ஒற்றுமையை ஓதுவோருக்கு…

நண்பர்களே!

‘ நான் எதையெல்லாம்உங்களில் தொற்ற வைத்தேன்?
நீங்கள் எவற்றையெல்லாம்எடுத்துக் கொண்டீர்?’நான் அறியேன்.

இப்போதெல்லாம் உங்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் கொஞ்சம் அதிகம்தான்.

எந்தன் நினைவரங்கில் நிழல்களாய் உறைந்து கிடந்த உங்களில் பலரின் முகங்களெல்லாம் ஒளிபெற்றிருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

அதேவேளையில் உங்கள் உரையாடல்களில் நம்பிகைத் தொனி இழையோடி இருந்ததையும் நான் கவனித்தேன்.

அதனை விடவும் உங்கள் குழந்தைகள் வாஞ்சையுடன் என்னை உறவு சொல்லி அழைத்து விளக்கம் கேட்பதையும், என்னுடன் நட்பு கொள்ள விரும்புவதையும், நான் அங்கிருந்த அப்போதைய காலத்தில் தாங்களும் என்னுடன் நட்புகொள்ளும் வயதினராக இல்லையே என ஏக்கம் தெரிவித்தையும் நம் தோழமைப் பணிகளுக்கு கிடைத்த மரியாதையாகவே கருதுகின்றேன்.

அந்நாட்களில்,

‘காவிரிப் படு்கையிலும்
வைகைக் கரை நெடுகிலும்
கரிசல் மண் காட்டிலும்
என்னுடன் அலைகையில்
எதை நீர் விதைத்தீர்?’

மீளவும் ஒருதடவை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
நாம் விதைத்தது நட்பும் தோழமையும் மட்டும்தானா?

இன்றைக்கும் இத்தனை தெளிவாக எழுச்சியாக நீங்கள் ஓங்கி குரலெழுப்புவது அவற்றின் வலி்மையைத்தான் வெளிப்படுத்துகின்றது.

‘ சொல்லிக்காட்டவா நீங்கள் சோறு போட்டீர்கள்?’ என்று எனது தோழன் பாமரன் கேள்வி எழுப்பி ஈழத்தமிழர்களுக்கு உகந்தது எதுவென்றும் விளக்கம் அளிக்கிறான்.

‘தொடரும் தனிமையும் நூற்றாண்டு துயரமும்’ என்று இன்னுமொரு தோழன் பொன்னிலா தமிழ்நாட்டு அரசியல் தலைமையின் நாணயத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறான்.
ஈழப்பிரச்சனையை யாரும் திசைதிருப்பி விடமுடியாது என்பதற்கு இவைகள் சாட்சியமாகின்றன.

தமிழ்நாட்டை இனியும் எந்தக் கொம்பனாலும் ஏமாற்ற முடியாது என்ற நம்பிக்கையையும் அளிக்கின்றன.

நண்பர்களே!
உங்களுடனான உரையாடலை தொடரவே நான் விரும்புகிறேன்.
நம் நட்பை தோழமையை அறுத்துவிட வேண்டுமென்பதில் திரைமறைவு முயற்சிகள் நடைபெறுகின்றனவோ என நான் சந்தேகிக்கிறேன்.

அதற்கு தமிழ்நாட்டு அரசியல் தலைமையும் துனணபோகின்றதோ என்ற சந்தேகமும் கூடவே என்னுள் எழுவதையும் தடுக்க முடியவில்லை.

உங்களுக்கே விளக்கம் அளிக்கும் வகையில் ஈழத்தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை என்று ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒலித்த குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இதுதான் முதல் தடவை என்றால் நான் பொருட்படுத்தி இருக்க மாட்டேன். ஆனால் இதற்கு முன்னரும் இப்படி நஞ்சு தடவிய இக்குரலைக் கேட்டிருக்கிறேன்.

இதனை மேலும் அனுமதித்தால் பொய்யுரைகளும், சாணக்கிய உத்திகளும், அடுக்குமொழி அலங்காரங்களும் உண்மைபோல் ஆகிவிடும். வரலாற்றிலும் பதிவாகிவிடும்.
இப்படி வரலாறானவை பல.

