தமிழுணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்களுடன் ஒரு பேட்டி

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் முன்னிற்பவர்களில் நடிகர் சத்தியராஜ் முக்கியமானவர். சிங்கள இனவெறி அரசின் தமிழினப் படுகொலைகளை கண்டிப்பதில் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோசம் பலரை அவரை நோக்கித்த திரும்பிப்பார்க்கச் செய்திருக்கிறது.

சத்தியராஜ் அவர்களை www.webeelam.net இணையம் மற்றும் “ஒரு பேப்பர்” சார்பில் பேட்டி காண முடிவு செய்தோம். எமது தோழர்கள் அவரை புதன்கிழமை அன்று பேட்டி காணச் சென்ற பொழுது கூட, அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றில் கலந்து விட்டுத்தான் வந்திருந்தார். ஈழத் தமிழர்களுக்காக புதுடெல்லியில் ஆர்ப்பட்டம் செய்வதற்கு இந்தியக் கம்யூனிசக் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் செல்கின்ற தொடருந்து வண்டியை கொடி அசைத்து வழி அனுப்பி விட்டு வந்து அமர்ந்தவர் உடனேயே எம்முடைய கேள்விகளுக்கு கலகலப்பாகவும் அதேவேளை ஆணித்தரமாகவும் பதில்களைக் கூறத் தொடங்கினார். இனி பேட்டி..


“பெரியார்” திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தீர்கள். தந்தை பெரியார் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. அவருடைய வீச்சு மிகப் பெரியது. ஒரு பெரும் நெருப்புப் போன்றவர் அவர். ஆனால் “பெரியார்” திரைப்படம் தந்தை பெரியாரை சரியான முறையில் வெளிக்கொணரவில்லை என்கின்ற விமர்சனம் சில பெரியாரியவாதிகளிடம் இருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “பெரியார்” திரைப்படம் பெரியாரை சரியான முறையில் வெளிக்கொணர்ந்ததா?

என்னுடைய நடிப்பு சிறப்பாக இருந்தது என்று நீங்கள் கூறியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில பெரியாரியவாதிகளுக்கு படம் பற்றி சில குறைகள் இருக்கிறது. அது உண்மைதான். படப்பிடிப்பேன் போது நான் இயக்குனருடன் கலந்து ஆலோசித்தேன். உதாரணத்திற்கு பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டத்தை வசனம் மூலமாக சொல்லியிருப்போமே தவிர காட்சி மூலமாக சொல்லவில்லை. இயக்குனர் ஞானராஜசேகரன் ஒரு காலத்தில் சென்சார் போர்ட்டில் அதிகாரியாக இருந்தவர். சென்சார் வரையறைகளுக்கு உட்பட்டு எப்படி படம் எடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும். அவர் “மோகமுள்”, “பாரதி” என்று அனைத்துப் படங்களுக்கும் விருது வாங்கியவர். ஒரு இயக்குனரின் பார்வையின்படிதான் சினிமா. தந்தை பெரியார் மிகவும் வேகமான மனிதர். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவார். ஆனால் சென்சார் சிக்கல்கள் வரும் என்பதகால் வேகமான பெரியாரை சற்று மிதப்படுத்தி விட்டோம். இயக்குனர் பார்வையில் அதுதான் சரி என்று இயக்குனர் நினைத்தார். பிள்iயார் சிலை உடைப்புப் போராட்டம், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றை வசனமாகத்தான் காட்டினோம்.

