ஒபாமா - உலக அரசியலில் மாற்றம் வருமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று விட்டார். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றியை ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவின் வெற்றியை உலகமே கொண்டாடுகிறது.

ஜேர்மனியில் நேற்று இரவு ஒரு பேருந்து விபத்து நடந்தது. ஓட்டுனருடன் சேர்த்து 33 பேர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. 20 பேர் உடல் கருகி மாண்டு போனார்கள். தப்பியவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாக இப்படியான ஒரு கோர விபத்து நடைபெற்றால், ஜேர்மனிய ஊடகங்கள் அல்லோலகல்லோப்படும். செய்திகள், ஆராய்ச்சிகள் என்று ஒரு வாரம் இதைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசும்.

ஆனால் ஜேர்மனியில் அனைத்து ஊடகங்களிலும் ஒபாமா சிரிக்கின்றார். செய்தி வாசிப்பவர்களும் சிரித்தபடி வாசிக்கின்றார்கள். பேருந்து விபத்தைப் பற்றிய செய்தியை இரண்டாவதாக வாசிக்கின்ற போது மட்டும் முகத்தை வருத்தமாக வைத்திருக்கிறார்கள். பின்பு மீண்டும் மலர்ந்த முகத்தோடு மறுபடியும் ஒபாமா பற்றி வேறு ஒரு செய்தியை வாசிக்கிறார்கள். இன்றைக்கு நடந்த விமான விபத்தில் தமது உள்நாட்டு அமைச்சரை பலி கொடுத்திருக்கின்ற மெக்சிக்கோவிலும் இதே நிலைமைதான் இருக்கக் கூடும்.

உலகம் ஒபாமா மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறது. உலகத்தையே மாற்றி அமைப்பதற்கு வந்த ரட்சகர் போன்று அவரை உலகம் நோக்குகிறது. ஒபாமாவை தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் உலக மக்களால் வெறுக்கப்படும் அமெரிக்காவின் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம் என்று அமெரிக்க மக்களும் நம்புகிறார்கள்.

மிகப் பெரும் நிறவெறி இருப்பதாக கருதப்பட்ட அமெரிக்காவில் ஒரு கருப்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்க மக்கள் நிற வேறுபாடுகளை கடந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரு இஸ்லாமியருக்கு பிறந்த, அமெரிக்காவின் இரண்டு எதிரிகளை நினைவுபடுத்தக் கூடிய பெயரைக் கொண்ட, கறுப்பு இனத்தை சேர்ந்த “பாரக் ஹ{சென் ஒபாமா” அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.

நிறவெறியர்களாகக் கருதப்பட்ட அமெரிக்க வெள்ளை இன மக்கள் ஒரு கறுப்பு இனத்தவரை தமது அதிபராக தேர்ந்தெடுக்கின்ற அளவிற்கு அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் வியப்புக்கு உரியது. தன்னுடைய இன மக்களையே காட்டிக் கொடுத்து, சிங்கள இனத்திற்காக அல்லும் பகலும் உழைத்த லக்ஸ்மன் கதிர்காமரை அதிகாரம் அற்ற பிரதமர் பதவிக்கு கூட வர முடியாதபடி செய்த சிங்களவர்கள் இந்த இடத்தில் தவிர்க்க முடியாதபடி நினைவுக்கு வருகிறார்கள்.

தயவு செய்து யாரும் ஒபாமா அமெரிக்க ஐனாதிபதி ஆனது போன்று ஒரு தமிழரும் சிறிலங்கா ஜனாதிபதி ஆக வேண்டும் என்று எழுதி விடாதீர்கள். முக்கியமாக ஞானி போன்ற “நடுநிலைவாதிகள்” சற்று அறிந்து எழுதுவது நல்லது. சிங்கள இயக்குனருக்கு விருது கொடுக்கும் முதலமைச்சராக பிரபாகரனை கனவு காணும் ஞானி, மேலும் கனவு காண்பதற்கு முன்பே இதை சொல்லி விட வேண்டும். சட்டப்படியும் சரி, சிங்களவர்களின் மனநிலைப்பாட்டின் படியும் சரி, ஒரு தமிழர் இலங்கையின் ஜனாதிபதி ஆக என்றைக்குமே முடியாது.

மீண்டும் ஒபாமாவிற்கு வருவோம். இந்த மனிதர் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கையில் அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். உலக மக்களும் ஒபாமா மீது பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். விடுதலைக்குப் போராடுகின்ற இனங்களும் ஒபாமா மீது ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா இங்கிலாந்திடம் இருந்த சுதந்திரம் பெறுவதற்காக ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திய நாடு. ஒரு காலத்தில் விடுதலைக்குப் போராடும் இனங்களுக்கும், நாடுகளுக்கும் ஆதரவு அளித்த நாடு. விடுதலைக்குப் போராடும் மக்களின் ஆதரவாளராக யார் இருப்பது என்பதிலும் சோவியத் யூனியனோடு அமெரிக்கா போட்டி நடத்திக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. அமெரிக்காவின் ஜனாதிபதியாக கென்னடி இருக்கும் வரை அமெரிக்காவிற்கும் விடுதலைக்கும் போராடும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கத்தான் செய்தது.