இந்த குரல் கேட்டு நீங்களும் கொதித்திருப்பீர்கள்.
பின்னர் சாத்தான் ஓதும் வேதம் போன்றே ஒற்றுமை பற்றிய இவ்வகை உரைகளுக்கும் பதிலிறுக்க தேவையில்லை என்று ஒதுக்கியிருப்பீர்கள்.

எந்த நேரத்தில் எதைக்கதைப்பது என்ற நாகரிகம் தெரியாத சாணக்கியம், குயுக்தி, அரசியல் ஒரு தலைமைக்கு ஏற்றதொன்றல்ல.
வரலாறு இக்குணம் கொண்டோரை இத்தனை காலம் ஏன் வாழ்ந்தார்கள் என்றே பதிவு செய்யும்.

தமக்கான நெஞ்சுக்கு நீதியை அவரவரே எழுதிக்கொள்வர்.
நண்பர்களே!

’பருத்தி வெடித்தால் தறியினில் நெய்யலாம்
கரும்பு விளைந்தால் ஆலையில் பிழியலாம்
கம்பு பயிரானால் கூழ்காய்ச்சிக் குடிக்கலாம்
கூட்டு நினைவினில் பயிராகி வளர்ந்தவை
ஆறாத் துயரென்றால்…?
கருத்துக்கள் பற்றிக் கொள்ளும்.’

ஆம் நம் நட்பின் தோழமையின் கூட்டு நினைவுகளில் வளர்பவை பற்றி அதிகார வர்க்கத்தால், ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்திருப்பவர்களால் அறிய முடியாது.
துரோகங்களால் அவற்றை முறியடிக்கவும் முடியாது.

02.

ஒற்றுமை வேறு ஒன்றுபடுதல் வேறு.
ஒற்றுமை என்பது ஒன்றுபோல் மற்றொன்றும் இருத்தல்.
ஒன்றுபடுதல் என்பது வேற்றுமையிலும் ஒரு இலக்குக்காய் இணைதல்.
உலகில் எங்கும் எந்தச் சமூகமும் ஒற்றுமையாக இருப்பதில்லை.
அது இயங்கியலுமில்லை.

உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்றுதான் மார்க்சியம் அறைகூவல் விடுத்தது.
இந்தியாவின் சிந்தனையாளர் அம்பேத்காரும் ‘ஒன்றுபடு கற்பி போராடு’ என்றே முழக்கமிட்டார்.

ஒன்றுபடுதல் என்பதுதான் சாத்தியமானது.

ஈழப்போராட்டத்தின் கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றுபட்டே முன்வைக்கப்பட்ட வரலாற்றை சிலர் தம்வசதிக்காக மறைத்து விடுகின்றனர்.

பிரித்தானிய சட்டவாளர் சோல்பரியின் அரசியல் யாப்புத்தான் 1948ல் இருந்து 1972 வரையில் இலங்கையில் அமுலில் இருந்தது.

1972 மே 22ல் கொல்வின் ஆர்டிசில்வா வரைந்த புதிய அரசியல் யாப்பு பிரகடனம் செய்பப்பட்டது.

இவர் இலங்கையின் புகழ்மிக்க இடதுசாரித் தலைவர் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
இப்படி பல இடதுசாரித் தலைவர்கள் இனவாத அலையால் அள்ளுண்டு போனதும ஒரு சோகக் கதைதான்.

இந்த அரசியல் யாப்பு ஈழத்தமிழரின் அரசியல் அவாவினை உள்வாங்காத ஐனநாயக விரோதமான யாப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது அதனை பெரும்பான்மையோரின் சர்வாதிகாரம் என்றால் மிகையில்லை.
சிறிலங்கா குடியரசென பிரகடனம் செய்த அந்த அரசியல் யாப்பினை வரைவதற்கு கொல்வின்ஆர்டி சில்வாவின் தலைமையிலான அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்ட்டிருந்தது.
அதில் ஈழத்தமிழர்களின் ஒன்றுபட்ட குறைந்தபட்டச அரசியல் அவாவான ஆறு வரைவுகள் கொண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன.

