கிளிநொச்சி வரை வந்திருக்கும் சிறிலங்கா படையினரை அழித்தாலே போதும்: பா.நடேசன்



கிளிநொச்சி வரை வந்திருக்கும் சிறிலங்கா படையினருக்கு முடிவு கட்டுவோமாக இருந்தால் தமிழீழத்திற்கான விடுதலை விரைவாக கிடைக்கும் என்பது தான் உண்மை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழீழ மாணவர் அமைப்பின் முதலாவது பொறுப்பாளர் மேஜர் முரளியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரை:

கல்வி மேம்பாட்டையும், அரசியல் அறிவையும் மாணவர் சமூகத்தின் மத்தியில் கட்டி எழுப்பியதில் அடித்தளமாக செயற்பட்டவர் மேஜர் முரளி. தமிழ் மாணவர்களை சீரழிப்பதை நோக்கமாக கொண்டுதான் சிறிலங்கா அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மாணவர்களைக் கல்வி அறிவற்றவர்களாக ஆக்கும் செயற்பாட்டிலும், பொருண்மிய ரீதியில் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து அவர்களது கல்வியை அழிப்பதன் ஊடாக தமிழின அழிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்ட சிறிலங்கா அரசிற்கு எதிராகத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது.

சிறிலங்கா அரசால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ் இளம் சமூகம் தான். மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன் நிற்ககக்கூடாது. அரசியல் சார்ந்த நடைமுறைக் கல்வியிலும் ஈடுபாடு காட்ட வேண்டும்.

சிறிலங்கா படை தற்போது பாரிய இழப்பினை எதிர்கொண்டு நிற்கின்றது. மாணவர்கள் அரசியல் ரீதியாகவும், பேரியல் ரீதியாகவும் இன்றைய சூழலை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

சிறிலங்கா படையினருக்கு கிளிநொச்சி இப்போது சாவுப்பொறியாக மாறுகின்றது. வருகின்ற சிங்களப் படைகள் முழுவதும் அழிக்கப்படும்போது எமது நாடு விடுதலை பெறும்.

நீண்ட தூரம் சென்று இந்த சிங்களப் படைகளை நாம் அழிக்கத்தேவையில்லை. கிளிநொச்சியில் வந்து நிற்கும் சிறிலங்கா படைகளுக்கு முடிவு கட்டுவோமாக இருந்தால் தமிழீழத்திற்கான விடுதலை விரைவாக கிடைக்கும் என்பது தான் உண்மை.

இது தான் இன்றைய கள உண்மை. இதனை தமிழ் இளம் சமூகம் அரசியல் ரீதியாகவும், போரியல் ரீதியாகவும் சிந்தித்து பார்கவேண்டும்.

தமிழீழ மாணவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றினை படிப்பதோடு உலக போராட்ட வரலாறுகளையும் படித்து அதில் மாணவர்களின் பங்கு எவ்வாறு அமைந்தது என்பதனை அறிய வேண்டும்.

இப்போது அனைத்துலக ரீதியாக எமது விடுதலைப் போராட்டத்தின் நிலமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

மாணவர்கள் ஒரே சக்தியாக விடுதலைப் போரடாட்டத்திற்குப் பங்களிப்புச் செய்யும் போது தான் விடுதலையை விரைவாக வென்றெடுக்க முடியும் என்றார் பா. நடேசன்.

மாணவர் அமைப்பு போராளி பிறையினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கண்டாவளை கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார்.

மேஜர் முரளி அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது தாயார் சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினார்.

தியாகி பொன். சிவகுமாரனின் திருவுருவப்படத்திற்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி முதல்வர் இரத்தினகுமார் சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவுப்படத்திற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர் நரேன் சுடர் ஏற்றி மலர் மாலை சூட்டினார்.

தமிழீழ எல்லைப் படை பொறுப்பாளர் செ.முகுந்தன், முதல்வர் இரத்தினகுமார் ஆகியோரும் நினைவுரையினை நிகழ்த்தினர்.


Comments