நீட்டிய காலை நிலையாக வைத்திருக்குமா இராணுவம்?

இழந்த இறையாண்மையை மீட்டு முன்னெடுக்கப்படும் சமரில், விதைக்கப்பட்ட மாவீரர்களை நினைவு கூரும் வாரமிது. சென்ற வருட மாவீரர் தின உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் கூறிய செய்தியொன்றை தற்போது மீட்டிப் பார்ப்பது, வருங்கால கள யதார்த்த மாற்றம் குறித்த எதிர்வு கூறலை தெளிவுபடுத்தும். ""சிங்களம் எப்போதும் எம்மைத் தவறாகவே புரிந்து கொள்கிறது.

புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும், நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் ஜெயசிக்குறுச் சமரில் கற்றறிந்திருக்கலாம்'' என அவர் குறிப்பிடுகின்றார். வன்னி மேற்கினை முழுமையாக கைப்பற்றி யிருப்பதாக அரசு பரப்புரை செய்கிறது. பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி என்பன கைப்பற்றப்பட்டு, தமது இறுதி சமரினை முல்லைத்தீவில் நிகழ்த்தப் போவதாக செய்யப்படும் உளவியல் பரப்புரையால் போருக்கு ஆதரவாக 80 வீதமான தென்னிலங்கையர் கருத்து தெரிவித்துள்ளனர். பூநகரி கைப்பற்றப்பட்டவுடன் 80 வீதமான போர் முடிவடைந்து விட்டதென இராணுவ தளபதி பிரகடனம் செய்தவுடன், தென்னிலங்கை ஆழ்மனத்தில் இறுக்கப்பட்டுள்ள மகாவம்ச மாயை ஆர்ப்பரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆகவே புலிகளின் தேசியத் தலைவர் எடுத்துரைத்த இறந்தகால போரியல் வரலாற்றுப் பதிவுகளை, இன்னமும் தென்னிலங்கை புரிந்து கொள்ளவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. 36 ஆண்டு காலமாக ஓயாது வீசும் விடுதலைப் புயலின் வீரியத்தையும், மலையான நிமிர்விற்கு பூகம்ப மாற்றத்தினை உருவாக்கும் மாவீரர்களையும் பன்முகத் தாக்குதல் எத்திசையிலும் நிகழ்த்தவல்ல படையணிகளையும் கொண்ட தமிழர் தலைமையினை வன்முறைப் பாதையில் எதிர்கொள்ளும் தென்னிலங்கை சத்தியப் பாதையின் நேரெதிர்த் திசையில் பயணிக்கிறது. இந்தியாவின் தென்பிராந்திய ஆதிக்க விரிவாக்கத்தின் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களை, வளங்களை அழித்து தமிழரை அடிமைகொள்ளல் என்கிற பேரினவாதப் போக்கிற்குப் பயன்படுத்தும் நயவஞ்சக அரசியலை தென்னிலங்கை கைக்கொள்வதாக புலிகளின் தலைவர் குறிப்பிடுவது ராடர் விவகாரத்தில் தெளிவாகத் தெரிகிறது.

தமிழக உறவுகள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள், வன்னியை சென்றடைந்து விட்டதாவென அறிந்து கொள்ள அக்கறையற்றுள்ள இந்திய அரசு, தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வு கிடைக்கப் பாடுபடுமென கனவுலக சஞ்சாரத்தில் ஈடுபடுவது முட்டாள்த்தனம். 13 ஆவது திருத்த சட்ட மூலத்தை, இனப்பிரச்சினைத் தீர்விற்கான சர்வரோக நிவாரணியாகக் காட்ட முற்படுகிறது இந்தியா. டில்லி சென்ற ரணிலுக்கும் இதையே கூறியது. பல ஆண்டுகளாக மக்களின் வரிப் பணத்தை வீணடித்த, சர்வகட்சிக் கூட்டத்தாருக்கு 13 ஆவது திருத்த சட்ட மூலமே சரியான தீர்வென்பதை கண்டுபிடிக்க இத்தனை காலம் சென்றுள்ளது.

ஆனாலும் அந்த சட்டமூலத்தை தொட்டுப் பார்க்கவும் தயாரில்லையென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்த 13 ஆவது திருத்த சட்டத்தை வைத்து இந்தியாவும் இலங்கையும் இணைந்து தமிழர்களை முட்டாள்களாக்க முயற்சிக்கிறன. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அனுசரணை வழங்கும் தகுதியையும் இழந்து விடுவார்கள் என்கிற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கில் ஜனநாயகம் துளிர்த்து, பூத்துக் குலுங்குகிறதென உலகெலாம் உணரும் வகையில் அறிக்கைவிடும் இந்திய ஆய்வாளர்கள், வரதராஜப் பெருமாளின் நிலை தனக்கும் ஏற்படலாமென அபாய சங்கு ஊதும் முதலமைச்சர் பிள்ளையானின் கதையையும் கேட்க வேண்டும்.

