களநிலவரமும் தமிழர்களின் கடமையும்

வன்னி மீதான சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு நகர்வு தொடர்கிறது. உண்மையில் இப்பொழுது படையினர் முக்கிய இலக்குகள், நகரங்கள் போன்றவற்றிலிருந்து ஏறக்குறைய பத்து கிலோ மீற்றர் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளனர்.

பூநகரியில் இருந்து ஏறக்குறைய எட்டுக் கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள பாலாவி என்னும் கிராமம் சிறிலங்காப் படைகளின் கைகளில் வீழ்ந்து விட்டது. அக்கராயன்குளத்தின் வடபகுதியில் தற்பொழுது சண்டை நடந்து கொண்டிருக்கின்ற பகுதி கிளிநொச்சியில் இருந்து ஏறக்குறைய பத்து கிலோமீற்றர்கள் தொலைவில் இருக்கிறது.

இதை விட முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை என்ற சிறிய கிராமத்தின் ஒரு பகுதி வரை சிறிலங்காப் படையினர் முன்னேறி இருக்கிறார்கள். இந்தக் கிராமம் முல்லைத்தீவில் இருந்து ஏறக்குறைய பதின்மூன்று கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்திருக்கிறது.

இவற்றைக் கொண்டு பார்க்கின்ற பொழுது சிறிலங்காப் படையினர் வெற்றிக்கு மிக அருகில் இருப்பது போன்று தோன்றும். சில நாட்களிலேயே சிறிலங்காப் படையினர் தமது முக்கிய இலக்குகளை அடைந்து விடுவார்கள் என்பது போன்றும் தோன்றும். ஆனால் நிலமை எப்பொழுது வேண்டுமென்றாலும் வேறு விதமாக மாறிவிடக்கூடிய நிலமைகள் இருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

படையினர் பூநகரியை சென்றடைவதற்கு வாய்ப்புகள் இருப்பது உண்மைதான். நாச்சிக்குடாவில் வைத்து விடுதலைப் புலிகளால் சில வாரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த சிறிலங்காப் படையினர், நாச்சிக்குடாவை பலத்த மோதல்களுக்கு பின்பு கைப்பற்றியதை அடுத்து, மேலும் சில குறிப்பிட்ட தூரங்கள் வரை முன்னேறி விட்டார்கள்.

நாச்சிக்குடா இலகுவி;ல் வீழ்ந்து விடும் என்றும், பல்லவராயன்கட்டில்தான் விடுதலைப் புலிகள் மறிப்புச் சமர் செய்வார்கள் என்றும் சில ஆய்வாளர்களால் எதிர்வுகூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நாச்சிக்குடாவில்தான் விடுதலைப் புலிகள் சில வாரங்கள் மறிப்புச் சமர் செய்தார்கள். நாச்சிக்குடா வீழ்ந்ததும், பாலாவி வரை படையினர் முன்னேறி விட்டார்கள்.

பல்லவராயன்கட்டில் விடுதலைப் புலிகள் மறிப்புச் சமர் செய்வார்கள் என்று எதிர்வுகூறப்பட்டதற்கு காரணம் இருக்கிறது. ஏ32 வீதியால் முன்னேறி வரும் படையினரை இரண்டு பக்கத்தாலும் தாக்குவற்கான வசதி பல்லவராயன்கட்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. அதற்கு முன்னைய இடங்களில் ஒரு பக்கம் கடலாக இருக்கிறது.

ஆனால் சிறிலங்காப் படையினர் பல்லவராயன்கட்டிற்கு கிழக்கே உள்ள பல கிராமங்களை முன்னமேயே கைப்பற்றி விட்டதால், அவர்களால் தொடர்ந்தும் முன்னேற முடிந்தது. அத்துடன் பாலாவியை கைப்பற்றியதால், பேய்முனை, வலைப்பாடு போன்ற இடங்களில் நிற்கக்கூடிய விடுதலைப் புலிகளின் அணிகளுக்கான விநியோகப் பாதைகளும் துண்டிக்கப்ட்டு விட்டன. இதை அடுத்து ஓரிரு நாட்களிலேயே பேய்முனையும், வலைப்பாடும் சிறிலங்காப் படைகளிடம் வீழ்ந்தும் விட்டன.