இதை விட 95 வருடம் வாழ்ந்த பெரியாருடைய வாழ்க்கையை இரண்டரை மணி நேர சினிமாவாக சுருக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. எந்தச் செய்தியும் விட்டுப் போய்விடக் கூடாது, உதாரணத்திற்கு ஆரம்பகாலத்தில் தந்தை பெரியார் “மைனராக” இருந்தார். அதையும் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பாளர்கள் “பெரியார் மைனராக இருந்ததை நீங்கள் சொல்லவில்லையே” என்று கேட்பார்கள். இதனால் அனைத்து விடயங்களையும் சொல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இருந்ததால், நிறைய விடயங்களை நாம் தொட்டு தொட்டு போக வேண்டியதாகி விட்டது. இருந்தாலும் கூட பெரியாரியவாதிகளாக இல்லாதவர்களுக்கும் பெரியார் படம் தந்தை பெரியார் மீது ஒரு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. இதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கிறேன். நீங்கள் சொன்ன குறைகள் இருந்தாலும் கூட, அந்தக் குறைகளையும் தாண்டி தந்தை பெரியாரை மூட நம்பிக்கையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்த ஒரு மிகப் பெரிய பணியை இந்தப் படம் செய்திருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறீர்கள். நடித்தது போதும் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? ஒரு பகுத்தறிவாளராகிய தங்களுக்கு சினிமாவை விட்டுவிட்டு சமூக அவலங்களுக்கு எதிரான மக்கள் பணியில் முற்றுமுழுதாக ஈடுபடுவோம் என்ற சிந்தினை ஏற்பட்டது உண்டா?

மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனை இருக்கிறது. ஆனால் சினிமாவை விட்டு விலகி வந்து அல்ல. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், நான் ஓய்வு எடுக்கும் இடமே படப்பிடிப்பு தளம்தான். பலர் சினிமா சூட்டிங் போவதை ஒரு பெரிய வேலையாக நினைப்பார்கள். ஆனால் நான் ஓய்வு எடுக்கும் இடமே அதுதான். சினிமாவை நான் விரும்பி, ஊரை விட்டு பெற்றோரிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து, பல கம்பனிகளில் கெஞ்சிக் கூத்தாடி அவ்வளவு சிரமப்பட்டு, நடிகன் ஆனேன். என்னை மாதிரி பல நடிகர்களும் இப்படித்தான். என்னால் சினிமாவை விட்டு விட்டு வர முடியாது. அது மட்டும் இல்லாமல் ஒரு நடிகனாக இருப்பதால், மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறது. சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற பொழுது அந்தக் குரல் நடிகனுடையதாக இருப்பதால் பரவலாக சென்று சேர்கிறது. அப்படி இருக்கின்ற பொழுது நடிகனாக இருப்பது ஒரு பிளஸ் பொயின்றாகத்தான் அமைகிறது. இதை விடுவதற்கு நான் விரும்பவில்லை.
அதுவும் இல்லாமல் சில நடிகர்களுக்கு வயது ஆனதன் பிற்பாடு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. என்ன வேடத்தில் நடிப்பது என்ற சிக்கல் வந்து விடும். ஆனால் சில நடிகர்கள், குறிப்பாக நடிகர் அமிதாப்பச்சனை எடுத்தீர்கள் என்றால், அவருக்கு வயது ஆக ஆகத்தான் பல வித்தியாசமான வேடங்கள் வருகின்றன. அது மாதிரி எனக்கும் வயது ஆக ஆக நல்ல வேடங்கள் வருகின்றன. உதாரணத்திற்கு இருபது வருடங்களுக்கு முன்னால் தந்தை பெரியாராக என்னால் நடித்திருக்க முடியாது. ஒன்பது ருபாய் நோட்டின் மாதவப்படையாச்சி வேடம் இருபது வருடங்களுக்கு முன்னால் போட்டிருந்தால் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. அப்பொழுதும் வேதம்புதிது பாலுத்தேவர் போன்ற வேடங்களை செய்திருந்தாலும், தற்பொழுது செய்வது போன்று முதிர்ச்சியோடு மாதவப்படையாச்சியை செய்திருக்க முடியாது. ஆகவே எனக்கு இன்னும் வயது ஆக பலவிதமான வேடங்களை செய்யக்கூடிய வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்பை வந்து ஒரு கலைஞனாக நான் இழக்க விரும்பவில்லை. ஒரு கலைஞனாக இருந்து கொண்டு சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற போது, அந்தக் குரல் பலமாக ஒலிக்கும் என்றும் நான் நம்புகிறேன்

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் எழுச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த உணர்வு நீடித்து நிற்குமா? அல்லது அரசியல் காரணிகளால் நீர்த்துப் போய் விடுமா?