இந்த ஆறினையும் கோரிக்கைகளாக வரைந்து அரசியல் நிர்ணய சபையில் முன்வைத்தது தமிழர் ஐக்கிய முன்ணியாகும்.

தமிழர் ஐக்கிய முன்னணி என்பது சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி (இலங்கை இணைப்பாட்சிக் கட்சி என்பதே அதன் பதிவுப் பெயர்), ஜீ.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான இலங்கைத் தமிழ்காங்கிரஸ், செளமியமூர்த்தி தொண்டமான தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவையாகும்.

(பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் தேயிலை, இறப்பர் போன்ற பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகாக தமிழ்நாட்டில் இருந்து ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மக்களினை அங்கத்தவர்களாக கொண்ட தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சங்கம்)

தமிழர் ஐக்கிய முன்னணி என்று ஒன்றுபட்டு வரைந்த அந்த ஆறு அம்சக் கோரிக்கைகளை ஒருதடவை படித்துப் பாருங்கள்:

அ). அரசியல் சாசனத்தில் சிங்களமொழிக்கு வழங்கப்படும் இடத்திற்கு சமானமாக தமிழ்மொழிக்கும் இடமளித்தல்.

(a) The Tamil Language should be given the same status in the Constitution as the Sinhala Language.

ஆ). இந்தநாட்டினை வாழ்விடமாக கொண்ட சகல தமிழ்பேசும் மக்களும் முழுமையான குடியுரிமை உடையவர் என்பதனை அரசியல் சாசனத்தினூடாக உறுதிப்படுத்தல். இலங்கையின் குடிமக்களுக்கிடையில் எந்தவிதமான குடியுரிமைத் தரவேறுபாடுகளோ பாரபட்சங்களோ காட்டப்படக்கூடாது என்பதுடன் மக்களின் குடியுரிமையினை பறிப்பதற்கான அதிகாரவலு அரசாங்கத்திற்கு வழங்கப்படககூடாது.

(b) There should be constitutional guarantee of full citizenship rights to all Tamil-speaking people who have made this country their home. There should be no different categories of citizens and no discrimination between them, and also no power to the state to deprive citizen of his citizenship.

இ). அரசு மதசார்பற்றதாக இருப்பதுடன் எல்லா மதங்களினையும் சமமாக பாதுகாக்ககூடியதாக இருக்கவேண்டும்.

(c) The state shall be secular, while equal protection is afforded to all religions.

ஈ). அரசியல் சாசனத்தினூடாக உத்தரவாதப்படுத்தப்படும் அடிப்படை உரிமைகள் சகல மக்களினையும் அவர்களின் இனக்கலாசார அடையாளங்களுக்கு அப்பால் சமமானவர்களாக உறுதிப்படுத்தவேண்டும்.

(d) The Constitution should provide for valid fundamental rights guaranteeing the equality of all persons on ethnocultural grounds.

உ). அரசியல் சாசனத்தினூடாக சாதியமும் தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும்.

(e) The Constitution shall provide for the abolition of caste and untouchabilitty.

ஊ). சனநாயக பண்புகொண்ட சமவுடமைச் சமுதாயத்தில் அதிகாரம் அரசிடமல்லாமல் மக்களிடம் இருப்பதனை பன்முகப்படுத்தப்பட்ட அரசாங்ககட்டமைப்பின் ஊடாக உறுதிப்படுத்துதல்.

(f) In a democratic and socialist society, a decentralized structure of government alone will make it possible for a participatory democracy where power will be peoples power rather than state power.

ஈழத்தமிழரின் மிகக்குறைந்த அவாவினை கொண்ட அரசியல் நாகரிகமான கோரிக்கைகளே நிராகரிக்கப்பட்டபோது ஈழத்தமிழரின் பிரதிநிதிகள் அரசியல் நிர்ணயசபையில் இருந்து வெளியேறினர்.

