ஆவணமாகும் கிளிநொச்சி மருத்துவமனை மீதான சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள்

கிளிநொச்சி மருத்துவமனை பகுதி அண்மைக்காலமாக சிறிலங்கா வான் மற்றும் தரைப் படையினரின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது தொடர்பாக "புதினம்" ஆய்வுப் பிரிவிடம் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள், இத்தாக்குதல் தொடர்பான விபரங்கள் தெளிவான முறையில் ஆவணப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தன.

கிளிநொச்சி மருத்துவமனை பகுதி தொடர்ந்து - அடுத்தடுத்து - சிறிலங்கா வான் படையினரினதும் தரைப்படையினரினதும் தாக்குல்களுக்கு உள்ளாகி வருகின்றது.

அண்மைக்காலத்தில் மட்டும் பதினாறு தடவைகள் இப்பகுதி மீது சிறிலங்கா வான் படை தாக்குதல்களை நடத்தியிருக்கின்றது.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

கிளிநொச்சி நகரை சுற்றிவர அரண் அமைத்து நிலைகொண்டுள்ள சிறிலங்கா தரைப் படையினரது ஆட்டிலறி பீரங்கித் தாக்குதல்களும் இப்பகுதி மீது தொடர்ந்து நடாத்தப்படுகின்றன என மருத்துவமனை வட்டாரங்கள் "புதினம்" ஆய்வகத்திடம் தெரிவித்தன.

இத்தாக்குதல்கள் எல்லாவற்றினதும் ஆதார தகவல்கள் பற்றி கேட்கப்பட்ட போது, அனைத்து ஆதாரங்களும் ஆவணங்களாக உரிய முறையில் சேகரிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, இப்பகுதியில் சிறிலங்கா வான் படையினர் அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் "பரசூட்" மூலம் வீசப்படும் கொத்துக்குண்டு வகைக் குண்டுகளின் சிதறல்களும் அவற்றின் படங்களும் சேத விபரங்களும் சேகரிக்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

இந்த ஆதாரங்கள் அனைத்தும் - சிறிலங்கா அரச படைகள் மருத்துவமனை போன்ற மனிதாபிமான இலக்குகள் மீது நடத்தம் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்துலக மனிதநேய அமைப்புக்கள் மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பரப்புரைகளில் உடனடியாகவே பயன்படுத்தப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனை வட்டாரங்களால் எடுக்கப்பட்ட சில அவணப் புகைப்படங்களும் "புதினம்" ஆய்வகத்திற்கு அவர்களால் வழங்கப்பட்டன.

இப்படங்களின் மூலப் பிரதிகள் தேவையானோர் தயவு செய்து எம்மை நேரடியாக தொடர்புகொள்ளவும்.


[படம்: புதினம்]



Comments