பாயும்புலி பண்டாரவன்னியன்” எழுதிய கருணாநிதியும் முதல்வர் கருணாநிதியும்..

01.
எழுத்தின் துயரம் என்னவென்றால் ஒரு காலத்தில் நாம் பெரிதாக எண்ணியவர்களை நாமே ஒன்று மில்லை என்று உணர்ந்து நிராகரிக்க நேர்வதுதான்.
முன்னர் ஒரு காலத்தில் நான் தேடித் தேடி வாசித்த ஜெயகாந்தன் இந்துத்துவ பார்ப்பனிய சக்திகளின் காலைப்பிடித்துக் கொண்டிருந்த போது, சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு கட்டுரையை எழுத நேர்ந்தது.

ஜெயகாந்தன் மீது எனக்கென்ன கோபம்?
வட்டிக்கு கடன் கொடுத்த பிரச்சனையா அல்லது சம்மந்தம் பேசப் போய் ஏற்பட்ட பிரச்சனையா?
நேரில் கூட பார்க்காத ஜெயகாந்தன் மீது ஏன் கோபம் வர வேண்டும்.
ஜெயகாந்தனின் எழுத்தில் இருந்த வீறாப்பை, தெளிவை அவரது வாழ்வில் கானமுடியாமல் போனபோது, ‘அட மடையா உன்னைப் போய் வேலைமினக்கட்டு படித்து விட்டேனே” என்ற ஆத்திரம்தான் என்னை எழுதத் தூண்டியது.

இதில் அவர்கள் எப்படியும் இருக்கலாம்தானே அது அவர்களது நிலைப்பாடு என்று ஒருவர் சொல்லக் கூடும்.

அது உண்மைதான் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருப்பதும் அதனை தொடர்வதற்கு அவர்களுக்கு சுதந்திரம் இருப்பதையும் எவரும் மறுக்க முடியாது.
ஆனால் ஒரு காலத்தில் எது ஒருவரை அவர்கள் பக்கம் திருப்பியதோ, அவர்கள் மீது மதிப்புக் கொள்ளச் செய்ததோ, அதிலிருந்து அவர்கள் விலகும் போது இயல்பாகவே நமக்கு ஆத்திரம் ஏற்படத்தானே செய்யும்.

சுய புத்தியுள்ள எந்த மனிதன் ஆத்திரம் கொள்ளாமல் இருப்பான்?
சுயபுத்தி இல்லாதவர்கள் பற்றி நான் இந்த இடத்தில் எதுவும் கூறவரவில்லை.
முப்பது வருடங்கள் ஒருவருக்கு சரியெனத் தெரிந்த ஒருவிடயம் திடீரென்று பிழையென்று சொல்லப்படும் போது, இது வரைகாலமும் அதனை நம்பியிருந்தவர்களின் நிலை என்ன?
இப்படிப்பட்ட ஒன்றுதான் கருணாநிதி விடயத்தில் நமக்கு ஏற்படும் கோபத்தின் நியாயம்.

கருணாநிதியை முதல் முதலாக அறிந்து கொண்டதை நினைத்துப் பார்க்கிறேன்.
அப்போது பலவாறான நூல்களை படித்துக் கொண்டிருந்தேன்.

முதல்முதலாக திராவிட அரசியல் எழுத்துக்களுடனான பரிச்சயம் ஏற்படத் தொடங்கியபோது பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி என அந்த வரிசை நீண்டு சென்றது.

கருணாநிதியின் ‘பாயும்புலி பண்டார வன்னியன்”, ‘பொன்னர் சங்கரர்” போன்ற நூல்களை படித்தபோது கருணாநிதி மீது ஒரு தனி ஈடுபாடே உருவாகியது.
மதிப்பு என்பதற்கு அப்பால் அவர் ஒரு பெரிய தமிழ் வீரரோ என்று கூட நான் நினைத்ததுண்டு.
பாயும்புலி பண்டார வன்னியனை படித்து விட்டு, அதிலுள்ள வசனங்களை சொல்லிப் பார்ப்பதே மகிழ்சியான ஒன்றாக இருந்தது.

உண்மையில் அப்படியான எழுத்துக்கள் தமிழர் தேசியத்தின் மீதான ஈடுபாட்டை ஏற்படுத்துவதில் உறுதுணையாக இருந்திருக்கின்றன.

நமக்கென்றதொரு வரலாறு என்பதுதான் தேசிய அரசியலின் வேராகும்.

ஆனால் எல்லாமே வெறும் வீர வசனங்கள் மட்டும்தான் என்று காணும்போது எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்.

02.

கருணாநிதி பரவலாக கலைஞர் என்றே விழிக்கப்படுகின்றார்.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவரை கலைஞர் என்று அழைக்க என்ன மனம் ஒப்பவில்லை.

ஒரு கலைஞனுக்குரிய அடிப்படையான தகுதிகள் எதனையும் கருணாநிதியிடம் கானமுடியவில்லை.

