தமிழகம் கேட்டது போர் நிறுத்தம்; சிங்களம் தமிழருக்குக் கொடுப்பதோ கொத்துக் குண்டுக் கொலை ! யார் கோமாளிகள்?

ஆங்கில இலக்கிய மேதையான சேக்ஷ்பியர் உலகமே நாடக மேடை என்றார். கோமாளிகள் இல்லாத நாடகம் சப்பென்று சுவையற்றுப் போய்விடும். பொய்யனாக திகழ வேண்டிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று உண்மை உணர்வாளராகவும், மனித நேயமிக்கவர்களாக வாழ்ந்து வரும் பழ.நெடுமாறன் போன்றவர்களைக் கோமாளிகள் எனக் கூறிப் பலரின் கண்டனத்தையும் வயிற்றெரிச்சலையும் கிழப்பி விட்டுள்ளார். தமிழகச் சட்ட சபையில் ஒரு தீர்மானத்தை நிறை வேற்றுவதே இமாலய சாதனை என்பது சட்டசபையின் நாளாந்த நடவடிக்கைகளை கவனிப்பவருக்கு நன்றாகவே விளங்கும். அதுவும் எதிர்ப்பே இல்லாது ஒருமனதாக அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் மிகச் சிலவே.

அப்படி நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை மத்திய அரசு எதுவுமே செய்யாது உதாசீனம் செய்தால் அந்த சட்ட சபைக்கும் அதில் அங்கம் வகித்த அரசியல் வாதிகளுக்கும் உள்ள மதிப்பு என்ன ?

ஈழத் தமிழர் பிரச்சனையில் கடந்த 6 மாதங்களில் இரண்டு முறை நிறை வேற்றப் பட்ட தீர்மானங்களின் கதி என்ன ஆயிற்று என்பதை யார் கேட்டார் யார் பதில் சொன்னார்?இவர்களின் இத்தகைய தீர்மானங்களுக்கே எதுவித நடவடிக்கையும் எடுக்காது மகிந்தவும் பசிலும் சொல்லும் வெறும் வாய்ச் சொல்லை ஏற்று நடக்கும் மத்திய அரசால் தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் ஆக்கப்பட்டு வருவதை யாரால் மறைக்க முடியும்?

ஈழத் தமிழர் பிரச்சனைக்கும் அப்பால் தமிழகத் தமிழர் விடையத்தில் காவேரி நதி நீர்ப் பங்கீடு, ஒகனேக்கல் குடி நீர்த் திட்டம் போன்றவற்றில் என்னதான் நடந்து விட்டது ? உச்ச நீதி மன்றம், மற்றும் தீர்ப்பாயம் வழங்கிய தீர்வுகளுக்கு அமைய முடிவு காண முடியாத தமிழகத் தமிழ் அரசியல் வாதிகளை பிறர் எப்படி எடை போடுவர் ?

சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர் சுடப்படும் நிலையிலும் இந்திய மைய அரசு இலங்கை அரசுக்கு கொத்தடிமை போல் நடந்து கொள்கிறது.; அதன் அமைச்சர் அவையில் தமிழகத் தமிழ் அரசியல் வாதிகள் அமைச்சராக இருக்கிறார்கள் என்றால், இவை போன்ற விமர்சனங்கள் வெளியாவதில் வியப்பு என்ன இருக்க முடியும்?
இந்தியப் பிரதமரை வாயே திறக்க முடியாத நிலையில் இலங்கை ஜனாதிபதியும் இலங்கை அரசும் வைத்துள்ள நிலையே தெரிகிறது. பலதடவைகள் பலரும் பகிரங்கமாகத் தெரிந்து கொண்டஉண்மை நிலைதான் இது.

இத்தகைய நிலையில் இராணுவத் தளபதியும் இலங்கை ஜனாதிபதியும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனத் தமிழக அரசியல்வாதிகள் பத்திரிகை அறிக்கைகளை விடுவதைப் படிப்பவருக்கு என்ன தோன்றும் ?

சிங்களத்தின் தமிழின அழிப்புத் திருப்பணி எப்போ முடியும் என இந்திய மத்திய அரசு தவம் இருக்கிறது. அதற்குச் சாம்பிராணிப் புகை போட்டு சங்கு ஊதும் பணியில் தமிழக முதல்வர் இருக்கிறார்.

