நீதி,நியாயம் பார்த்துச் செயலாற்ற இந்தியத் தரப்பு முன்வர வேண்டும்


‘இளக்கமான இரும்பு சிக்கினால் கொல்லன் தூக்கித் தூக்கிக் குத்துவானாம்’ - என்று கூறுவார்கள்.
அது போலவே அரசியல்வாதிகளின் போக்கும் பெரும்பாலும் இருப்பது நாம் அவதானிப்பதுதான். இந்த நிலைப்பாட்டுக்குத் தாமும் விதிவிலக்கல்ல என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார் - இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில்.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையில் அதிகாரத்தைப் பகிரும் திட்டம் குறித்து ஆராய்வதற்கு எழுத்தில் இணங்கிய இலங்கை அரசு - சிறுபான்மையினரான தமிழருக்குத் தான் எழுத்தில் வழங்கிய வாக்குறுதிகளைக் கூடக் காற்றில் பறக்க விட்டு ஏமாற்றும் தனது காலாதி காலப் போக்கின்படி - இப்போதும் அதிலிருந்து விலகிவிட்டது.

இலங்கை அரசுடன் சமஷ்டித் தீர்வு குறித்துப் பேசிய விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசு, அதில் தனக்கு வெற்றி கிட்டி வருவதான நம்பிக்கை ஏற்பட்டதும் இப்போது தமிழர் தரப்பை இளகிய இரும்பாகக் கருதி எள்ளி நகையாடிச் செயற்படத் தொடங்கிவிட்டது.

வடக்கும், கிழக்கும் ஈழத் தமிழர்களின் வரலாற்று காலப் பாரம்பரியம் கொண்ட தாயக பூமி. அதைப் பிளந்து மாகாண நிர்வாகம் என்று தொடங்கிய இலங்கை அரசுத் தரப்பும், அதில் அங்கம் வகிக்கும் பௌத்த - சிங்களப் பேரினவாதக் கட்சிகளும், இப்போது மாவட்ட சபைகள், கிராம சபைகள் போன்றவற்றுக்கு (இந்தியாவின் ‘பஞ்சாயத்து ராஜ்’ பாணியில்)அதிகாரத்தைப் பகிர்ந்து, இனப்பிரச்சினையைத் தீர்ப்பது குறித்துப் பேசும் அளவுக்கு திமிரின் - செருக்கின் - உச்சிக்குச் சென்றுவிட்டன.

கொழும்பு அரசுதான், தமிழரின் ஆயுத, அரசியல் பலம் நலிவுற்று விட்டது என்று கருதி, இப்படி ‘இளகிய இரும்பைத் தூக்கி அடிக்கும்’ கொல்லன் போல செயற்பட எத்தனிக்கின்றது என்று பார்த்தால், இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சும் அப்படித்தான் இப்போது அமைந்திருக்கிறது.

ஈழத் தமிழர் நலிவடைந்து, பலமிழந்து விட்டார்கள். இனி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காரியத்தை அணுகலாம் என்ற பாணியில் அமைகின்றது அவரது பேச்சும் போக்கும்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் புதுடில்லியில் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்துகளில் கீழ்வரும் விடயங்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை.

* இலங்கையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைத்துள்ள அறிக்கையை அமுல்படுத்துவதே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இருக்க முடியும்.
* இலங்கை - இந்திய உடன்படிக்கை மூலம் உருவான கட்டமைப்பு மற்றும் பேச்சுகள் மூலம் தீர்வு காணவேண்டும்.


- இவை இரண்டும் அவரது கருத்துகளில் இருந்து சர்ச்சையைத் தோற்றுவிக்கும் அம்சங்களாக வெளிப்பட்டிருக்கின்றன.

இலங்கையின் தற்போதைய அரசு அமைத்துள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில், இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்பான ஈழத் தமிழர்களின் நியாயபூர்வமான பிரதிநிதித்துவம் இடம்பெறவில்லை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளில் தொண்ணூறு வீதத்தினரின் பங்களிப்பு இதில் சேர்க்கப்படவேயில்லை.

அத்துடன் அரசுக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளின் ஒன்றிணைப்பு மட்டுமே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு. பிரதான எதிர்க்கட்சிகள் அதில் இப்போது தொடர்புபடுவதேயில்லை. - இந்த விடயங்களை எல்லாம் இப்பத்தியில் ஏற்கனவே தெளிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

அத்தகைய அனைத்துக் கட்சிக் குழுவின் முடிவின் அடிப்படையில் தீர்வு என்று வலியுறுத்துவதன் மூலம், தென்னிலங்கைச் சிங்களம் போடும் ‘பிச்சையை’ வேறு வழியின்றி - கேட்டுக் கேள்வியின்றி - தீர்வாக ஏற்கும்படி தமிழர்களைப் பலவந்தப்படுத்த வழி சமைக்கின்றாரோ இந்திய வெளிவிவகார அமைச்சர் என்ற சந்தேகம் ஈழத் தமிழர்களுக்கு எழுகின்றது.

அதேபோல இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு என்றும் அவர் பிரஸ்தாபிக்கின்றார்.

இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டு, முயற்சித்தும் பலனளிக்காமல், கிடப்பில் போடப்பட்டு தூசு படிந்துபோய்க் கிடக்கும் - உக்கிப்போன - வெறும் ஆவணம் அது.

அந்த ஆவணத்தில் இந்திய நலனுக்கும், தென்னிலங்கை நலனுக்கும் வசதியான சகல அம்சங்களும் இன்னும் நடைமுறையில் உள்ளன. ஆனால் இலங்கை இனப்பிரச்சினையில் பிரதான தரப்பான - அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பான - ஈழத் தமிழர்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்கு என்ற பெயரில் இலங்கை மீது இந்தியாவால் ‘திணிக்கப்பட்ட’ அந்த ஆவணத்தில் ஈழத் தமிழர் நலனுடன் தொடர்புபட்ட எல்லா அம்சங்களும் - வடக்கு, கிழக்கு இணைப்பு வரையான சகல விவகாரங்களும் - கைவிடப்பட்டு விட்டன. அதுதான் உண்மை நிலை.

இந்நிலையில், ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை செத்துச் சமாதியாக்கப்பட்டுவிட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு என்ற கதை, இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தமிழர் நலனைப் புறக்கணித்து, இந்திய மேலாண்மையை நிலை நிறுத்தும் முயற்சியாகவே கருதப்படக்கூடியது.

எனவே, இந்தியா இனிமேலும் தாமதிக்காமல், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தை நீதி, நியாயம், உண்மை, களநிலைமை, யதார்த்தம் ஆகியவற்றின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்து, நியாயத்தின் பக்கத்துக்குச் சார்பாகச் செயற்பட முன்வர வேண்டும். - இதுவே தமிழரின் எதிர்பார்ப்பும், புதுவருடப் பிரார்த்தனையுமாகும்.

Comments