தமிழர்களுக்கு நீதி செய்யும் தாராளம் சிங்களத்திடம் கிஞ்சித்தும் கிடையாது



நீதியும், நியாயமும், கௌரவத்துடன் கூடிய வாழ்வுரிமையும் கேட்டு அஹிம்சை வழியில் - காந்தீய நெறியில் - சமாதான முறையில் - அமைதி மார்க்கத்தில் - போராடிய ஈழத் தமிழர்கள், அதை ஒட்டி அதிகாரத்தில் இருந்த பௌத்த - சிங்களத் தலைமைகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்தார்கள்; உடன்பாடுகளுக்கு இணங்கினார்கள்.

தமிழினத்தின் அரசியல் தன்னாட்சிக்கான கோரிக்கையின் தீவிரத்தையும், தமிழ்த்தேசிய உண ர்வெழுச்சியின் வீரியத்தையும் கண்டு திகைத்த பௌத்த - சிங்கள அரசுத் தலைமைகள், தமிழர்களின் கிளர்ச்சியை முளையிலேயே அடக்குவதற்காக - வேகம் பெறும் தமிழர்களின் வெகுசனப் போராட்டத்துக்கு அரண் கட்டுவதற்காக - தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பான சில சலுகைகளை வழங்குவதற்குத் தயார் என்பது போல அவ்வப்போது போக்குக் காட்டின.

இந்தப் பின்புலத்தில் பௌத்த - சிங்கள அரசியல் மற்றும் அரசுத் தலைவர்களோடு உடன்பாடுகளைச் செய்யவேண்டியவரானார் தமிழர்களின் பிரதிநிதியான தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.

பண்டா - செல்வா, டட்லி - செல்வா என்று செய்யப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் சிங்களத் தலைமைகளினால் கிழித்து வீசப்பட்டன. பேரினவாதத்தின் ஏமாற்று நாடகத்தில் பகடைக்காய் ஆனார்கள் தமிழர் தலைவர்கள்.

அத்தகைய சூழ்நிலைப் பின்புலத்தில்தான் "தமிழர்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறினார் தந்தை செல்வநாயகம்.

அதேபோன்ற கருத்தை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி வண.இராயப்பு ஜோசப்பும் இப்போது கூறவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்.

"இலங்கை வாழ் தமிழ் மக்களை இனி அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இனிமேல் சர்வதேச சமூகத்தை நம்பிப் பயனில்லை.

தன்னார்வத் தொண்டர் அமைப்புகளும், உலக நாடுகளும் சமாதானம் வழங்கும் நிறுவனங்களும் தமிழ் மக்களின் மீது கரிசனை காட்டும் என நம்பியிருந்தும் பலன் இல்லை.

கடைசியில் - அனைவரும் கைவிட்ட நிலையில் - இறுதியில் - அந்த இறைவனிடம்தான் கையேந்துகின்றோம். அவர்தான் எங்களை இரட்சிக்க முடியும்" - இப்படித் தனது நத்தார் தினச் செய்தியில் அப்பட்டமாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றார் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் அடிகளார்.

இதேபோன்ற கருத்தையே வெளியிட்டிருக்கிறார் அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவர் அருட் கலாநிதி செல்லத்துரை ஜெபநேசன் அடிகளார்.
"இன்று எமது நாடு பாரிய அழிவைச் சந்தித்துக்கொண்டு நிற்கின்றது. நீதிக்காக - சமாதானத்திற்காக - நிம்மதிக்காக - அமைதியான வாழ்க்கைக்காக - எமது மக்கள் ஏங்கித் தவிக்கின்றார்கள். நீதி கேட்கின்ற மக்கள் அநியாயமாகத் துன்புறுத்தப்படுகின்றார்கள்.

சமாதானத்தை எதிர்பார்த்த மக்கள், அகதிகளாக்கப்பட்டு, நிர்க்கதி நிலையில் பல இன்னல்களினால் நாளாந்தம் செத்துக்கொண்டிருக்கின்றார்கள். நீதி மறுக்கப்படுகின்றது. நிம்மதி குலைக்கப்படுகின்றது. சமாதானம் சிதைக்கப்படுகின்றது." - இப்படிக் கவலையும் விசனமும் தெரிவித்திருக்கின்றார் அமெரிக்கன் இலங்கை மிஷன் தலைவர் வண.ஜெபநேசன் அடிகளார்.

இவ்வாறு மதத் தலைவர்கள் விசனத்துடனும் கவலையுடனும் குறிப்பிட்டு, தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் இறைஞ்சும் அளவுக்கு இந்தத் தேசத்தில் தமிழர்களின் அமைதி வாழ்வு அவலப்பட்டு, பங்கப்பட்டுப்போய் இருக்கின்றது. தமிழினத்துக்கு எதிரான பேரினவாதக் கொடூரம் அவ்வளவு தூரத்துக்கு விஸ்வரூபம் எடுத்து பேயாட்சி புரிகின்றது. தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்ப துயரங்களை எதிர்கொண்டு பேரவலப்பட்டு நிற்கின்றார்கள்.

தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்துவது என்பதைத் தவிர, இனநெருக்கடியைத் தீர்த்து, அமைதியை நிலைநாட்டி, ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை நியாயமான முறையில் தீர்த்து வைப்பதற்கான தெளிவான திட்டம் - உருப்படியானதும், ஆழமான தரிசனத்துடன் நெறிக்கப்பட்டதுமான ஒரு யோசனைப்பொறி - பிரதான சிங்களத் தரப்புகளிடம் என்றும் இருக்கவில்லை. அதற்கான மனப்பக்குவமோ, தாராளமோ அவர்களிடம் அன்றும் இல்லை; இன்றும் இல்லை; இனியும் வரப்போவதும் இல்லை.

தமிழர்களின் நீதி, நியாயமான கோரிக்கைகளை - அவற்றுக்கு மூலமான கோட்பாடுகளின் அடிப்படைகளை - நியாயமான முறையில், புறநிலை நோக்குடன் ஆழமாக அலசிப் பார்த்து, முற்போக்கான முறையில் சிந்தித்து, நியாயம் செய்யும் மனப்பக்குவம், ஆட்சி அதிகாரத்திலிருக்கும் பௌத்த - சிங்களப் பேரினவாதத் தலைமைகளிடம் இல்லவே இல்லை.

அதனால்தான் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்புகளாலும் இன்று முன்வைக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழர்களைக் காப்பாற்றும் அந்தக் கடவுள் யார்?
அவர் எந்த வடிவத்தில் வரமுடியும் என்பதைத் தமிழர்கள் தாமே புரிந்து கொள்ளவேண்டும்.

Comments