ஈழத்தமிழரும் தமிழகமும், இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது நடந்தது என்ன?

சர்வதேசதமிழ் சமுதாயத்தின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்லக் கூடிய விவாதிக்கக் கூடிய சந்திப்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு அமையவில்லை. ஏதோ கடமைக்கு டில்லி சென்றோம். போர் நிறுத்தத்தை வலியுறத்தினோம் என்கிற அளவில் இந்தச் சந்திப்பு முடிந்து விட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிரதமருடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போது கூறினார்.

இச் சந்திப்பு தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவிக்கையில், எந்த நோக்கத்திற்காக நாங்கள் டில்லிக்கு பயணம் மேற்கொண்டோமோ அது நிறைவேற வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். இலங்கையில் நிரந்தர அமைதி வரவேண்டுமானால் அங்கு சிங்களவர்களும் தமிழர்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்றார்.

லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. இராஜேந்தர் கருத்து தெரிவிக்கையில், ஈழத்தில் நடைபெறும் போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைக் கூட பலிகொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே இந்திய அரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி போர்நிறுத்தம் ஏற்பட வழிகாண வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது இருந்த சூழல் வேறு. தற்போதுள்ள சூழல் வேறு எனக் கூறினார்.

தொல் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்ததாவது; பிரதமரைச் சந்தித்தபோது ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது எங்களது கருத்துக்களை தெளிவாக எடுத்துச் சொன்னோம். என்னுடைய வாய்ப்பின் போது, விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கம் என்கிறர்கள். ஆனால் புலிகளோ தற்போது வெளிப்படையாக போர் நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். ஆனால் சிங்கள அரசு போர் நிறுத்தத்திற்கு தயாராக இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியப் பிரதமரான உங்களை புதுடில்லியில் சந்தித்துப் பேசிய பிறகு, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என்று துணிச்சலாக அறிவிக்கிறார்.

இதனால் தமிழக மக்கள், இந்திய அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களவர் களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாகக் கருதுகிறார்கள். இதனால் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். இத்தகைய சூழல் நீடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பிரதமராகிய உங்களுடைய பொறுப்பு. உங்களுடைய செல்வாக்கை, ஆளுமையைப் பயன்படுத்தி ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அப்போது தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு குறுக்கிட்டு, 'திருமாவளவன்' சொல்லும் கருத்திலிருந்து நான் முரண்படுகிறேன். ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக இல்லை. எல்லோருமே மத்திய அரசை தவறாக நினைப்பதாகச் சொல்வது தவறு' என்றார்.

இதனால் கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது முதல்வர் கலைஞர், 'பேசியது வரை போதும்' என்பதுபோல் என்னைப் பார்த்தார். அதனால், 'போர் நிறுத்தம்தான் இப்போதைய தேவை. இலங்கை அரசிடம் அதை வலியுறுத்தும் கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. இந்திய அரசு நினைத்தால் இதைச் சாதிக்க முடியும். அதற்குரிய வலிமை நமக்கு இருக்கிறது' என்று கூறி அமர்ந்தேன். அடுத்து பேசிய விஜய.டி. இராஜேந்தரும் என் கருத்துக்களையொட்டிப் பேசினார். தமிழக மக்களுக்கு மத்திய அரசின் மீது அதிருப்தியும் வருத்தமும் ஏற்பட்டிருப்பதாக அவரும் சுட்டிக்காட்டிப் பேசியபோது, தங்கபாலு மீண்டும் எழுந்து இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

