர்.

இந்த "சூப்பர்கள்', தளபதிகள், "புரட்சி'களில், எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்ட இயக்குனர் சீமானையும், அமீரையும் சென்று பார்த்தார்கள்?மக்களின் தன்னியல்பான எழுச்சியை வீழ்ச்சியடையும் தமது வாக்கு வங்கியை தூக்கி நிறுத்த ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்களென்றே முடிவு கொள்ள வேண்டும்.அவசரமாக கூட்டப்பட்ட சர்வகட்சி சந்திப்பும், மழையில் நிகழ்ந்த மனித சங்கிலிப் போராட்டமும், கலைஞர் தலைமையில் தமிழக எழுச்சியை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தது.சர்வ கட்சித் தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசிற்கு விடுக்கப்பட்ட 14 நாள் இராஜினாமா காலக்கெடு முடிவடையும் முன்பாக, நிவாரணத்திற்கு நிதி சேர்க்கும் திசை திருப்பல் பாதையொன்று கலைஞரால் வகுக்கப்பட்டது.

அதேவேளை தமிழக மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு பெருகக் கூடாதென்கிற மத்திய அரசின் நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்ட கலைஞர், வைகோவுடன் இன உணர்வாளர் சீமான், அமீர் போன்றோரைக் கைது செய்து, தானுமொரு ஆட்சிப் பங்காளர் என்பதை நிரூபித்தார்.அதாவது, ஆட்சியாளர்கள், அரசிற்கெதிராக போராடும் விந்தையான வரலாறு எங்கும் நிகழவில்லையென்பது உண்மை.அவலமுறும் ஈழ மக்களுக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்த தமிழக மக்களின் ஒன்றிணைந்த சக்தியை, வேறெவரும் பயன்படுத்தி, ஒரு முழுமையான அரசியல் வடிவத்தை உருவாக்குமுன், தானே அதற்கான தலைமையை கையகப்படுத்த வேண்டிய தேவை கலைஞருக்கு ஏற்பட்டுள்ளதென்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம்.

ஜெயலலிதாவின், சுயநிர்ணய உரிமை முழக்கமே, கலைஞரின் பதவி துறப்பு முடிவுகளை வெளியிட வைத்தது. அம்மையார் அமைதியாக இருந்திருந்தால், தற்போதைய நிதி சேகரிப்புத் திருவிழாவை ஒக்டோபர் 14ஆம் திகதியன்று கலைஞர் ஆரம்பித்திருப்பார்.தற்போது மத்திய அரசின் கொள்கையே தமது கொள்கையென்கிற பழைய புராணம் மறுபடியும் பாடப்படுகிறது.ஆயினும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரை, நிதி சேகரிப்புக்களும் பேசித் தீர்க்க வேண்டுமென்கிற சர்வதேசப் பாடலும் தமிழக அரங்கில் நிகழ்த்தப்படும்.அதற்கான அறிகுறிகள் கலைஞர் தரப்பிலிருந்து தோன்ற ஆரம்பித்துள்ளன.

29ஆம் திகதி மத்திய ஆட்சியை கலைஞர் கவிழ்த்து விடுவார் என்கிற பதட்டத்தில், புலி எதிர்ப்புக் கோஷங்களை முன்னெடுத்து ஜெயலலிதாவுடன் அணிசேரக் காத்திருந்த காங்கிரஸார், பிரணாப் முகர்ஜியின் சென்னை விஜயத்தோடு பழைய நிலைக்குத் திரும்பியுள்ளனர்.இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், வலிந்து சென்று தமிழக எழுச்சிக்கு தலைமை கொடுத்த கலைஞர் அவ்வெழுச்சியினை சிதைக்கும் நடவடிக்கையில் முனைப்பாக உள்ளாரா வென்பதே பலரிடம் எழுந்துள்ள நியாயமான கேள்வியாகவிருக்கிறது.எடுக்கப்பட்ட அவசர முடிவுகளும், 14 நாள் காலக்கெடுவும், எல்லாமே செயற்கையாக மிகைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளும் எழுச்சியை முடக்கும் தந்திரங்களாகவே தென்படுகின்றன.

கோடிகள் சேர்த்துக் கொடுக்கப்பட்ட பின், தமது கடமை முடிந்து விட்டது போன்றதொரு மனத்திருப்தியை தமிழக மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் தொடர் எழுச்சிச் செயற்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யலாமென்பதும் கலைஞர், முகர்ஜி ஆகியோரின் திட்டமாக இருக்கலாம்.நிதி சேகரிப்புக் காலத்தில் உருவாகும் காலவரையறைக்கு உட்பட்ட போராட்டங்களை அனுமதிக்கும் அதேவேளை விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் சக்திகளின் செயற்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கையிலும் தமிழக அரசு இறங்கும்.அதற்கான சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

புலிகள் வேறு, மக்கள் வேறு என்கிற மத்தியின் கொள்கையை தமிழகமும், ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை பிரணாப் முகர்ஜி கலைஞருக்கு புரிய வைத்திருப்பார்.மறுபடியும் தமிழக மக்களின் உளப்பூர்வமான தமிழின உணர்வு, ஆட்சியாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அடக்கப்படவில்லையென்பதை தொடரும் போராட்டங்கள் உணர்த்தப் போகின்றன.இத்தனை காலமும் தாயக மக்களின் அவலநிலை குறித்த தகவல்களை உள்நுழைய விடாமல், பார்ப்பனீய ஊடகங்கள் இரும்புத் திரை போட்டு மறைத்தாலும், இன்று தடுப்பரண்கள் உடைக்கப்பட்டு, தமிழக உணர்வின் வரி தளமெங்கும் களநிலைச் செய்திகள் காவிச் செல்லப்படுகின்றன.

இதுவரை இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஊடக மையச் செய்திகளால் நிரம்பி வழிந்த தமிழக தினச் செய்தித் தாள்கள், இன்று வான் புலிகளின் தாக்குதல் செய்திகளை வெளியிட்டு விநியோக எண்ணிக்கையில் சாதனை படைக்கின்றன.இனிக் கலைஞர் நினைத்தாலும், தமிழக மக்களின் எழுச்சியை தடுத்திட முடியாதென்கிற சூழல் கருக்கொள்கிறது.இந்த எதிர்ப்பு போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்த கதைஎல்லாம் வரலாறாகிவிட்டது.மக்கள் எழுச்சியை, அதிகாரம் கொண்டு ஓரிரு தடவைகள் தடுக்கலாம் அல்லது நசுக்கலாம்.

ஆனாலும், அச்சக்தியை ஒன்றிணைந்து ஒருவழிப்படுத்தி, சரியான அரசியல் புரிதலோடு முன்னகர்த்திச் சென்றால் வாக்கு வேட்டைக்காரர்களும் அடிபணிந்தே தீர்வார்கள்.சிங்கள தேசம் பலவீனமடையும்போது இந்தியாவின் இராஜதந்திரம் தோல்வியுறும். அரசியல் களத்தில் பலவீனமாக இருக்கையில், எதிர்த்தளத்தில் நிற்பதும், படைவலுவில் பலமாக மாறுகையில் சார்புத்தனத்திற்கு தாவுவதும், சரியான நிலைப்பாடல்லவென்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதே புலம்பெயர் தாயக மக்களின் அவா.

- இதயச்சந்திரன் -



Comments