தமிழக மக்களின் எழுச்சி எமது போராட்டத்தின் ஒரு வரலாற்றுப் பதிவு- எமக்கு ஒரு ஊக்க சக்தி: பா.நடேசன் மகிழ்ச்சி

தமிழக மக்களின் எழுச்சியானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு வரலாற்றுப் பதிவு- ஒரு ஊக்க சக்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியை அண்மித்த தருமபுரத்தில் பாடசாலை முதல்வர்கள், ஆசிரியர்கள் மத்தியில் சமகால இராணுவ அரசியல் நிலவரம் தொடர்பாக அவர் ஆற்றிய உரை:

சிங்கள அரசிற்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை தமிழ் இனம் நடத்தி வந்தாலும் கடந்த 50 ஆண்டுகளாக அறவழிப் போராட்டத்திலும் தமிழர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நாம் ஒரு வளர்ந்த, அறிவு பெற்ற இனமாக இருப்பதால் தான் இத்தகைய ஒரு பலமான போராட்டத்தை நிகழ்த்த முடிகின்றது. ஒரு இனத்தின் வளர்ச்சி என்பது கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வி அறிவு மிகுந்த இனங்களே உலகில் பலமான இனங்களாக விளங்குகின்றன. நாமும் அப்படித்தான்.

தமிழர்களாகிய நாம் விடுதலைப் போராட்டமே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்கள் சமூகத்தின் எழுச்சிக்கு பலமாக கல்வியே இருந்து வருகிறது. அதனாலேயே, சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழர்களின் கல்வியை அழிப்பதன் மூலம் தமிழர்களை அழித்து விடுவதில் எப்போதும் குறியாக இருக்கின்றன.

இன்று நடைபெற்று வரும் போரில் தமிழர்களாகிய நாம் சிங்கள அரசிற்கு எதிராக மட்டும் போராடவில்லை. சிங்கள அரசிற்கு முண்டு கொடுக்கின்ற உலக சக்திகளுக்கு எதிராகவுமே போராடி வருகின்றோம். நாம் தனித்து நின்று எமது மக்களின் பலத்தில் நடக்கின்ற போராட்டம் இது.

இப்போது - கிளிநொச்சியை நோக்கி போரிட்டுக் கொண்டிருக்கின்ற சிங்களப் படைகள் சிங்களத்தின் சண்டையிடும் படைகளாக உள்ளன. ஆனால், இந்தப் படைகளுக்கு எதிராக தொடர் சண்டைகளில் ஈடுபட்டிருக்கும் நாம், இப்போது அவர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் இறுதிக் கட்டத்திற்குள், ஒரு பலமான இனமாக நுழைந்திருக்கிறோம். இப் படைகளை அழிப்பதன் மூலம் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் பெரும் பாய்ச்சலை உருவாக்கமுடியும்.

தமிழர்களுக்கு இப்போது அனைத்துலக ரீதியாக ஆதரவு நிலை ஓங்கி வருகின்றது. குறிப்பாக தமிழக மக்களின் எழுச்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. தமிழக முதல்வர் தொடக்கம், தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தமக்குள் உள்ள பேதங்களை மறந்து ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பி வருகின்றார்கள்.

தமிழகத்தில் மட்டுமன்றி - இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாள் தோறும் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தியா எங்கும் தமிழர்களின் இந்த எழுச்சி இங்கே போராடுகின்ற எமக்கு பெரும் ஊக்க சக்தியாக அமைகின்றது என்றார் பா.நடேசன்.


Comments