தமிழக முதல்வரின் டயலக்குகள் எவரையும் மிஞ்சும் வகையில் உள்ளன. ஒக்கனேக்கல் குடிநீர்த் திட்டம் எலும்பை ஒடித்தாலும் நிறைவேற்றப் படும் என்றார். எலும்பு முறியாமலே குடிநீர்த் திட்டம் முறிந்து போய்க் கிடக்கிறது.மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் என்ற கடலில் தமது ஆட்சியைக் காப்பாற்றத் தத்தளிக்கும் அவரால் எவரைத்தான் காப்பாற்ற முடியும்? இந்த நிலையில், “தமிழர்களே தமிழர்களே என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் தெப்பமாக மிதந்து உங்களைக் காப்பாற்றுவேன்.“என்ற அவர் குரலில் வரும் டயலக் சொல்லும் சேதி என்ன ?ஈழத் தமிழரைக் காப்பாற்றியே தீருவேன் எனச் சவால் விடும் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்:யப் பட்டுள்ளது அதனை எவரும் ஆதரித்தால் சட்டம் பாயும் என மிரட்டுகிறார்.

ஈழத் தமிழரின் ஒரே உரமைக் குரலாக விளங்கும் விடுதலைப் புலிகளை அழித்து விட்டு இவர் யாரை எப்படிக் காப்பாற்றப் போகிறார்?இந்தத் தடைக்கும் அவருக்கும் உள்ள உறவை இந்த ஆண்டில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு புலிகள் இயக்கத்தைத் தடை செய்த நீதிமன்ற விசாரணையில் வெளியான செய்தி முதல்வரின் கபடத்தனத்தை அம்பலப் படுத்துவதாய் உள்ளது.

அந்த நீதிமன்ற விசாரணை மே மாதம் 14ந் திகதி 2008ல் இப்படியாக நடத்தப் பட்டது. சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயம் டெல்லி உயர் நீதிமன்ற நீதியாளர் விக்ரம்ஜித் சென் தலைமையில் விசாரணைக்கு எடுக்கப் பட்டது. மத்திய அரசினால் தமிழகத்தின் சில பகுதிகளை விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றோல் டீசல், மருந்துகள் போன்ற முக்கிய பொருட்களைக் கடத்தும் தளமாகப் பயன் படுத்துகிறது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்கிறது.

மத்திய அரசை மேலதிக அரச சட்டவாளர் திரு. பி.பி.மல்ஹோத்ரவும், மாநில அரசை தமிழ் நாடு சட்ட ஆலோசகர் திரு.எஸ்.தனஞ்ஜயனும் பிரதிநிதிகளாக செயற்பட்டனர்.“மேலும் கல்பாக்கம் கூடங்குளம் அணு நிலையங்கள் புலிகளின் தளங்களுக்கு அண்மையில் இருப்பதால் புலிகளுக்குத் தடை இல்லாத நிலையில் இவை தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பது இந்திய அரசின் அச்சமாக உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டது. மேலும் புலி உறுப்பினர்; மற்றும் அதிலிருந்து விலகியவர்களிடம் அண்மையில் தமிழ் நாட்டில்; மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் இறுதியில் இத்தகைய செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப் படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் எடுத்த நீதியாளர், புலித் தலைவர்கள் இந்திய அரசின் கொள்கை பற்றி நம்பிக்கையற்ற கண்ணோட்டம் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் ஒரு பலமான பயங்கரவாத அமைப்பாகச் செயற்படும். தமிழ் நாட்டில் தனது தளத்தை மேம்படுத்த பிரிவினை உணர்வுகளைத் தூண்டும். இது ஸ்ரீலங்கா தமிழ் ஈழம் என்ற இனப் பிரிவினை காரணமாக சிதறடிக்கப் படும் நிலை தொடரும் வரை நீடிக்கும் என்பதும் இலங்கைத் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள மொழி கலாச்சார இன மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் பெருமளவில் எதிரொலிக்கும் என்ற வாதத்தை கருத்தில் கொண்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் உச்ச வரிகள் இப்படியாக உள்ளன. “ எல்.ரீ.ரீ.யின் எதிர் வாதம் இல்லாத நிலையில் மத்திய அரசாலும் மாநில அரசாலும் முன்வைக்கப் பட்ட அனைத்து ஆவணங்களையும் அவற்றுக்கான சாட்சிகள் இல்லாத நிலை உட்பட அவை மறுக்கப்படாது உள்ளதாகவும் நிரூபணப் படுத்தப் பட்டவையாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.

(“In the absence of any representation from the LTTE, the entire material placed by the Central government as well as the State government including deposition of their witnesses remains un-rebutted and is taken as having been proved.”)

இதுவன்றோ மனுநீதிச் சோழ மன்னனின் தீர்ப்பு.இந்த நீதி மன்ற நாடகம் கடந்த 17 ஆண்டுகளாக நடந்தேறி வருகிறது. இதில் தமிழக மாநில மத்திய அரசுகளின் கணிசமான கபடத்தனமும் அரங்கேறி வருகின்றது என்பதை நிச்சயம் ஒரு நாள் உலகம் உண்மையைக் கண்டு கொள்ளும்.