புதிய அரசியல் அமைப்பு பிரகடனம் செய்யப்பட்ட நாளான 1972 மே 22ஐ கறுப்புநாளாக துக்கநாளாக பிரகடனம் செய்தனர்.

இது ஈழத்தமிழர்களின் ஒன்றுபட்ட குரல் அல்லாமல் வேறென்ன?

இன்றைய இன்னல்கள் துன்பங்களுக்கு காரணமான சிறிலங்கா குடியரசு யாப்பினை வரைந்த அதே கொல்வின் ஆர்டி சில்வா 1992 ல் கூறியதுதான் இன்னும் வேடிக்கையானது.
‘நாட்டில் ஏற்பட்டிருக்கும் இன்றைய அபாய நிலையிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவும், ஐக்கியத்தை உறுதி செய்யவும் இணைப்பாட்சியே சிறந்த வழி என்பதை உறுதியாகச் சொல்வேன். சிறுசிறு இராச்சியங்கள் இணைப்பாட்சி மூலம் ஐக்கியமாகவும் பலமாகவும் இருப்பதை வரலாறு உறுதி செய்கின்றது’.

கண்கெட்ட பிறகான சூரிய வணக்கம் எனலாமா இதனை?

இந்த கொல்வின் ஆர்டி சில்வாதான் ‘ஒரு மொழியானால் இருநாடு, இரு மொழியானால் ஒரு நாடு’ என 1956ல் தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்கு வந்தபோது முழக்கமிட்டவர்.
அது தனிக்கதை. அவரின் கதையல்ல இங்கு முக்கியம்.

ஒன்றுபட்ட ஈழத்தமிழரின் குரல் எப்படி ஒலித்தது என்பதே முக்கியமானது.



03.

திம்புப் பிரகடனம் உங்களுக்கு நினைவிருக்கும்.

1985ல் இரண்டு கட்டங்களாக (யூலை, ஆகஸ்ட் மாதங்களில்) பூட்டான் தலைநகர் திம்புவில் ஈழப்போராளிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவைவார்த்தையில் ஈழப்போராளிகளால் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கைகள்தான் திம்புப் பிரகடனம் எனப்படுகின்றது.

இதில் ஈழப்போராளிகள் என்பது ஈழத்தேசிய விடுதலை முன்னணி (தமிழிழ விடுதலைப் புலிகள், ஈழப் புரட்சி அமைப்பு, ஈழப் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம்) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்னும் ஈழப்போராட்ட இயக்கங்களும் அரசியல் கட்சிகள் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியுமாகும்.

ஈழத்தமிழர்களின் அரசியல் அவாவினை அனைத்துலக அரங்கில் வெளிப்டுத்த வேண்டிய நேரம் வந்தபோது இவ்வகையில் ஈழத்தமிழர் தலைமைகள் ஒன்றிணைந்துதான் நாலு அம்ச கோரிக்கையை வடிவமைத்தனர்.

01.ஈழத்தமிழ் மக்கள் ஒரு தனித்துமான தேசிய இனம். -தேசியம்
02.ஈழத்தமிழ் மக்களுக்கு தனித்துவமான வாழ்விடம் உண்டு -தாயகம்.
03.ஈழத்தமிழர் தங்கள் அரசியல் எதிர்காலத்தினை தீர்மானிப்பதற்கான முழுமையான சுய நிர்ணய உரிமை அவர்களுக்கு உண்டு -சுயநிர்ணயம்
04.ஈழத்தமிழ் மக்கள் சகலரும் தங்களுக்கிடையில் சமமானவர்கள் எனபதுடன் முழுமையான குடியுரிமை கொண்டவர்கள்.


இக்கோட்பாடுகளில் இருந்து விலகாதவர் எவராயினும் அவர்கள் ஈழப்போராட்டத்தில் ஒன்றுபட்டவர்களே.