வாழ்வின் அந்திமக் காலத்தில் கூட அதுவும் கைகள் நடுங்கும் போது கூட, தனது அதிகார பீடம் பறி போய்விடுமோ என்று எண்ணும் ஒரு மனிதரை எவ்வாறு கலைஞர் என்பது.
அவரை கலைஞர் என்று சொல்வதற்கு, சிலருக்கு தேவை இருக்கலாம்.
அவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்.

அதிகார பீடங்களுடன் சமரசப்பட மறுத்து வாழ்வின் இறுவரை அதிகாரத்தை எதிர்த்த கலைஞர்களை நான் படித்து வியந்திருக்கிறேன்.
நம்மால் முடியாத ஒன்றை மற்றவர்கள் செய்யும்போதுதானே அவர்கள் மீது நமக்கு மதிப்பும் பற்றும் ஏற்படுகின்றது.

அப்படியொரு மதிப்பிற்கும் பற்றுக்குமுரிய ஒருவராக கருணாநிதி முன்னொரு காலத்தில் இருந்தார் என்பது உண்மைதான்.

ஆனால் இப்போது.?

இப்போது என்பதைத்தான் எப்போதுமே வரலாறு ஞாபகப்படுத்திக் கொள்ளும்.
ஒரு கணத் தவறு அல்லது தடுமாற்றம் ஒரு தசாப்த கால வரலாற்றை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் விந்தையை நாம் கண்டிருக்கிறோம்.
கருணாநிதிக்கும் அது நிகழ்ந்திருக்கிறது.

நான் நினைத்துப் பார்ப்பதுண்டு ஒரு வேளை கருணாநிதி இருபது வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தால் ஒரு சிறந்த தமிழ் தலைவராக அவரை வரலாறு பதிவு செய்திருக்கும்.
ஆனால் இனி எஞ்சியிருக்கும் காலத்தில் இழந்ததை எல்லாம் அவரால் இட்டுநிரப்ப முடியுமானால் அது ஆச்சரியமானதே!

03.

ஒரு காலத்தில் கருணாநிதி தமிழ்ச் சூழலில் புரட்சிகரமான ஒரு தலைவராகப் பார்க்கப்பட்டார்.
அதற்கான நியாயங்கள் ஏராளமாக இருந்தன.

உலகளாவிய தமிழர் தலைவர் என்ற அந்தஸ்த்தும் அவருக்கு இருந்தது.
தமிழகத்தில் இடதுசாரித் தலைவர்களை எல்லாம் தள்ளிவிட்டு முன் வந்த பெரியாரிய சிந்தனைகளின் வாரிசாக இருந்தவர் கருணாநிதி.

பின்னர் படிப்படியாக பகுத்தறிவுவாத அரசியலிலிருந்து விலகிய கருணாநிதி, அதிகார போட்டி அரசியலிலில் கரைந்து போனார்.

அது கொஞ்சம் கொஞ்சமாக அவர் குறித்த பிம்பத்தை சிதைத்து குறுகிய அரசியல்வாதி என்ற அடையாளத்தை மட்டுமே நிலைப்படுத்தியது.

இல்லாவிட்டால் கருணாநிதியின் ஆட்சியில் தமிழகம் எப்படி இருந்திருக்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் பார்ப்பனிய ஊடகங்கள் தமிழையே அழித்தொழிக்கும் வகையில் செயற்படும் போது கூட, அவர்களுடன் கொஞ்சிக் குலவுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய முடியாத ஒருவராக முதல்வர் கருணாநிதி இருக்கின்றார்.

கருணாநிதி செய்திருக்க வேண்டியதைத்தான் இன்று மக்கள் தொலைக்காட்சி என்ற பேரில் ராமதாஸ் செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஈழத் தமிழர் விவகாரம் குறித்த அவரது குத்துக்கரணம் பலருக்கும் அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆனால் கருணாநிதி அவ்வாறு நடந்து கொள்வார் என்று முன்னமே நாம் எதிர்பார்த்தோம்.
குறுகிய அரசியல் இலக்குக் கொண்டவர்களால் அவ்வாறுதான் நடந்து கொள்ளவும் முடியும்.
ஒரு காலத்தில் கருணாநிதி ஈழ விடுதலையின் தீவிர ஆதரவாளராக இருந்தார் என்பதும் அதன் காரணமாக ஒரு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டதும் பலரும் அறிந்ததே.

அன்றிலிருந்து கருணாநிதி எப்போதுமே ஈழத் தமிழர் என்று வரும்போது நழுவுவதும் மழுப்புவதுமாகவே காட்சியளித்து வருகிறார்.

இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களில் ஒருவர், குல்திப் நாயர்.
இந்திரகாந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்.

சமீபத்தில் எதேச்சையாக அவரது கட்டுரை ஒன்றை படித்தேன்.