ஒன்றரை இலட்சம் இந்தியப் படை சூழ, புலனாய்வு பொறுப்பாளர் கேணல் ஹரிஹரனின் அறிவுரை மந்திரங்கள் காதில் இடைவிடாது ஒலிக்க, வடகிழக்கு மாகாண ஆட்சி புரிந்த பெருமாள், மடத்தடி கோயில் காணி உரிமை கூடக் கிட்டாமல், ஈழப் பிரகடனம் செய்த அவலத்தை பிள்ளையானும் எதிர்கொள்ள நேரிடலாம். வடக்கை முழுமையாகக் கைப்பற்றிய பின்னரே, 13 ஆவது திருத்த சட்ட மூலத்தை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்துமென பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல விடுக்கும் செய்தியில் அரசாங்கத்தின் அரசியல் நேர்மை துலக்கமாகத் தெரிகிறது.

சுயமாக ஒரு தீர்வினை அரசாங்கம் முன்வைக்காதென்பதை தமிழ் மக்கள் புரிந்ததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகத் தமது உண்மையான ஏக தலைமை யாரென்பதையும் அவர்களின் இறுதியான உறுதியான முடிவே தமது முடிவென்பதையும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்படுத்தினார்கள். ஆகவே அந்த நிலைப்பாட்டில் இறுக்கமாக இருப்பதுடன் இந்தியா காப்பாற்றும், அமெரிக்க கை தூக்கி விடுமென்கிற வல்லாதிக்க மயக்கங்களில் இருந்து விடுபட்டு, சிங்களப் பேரினவாதத்தின் போர் முனைப்பினை எதிர்கொள்வதே தமிழ் மக்களின் ஒற்றைத் தெரிவாக அமையப் போகிறது.சிங்களவருக்கே இலங்கை சொந்தமென்ற லெப். ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பதவிக் காலம் இன்னும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இக் கூற்று, அவரின் எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான முதல் கோடு. ஆனாலும் அமெரிக்க பிரஜை, அதிபர் ஆகலாமென்பதை சட்டவாளர்களிடம் கேட்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் யாழ். கோட்டை முற்றுகையில் சிக்கிய படையினரை, "நள்ளிரவுக் கடுகதி' (Mடிஞீணடிஞ்டt ஞுதுணீணூஞுண்ண்) நடவடிக்கை மூலம் காப்பாற்றிய சரத் பொன்சேக்கா, தன்னால் மட்டுமே புலிகளை அழிக்க முடியுமென அறுதியிட்டுக் கூறுவதில் சேவை நீடிப்பு விவகாரமும், அரசியல் உள்நோக்கமும் கலந்திருப்பதாக கணிப்பிடப்படுகிறது. இன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சியதிகார நீடிப்பிற்கு தேவையான இராணுவ வெற்றிகளை எவ்விலை கொடுத்தாவது பெற்றுக் கொடுக்க முனையும் சரத் பொன்சேக்காவின் நாற்காலி கனவு நிஜமாக வேண்டுமாயின், மீதமுள்ள 20 வீத போரையும் அவர் வெல்ல வேண்டும். ஆனாலும் பொன்சேக்கா வரைந்த வரை படத்தில் 80 வீதம் வரை ஏறுமுகமாக நகர்ந்த வெற்றிக் கோடு, முகமாலையில் கீழ் நோக்கி நகர ஆரம்பித்திருப்பதாக உறுதியான செய்திகள் கூறுகின்றன.

பூநகரிச் சந்தியிலிருந்து பரந்தன் பாதையில் நகர்ந்த படையணியொன்று காணாமல் போகடிக்கப்பட்டதாகவும் முகமாலையில் இரண்டு பற்றாலியன்கள் மாயமாய் மறைந்ததாகவும் நாம் கூறினால், விடுதலைப் புலிகளின் தோல்வியை மறைக்க சோடிக்கப்படும் பொய்யான கதைகள் இதுவெனக் கூறுவோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான மங்கள சமரவீர பத்திரிகையாளர் கூட்டத்தில் அம்பலமாக்கிய இராணுவ இழப்புக்களை ஒப்பீட்டாய்வு செய்யலாம். கடந்த ஞாயிறு அன்று ஆரம்பமாகிய முகமாலைச் சமர் இன்னமும் நீடிக்கிறது.

