சிறிலங்காவுக்குக் கடந்து சென்ற 'கறுப்புச் செவ்வாய்'


தமிழீழம்;' என்னும் சொல் தற்பொழுது வன்னியின் காலவோட்டத்தில் தங்கியுள்ளது. வன்னி தற்பொழுது பெரும்போர் முன்னரங்காக மாறிவருகி ன்றது. வன்னியை சிறிலங்காத் தரப்பு மட்டுமின்றி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அனைத்துத் தரப்புமே தமது கண்;களையும், காதுகளையும் கூர்மையாக்கிக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை சிறிலங்கா இராணுவத்திற்குக் 'கறுப்புச் செவ்வாய்" என்று கூறுமளவிற்கு போரானது தீவிரம் பெற்றிருந்தது.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையாக சிறிலங்காப் படையினர் ஐந்து முனைகளிலான முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதில் முதலாவது நடவடிக்கையானது கிளாலிப் பகுதியிலுள்ள படையினராலும் ஏனையவை கிளிநொச்சி நகரைச் சூழவுள்ள முறுகண்டி, புதுமுறிப்பு மற்றும் அடம்பன், புலிக்குளம் பகுதிகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் மூலம் கிளிநொச்சிப் பகுதிக்கு அப்பாலுள்ள படையினர் முன்நகர்ந்து வருவதுடன், கிளாலிப் பகுதியிலுள்ள படையினரும் பரந்தன் ஊடாக முன்னேறி கிளிநொச்சியைக் கைப்பற்றுவதாக அமைந்திருந்தது.இவ்வாறே படை உயரதிகாரிகளால் நன்கு திட்டமிடப்பட்டு காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் இந்த நடவடிக்கைகள் எதுவும் சிறிலங்காப் படையினருக்கும், சிறிலங்கா அரசுக்கும் நன்மை அளித்திருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது.

சிறிலங்காப் படைத்தரப்பு மேற்கொண்டிருந்த இந்த ஐந்து முனைகளிலான முன்நகர்வு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். இதில் படையினர் விடுதலைப் புலிகளின் எதிர் தாக்குதலை மிகக் கடுமையாகச் சந்திந்திருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமையும் இங்கு நோக்கத்தக்க விடயமாகும். கடந் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்;பித்து இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் முன்நகர்வு நடவடிக்கைகளுக்கெல்லாம் விடுதலைப் புலிகள் தற்காப்பு போரை நடத்தி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். எனினும் இவ்வாறான காப்பு யுத்தத்தில் கூட சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளிடமிருந்து பாரியளவிலான எதிர்ப்பையும் தீவிரத்தையும் எதிர்கொண்டே வந்தனர் என்பதும், இதனைக் கொழும்பு ஊடகங்கள் வெளியிட்ட அதேவேளை அவற்றைப் படைத்தரப்பும் ஒப்புக்கொண்டு ள்ளமையும் கண்கூடானதே.இவ்வாறான சூழ்நிலையில் தான் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி தொடக்கம் வன்னிக்களம் அதிர்ந்த வண்ணமேயுள்ளது. அதிலும் சிறிலங்காப் படைத்தரப்பு கடந்த சில மாதங்களில் சந்தித்த இழப்பைவிட இன்றைய, சில நாட்களில் அதாவது நான்கு அல்லது ஐந்து நாட்களில் எதிர்கொண்ட இழப்பானது மிக மிகப் பேரிழப்பானது என்றே கூறலாம்.

கடந்த டிசம்பர் 16, அன்று நடைபெற்ற மோதலில் 100 ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 250 ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தும் இருந்தனர். அதனைவிட ஏராளமான ஆயுத தளபாடங்களையும் களமுனைகளில் விட்டு விட்டு ஓடும் நிலை சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனைச் சிறிலங்காத் தரப்பு வழமை போலவே இழப்புக்களைக் குறைத்து வெளியிட்டிருந்தது. இதன்படி 25 படையினர் கொல்லப்பட்டதாகவும் 40 படையினர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், விடுதலைப் புலிகள் மோதலில் கொல்லப்பட்ட படையினரின் 39 சடலங்களைக் கைப்பற்றி அவற்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்திருந்தனர். இதன்மூலம் சிறிலங்காப் படைத் தரப்பினரதும் குறிப்பாக மகிநித அரசினதும், அவரது ஊடகங்களினதும் பொய்முகம் உலகிற்கும் வன்னி மக்களுக்கும் வெட்ட வெளிச்சமாகத் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 17 ஆம் திகதி காலை படையினர் கிளிநொச்சி நோக்கியதான மீண்டும் ஒரு படை நடவடிக்கையைச் செய்தனர். இது புதுமுறிப்பு பகுதி ஊடான நகர்வாக அமைந்திருந்தது. இதிலும் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாத படையினர் பின்வாங்கிச் சென்றனர். இதிலும் படையினருக்கு பாரிய உயிரிழப்புக்களும், உடமை மற்றும் ஆயுத இழப்புக்களும் ஏற்பட்டிருந்தன. இதேவேளை முறிகண்டிப் பகுதியிலுள்ள இராணு வத்தினர் எவ்வித இழப்புக்களையும் சந்திக்காமலேயே இரண்டு கிலோமீற்றர்கள் வரை முன் நகர்ந்து இரணைமடுவிற்கு அண்மையாக நிலைகொண்டிருந்தனர். இரண்டு நாட்கள் வரை தாம் இரணைமடுவைக் கைப்பற்றிவிட்டதாகத் துள்ளிக்கொண்டிருந்த இராணுவத்தினருக்கு டிசம்பர் 20 ஆம் திகதி விடுதலைப் புலிகள் தக்க பதிலடியைக் கொடுத்திருக்கின்றனர். இதில் எதிர்ப்பை சமாளிக்க முடியாதவாறு படையினர் பின்வாங்கி ஓடியுள்ளனர். இதில் 50 ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்ட அதேவேளை 100 ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். இதில் 12 படையினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. ஆகவே இந்த நடவடிக்கைகள் சிறிலங்காப் படைத்தரப்பின் உயர்மட்ட அதிகாரிகளால் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும் இதில் படையினர் எதிர்கொண்ட தாக்குதல் எதிர்ப்பு மற்றும் உயிர்ச்சேதம் என்பன மிக அதிகளவாகவே இருக்கின்றது.