இப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நான்கு பெண்புலிகளை கைது செய்திருப்பதாக சொல்கிறார்கள். இவர்களை வைத்து தமது பரப்புரைகளை மேற்கொள்கிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

பாலாவி, பேய்முனை, வலைப்பாடு போன்ற இடங்களைக் கைப்பற்றியதோடு, சிறிலங்காப் படையினர் பரந்தனிலிருந்து பூநகரிக்கு செல்லும் வீதியைக் கைப்பற்ற முயன்று வருகிறார்கள். இந்த வீதியில் இருந்து ஏறக்குறைய ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் நிற்கின்ற சிறிலங்காப் படையினர் இந்த வீதியில் ஏதாவது ஒரு இடத்தில் ஊடறுப்பார்களாயின் பூநகரியும் வீழ்ந்து விடும். இந்தப் பாதையின் ஊடாக செல்லக்கூடிய விநியோகங்கள் தடைப்பட்டால், பூநகரியில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலை புலிகளுக்கு ஏற்படும்.

தற்பொழுது போகின்ற போக்கிலேயே களமுனை நகருமாயின் சிறிலங்காப் படையினர் அடுத்ததாக பெறப்போகின்ற வெற்றியாக புநகரியைக் கைப்பற்றி யாழ்குடாவிற்கான பதையை திறப்பதாக அமையும்.

அதே வேளை கிளிநொச்சி நோக்கி நகரக்கூடிய சிறிலங்காப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த சில நாட்களில் மட்டும் 150இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 300இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் வியாழக் கிழமை முறிகண்டிப் பக்கமாக கண்டிவீதியை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். அடுத்தநாள் வெள்ளிக் கிழமை வரை சண்டை நடந்தது. 45இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அக்கராயன்குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோணாவில் பகுதியை நோக்கி முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினரை வழிமறித்த விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். இந்தச் சண்டையில் 30இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 50இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தனர்.

பின்பு கடந்த புதன்கிழமை அக்கராயனிற்கு அருகில் உள்ள முட்கொம்பன் பகுதி நோக்கி படையினர் முன்னேற முயன்றனர். அந்த நடவடிக்கையும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. அதே நாள் மீண்டும் கோணாவில் நோக்கி நகர முற்பட்ட படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டைகளில் 40இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இப்படி கிளிநொச்சியை நெருங்கக் கூடிய நகர்வுகளை சிறிலங்காப் படையினர் மேற்கொள்கின்ற பொழுது விடுதலைப் புலிகள் மூர்க்கமான எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். அதே போன்று கண்டிவீதி என்று அழைக்கப்படும் ஏ9 வீதியை சிறிலங்காப் படையினர் நெருங்கி விடாத வண்ணமும் விடுதலைப் புலிகள் பார்த்துக் கொள்கின்றனர்.

பாலமோட்டை, வன்னிவிளாங்குளம், கொக்காவில் புகையிரத நிலையம், முறிகண்டியின் சில பகுதிகள் என்று சிறிலங்காப் படையினர் ஏ9 வீதிக்கு மிக அருகில் நிற்கின்ற போதும், அவர்களால் ஏ9 வீதியை பல மாதங்களாகவே நெருங்க முடியவில்லை. பாலமோட்டையில் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக படையினர் சண்டை செய்து களைத்துப் போய் நிற்கின்றனர்.

இப்படி சில முக்கிய இடங்களில் சிறிலங்காப் படையினரை முன்னேற விடாது விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருப்பதுதான், விடுதலைப் புலிகள் பலம் இழக்கவில்லை என்ற செய்தியை தமிழ் மக்களுக்கு சொல்கிறது.