'விடுதலைப்புலிகளுக்காக நாம் புதுடில்லிக்கு வரவில்லை. ஈழத்தில் தவிக்கும் அப்பாவித் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதற் குதான் நாம் இங்கு வந்திருக்கிறோம். எனவே அவர்களது நிலைகுறித்து மட்டுமே பேசவேண்டும்' என்றார் தங்கபாலு. உடனே மருத்துவர் இராமதாஸ், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன் என எல்லோருமே குறுக்கிட்டு, 'நாங்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வரவில்லை. ஈழத் தமிழர்களுக்காவே டில்லிக்கு வந்திருக்கிறோம். எனவே எங்களுடைய பேச்சை பிரச்னைக்குரியதாக ஆக்கி விடாதீர்கள்' என்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நான் மீண்டும் பேசினேன். 'மத்திய அரசு இதேபோக்கை கடைப்பிடித்தால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மத்திய கூட்டணிக்கு தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்' என்றேன். மீண்டும் பேசிய தங்கபாலு, 'எதற்காகப் இப்படிப் பேசுகிறீர்கள். இப்போது நாம் தேர்தல் குறித்து விவாதிக்க வரவில்லை. எனவே தேர்தல் குறித்து பேசாதீர்கள்' என்றார். இதையடுத்து மற்ற தலைவர்களும் பேசிய பிறகு இறுதியாக முதல் அமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது இலங்கை பிரச்னை குறித்து அந்நாட்டுடன் கலந்து பேச உடனடியாக மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் கொழும்புக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பிரதமர் மன்மோகன்சிங் மறுப்புத் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார். அதிகாரிகளுடன் கலந்து பேசி பிரணாப் முகர்ஜி எப்போது இலங்கை செல்வார் என்பதை விரைவில் தெரிவிப்பதாகப் பிரதமர் சொன்னார். பின்னர் பிரணாப் முகர்ஜியும் பிரதமரும் சுமார் ஐந்து நிமிடங்கள்போல் எங்கள் மத்தியில் பேசினர். இருவரும் ஒரே மாதிரியான விஷயங்களைத்தான் பகிர்ந்து கொண்டனர். பிரதமர் பேசும்போது, 'சிங்கள அரசாங்கம் ஒன்றும் பிடிவாதமாக இல்லை. இலங்கை அரசும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஆயுதங்களைக் கைவிட்டு அதன் பிறகு பேச்சு மேசைக்கு வந்தால்தான் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க முடியும் என்று அந்நாடு கருதுகிறது.

தன்னையேகூட விடுதலைப்புலிகள் கொன்று விடுவார்கள் என ராஜபக்ஷ கருதுகிறார். புலிகள் பயங்கரவாத இயக்கம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் பிரதமர். ஆக ஒட்டுமொத்தத்தில் இந்தியப் பிரதமரின் பேச்சும், பிரணாப் முகர்ஜியின் பேச்சும் சிங்கள அரசுக்கு வக்காலத்துக்கு வாங்குவதுபோல் தான் அமைந்திருந்தது. தன்னையே கொலை செய்துவிடுவதாக ராஜபக்ஷ கருதுவதாகவும், இதை இலங்கை அரசுத் தரப்பு தன்னிடம் தெரிவித்ததாகவும் பிரதமர் எங்களிடம் சொன்னார். எனவே பிரதமரைச் சந்தித்தபோது, இந்தியாவின் உதவிகளை பெற்றுக்கொண்டு இந்திய அரசுக்கு, இலங்கை அரசு எவ்வாறெல்லாம் கெட்டபெயரை ஏற்படுத்துகிறது என்பதையும், இதனால் மத்திய அரசுக்கு அடுத்து வரும் தேர்தல்களில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் நாம் சரியாக எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்ய தவறிவிட்டதாகவே கருதுகிறேன்.

கே: பிரணாப் முகர்ஜியுடன் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களும் இலங்கைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்தத்தை வலியுறுத்துவது சரியான நடவடிக்கையாக இருக்குமா?

ப: இதற்கு சாத்தியம் இருப்பதாகவோ, இத்தகைய நடவடிக்கை சரியான ஒன்றாக இருக்கு மென்றோ சொல்வதற்கில்லை. இப்படியொரு கோரிக்கையை முன்வைத்தாலும், பலன் இருக்காது. ஏனெனில் இலங்கை அரசுடன் பேசுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. அமெரிக்காவில் இருப்பதுபோல் இலங்கையிலும் ஒற்றை ஆட்சி முறை வரவேண்டும் என்பதுபோல் எங்களுடன் வந்த சிலர் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இது கொள்கை முடிவு என்பதால் இலங்கை அரசுதான் இதுகுறித்து தீர்மானிக்க வேண்டும்.