அதேவேளை இதில் எந்தவிதமான முன்னேற்றங்களையோ, நன்மைகளையோ அவர்கள் பெற்றிருக்கவில்லை.எனவே தற்போதைய வன்னி நிலைமையைக் கவனிக்கும் போது போரானது இறுதிக் கட்டத்தை பெற்றுவிட்டதாகச் சிலர் கருதக்கூடும். எனினும் போரின் வலுவானது விடுதலைப் புலிகளின் பக்கம் அதிகளவில் இருக்கின்ற போதும் விடுதலைப் புலிகள் இதுவரை வலிந்த தாக்குதல்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றொரு விடயமும் மறைந்திருக்கின்றது. சிறிலங்காப் படையினர் வன்னிப் பகுதிகளை கைப்பற்றும் நோக்குடன் இதுவரை மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளுக்கு எதிராக முறியடிப்புத் தாக்குதல்களையே புலிகள் நடாத்தி வருகின்றனர். நான்காம் கட்ட ஈழப்போரைச் சிறிலங்கா இராணுவம் 11.08.2006 அன்று முகமாலையில் ஆரம்பித்தது தொடக்கம் மன்னார், மணலாறு என விரிந்து இன்று வன்னியில் நடைபெற்ற அனைத்து மோதல்களிலும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலையே மேற்கொண்டிருந்தனர். எனவே, இதனை நோக்கும் போது, இராணுவ தரப்பினது முன்னணி நிலைகளைச் சிதைத்து அவர்களை மீண்டும் போரியலில் வளர்ச்சியடையா வண்ணம் அவர்களின் வலுவைக் குறைப்பதே புலிகளின் நோக்கமாகக் இருக்கலாம் என்று கூடக் கருத முடியும்.

இதன்படி கருதும் போது, புலிகள் வலிந்த தாக்குதலைச் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் புலிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளை முறியடிப்பதன் மூலமாகவே அவர்களின் முன்னணி நிலைகளைச் சிதைக்கவும், உளவுரணை பாதிப்படையச் செய்யவும் போதுமானவையாக இருக்கின்றது. எனவே மேற்கொண்ட நடவடிக்கைகளை புலிகள் செய்யாமல் இருப்பதற்கு இது ஒரு காரணமாகக் கூட அமைகின்றது.கடந்த வாரம் முற்பகுதி தொடக்கம் சில நாட்கள் வரை தொடர்ச்சியாக நடைபெற்ற முறியடிப்புத் தாக்குதல்களில் புலிகளின் இந்த நிலைப்பாடு முற்றுமுழுதாக வெற்றி பெற்றது என்றே கூறலாம். இத்தாக்குதல்களில் புலிகள் கைப்பற்றிய ஆயுத தளபாடங்களானது இதுவரை புலிகளுக்கு ஏற்பட்ட ஆயத தளபாட இழப்புக்களை ஈடுசெய்வனவாக அமைந்துள்ளதாக வன்னிக் களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களின் 'தமிழீழம்" என்னும் கருவூலமாக இருக்கின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகியவற்றை தாம் கைப்பற்றுவோம் என எண்ணி இன்னும் இன்னும் திட்டங்களும், ஆயுத தளபாடங்களும் தயாராகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் சிறிலங்கா அரசாங்கமும், இராணுவத் தளபதியும் சொன்ன, சொல்லிக் கொண்டிருக்கின்ற கால எல்லைகள் அனைத்தும் முடிவடைந்து புதிதாக அடுத்த ஆண்டு பிறக்கப் போகின்ற நிலையில் "மகிந்தவின் போரானது 2009 ற்கும்.................." என்பதே தற்போதைய நிலையாக இருக்கின்றது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் எவ்வளவு தூரம் வேடிக்கை பார்க்கப் போகின்றது.ஆனால் தமிழ் மக்களின் "தமிழீழம்" என்னும் நாடு மலருகின்ற காலம் மிக விரைவிலேயே இருக்கின்றது என்பதை தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் மீண்டும் மீண்டும் உலகத்திற்கும், சிறிலங்காத் தரப்பிற்கும் வலியுறுத்தி வருகின்ற போதிலும், அவர்கள் அதனை உணர்ந்து கொள்ளாமையாலும், அலட்சியப் படுத்துகின்றமையாலும் கடந்து சென்ற "கறுப்புச் செவ்வாய்" போலவே இன்னும் பேரழிவுகளை சிறிலங்கா இராணுவம் சந்திக்கும் என்பதில் எந்தவிதமாக சந்தேகமும் இல்லை.

வி.வானதி.

தமிழ்க்கதிர்.

Comments