ஆனால் வியட்நாம் யுத்தம் அமெரிக்காவின் தோற்றத்தை மாற்றிப் போட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்று இஸ்ரேலின் யூத மக்கள் மீது இருந்த அனுதாபம் குறைந்து, பாலஸ்தீன மக்கள் மீது அனுதாபம் அதிகரித்ததும் அமெரிக்காவை “விடுதலைக்குப் போராடும் இனங்களின் விரோதி” என்ற நிலைக்கு தள்ளி விட்டது.

கென்னடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த யாராலும் அமெரிக்காவின் இந்தக் கெட்ட பெயரை மாற்ற முடியவில்லை. ஒபாமா அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு மாற்றத்தை தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, பால் வடியும் முகத்தோடு வந்த பில்கிளின்ரனும் மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தை மறைக்க ஈராக் மீது குண்டுதான் வீசினார்.

ஒபாமாவாவது அமெரிக்காவிற்கு கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைப்பாரா என்கின்ற கேள்வி பலருடைய மனங்களில் எழுகின்றது. துடைக்க விரும்பினாலும், அது ஒபாமாவாலும் முடியாது என்பது யதார்த்தமாக இருக்கின்றது.

உலக அரசியலில் அமெரிக்கா இரண்டு நலன்கள் சார்ந்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்கிறது. ஒன்று பொருளாதார நலன் மற்றது இராணுவ நலன். இந்த இரண்டு நலன்களையும் பேணுவதற்கு இராணுவரீதியாக தலையிடுகின்ற நிலையை புஷ் எடுத்திருந்தார். இது உலகில் பல குழப்பங்களை உருவாக்கி விட்டது. இந்த இராணுவ ரீதியான போக்கில் ஒபாமா சற்று மாறுதலை செய்யக் கூடும்.

கையாள்கின்ற கருவியை ஒபாமா மாற்றக் கூடுமே தவிர, மற்றையபடி அமெரிக்காவின் நோக்கங்களில் பெரிதான மாற்றம் ஒன்றும் வந்து விடப் போவது இல்லை.

ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு சிலவற்றை மேலோட்டமாக மட்டும் பார்ப்போம். ரஸ்யாவுடன் ஐரோப்பாவுடனும் மேலும் நெருக்கத்தை பேண விரும்புகிறார். ஈராக்கில் இருந்து படைகளை விரைவில் திரும்பி அழைப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாகச் சொல்கிறார். ஆப்கானிஸ்தான் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஐரோப்பிய நாடுகளை மேலும் பங்களிக்கச் சொல்லிக் கோருகிறார்.

அணு ஆயுத விவகாரத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றார். இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனைக்கும் ராஜதந்திர வழியைக் கையாளப் போவதாகச் சொல்கிறார். மத்திய கிழக்கில் இஸ்ரேலின் கை எப்பொழுதும் ஒங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இவைகள் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான விடயங்கள். புஷ் நடத்திய ஆட்சிக்குப் பின்பு ஜனாதியாக வருகின்ற யாருமே இவற்றைத்தான் தமது கொள்கைகளாக சொல்வார்கள். ஆனால் அமெரிக்காவை உலக அரசியலில் புதிய பாதையில் நடைபோடச் செய்கின்ற விடயங்கள் எதுவும் இவற்றில் இல்லை

அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதிகளைப் போன்று ஒபாமாவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை தவறான வழியிலேயே எதிர்கொள்ள முனைகிறார். இஸ்லாமிய தீவிரவாதத்தின் தொடக்கம் பாலஸ்தீனத்தில் இருக்கின்றது. அங்கே அமைதி திரும்பாதவரை உலகம் முழுவதும் பரவியிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதப் பிரச்சனை தீரப் போவது இல்லை. இஸ்ரேலை வழிக்குக் கொண்டு வந்து பாலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கச் செய்வதே பாலஸ்தீனப் பிரச்சனை தீர்வதற்கு உள்ள ஒரே வழி. அதை விடுத்து இஸ்லாமிய தீவிரவாதிகளை ஈராக்கிலோ, ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ தேடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆனால் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாகத்தான் ஒபாமா சொல்கிறார். தெற்காசியாவில் அமெரிக்காவின் கவனம் வலுப்பெறுவது அந்தப் பிராந்தியத்தில் விடுதலைக்குப் போராடும் இனங்களுக்கு தொல்லையாகக் கூட அமைந்து விடலாம்.

உலக அரசியலைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் எதுவும் வந்து விடப் போவது இல்லை. புஷ் செய்தது போன்று நேரடியான இராணுவ நகர்வுகளை வேறு நாடுகளை நோக்கி இப்போதைக்கு ஒபாமா செய்ய மாட்டார் என்று மட்டுமே எதிர்பார்க்கலாம். இதுதான் விடுதலைக்குப் போராடும் பல இனங்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விடயமாகவும் இருக்கிறது.

இந்த வகையில் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருக்கம் இனங்கள் ஒபாமாவிடம் இருந்து ஆதரவையும் அனுதாபத்தையும் எதிர்பார்த்து ஏமாறுவதை விடுத்து, தமது பலத்தில் தமது விடுதலையை அடைவதில் தெளிவாக இருப்பதே நன்மை பயக்கும்.

- வி.சபேசன் (05.11.08)

Comments