அரசின் நெருக்குவாரங்களால் வன்னி மக்கள் பேரவல நிலையில்!


வன்னிப் பெருநிலப்பரப்புமீது இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் கொடூர யுத்தம் காரணமாக அப்பகுதித் தமிழ் மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்ப துயரங்கள் சொல்லில் வடிக்க முடியாதவை.

தமிழர் தாயகம் தனது இறைமைக்கு உட்பட்ட பிரதேசம் என்று உரிமை கோரிக் கொண்டே அதன்மீது கொடூர யுத்தத்தைத் தொடுத்திருக்கின்றது இலங்கை அரசு.

ஒருபுறம் குரூர யுத்தத்தின் பேரழிவுகள். மறுபுறம் அத்தியாவசியப் பொருள்களைக்கூட அங்கு எடுத்துச் செல்லவிடாமல் போடப்பட்டிருக்கும் தடையால் எழுந்துள்ள மோசமான நெருக்கடி மருத்துவ, சுகாதாரப் பாதிப்புகள், வெள்ளப் பேரனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பேரவலம். இப்படி மீளமுடியாத நெருக்குவாரங் களுக்குள் சிக்கி சின்னாபின்னமாகித் துவண்டுபோய்க் கிடக்கின்றார்கள் வன்னிப் பெருநில மக்கள்.

ஒரு நேரம் கண்ணயர்ந்து தூங்குவதற்குக்கூட பாதுகாப்பான தங்குமிட வசதியில்லை; உணவில்லை, உடையில்லை, உறங்க இடமில்லை, மருத்துவ, சுகாதார வசதிகள் இல்லை. காட்டில் மரங்களின் கீழும் புதர்களிடையேயும் தங்கி அவலப்படும் அவலம் நீடிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழும் நான்கு லட்சத் துக்கும் அதிகமான மக்களுக்கு ஒரு மாதத்துக்குரிய உணவுப் பொருள்களையாவது அங்கு எடுத்துச் செல்வதாயின் குறைந்தபட்சம் நானூறு லொறிகள் தேவைப்படும். இதுதான் பொதுவான கணிப்பீடு.

ஆனால் ஒக்ரோபர் மாதத்தில் ஆக இருநூற்று நாற்பத்து மூன்று லொறிகளிலும், நவம்பர் மாதத்தில் ஆக நூற்றியெட்டு லொறிகளிலும் மட்டுமே பொருள் களை அங்கு எடுத்துச் செல்ல படைத்தரப்பு அனுமதித் திருக்கின்றது. ஆக, அரைவயிற்றுக்குத் தேவையான பொருள்கள்கூட அங்கு எடுத்துச் செல்ல அனுமதிக் கப்படவில்லை என்பதே உண்மை.

அத்தியாவசியப் பொருள்களை அங்கு எடுத்துச் செல்ல கொழும்பில் அனுமதி வழங்கப்பட்டாலும் பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்கள் படையி னரின் சோதனைச் சாவடிகளைத் தாண்டி எடுத்துச் செல்லப்பட அனுமதிக்கப்படுவதில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறு வெளிப்படையாகவன்றி - ஒளிவுமறைவாக - தடை விதிக்கப்பட்டுள்ள பொருள்களில் மக்களின் ஆடை, உடுபுடைவை வகைகளும் அடங்குகின்றன என வன்னித் தகவல்கள் கூறுகின்றன.

தற்சமயம், வன்னி மக்களுக்காகத் தமிழகம் அனுப்பி உதவியுள்ள அத்தியாவசியப் பொருள்கள், செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வன்னி மக்களுக்கு விநியோகிக்கப்படு கின்றன. மொத்தம் சுமார் எண்பத்தியையாயிரம் பொதி களில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் உடைகளை தமிழகம் வன்னிக்கு முதல்கட்டமாக வழங்கியிருந்தது.

இந்த எண்பத்தியையாயிரம் பொதிகளில் வெள்ளி மாலை வரை சுமார் முப்பதாயிரம் பொதிகள், வன்னி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாம் உணவுப் பொருள்களே. உடை, உடுபுடை வைகள் அடங்கிய பொதிகள் இன்னும் வன்னிக்குள் எடுத்துச் செல்லப்பட்டன என்ற தகவல் இல்லை.

பொதுவாக உடைகள், உடுபுடைவைகளை வன்னிக்குள் எடுத்துச்செல்லவிடாமல் தடுத்துவரும் படைத் தரப்பு அதே கட்டுப்பாட்டைத் தமிழக மக்கள் வழங்கிய அன்பளிப்பு விடயத்திலும் கடைப்பிடிக்கின்றதா என்பது தெரியவில்லை. போகப்போகத்தான் நிலைமை வெளிச்சத்துக்கு வரும்.

வன்னி மக்கள் இப்படிக் கஷ்டப்பட அவர்களின் நிவாரண மற்றும் நிர்வாக விடயங்களைக் கவனிக்கும் உள்ளூர் அரச அதிகாரிகளுக்கு அரச உயர்பீடம் கண் டிப்பான உத்தரவு ஒன்றையும் விடுத்திருப்பதாக அறிய வருகின்றது.

வன்னி மக்களின் அவல நிலையை உள்ளூர் அரச அதிகாரிகள் புள்ளி விவரங்களுடன் வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி விடுவார்களா என்ற அச்சத்தில் மூழ்கிக் கிடக்கும் அரசுத் தலைமை, அதைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கைகளை கையாள் வதாக - கட்டுப்பாடுகளை விதிப்பதாக - நம்பப்படுகின்றது.

வன்னி மக்களின் தேவை மற்றும் உதவிகள், நிவாரணங்கள் ஆகியவை குறித்து அரசுக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்ற கடுமையான உத்தரவு சம்பந்தப்பட்ட மாவட்ட அரச அதிபர்களுக்கு அத்தி யாவசிய சேவைகள் ஆணையாளரால் விடுக்கப் பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வன்னி மக்களை யுத்த அவலத்துக்குள்ளும், பொரு ளாதாரத் தடை, பொருள் விநியோகக் கட்டுப்பாடுகள், மருத்துவ - சுகாதார வசதியின்மை போன்ற நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளிக் கொடுமைப்படுத்தும் கொழும்பு அரசு, அதுபற்றிய புள்ளி விவரத் தகவல்கள்கூட வெளி யுலகுக்கு எட்டாமல் கட்டுப்படுத்தி, உண்மைகளை மறைப்பதில் மும்முரமாக இருக்கின்றது என்பதற்கு இந்த விடயம் நல்ல உதாரணம்.

வன்னித் தமிழ் மக்களின் இந்தப் பேரவல நிலைமை குறித்து சர்வதேச சமூகம் கவனம் எடுக்குமா?




Comments