மேலும் என்னைப் போன்றவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர இலங்கை அரசு ஒப்புக்கொள்ளாது. எதிரிகளாகத்தான் எங்களைப் பார்ப்பார்கள். புலிகள் போர் நிறுத்தம் செய்ய முன் வந்திருக்கிறார்கள். அதேபோல் இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

என்னைப் பொறுத்த வரையில் பிரதமரைச் சந்திப்பதற்கு முன்பு தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள், முதல்வர் கலைஞருடன் முன்கூட்டியே இதுகுறித்த விவாதித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் டில்லிக்குச் சென்றது சரியல்ல. போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சென்னையிலிருந்து டில்லிக்குச் சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை தமிழகத்திலிருந்தபடியே வலியுறுத்தியிருக்கலாம். மாறாக ஈழத் தமிழர்கள் எந்தளவு இன்னல்களைச் சந்திக்கிறார்கள், இலங்கை இராணுவம் எப்படியெல்லாம் குண்டு மழை பொழிகிறது, என்ன வகையான குண்டுகளை இராணுவம் பயன்படுத்துகிறது என்பதையெல்லாம் நாம் பிரதமரிடம் விவரிக்க இந்தச் சந்திப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

மேலும் இந்திய அரசு இலங்கைக்கு செய்யக்கூடிய உதவிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எந்தக் கோணத்தில் பார்க்கிறார்கள், எந்தளவு இந்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னால்தான் பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உண்மை புரிய வரும். ஆனால் ஏதோ கடமைக்காக டில்லிக்குச் சென்றோம், போர் நிறுத்தத்தை வலியுறுத்தினோம் என்கிற அளவில் இந்தச் சந்திப்பு முடிந்துவிட்டது. அதாவது போர் நிறுத்தக் கோரிக்கையை வலியுறுத்தும் சந்திப்பாக இது அமைந்ததே தவிர, சர்வதேச தமிழ்ச் சமுதாயத்தின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்லக்கூடிய, விவாதிக்கக்கூடிய சந்திப்பாக அமையவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு.

கே: உங்களுடைய அடுத்தகட்ட நட வடிக்கை என்னவாக இருக்கும்?

ப: என்னுடைய இந்த அதிருப்தியை, எண்ணத்தை தமிழக முதல்வரை அடுத்து சந்திக்கும் போது நான் எடுத்துச் சொல்வேன்.

கே: ஆக, பிரதமருடான சந்திப்பு வீணாகி விட்டது என்கிறீர்களா?

ப: ஒட்டு மொத்தத்தில் பிரதமருடான சந்திப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் கலைஞர் மீதுள்ள மதிப்பின் காரணமாகவும், கூட்டணித் தலைவராகிய கலைஞர் வலியுறுத்தினார் என்பதற்காகவும் தான் தற்போது பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் முடிவு செய்திருக்கிறார். இது ஒப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே எனக்குப்படுகிறது. மாறாக ஈழத்தமிழர்களின் மீதான உண்மையான அக்கறையின் அடிப்படையில், பிரச்சினையை மடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக எனக்குத் தெரியவில்லை.

டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது;

பிரதமரைச் சந்திப்பதற்காக தமிழகத்திலிருந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட டில்லிப் பயணத்தை ஒட்டுமொத்தமாகக் குறைகூறுவது சரியல்ல. ஆங்கிலத்தில் 'சம்திங் இஸ் பெட்டர் தன் நத்திங்' என்பார்கள். அந்த வகையில் இலங்கை பிரச்சினை தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதை விட, தமிழக மற்றும் இந்திய அரசு இந்தளவுக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

எந்த நோக்கத்திற்காக நாங்கள் டில்லிக்குப் பயணம் மேற்கொண்டோமோ அது நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அங்கு இருதரப்பினரும் ஜனநாயக பூர்வமான பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்கிறோம். அனைத்துக் கட்சிக் குழுவினர் வலியுறுத்திய இக்கருத்தினை ஏற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் இது தொடர்பாக இலங்கை அரசிடம் பேசுவதாகக் கூறியதுடன், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் அங்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.

பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர்தான் யோசனை தெரிவித்தார். அதற்கு பிரதமர் எந்த மறுப்பும் சொல்லாமல், உடனே ஏற்றுக் கொண்டு, உடனடியாக பிரணாப்புடன் பேசியது எங்களுக்கு மனநிறைவைத் தந்தது. புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்தவரையில் பிரணாப் முகர்ஜி உடனடியாக கொழும்புக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர் தனியாகச் செல்லாமல், புதுடில்லிக்கு வந்து பிரதமரைச் சந்தித்த தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவொன்றையும் உடன் அழைத்துச் செல்வதுதான் சரியாக இருக்கும்.

அவர் தனியாகச் சென்றால், கொழும்பில் என்ன பேசினார், என்னென்ன நடவடிக்கைகளை அடுத்து மேற்கொள்வார், இலங்கை அரசுத் தரப்பினர் கூறியது என்ன என்பன போன்ற விவரங்கள் பிறகு முழுமையாகத் தெரியாமல் போய்விடக் கூடிய வாய்ப்புண்டு. பிரதமரைச் சந்தித்தபோது எங்களில் சிலர் கூறிய கருத்துக்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுவது உண்மையல்ல. அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்யும்.

ஆனால் ஈழப் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதற்கு காங்கிரஸாரும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். கூட்டத்திற்கு சற்று தாமதமாக வந்த பிரணாப் முகர்ஜியும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டதா, அவை ஒழுங்காக விநியோகிக்கப்படுகிறதா என்பதை தீவிரமாகக் கண்காணிக்கப் போவதாக உறுதி அளித்தார். என்னைப் பொறுத்தவரையில் பிரதமரிடம் ஒரு விஷயத்தை முக்கியமாக வலியுறுத்தினேன். இலங்கை உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இலங்கையில் நிரந்தர அமைதி வரவேண்டுமானால் அங்கு சிங்களவர்களும், தமிழர்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.

அங்கு இரண்டு மொழிகள் இருந்தால் ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழிதான் இருக்கும் என்றால் இலங்கை இரண்டு நாடாகும் என்று கொல்வின் ஆர்.டி. சில்வா என்ற அறிஞர் கூறியதை சுட்டிக்காட் டினேன்.

விஜய டி. இராஜேந்தர்

இலட்சிய தி.மு.க தலைவர் விஜய டி. இராஜேந்தர் கூறியதாவது;


விடுதலைப்புலிகள் என்றாலே தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்பாலு பதற்றமாகி விடுகிறார். பிரதமரை நாங்கள் சந்தித்தபோது, ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நான் என்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாக தெளிவாக முன்வைத்தேன். முதற்கட்டமாக செஞ்சிலுவை சங்கம் மூலமாக ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவித்தேன்.

ஆனால் இதுவரை நம்முடைய முக்கிய கோரிக்கையான போர் நிறுத்தம் என்பது இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். இன்று ஈழத்தில் நடைபெறும் போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைக்கூட பலி கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே இந்திய அரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட வழிகாண வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டோது இருந்த சூழல் வேறு, தற்போதுள்ள சூழல் வேறு.