அதில் கருணாநிதி பற்றி அவர் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் ஆச்சரியமாக இருந்தன. அதனை இந்த இடத்தில் பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென்பதால் குறிப்பிடுகின்றேன்.

‘1991 இல் கருணாநிதியுடன் உரையாடியதை நினைத்துப் பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் நான் லண்டனில் இந்திய தூதுவராக இருந்த வேளை அங்கு இலங்கையின் உயர் ஸ்தானிகராய் இருந்த டி.எஸ் ஆட்டிக்கல என்னைச் சந்தித்து, தமிழ்ப் பிரச்சனை தீர்வதற்காக கருணாநிதியின் ஒத்துழைப்பை எவ்வாறு பெறுவது என்பது பற்றி கேட்டார். இதன் பின்னரே நான் கருணாநிதியைச் சந்தித்து கதைத்தேன். ஆனாலும் அவர் அது விடயத்தில் தனது அழுத்தமான மறுப்பை தெரிவித்துவிட்டார். அது மட்டுமன்றி புலிகள் பாஸிஸவாதிகள். வெறுத்தொதுக்கப்பட வேண்டியவர்கள். தங்கள் செய்கைகளில் எதுவித மனிதாபிமானத்தையும் கொண்டிராதவர்கள் என்றும் தெரிவித்தார். புலிகள் மீதான எதுவித சிறு அனுதாபமும் அவரிடமிருக்கவில்லை. அத்துடன் அந்த இயக்கத்துடன் எந்தவித உறவுகளையும் வைத்திருக்க அவர் விரும்பவில்லை.”

இன்று 17 வருடங்கள் கடந்துவிட்டன. இன்றும் கருணாநிதியின் நிலைப்பாடு அதுதானா?

04.

ஒரு மனிதரின் வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததுதான்.
அந்த மாற்றங்கள் என்பது இருக்கும் நிலையிலிருந்து மேலும் மனித குலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஒன்றாக இருக்க வேண்டும்.

ஒரு நிலையை கடப்பதற்கு சில நேரங்களில் சமரசங்கள் கூட தேவைப்படத்தான் செய்கின்றன.
ரஸ்ய புரட்சிக் காலகட்டத்தில் ஒரு முறை லெனின் பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரொட்ஸ்கியை ஜேர்மனிக்கு அனுப்புகின்றார்.

அங்கு சென்ற ரொட்ஸ்கிக்கு அங்குள்ள நடைமுறைகள் விளங்கவில்லை.
ரொட்ஸ்கி லெனினுடன் தொடர்பு கொண்டு கோட் அணிந்து வந்தால்தான் உள்ளே அனுமதிப்பதாக கூறுகின்றார்கள் என்ன செய்வது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
அதற்கு லெனின் கூறகின்றார், அவர்கள் பாவாடை அணிந்து வரச் சொன்னாலும் அணிந்து போ. தேவை அந்த சூழலை கடந்து செல்வதுதான்.

எனவே ஒரு குறிப்பிட்ட சூழலில் மற்றவர்களின் மொழியில் கூட நாம் பேச வேண்டியிருக்கும். அவர்களுடன் இணைந்து போக வேண்டியிருக்கும்.
ஆனால் அதற்காக சமரசங்களை செய்வதையே ஒரு அரசியலாக்கிக் கொள்வதை என்னவென்பது.

கருணாநிதி என்ற அரசியல் தலைவரின் இறுதிக்கால வாழ்வில் நிகழ்ந்திருப்பது, நிகழ்ந்து கொண்டிருப்பதும் அதுதான்.

கருணாநிதியின் பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லாமே வெறும் சந்தர்ப்பவாதத்தின் குறியீடுகளாகச் சுருங்கிவிட்டன.

நாளைய வரலாறு குறுகிய அரசியல் போக்கொன்றின் பிரதிநிதியாகவே அவரை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப் போகின்றது.

ஒரு முறை எழுத்தாளர் ஜெயமோகன் கருணாநிதி பற்றி எழுதியதற்கு, நீ கொசு. நான் யானை நசித்துவிடுவேன் என்ற பாணியில் அவர் பதில் இறுத்ததாக படித்தேன்.
உண்மைதான் கருணாநிதி ஒரு யானைதான்.

பணபலத்தில், செல்வாக்கில், அதிகாரத்தின் மீதான மோகத்தில் அவர் யானையாகியிருப்பதை எவரால்தான் மறுக்க முடியும்.
ஆனால் கலையில், கொள்கை மாறா அரசியலில் அவரை பூனை என்று கூட சொல்ல முடியாது.

ஜெயகாந்தன் குத்துக்கரணம் அடித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் ஜெயகாந்தன் எனக்கு ஒரு மியாவ் என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்தேன்.

அரசியல் சூழலில் கருணாநிதியின் இடம் கூட அப்படித்தான் ஆகும், அவரது இறுதிக் காலத்திலாவது தனது தற்போதைய இடம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளாவிட்டால்.

By யதீந்திரா நவம்பர் 12, 2008

Comments