ஒபாமாவின் வருகை: வெளியுறவுக் கொள்கையும் ஈழத்தமிழர் விவகாரமும்?

உலக வரலாற்றில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவு நமது வார ஏட்டில் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்தது போன்று அச்சொட்டாக முற்றுப் பெற்றிருக்கின்றது. பராக் ஒபாமா ஹுசைன் உலகில் முதல் தர வல்லரசின் அதிபராக மிகப் பெரும்பான்மைப் பலத்துடன் ஜெயித்திருக்கின்றார்.

நம் நாட்டுப் பிரபல்யமான ஜாதகக்காரர் பெரேரா ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் கம்மி. அவர் வெற்றி பெறுவதற்கே வாய்ப்பில்லை என ஊடகங்களில் அடித்துச் சொல்லியிருந்தார். நண்பர் ஒருவர் ஊடாக இது தொடர்பாக அவரிடம் தொலைபேசியில் கேட்ட போது, பத்திரிகையில் ஒபாமாவின் பிறந்த நாளைப் படித்துவிட்டுத்தான் இந்தக் கணிப்பீட்டைச் செய்ததாகவும் எனவே அவரின் பிறந்த தினத்தில் ஏதேனும் குழறுபடிகள் நிகழ்ந்திருக்கலாம் எனச் சொல்லிச் சமாளித்துக்கொண்டார்.

மேலும் நாம் அறிந்த வரலாற்றுத் தகவல்களின்படி ஒட்டு மொத்த சர்வதேசச் சமூகத்தினதும் ஆசீர்வாதத்துடன் நாடொன்றின் தலைமைப் பதவிக்குத் தெரிவான முதல் மனிதரும் ஒபாமாவே என்று குறிப்பிட்டாலும் அது தவறான தகவலாக அமையமாட்டாது. ரஷ்யாவிலும் சீனாவிலும் கூட இவ்வெற்றி கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஜேர்மனி வீதிகளில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கின்றார்கள். காஷ்மீர் தொடர்பான விடயத்தையும் தான் அணுகப்போவதாக ஒபாமா தெரிவித்த கருத்தின் விளக்கம் என்னவென்று புரிந்து கொள்ளப்படாத நிலையிலும் ஒட்டு மொத்த இந்தியர்களின் உணர்வுகளும் ஒபாமாவின் பக்கமே இருந்தது.

ஜப்பானியர்கள் விருந்துண்டு மகிழ்ந்திருக்கின்றார்கள் வெற்றிச் செய்தி கேட்டு. செந்நிற லத்தீன் தலைவர்கள் ஒபாமாவுடன் எமக்கு இணங்கிப் போக முடியும் என நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அரை நூற்றாண்டுகால பகைமை முடிவிற்கு வருவதற்கான அறிகுறிகள் ஒபாமாவின் வெற்றியில் தெரிவதாக கியூபா சொல்லியிருக்கின்றது. முழு ஆபிரிக்காவுமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றது. மத்திய கிழக்கும் குதூகலிக்கின்றது.

இந்தோனேசியாவும் ,கென்யாவும் தங்கள் சொந்தப்பிள்ளையின் வெற்றியாக தேர்தல் முடிவுகளைப் பார்க்கின்றனர். ஒபாமா என்னதான் தன்னைக் கிறிஸ்தவனாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் முஸ்லிம்கள் ஒபாமாவைத் தங்களில் ஒருவனாகத்தான் நோக்குகின்றார்கள். ஆனால் ஒருபோதும் ஒபாமா ஒரு முஸ்லிம் என்ற தோரணையில் செயலாற்றவோ, தொழிற்படவோ கிஞ்சித்தேனும் முயல மாட்டார்-முயலவும் முடியாது, என்பதனை முஸ்லிம் உலகம் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் விடயத்தில் அவரின் நடுநிலைத் தன்மைகள் கூட சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும்.