இப்பிரகடனங்களில் இருந்து இன்றைக்கும் யாரும் விலகிச் செல்ல முடியாது.
ஏனெனில் இவை 77ல் வாக்களித்த மக்கள் ஆணையால் பெறப்பட்டவையாகும்.
அதாவது 77ம் ஆண்டு இலங்கைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தேர்தல் அறிக்கையின் முன்மொழிவு கீழ்வரும் வாசகங்களாலானது.

“The Tamil Nation must take the decision to establish its sovereignty in its homeland on the basis of its right to self-determination. The only way to announce this decision to the Sinhalese government and to the world is to vote for the Tamil United Liberation Front. The Tamil speaking representative who get elected through these votes, while being members of the National State Assembly of Ceylon, will also form themselves into the “NATIONAL ASSEMBLY OF TAMIL EELAM” which will draft a constitution for the State of Tamil Eelam and to establish the independence of the Tamil Eelam by bringing that constitution into operation either by peaceful means or by direct action or struggle.”

‘தமிழ்த்தேசிய இனம் தான் கொண்டுள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இறைமையுடன் கூடிய தாயகத்தினை கட்டியெழுப்புவதற்கான தீர்மானத்தினை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இந்த முடிவினை சிங்கள ஆட்சியாளர்களுக்கும் உலகிற்கும் எடுத்துரைக்ககூடிய ஒரேவழி தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு உங்கள் வாக்குகளினை அளிப்பதுதான். உங்கள் வாக்குகளின் முலம் தெரிந்தெடுக்கப்படும் தமிழ்பேசும் பிரதிநிதிகள் இலங்கைத் தேசிய அரசுப்பேரவையில் அங்கத்தவராக இருக்கும் அதேவேளையில் தாங்கள் சகலருமிணைந்து தமிழீழத்திற்கான தேசியபேரவையினை உருவாக்கி தமிழீழத்திற்காக அரசியல்சாசனத்தினை வரைவதுடன் அவ் அரசியல்சாசனத்தின் அடிப்படையில் தமிழீழத்தினை கட்டியெழுப்புவதற்கு தேவையான செயற்பாடுகளினை சமாதான வழிமுறையின் முலமோ அல்லது நேரடியான போராட்ட செயற்பாடுகள் முலமோ முன்னெடுப்பர்.’

இதற்குத்தான் 80வீதமான ஈழத்தமிழர்கள் வாக்களித்து அதனை மக்கள் ஆணையாக மாற்றினர்.
ஆனால் இவற்றை ஏற்காதவர்களையம் இணைத்தல்தான் ஒற்றுமை என்று கதையளப்பவர்கள் வேறு யாருக்கோ சேவகம் செய்கிறார்கள்.
சொற்சிலம்பம் ஆடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒன்றுபட்டு எழுந்த குரலை உடைத்துவிட்டு ஒற்றுமை பற்றி ஓதுகிறார்கள்.
நண்பர்களே இதனை, இவர்களைப் புரிந்து கொள்வதில் நமக்கிடையே ஏதும் இடப்பாடு இருக்குமா என்ன.

ஏன் இன்றைக்கு சிறிலங்கா பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரதிநிகளாக உள்ள தமித்தேசிய கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கூட்டுத்தானே.

அதில் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழப் புரட்சிகர விடுதலை முன்னணி, சுயாட்சிக்கழகம் என்பனவெல்லாம்தானே இணைந்துள்ளன.

அந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரை சந்திக்க எடுத்த முயற்சியின் போது தமிழ்நாட்டு ஆட்சித் தலைமை காட்டிய ஒற்றுமை ஊர் அறிந்தது.
நண்பர்களே அவ்வேளையில் நாம் எத்தகைய வேதனைக்கு உள்ளானோம்?

இவர்களின் ஒற்றுமை பற்றிய குதர்க்கங்களுக்கு பின்னால் சமரசங்களும், அரைகுறைத் தீர்வுகளும்கூட ஒளிந்துள்ளன.
நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

04.

