தமிழ் மக்களை காக்க புலிகளை ஆதரிக்கிறோம் - வைகோ


ஈழத்தில் வாழும் தமிழ் மக்களை காக்க விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தோம்; இன்றும் ஆதரிக்கிறோம், நாளையும் ஆதரிப்போம் என்று வைகோ கூறினார்.

சென்னையிலுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பெரியார் சிலையை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திறந்து வைத்து உரையாற்றினார். அங்கு அவர் பேசுகையில்,தமிழர் வாழ்வுக்கு வான்மழையாக திகழும் பெரியாரின் சிலையை திறந்து வைப்பதில் பெரும் பேறு அடைகிறேன். உயிரால், உடலால் பெரியார் மறைந்தாலும் கொள்கைகளால் அவர் வாழ்கிறார். வாழ்நாள் முழுவதும் அஞ்சா நெஞ்சராக விளங்கினார் பெரியார். அவர் வைக்கம் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார்.

ஆலயப்பிரவேசம் போராட்டத்தை நடத்தினார். தூக்கு தண்டணை தந்தாலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முழங்கியவர். அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் கைதாகி சிறையில் இறந்தவர்களில் லால்குடி பெரியசாமியும் ஒருவர். அவர் 16 வயது சிறுவன். அவனை சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தபோது அப்போதைய கவர்னர் அவனை மன்னித்து விட உத்தரவிட்டார். ஆனால் இனிமேல் இப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறினார்.

ஆனால் என்னை விடுதலை செய்தாலும் அரசியல் சட்டத்தை தான் எரிப்பேன் என்றார். எதையும் எதிர்பாராமல் வாழ்ந்தார். அத்தகைய பெரியசாமி போன்ற கொள்கை தங்கங்களை கொண்ட கட்சி ம.தி.மு.க. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ம.தி.மு.க.வை அழிக்க முயற்சி நடந்தது.

எத்தனை சோதனை வந்தபோதிலும் மனம் தளராமல் இருப்பவர்கள் தான் ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தமிழ் ஈழ விடுதலை புலிகளை ஆதரிக்கிறோம். தமிழ் இன மக்களை பாதுகாக்க விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்றார் வைகோ.


Comments