நெல்சன் மண்டேலா தேர்தல் முடிவில் வெள்ளையின மக்களின் மனமாற்றம் குறித்து உணர்ச்சி வசப்படப் புகழ்ந்திருப்பதுடன், ஒபாமாவை பாதுகாத்து புதியதோர் உலகை சர்வதேச சமூகத்திற்குக் கொடுக்குமாறு அமெரிக்க மக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். கோடிக்கணக்கான மக்கள் ஒபாமாவின் வெற்றிக்காகப் பிரார்த்தனைகளைப் பண்ணியிருக்கின்றார்கள்.

தலைப்பிற்கு நேரடியாக வருவதற்கு முன்பு கடைசிக் கட்டமாக தேர்தல் தினத்திற்கு முந்திய இரவில் ஒட்டப்பட்ட ஒபாமாவுக்கெதிராக தலைமறைவுப் போஸ்டர் தொடர்பான குறிப்பொன்றையும் நமது வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும் போலிருக்கின்றது. அத்துடன் நம் நாட்டிலிருந்து தான் அந்தப் போஸ்டர் தொடர்பான ஐடியாவும் குடியரசுக் கட்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டதோ என்ற சந்தேகமும் தோன்றுகின்றது...?

பயங்கரவாதிகளின் கையாள், அந்நியன், கறுப்பன், தேசப்பற்றில்லாதவன், ஒபாமா பிளஷ் ஒசாமா, வீதியில் பாம்புத்தைலம் விற்பவன் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் முன்சொன்ன நள்ளிரவுப் போஸ்டர், அமெரிக்க மக்களுக்கு இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது. ஒபாமாவுக்குப் போடுகின்ற ஒவ்வொரு வாக்கும் ஹமாஸைச் சென்றடையும் ...! அமெரிக்கர்களே விழிப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்ற தொனியில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.நம்ம நாட்டுப் பாணியில்! இது அமெரிக்காவில் வாழ்கின்ற யூதர்கள் பார்த்த வேலை என மெக்கெய்ன் தரப்பிலிருந்த பின்னர் போஸ்டர் தொடர்பாகக் கருத்துச் சொல்லப்பட்டிருந்தது.

ஆனால், அமெரிக்கர்களோ இம்முறை ஒபாமா வழங்கப் போகின்ற மாற்றம் எமக்குக் கிடைத்தே ஆக வேண்டும் என்று ஒரு பிடி பிடித்து விட்டார்கள். ஹெலஉறுமய பாணியில் காரியம் பார்த்த நிற வெறியர்களும் இனவாதிகளும் மூக்குடைந்து போயிருக்கின்றனர்.

மாற்றம் தொடர்பாக நெடு நாளாக ஒரே தொனியில் ஒபாமா பேசி வருகின்றாரே, அப்படியானால் அவர் சொல்லுகின்ற இந்த மாற்றம் என்னவாக இருக்க முடியும் என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்போம். அமெரிக்கா உலக மக்களின் வெறுப்பிற்குரிய ஒரு நாடாக மாறியிருக்கின்றது. தொழில்நுட்ப ரீதியில் நாடுகள் அபிவிருத்தியடைவதைத் தொடர்ந்தும் அமெரிக்காவால் தடுத்து நிறுத்த முடியாது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து அவற்றின் நல்லுறவுடன்தான் நாம் எமது தலைமைத்துவத்தை உலகில் கட்டியெழுப்ப முடியும். நாடுகளையும் மக்களையும் அடக்கியொடுக்கி நாம் சமகால உலகில் எதையும் சாதிக்க முடியாது. இந்த யதார்த்தத்தை அமெரிக்கன் ஒவ்வொருவனும் புரிந்து கொள்ள வேண்டும்.

2004 ஜுலை ஜனநாயகக் கட்சிப் பேராளர் மாநாட்டில் ஒபாமா நிகழ்த்திய உரையின் சில அடிகள் இவை. இந்த உரையானது அமெரிக்க மக்கள் மத்தியில் இவரின் இமேஜை வெகுவாக உயர்த்தியதோடு, இதுவே அவரை இந்த நிலைக்குக் கொண்டு வரவும் காரணமாக அமைந்தது.