‘வங்கம் தந்த பாடம்’ என்றதுடன் வங்தேச விடுதலைக்கு இந்திய அரசு வழங்கிய பங்களிப்பு என்றே பலரும் அர்த்தம் கொள்வதுண்டு.

திருமதி.இந்திராகாந்தி பிரதமராக இருந்த வேளையில் 1971ல் இநதியத் தலையீடாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் ‘பங்களாதேஷ்’ என்னும் ஒரு தேசம் உதயமாகியது.

இந்த ‘பங்களாதேஷ்’ என்னும் தேச உருவாக்கம் ஈழ விடுதலை போராட்ட முகிழ்ப்பின் போது உத்வேகம் அளித்த காரணிகளில் ஒன்று என்பது மறுக்க முடியாதது.

ஆனால் வங்கம் தந்த பாடம் என்பது ஒருதேச உருவாக்கத்திற்கு உதவியது என்பதை விடவும் வங்கதேச விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடிய முக்தி பாஹினி இயக்கத்தை இந்திய அரசு அழித்த கதைதான் என்பது பலரும் அறியாததாகும்.

இந்த பட்டறிவை ஈழப்போராட்டம் தன்கூட்டு நினைவில் பதித்து வைத்திருந்தது.
அந்த பட்டறிவின் உத்வேகம்தான் 87ல் இந்திய அமைதிப்டை என்ற போர்வையிலான ஆக்கிரமிப்பு படையை எதிர்கொள்ள வைத்தது விரட்டி அடித்தது என்றால் மிகையில்லை.
83ல் இலங்கை தீவில் நிகழ்ந்த வன்கொடுமைகளுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் இந்திய அரசிடம் ஆதரவினைக் கோரியிருந்தனர்.

83ம் ஆண்டு இலங்கை வன்கொடுமை கண்டு உலகமே அதிர்ந்து போயிருந்தது.
அவ்வேளையில் நண்பர்களே நாமும் இணைந்தே அந்த கோரிக்கையை முன்னெடுத்திருந்தோம்.
உலகம் அறிய குரல் கொடுத்தோம்.

‘ஈழம் எங்களின் தாகம்
எரிந்து போயிற்று எங்களின் நாடு
அழிந்து போயின எங்கள் முகங்கள்
எஞ்சியிருப்பவை கரங்கள் மட்டுமே
கரங்களுக்கு இப்போது உதவிகள் தேவை’

என்று 83ல் நாம் தயாரித்த அந்த சுவரொட்டி வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன.
நாம் ஒருவர் தோளில் ஒருவர் ஏறிநின்று சென்னை நகரெங்கும் சுவரொட்டி ஒட்டியதை எப்படி மறப்பது?

ஆம். ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற பிரதிநிதிகளும், தமிழ்நாட்டுத் தலைவர்களும் மக்களும் இணைந்தே குரல் எழுப்பினர்.

இநதிய அரசு ஈழத்தமிழர்களுக்கான அரசியல் நியாயத்தை வழங்க உதவும் என்றே பலரும் நம்பியிருந்தனர்.

இந்திய அரசு இராணுவப் பயிற்சியை ஈழப்போராளிகளுக்கு வழங்கி இருந்தது.
இது எல்லாரும் அறிந்ததே.

ஆனால் வழங்கப்பட்ட பயிற்சி ஈழப்போராட்டத்திற்கு அல்லாமல் இந்திய ஆளும் வர்க்க நலன்களின் பொம்மலாட்டத்திற்கானது என்பதை அறிய ஈழப்போராளிகளுக்கு அதிக காலம் எடுக்கவில்லை.

இப்பொம்மலாட்ட சூழ்ச்சிக்கு துணைபோனதுடன் சூத்திரதாரியாய் செயல்பட்டவர், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான இணைப்பாட்சியையும், அறவழிப்போராட்டத்தையும் வலியுறுத்திப் போராடிய தந்தை செல்வாவின் தனையன் என்பதுதான் வரலாற்றின் முரண்நகை.


