வான் படையின் உதவியில் தங்கியுள்ள சிறிலங்காவின் இராணுவ நகர்வு



கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தரைப்படையினரின் முயற்சிகளின் போது அவர்களுக்கு ஏற்பட்டு வரும் பாரிய இழப்புக்கள் காரணமாக வான்படையினரின் உதவிகளைத் தற்போது தரைப்படையினர் அதிகம் நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக கிளிநொச்சியை நோக்கியதான பல முனை நகர்வுகளின் போது சிறிலங்காத் தரைப்படையினர் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கில் படுகாயமடைந்தும் களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையிலும், அதனால் போரிடும் படைச் சிப்பாய்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உளவுரண் பாதிப்புகளினாலும் வான்படையின் உதவிகளை தரைப்படைத் தளபதி சரத்பொன்சேகா அதிகம் எதிர்பார்த்து நிற்பதாகவும், இதனால் தற்போது குண்டு வீச்சு விமானங்களே பயன்படுத்தப்படுவதாக களமுனைச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கிளிநொச்சிக் கிழக்கிலுள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கியும் இவ்விமானங்கள் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்தி வருகின்றன. தற்போது வன்னிக்களமுனைகளில் நாள்தோறும் குண்டு வீச்சு விமானங்களின் நடவடிக்கைகள் அதிகம் முடுக்கிவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று முனத்தினம் இரவு வேளையில் பரந்தன் நகரம் மீது சிறிலங்கா வான்படைக் கிபிர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதனால் நகரம் அதிர்ந்தது. பரந்தன் அந்தோணியார் தேவாலயம், திருக்குடும்ப கன்னியர் மடம், நகர வணிக நிலையங்கள், என்பன மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளன. கால்நடைப் பட்டி மீதும் குண்டு வீழ்ந்து வெடித்ததால் 90ற்கும் அதிகமான கால்நடைகள் கொல்லப்பட்டும் 25ற்கு அதிகமான கால்நடைகள் படுகாயமடைந்துமுள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு வன்னி வான்பரப்பிற்குள் நுழைந்த இரண்டு கிபிர் விமானங்கள் பரந்தன் நகர்மீது அதனை அண்மித்த மக்கள் குடியிருப்புக்கள் மீதும் ஐந்து தடவைகள் குண்டுகளை வீசியுள்ளன. இதில் பரந்தன் புதுக்குடியிருப்பு - வீதியில் அமைந்துள்ள கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கட்டடிடத்தொகுதியில் இரண்டு வணிக நிலையங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

இதனையடுத்து சமநேரத்தில் பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை இலக்கு வைத்து குண்டுகள் வீசப்பட்டன. தேவாலய வளாகத்திற்குள் பரசூட் மூலம் வீசப்படும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் தேவாலயம் சேதமடைந்துள்ளது. அதற்கு அருகில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர்மடம் சேதமடைந்தன. தேவாலய வாசலில் அமைந்துள்ள மாதாசொரூபம் சிதைவடைந்துள்ளது.

மூன்றாவது குண்டுவீச்சுத் தாக்குதல் கால்நடைப் பட்டி மீது இடம்பெற்றிருந்தது. இதில் சிக்கி 90ற்கும் அதிகமான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. 25ற்கும் அதிகமான கால்நடைகள் படுகாயமடைந்துள்ளன. கொல்லப்பட்ட கால்நடைகளின் பாகங்கள் அந்தப் பகுதிகள் எங்கும் சிதறிக் காணப்படுகின்றன. படுகாயமடைந்த கால்நடைகள் அந்த இடங்களிலே உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.

கொல்லப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களான கு.விஐயகுமார் பரந்தன் - குமரபுரம், ப.தவம் குமரபுரம், கி.நாகம்மா குமரபுரம் ஆகியோரின் கால்நடைகளின் அருகில் கண்ணீர் விட்டு அழுத வண்ணட் இருந்தனர். நான்காவது ஐந்தாவது குண்டுத்தாக்குதல்கள் பரந்தன் - ஆனையிறவு வீதியில் அமைந்திருந்த மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இடம்பெற்றிருந்தன. இதில் மக்களின் பத்திற்கும் அதிகமான வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன.

இதேவேளை நேற்றுக்காலை 7.10மணிமுதல் மாலை 4.30மணிரையான நேரத்தில் பரந்தன் குமரபுரம் மற்றும் கிளிநொச்சி நகரப்பகுதிகள் மீதும் நான்கு தடவைகள் கிபிர் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் டிப்போச் சந்தி வணிக நிலையங்கள் என்பன அழிவடைந்துள்ளன.



Comments