ஒபாமா சொன்னபடி ரஷ்யா தனது முதன்மை நிலையை மீண்டும் எட்டியிருக்கின்றது. சீனாவிடம் கை நீட்டுமளவிற்கு அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்து போயிருக்கின்றது. இந்தியா பாரியளவு பொருளாதார வெற்றிகளை ஈட்டி வருகின்றது.

ஈரான் அமெரிக்காவின் மிரட்டல்களை வேடிக்கையாகப் பார்க்குமளவிற்கு அதி நவீன போர்த் தளவாடங்களைச் சொந்தமாக உற்பத்தி செய்து வருகின்றது. ஐ.நா.சபையில் அண்மையில் கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை தொடர்பான பிரேரணை 184/4 என்ற விகிதத்தில் படுதோல்வி கண்டிருக்கின்றது.

இவ்வாறான பின்னணிகளுக்கு மத்தியில் தான் திடகாத்திரமாக இருந்த அமெரிக்காவை நோயாளியாக்கி ஒபாமாவின் கரங்களில் ஒப்படைக்கின்றார் அதிபர் புஷ். முன்னாள்; ரொனால்ட் ரீகனின் கவ்போய் பாணியிலான பொருளாதார நடவடிக்கைகளும், தந்தை, மகன் புஷ்களின் நடவடிக்கைகளும் தான் அமெரிக்காவின் இன்று இந்த நிலைமைகளுக்கு அடிப்படைக் காரணங்கள்.

எனவே ஒபாமாவிடமிருந்து அமெரிக்க மக்கள் நிறையவே எதிர்பார்ப்பார்கள். முதலில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகின்ற பணியில் ஒபாமா இறங்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.அது அமெரிக்காவின் உடனடித் தேவையும் கூட. இந்த நிலையில் மீண்டும் துரிதமாக வளர்ந்து வரும் பனிப் போர் காலச் சூழ் நிலை. ஈராக்,ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் பராந்தியங்களில் புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா.

தலிபான்களுக்கெதிரான போரில் இலக்குத் தவறுகின்ற தாக்குதல்கள், இழப்புக்கள், இது தொடர்பில் பாகிஸ்தானில் ஏற்பட்டு வருகின்ற மோசமான அமெரிக்க எதிர்ப்புணர்வுகள்;. தீர்க்கப்படாத பலஸ்தீனப் பிரச்சினை, ஈரான், வட கொரியா நெருக்கடிகள், ஐரோப்பாவில் நிறுவப்பட்டுள்ள ஏவுகணை மையங்கள் தொடர்பாக கடுமையான தனது எச்சரிக்கையை நேற்று ரஷ்யா விடுத்திருக்கின்றது. ஒபாமாவின் வெற்றியை வாழ்த்திய கையோடு இது விடயத்தில் ரஷ்யா கடுமையான தொளியில் பேசியிருக்கின்றது.

பலவீனப்பட்ட பொருளாதாரம் காரணமாக தனது ஸ்திரத்தன்மையில் நேச நாடுகளின் நம்பகத்தன்மை தொடர்பான சந்தேகங்களை நீக்க வேண்டிய தேவை. இதுவரை அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் எதிர்நோக்காத நெருக்கடிகள் - சுமைகள் என்பவற்றை ஒபாமாவின் தலையில் வைத்து விட்டு கடந்த எட்டு வருட காலத்தில் சாதித்தது என்னவென்று தனக்கே புரியாது சிங்கமாகப் பேசி பூனையாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகின்றார் ஜுனியர் புஷ்...! முன்பு போல் சர்வதேச விவகாரங்களில் பொலிஸ்காரன் பாணியில் இறங்குகின்ற பின்னணியோ சூழ்நிலையோ தற்போது அமெரிக்காவுக்கு பொருந்தாது. என்றாலும் அது சர்வதேச விடயங்களில் கண்களை மூடிக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கவும் முடியாது.