இன்றைக்கும் அந்த தனையன் வீணீர் வழிய நாக்கை தொங்கபோட்டபடி இந்திய ஆளும் வர்க்கத்தின் சூழ்சிகளின் வெற்றியில் தனது பங்கான எலும்புத் துண்டுக்காக காத்திருக்கிறான் என்பதும் ஆச்சரியம் தரவல்லது.

இநதிய ஆளும் வர்க்கத்தின் உள்நோக்கம் புரிந்தபோது அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகளின் கையோங்கவிடாது தடுக்க வேண்டியது ஈழப்போராளிகளுக்கு தவிர்க்க முடியாததாகியது.

வங்கதேசத்தில் ஆயுதம் தாங்கிய முக்தி பாஹினிகள் ஏமாந்தனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் போராளிகள் ஏமாறவில்லை.

இந்திய ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிகள் பல முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன.
ஈழப்போராட்டத்தின் வீரியத்தை, ஓர்மத்தை சிதைத்துவிட வேண்டுமென்ற இவர்களின் முயற்சிகள் விக்கிரமாதித்தன் கதைபோன்று முடிவற்றவாறே நீள்கின்றன.

ஆனால் சிறிலங்கா அரசு இந்தியாவை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதையோ அல்லது இந்திய பாதுகாப்புக்கு யார் அச்சுறுத்தலாளர்களோ அவர்களுடன் உறவை வலுப்படுத்துவதையோ பற்றிய கவலையின்றி இந்திய ஆளும் வர்க்கம் இருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது.

இது குறித்து ஈழத்தின் புகழ்மிக்க அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய
‘தனது விரலால் தனது கண்ணையே குத்திக்கொள்கின்றதா இந்தியா’ என்னும் ஆய்வு விரிவான புரிதலை உங்களுக்கு அளிக்கும் என்றே நம்புகிறேன்.

05.

இன்னுமொரு விந்தையான கதையும் இணைய வெளியிலும் காற்றலையிலும் உலா வருகின்றது.

உங்கள் காதுகளிலும் விழுந்திருக்கும்.
‘கிடைக்கிறதை பெற்றுக்கொண்டு மற்றதற்கு போராடுவது.’
‘கிடைப்பதை தள்ளிவிடுவது முட்டாள்தனம்.’
இவையிலும் நஞ்சுதான் தடவப்பட்டிருக்கின்றது.

அதாவது அரைகுறைத்தீர்வை முதலில் ஏற்றுக்கொள்ளுமாறு நயமாக இவர்கள் கூற முயல்கின்றனர்.

அதற்கு ஏராளமான சான்றுகளையும் அடுக்க முனைகின்றர்.
ஆம் இச்சொற்களை உதிர்ப்போர் மக்கள் ஆணையை மறந்துவிடுங்கள் என்றே உபதேசம் செய்கின்றனர்.

அத்துடன் இவர்கள் 1919ம் ஆண்டிலிருந்து 1985ம் ஆண்டுத் திம்பு பிரகடனம் வரையான ஏழு பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள் பற்றியும், அவை முறிவடைந்த கதைகளையும் மூடி மறைக்க முயல்கின்றனர்.

ஒன்றுபட்ட குரலில் ஈழத்தமிழர் எவற்றை முன்வைததனர் என்று மேலே நான் குறிபப்பிட்டிருக்கிறேன் அல்லவா. அவற்றை மறுவழமாக யோசிப்பீர்களாயின் எந்தளவு குறைந்த அளவான கோரிக்கையில் இருந்து திம்பு பிரகடனங்களுக்கு வந்தடைந்தார்கள் என்ற செய்தியும் உள்ளடங்கி இருப்பதையும் கவனிப்பீர்கள்.

ஆறுகள் பின்னோக்கி பாய்வதில்லை நண்பர்களே!
அவற்றின் விபரங்களை முடிந்தால் இன்னொரு உரையாடலில் நான் தெரிவிக்கிறேன்.

நட்புடனும்
தோழமையுடனும்
கி.பி.அரவிந்தன்.
17-11-2008


Comments