முன்னகரும் தாங்கிகள், வான் பரப்பில் மிக் மற்றும் யுத்த உலங்கு வானூர்திகள், வரணியிலிருந்து தொடர்ச்சியான நீண்டதூர எறிகணை வீச்சுக்கள், ஒரே மூச்சில் 52 எறிகணைகளைத் துப்பும் பாகிஸ்தான் வழங்கிய பல்குழல் எறிகணைச் செலுத்திகளின் சூட்டாதரவு, இத்தனை பலத்தோடு முன்னகர்ந்த இராணுவ இழப்பு, 900 ஐயும் தாண்டியுள்ளதாக மங்கள சமரவீர புள்ளி விபரத்தோடு கூறுகிறார். அதாவது கொழும்பிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் ஒவ்வொன்றிலும் அதன் பெயர் குறிப்பிட்டு எத்தனை இராணுவத்தினர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை துல்லியமாக கூறும் மங்கள சமரவீர, இழப்புகளை மறைத்து, தாம் வெற்றி பெறுவது போல் சிங்கள மக்களை ஏமாற்றும் இன்றைய அரசாங்கத்தை பலமாகச் சாடுகிறார்.

ஆனாலும் பூநகரி ஆக்கிரமிப்பை பூதாகரமாக்கி, பலாலிக்கு ஆபத்தில்லையென்கிற இனிப்பான செய்தியை சிங்கள மக்களுக்கு வழங்கி, தாம் போரில் மேலோங்கி நிற்பதாக கூறும் அரசு செய்தி உளவியல் பரப்புரையால் புலம்பெயர் தமிழ் மக்கள் கலக்கமடைந்தது உண்மை. ஆயினும் தேசியத் தலைமை மீது கொண்டுள்ள ஆழமான நேசிப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும், அம்மக்களை மறுபடியும் நிமிர்வு கொள்ள வைத்துள்ளது. பின்னகர்வது, வீழ்வதற்கல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். போர் நிறுத்த முறிவோடு, புலி வாலைப் பிடித்த சிங்களம் அதிக ஆளணி இழப்புக்களைச் சந்தித்தாலும் தினம் ஒரு நிலம் பிடித்தேனென்கிற செய்தியை சொன்னால் மட்டுமே பேரினவாதம் மகிழ்ச்சியடையும் என எண்ணுகிறது. முகமாலை, மாங்குளம், பூநகரியில் சந்தித்த இழப்புக்களை ஈடுசெய்ய மறுபடியும் பொதுமன்னிப்புச் சங்கு ஊதப்பட்டுள்ளது.

ஓடிப் போனதாகக் கருதப்படும் 25 ஆயிரம் படையினரில் சமர்க் களத்தில் இறந்தோர், உயிருடன் இருப்போர் எத்தனை பேர் என்பதை ஜெயசிக்குறு 2 இன் இறுதியில் கணக்கிடலாம். மங்கள சமரவீர வெளிப்படுத்தும் சில அடிப்படை உண்மைகளையாவது சிங்கள மக்கள் புரிதல் வேண்டும். தமது அரசியல் கட்டமைப்புக் குறைபாடுகளையும் பொருளாதாரச் சீரழிவுகளையும் மறைக்க, இராணுவ முனையில் இன்றைய அரசாங்கம் ஈடுபட்டு, மக்களை திசை திருப்பலாமென காய்நகர்த்துவது தவறென்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். 67 ஆயிரம் மத்தியதர தொழிற்சாலைகளை மூடியுள்ள சீன தேசம், அமெரிக்கா ஏற்படுத்திய பொருளாதாரச் சீரழிவினால் பாதிப்படைகிறது.

தனது உற்பத்திப் பொருட்களை அள்ளிக் கொடுத்து, திறைசேரியில் குவித்த அமெரிக்க டொலர் நோட்டுக்கள், குப்பைக் குவியலாக மாறி விட்டது. இனி பொருளாதார உதவி புரிந்து, பேரினவாத இராணுவ முனைப்பிற்கு முண்டு கொடுக்க சீனாவும் வராதென்பதை சிங்களம் புரிதல் வேண்டும். பொருளாதாரச் சிக்கல் உலகத்தில் கழுத்தை நெரிக்கும் நிலை நோக்கி நகர்கிறது. இன்னமும் பேரினவாதக் கனவில் யுத்தக் கட்டிலில் சயனித்துக் கொண்டிருக்கிறது சிங்கள தேசம்.

- சி.இதயச்சந்திரன்-


Comments