இந்த நேரத்தில் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை ஒரு எச்சரிக்கையை சிறிலங்காப் படைத் தலைமைக்கு விடுத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் ஒரு பெரும் வலிந்த தாக்குதலுக்கு தயாராகி வருகிறார்கள் என்ற எச்சரிக்கைதான் அது. தற்பொழுது நடந்து வரும் சண்டைகளின் பொறுப்பு வேறு சில தளபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், களத்தில் நின்ற தளபதிகளை பிரபாகரன் முக்கிய வேலைக்காக அழைத்திருக்கிறார் என்று சிறிலங்காவின் புலனாய்வுத்துறையின் அறிக்கை சொல்கிறது.

கிளிநொச்சி நோக்கி வரும் படைகளை எதிர்கொள்ள லெப்.கேணல் வேலவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், முல்லைத்தீவுப் பகுதியில் கேணல் ஜெயம் நிலைகொண்டுள்ளார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. முல்லைத்தீவு பகுதியில் நின்றிருந்த கேணல் சொர்ணம் உள்ளே அழைக்கப்பட்டுள்ளார் என்று மேலும் அந்த அறிக்கையில் உள்ளது.

அத்துடுன் கேணல் தீபன், கேணல் பானு, கேணல் லோரன்ஸ் போன்ற தளபதிகளின் தலைமையில் ஆயிரக் கணக்கான விடுதலைப் புலிகள் ஒரு தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் அந்த அறிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சிறிலங்கா அரசை திகைப்படைய செய்துள்ளது.

இவற்றை விட கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதும் விடுதலைப் புலிகளின் புதிய அணிகள் கிழக்கை வந்தடைந்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. கிழக்கை சிறிலங்காப் படைகள் கைப்பற்றியவுடன் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் சில மாதங்களுக்கு ஓய்ந்து போயிருந்தது உண்மைதான். இதை வைத்து கிழக்கில் விடுதலைப் புலிகளே இல்லை என்று பலர் நினைத்து விட்டனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் மெது மெதுவாக கிழக்கில் ஆரம்பித்தன. தமிழீழத்திற்கு அப்பால் அம்பாந்தோட்டையில் ஆரம்பித்த தாக்குதல் பின்பு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை என்று விரிவடைந்து வருகின்றது. ஆரம்பத்தில் அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் பொறி வெடித் தாக்குதல்களை நடத்திய புலிகள், பின்பு படையினர் மீதான அதிரடித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கி, இப்பொழுது மினிமுகாம்களை தாக்குகின்ற அளவிற்கு வந்து நிற்கின்றனர்.

கிழக்கில் புலிகள் மீண்டும் பலம் பெற்று வருவதும், வடக்கில் ஆயிரக் கணக்கான விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலுக்கு தயாராகிறார்கள் என்ற செய்தியும் சிறிலங்கா அரசை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

தற்பொழுது தற்காப்புத் தாக்குதல்களை மட்டுமே நடத்தி வருவதாகவும், தமக்கு வாய்ப்பான நேரம் வரும் போது வலிந்த தாக்குதலை நடத்துவோம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார். அந்த வாய்ப்பான நேரம் என்பது சர்வதேசரீதியில் ஏற்படுகின்ற மாற்றங்களிலும் தங்கியிருக்கிறது என்பதையும் பா.நடேசன் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.

களநிலவரங்கில் மாற்றம் வரவேண்டும் என்று அங்கலாய்க்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேசரீதியில் தமிழர்களுக்கு வாய்ப்பான மாற்றம் உருவாவதற்கு உழைப்பதும் அவர்களின் முக்கிய கடமை என்பதை இதில் சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகின்றது. களத்தின் போக்கை மாற்றுகின்ற முக்கிய பங்கு உலகில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருக்கின்றது.

இந்தக் கடமையை காலம் தாழ்த்தாது செய்ய வேண்டியதே இன்று எம்முன் உள்ள தேவை.

- வி.சபேசன் (14.11.08)

Comments