இதுவரை எந்த ஒரு கட்டத்திலும் புலிகளையோ அவர்கள் தரப்பான எதிர் வாதங்களையோ கேட்க வேண்டும் என்ற கண்ணியமான உணர்வு கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கூப்பாடு போடும் தி.மு.க., அ.தி.மு.க.ஆட்சியில் உள்ள தமிழ் மாநில அரசுக்கே தோன்றவில்லை.1980 முதல் இலங்கை அரசு ஈழத் தமிழரைத் தாக்கும் போது இந்திய மத்திய தமிழக மாநில அரசும்;; கவலையும கண்டனமும் தெரிவித்த போதெல்லாம் இலங்கை அரசு தனது தாக்குதலை அதிகரித்தே வந்துள்ளது. இன்றும் போர் நிறுத்தம் என்று பொய்க் கூச்சல் போட்டு எம்மக்கள் மீது உலகால் தடை செய்யப் பட்ட கொத்துக் குண்டுகளை Cluster Bombs வீசி அழிக்க இந்திய அரசுகள் மௌனமாக இருக்கின்றன.

தமிழ் மக்களைக் காக்கும் ஒரே இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகளே உள்ளனர். கொசுவை ஒழிக்கக் குடிசையைக் கொழுத்துவது போலத் தமிழரின் வீடுகளையும் வளர்ப்புப் பிராணிகளையும் தேவாலயங்கள் வைத்திய சாலைகளையும் பல்குழல் எறிகணைத் தாக்குதல் கொத்துக் குண்டுகளால் சிங்கள அரசு தினமும் அழித்து வருகிறது..

ஈழத் தமிழர் மீது ஒரு பினாமிப் போரை நடத்திக் கொண்டு தமிழகத் தமிழருக்கு போர் நிறுத்தம் என்றும் பிரணாப் முகர்ஜி கொழும்பு போய் அமைதி கொடுப்பார் எனத் தண்ணி காட்டும் வேலையில் தமிழக முதல்வரும் தங்காபாலு போன்ற காங்கிரஸ் கூலிகளும் ஈடுபடுவது வேடிக்கைதான்.;

1991ல் ஸ்ரீபெரும்பூதூரில் நடந்த தேர்தல் கூட்டத்தில் காங்கிரசின் சில முக்கிய பிரபலங்களும் கூட்டணிக் கட்சியான அ.இ.தி.மு.க. புள்ளிகளும் பிரதமர் ராஜீவ் காந்தி மிகப் பெரும் முக்கிய பிரமுகராக இருந்தும் கூட அங்கே இவர்கள் இல்லாமல் போன காரணம் என்ன ? அந்தக் கொலையால் பெரும் பயன் அடைந்த அ.இ.தி.மு.க., சந்திரா சுவாமியின், சுப்பிரமணியசுவாமி ஆகியோரின் அரசியல் தொடர்புகள் என்ன ? இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகவும் 26வது எதிரியாக மரண தண்டனை விதிக்கப் பட்டு பின்னர் விடுதலையான பெங்களுர் ரங்கநாத் அண்மையில் இப்படிக் கூறியுள்ளார்.

“நான் இந்த விஷயங்களை யெல்லாம் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயனிடம் கூறியபோதுஇ அவர் அதிர்ச்சியாக என்னிடம்இ ஹசந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும்? இனி இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கோடியக்கரை சண்முகத்தின் கதிதான் உனக்கும் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்' என மிரட்டியவர்இ கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட் ஒன்றை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது’’.

வழக்காளி எதிரி என இரு தரப்பு வாதப் பிரதி வாதங்களைக் கேட்டு ஆய்ந்து அறிந்த பின் நடுநிலையில் தீர்ப்பு வழங்குவதே உண்மையான நீதியாகும். நடப்பதோ உளவுப் பிரிவால் தவறாகக் குற்றம் சாட்டப் பட்டும், தமது தரப்பு வாதத்தை எடுத்துரைக்கச் சந்தர்ப்பம் இல்லாதபடி தடை செய்யப் பட்டும் உள்ளது புலிகள் இயக்கம். எந்த ஒரு சட்டவாளரும் புலி;களுக்காக வாதாட முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டு, ஒரு பக்கச் சார்பான தீர்ப்பை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வழங்கி அதனை நீதி என்பதும் அதை மீறுவோரைப் பயங்கரவாதிகள் என்பதும் கோமாளிகளால் மட்டுமே முடியும்.

- பத்மா -


Comments