இந்த இடத்தில் நமது நாட்டில் நிலவுகின்ற இனப்பிரச்சினை விடயம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ந்திருப்பதை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க ஸ்தானிகர் இந்தியாவில் தெரிவித்த கருத்துகளுக்கு போர்க் கொடி பிடித்த சிலர் ஏதோ ஞானம் பிறந்தவர்களாக இது விடயத்தில் அடக்கி வாசிக்க தொடங்கி விட்டனர். தேர்தல் முடிந்த கையோடு அமெரிக்கத் தூதுவர் அமெரிக்காவின் வெளிவுறவுக் கொள்கை ஸ்திரத்தன்மையுடையது, அதில் பாரியளவில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனச் சொல்லியிருக்கின்றார். இங்கு போல் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் முன்னைய தூதுவர்களைத் திருப்பி அழைக்கின்ற சம்பிரதாயம் அமெரிக்காவில் கிடையாது என்பதனை புரிய வேண்டிய இடங்களுக்கு அவ்வுரை உணர்த்தி இருக்கலாம்.

இம்முறை அமெரிக்கத் தேர்தலில் என்றுமில்லாதவாறு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அணி திரண்டு ஒபாமாவை ஆதரித்தது மட்டுமல்லாது, அவரது வெற்றிக்கும் பங்களிப்பை பல்வேறு மட்டங்களில் வழங்கியிருந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக பராக் ஒபாமா தொழில் ரீதியில் மனித நேயத்துடன் கூடிய சட்டத்தரணியாக செயல்பட்டு வந்திருக்கின்றார். அத்துடன், சிறுபான்மையினர் துன்பங்கள், துயரங்களை அவர் அறிந்தும் அனுபவித்தும் வந்திருக்கின்றார்.

ஜோன் மெக்கெய்ன் தொலைபேசி வாழ்த்துச் செய்தியிலும் தோல்வியின் பின்னர் தனது பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகின்ற சந்தர்ப்பத்திலும் பராக் ஒபாமாவின் நிதானத்தையும் பொறுமையையும் வெகுவாகப் பாராட்டிப் பேசியிருக்கின்றார். தேர்தல் காலங்களில் ஒபாமா விமர்சிக்கப்பட்டதை மனதில் வைத்துத்தான் அவர் இப்படிப் பேசியிருக்க வேண்டும்.

எப்படியும் இனவாதத்திற்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டவனின் வழித்தோன்றல் என்ற வகையில் அதன் வேதனையையும் நோவினையும் அவரால் புரிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும்.

வெற்றி மேடையில் ஒபாமா மக்களை விளித்த போது நான் பைபிளையும் படித்திருக்கின்றேன், குர் ஆனையும் ஓதியிருக்கின்றேன் ஏன் பகவத் கீதையையும் வாசித்திருக்கின்றேன். சிறு வயதில் தந்தையுடன் பள்ளிவாயலுக்கும் போயிருக்கின்றேன்.என்னை ஆளாக்கிய தாய் வழிப்பாட்டியுடன் தேவாலயங்களுக்கும் சீனாவிலுள்ள பௌத்த விகாரைகளுக்கும் கூட நான் போய் வந்திருக்கின்றேன்.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட நான் ஆபிரஹாம் லிங்கனைப் போன்று மனித நேயத்தை மிகவும் நேசிக்கிறேன்; அமெரிக்கர்களே நாம் புதிய பாதை ஒன்றில் பிரயாணத்தைத் துவங்கியிருக்கின்றோம். தேர்தலில் எனது எதிர் முகாமில் இருந்த தேசத்து உடன் பிறப்புகளே அமெரிக்காவைக் கட்டியெழுப்பும் பணியில் உங்கள் பங்களிப்பு, ஒத்துழைப்பு இன்றி நாம் எமது இலக்குகளை எய்த முடியாது என பல இலட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில் பேசியிருக்கின்றார். மனித நேயம் தொடர்பான விடயங்களில் பேசியபடி கடமை புரிகின்ற போதும் சிறுபான்மையின உணர்வுகள் இயல்பாகவே மேலோங்குகின்ற போதும் ஈழத் தமிழர் விடயத்திலும் ஒபாமாவின் செயல்பாடுகளில் அமெரிக்காவின் முன்னைய தீர்மானங்கள் மாற்றியமைக்கப்பட நிறையவே வாய்ப்புகள் காணப்படுகின்றன.


Comments