சரத் பொன்சேகாவுக்குப் பாடம் புகட்ட என்ன செய்யலாம்? "நிலவரம்" ஏடு கேள்வி



சிறி லங்கா இராணுவத் தளபதி தனது படைகளை நகர்த்தி போர்க் களத்தில் வெற்றியைக் குவிக்கின்றாரோ இல்லையோ, சர்ச்சைக்குரிய செவ்விகளை ஊடகங்களுக்கு வழங்கி சிங்களக் கடும் போக்காளர்களைத் திருப்திப் படுத்துவதை மாத்திரம் வெற்றிகரமாகச் செய்து வருகின்றார்.

“சிறி லங்கா ஒரு சிங்கள பௌத்தநாடு. இங்கே ஏனைய இனத்தவர்களுக்கு இடமில்லை” என்று கூறி அண்மையில் தனது பெருமையைப் பாறைசாற்றிக் கொண்ட இவர், தற்போது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் தந்து வரும் தமிழின உணர்வாளர்களான வைகோ, பழ நெடுமாறன் போன்றோரை “கோமாளிகள்” எனக் கூறி தனது அறிவையும் பண்பையும் மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.

“தட்டிக் கேட்க ஆளில்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பதைப் போன்று இவரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சிறி லங்கா போன்ற ஒரு சர்வாதிகாரம் நிலவும் நாட்டில் எதுவும் நடக்கக் கூடும். அதுவே இங்கும் நடக்கின்றது. சிங்கள ஆட்சியாளர்கள் யுத்தத்தை மூலதனமாகக் கொண்டே தமது அரசியலை நடாத்திவரும் நிலையில் அவர்கள் இராணுவத் தளபதிகளின் தயவிலேயே வாழ்க்கை நடாத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனாலேயே “சர்வ வல்லமை பொருந்தியவராக” இருந்த போதிலும் சனாதிபதியால் கூட இராணுவத் தளபதியைத் தட்டிக் கேட்க முடியாமல் இருக்கின்றது.

முன்னாள் சனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா தென்னாபிரிக்காவில் வைத்து “தமிழர்கள் மரத்தைச் சுற்றிப் படரும் கொடியைப் போன்றவர்கள்” எனத் தெரிவித்த கருத்து தமிழ் மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து தான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என தன்னிலை விளக்கம் தரவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.

அதேபோன்ற ஒரு சூழலே தற்போது சரத் பொன்சேகாவின் கருத்துக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழகத் தலைவர்களுள் மான, ரோசமுள்ள அனைவருமே அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். திரு. வைகோ ஒரு படி மேலே சென்று “சரத் பொன்சேகா மனநிலை சரியில்லாதவர்” எனக் கூறியுள்ளார். உண்மையைச் சொல்வதானால் சிங்கள தேசத்தின் இராணுவத்துக்குத் தலைமை தாங்குபவர் வைகோ கூறுகின்ற ~தகைமை|யைக் கொண்டிருந்தே ஆக வேண்டும். அவ்வாறு இருந்தால் தான், வகை தொகையற்ற மனித உரிமை மீறல்களைப் புரிந்து விட்டு எதுவுமே நடக்கவில்லை என்பது போல இருக்க முடியும்.

சிறி லங்கா உலக வரைபடத்தில் ஒரு சுண்டைக்காய் நாடு. இனரீதியாக உலகில் எங்குமே உறவுகளைக் கொண்டிராத ஒரு இனம் சிங்கள இனம். அபரிதமான இயற்கை வளங்களோ தவிர்த்து விட முடியாத கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடமோ எதுவுமே இல்லாத ஒரு நாடு. இருந்தும் கூட சரத் பொன்சேகாவால் மிகப்பெரிய வல்லரசான இந்தியாவின் சுயமரியாதைக்கே சவால் விடும் வகையில் உரக்க, வெளிப்படையாகப் பேச முடிகின்றதென்றால் அதற்குக் காரணம் சிங்கள தேசத்தின் பலமல்ல. மாறாக இந்தியாவின் பலவீனமே.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இத்தகைய கருத்துக்கள் புதியனவல்ல. கேட்டுக் கேட்டுப் பழகியவையே. ஆனால், தமிழகத் தலைவர்களைப் பொறுத்தவரை இது புதிய அனுபவம். அதிர்ச்சி தரும் அனுபவம், இராசதந்திர மரபுகளை மீறி ஒரு அரசாங்க ஊழியன் மற்றொரு நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை, அரசியல் கட்சித் தலைவரைக் ~கோமாளி| என்று வர்ணிப்பதும் ~புலிகளிடம் இருந்து கையூட்டுப் பெறுகின்றவர்| என்று கூறுவதும் கேவலமான செயல்.

இப்போது கூட சரத் பொன்சேகாவின் கருத்துக்கு மன்னிப்புக் கேட்பதாக சிறி லங்கா அரசு தனிப்பட்ட முறையில் அறிவித்திருக்கிறதே தவிர இராணுவத் தளபதி வாயைத் திறக்கவில்லை. நடப்பு நிகழ்வுகளைப் பார்த்தால் இராணுவத் தளபதியைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் சிங்கள அரசுத் தலைமை இருப்பதாகவே கருத முடிகின்றது. இது உண்மையானால் தற்போது கொழும்பில் ஆட்சி நடாத்துவது இராணுவமே என்ற முடிவுக்கே வரவேண்டி உள்ளது.

இராணுவ மமதையுடன் வாய்க்கு வந்தபடி மற்றவரை விமர்சித்து ஆட்டம் போட்ட எத்தனையோ நபர்கள் சரித்திரத்திலே இருந்த இடம் தெரியாமல் போனமையைப் பார்த்திருக்கின்றோம். சரத் பொன்சேகாவுக்கும் இது பொருந்தும்.

இலங்கைத் தீவிலே தமிழர்களின் கை ஓங்கும் போது இந்த நிலை விரைவில் உருவாகும். இந்நிலையில் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை ஈழத் தமிழர்களின் கரங்களைப் பலப்படுத்த தமிழகத் தலைவர்கள் முன்வர வேண்டும். அதுவே சரத் பொன்சேகா போன்றவர்களுக்குப் பாடம் புகட்டச் சிறந்த வழி!


Comments