நீடித்து நிற்கும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றைக்கு பல தமிழின உணர்வாளர்கள் பல உண்மைகளை வெளியில் சொல்லக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக மக்கள் மத்தியில் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக மக்களுக்கு இருக்கும் சிறு சிறு சந்தேகங்களை பல தலைவர்கள் இன்றைக்கு நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்வது என்றால் இன்றைக்கும் நான் “உண்மை” பத்திரிகையில் அதன் ஆசிரியர் வீரமணி ஐயா எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். ஈழத்தில் என்ன பிரச்சனை, ஈழ வரலாறு என்பன “உண்மை” பத்திரிகையில் தெளிவாக எழுதியிருக்கிறார். அதைப் போல தமிழின உணர்வாளர்கள் பலரும் பல மேடைகளில் பல உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வரும்போது இந்த எழுச்சி நிச்சயமாக அடங்காது என்கின்ற நம்பிக்கை எனக்கு ஆழமாக இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் நிவாரண நிதி சேகரிக்கப்படுகிறது. இது ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வு பற்றிய சிந்தனையை திசை திருப்பி விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

திசை திரும்பாது என்பது என்னுடைய நம்பிக்கை. திசை திருப்பவும் மக்கள் விட மாட்டார்கள். இன்றைக்கு எல்லா இடங்களிலும் ஒரு எழுச்சி வந்திருக்கிறது, ஒரு புரிதல் வந்திருக்கிறது. அதனால் திசை திருப்புகின்ற வேலை நடக்காது. உடனடித் தேவை என்பது இந்த நிவாரணம்தான். நிரந்தரத் தேவை போர்நிறுத்தம், அதன் பிறகு பேச்சுவார்த்தை, அதன் பிறகு தீர்வு என்று இருந்தாலும் கூட உடனடித் தேவையாக நிவாரணம் இருக்கிறது. அதனால் இந்த நிவாரணம் இந்த நேரத்தில் அத்தியாவசியமானது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

நடிகர் சங்க உண்ணாவிரதத்தின் போது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஈழப் போராட்டம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்திப் பேசினீர்கள். மிகவும் அருமையான ஒரு கருத்து அது. இந்தக் கருத்தை சொல்வதற்கு உங்களைத் தூண்டியது எது?

நான் சமீபத்தில் சில விடயங்கள் கேள்விப்பட்டேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் அவர்களுடைய கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் பொருளாதாரரீதியா ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள். அடுத்த சந்ததி பணக்கார வீட்டு பிள்ளைகளாக பிறந்து விட்டார்கள். இந்தப் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே இந்த வலி தெரியாது. அந்த வலியை நாம்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த வலியை நாம் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு அந்த வேகம் குறைந்து விடும். அந்த வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்பதால்தான் அதை நான் அங்கே சொன்னேன். தெய்வமகன் படத்தில் கூட ஒரு காட்சி வரும். அப்பா சிவாஜியும் மகன் சிவாஜியும் பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது, மகன் சிவாஜி “உங்க அப்பா ஏழை எங்க அப்பா பணக்காரன்” என்று சொல்வதாக ஒரு காட்சி வரும். அதுவும் ஞாபகத்திற்கு வந்தது.


நடிகர் சங்க உண்ணாவிரதத்தின் போது சில நடிகர்கள் தெரிவித்த குழப்பமான கருத்துகள், நடிகர் ரஜனிகாந்த் பற்றி நினைப்பது என்ன? நடிகர்களை அரசியலுக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் ரசிகர்கள், இதில் நடிகர்கள் செய்ய வேண்டியது என்ன? ஈழத் தமிழ் மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன போன்ற கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளிக்கிறார் சத்தியராஜ். பேட்டியின் தொடர்ச்சி அடுத்த வாரம் வெளிவரும்.

- வி.சபேசன்

Comments