ராஜீவ் படுகொலை காரணமாக விடுதலைப்புலிகள் மீதும், தீவிரவாதத்தின் மீதும் மக்களுக்கு அன்று வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். காரணம் ராஜீவ் என்ற பெரிய தலைவரை நாம் இழந்திருந்தோம். ஆனால் அச்சம்பவம் நிகழ்ந்து பல வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்று அப்பாவித் தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்படுவதைக் கண்டு தமிழகத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு அவர்கள் மீது பரிதாபம்தான் ஏற்பட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகள் மீதுள்ள வெறுப்பினாலும், அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதாலும், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமான இருந்துவிடக் கூடாது என்று நான் கூறினேன். நான் இப்படிச் சொன்னதும் என்னுடைய கருத்துக்களை முடக்கும் வகையில் தங்கபாலு எழுந்து பேசினார். நான் மீண்டும் எதிர்த்துப் பேசும்போது, "விடுதலைப்புலிகளைப் பழி வாங்க நினைக்கிறீர்கள். உங்களுடைய இந்த எண்ணத்தினால்தான் ஈழத் தமிழர்களுக்கு உங்களால் உதவ முடியாமல் போய்விட்டது' என்றேன். இதைத் தைரியமாகச் சொன்னேன்.

அதனால்தான் தமிழக நாளேடுகளில், தங்கபாலு தடுத்தபோதும்கூட 'டி.ஆர். பேசட்டும். அவரது கருத்துக்களைச் சொல்லட்டும்' என்று பிரதமரே சொன்னதாக செய்தி வெளியாகியிருக்கிறது. நான் எதற்கும் பயப்படாமல் என் கருத்துக்களைச் சொல்லக்கூடியவன் என்பது இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது. ஏனெனில் நான் பேசுவதெல்லாம் உண்மை. தங்கபாலு இன்னமும் பழைய பல்லவியைத் தான் பாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களைப் பற்றி பேச அவர் தயாராக இல்லை.

பிரனாப் முகர்ஜியுடன் சேர்ந்து தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களும் இலங்கைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை. நம்முடைய கருத்துக்களை முதல்வரிடம், வெளியுறவு அமைச்சரிடம், பிரதமரிடம் சொல்வது நம் கடமை. அதேபோல் நம் கருத்துக்களை இலங்கையிடம் தெரிவிப்பது சம்பந்தப்பட்ட இம்மூவரின் கடமை. நம் தரப்பில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை உலகத் தமிழர்களுக்குச் எடுத்துச் சொல்லும் விதமாகவேனும் பிரணாப் முகர்ஜியின் பயணம் கைகொடுக்கும்.

மற்றபடி அவரது பயணமானது ஈழத்தமிழர் பிரச்சினை தீர வழிவக்குமா என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரமல்ல. விடுதலைப் போராளிகள் போர் நிறுத்தத்திற்கு தயாராக உள்ளபோதிலும், இலங்கை அரசு அதற்கு தயாராக இல்லை என்பதை நாங் கள் வலியுறுத்தியபோது பிரதமரும் பிரணாப் முகர்ஜியும் சில கருத்துக்களைத் தெரிவித்தனர். போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாகவும், போர் நிறுத் தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.

எனவே கடந்த கால கசப்பான அனுபவங்களைக் கருத்தில் கொண்டு தான் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தியிருப்பதாக பிரதமர் கூறினார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இதை ஏற்க முடியாது. போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு தயாராக இல்லை. அதனால் தான் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷ கூறுகிறார்.

இது வெறும் பசப்பு வார்த்தை. இப்படியெல்லாம் சொல்லி போர் நிறுத்தம் செய்யாமல் இருப்பதை அவர் நியாயப்படுத்துகிறார். தன்னையும் தன் மனைவியையும் தன்னைச் சார்ந்தவர்களையும் விடுதலைப்புலிகள் கொன்றுவிடுவார்கள் என்று ராஜபக்ஷ கருதுகிறார் என்பதுபோல் எங்களிடம் தெரிவிக் கப்பட்டது. ஆனால் இப்படியெல்லாம் சில காரணங்களைச் சொல்லி போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை இலங்கை அரசு தட்டிக்கழிக்கப் பார்க்கிறது.

விடுதலை இயக்கம் பலமுறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக சொல்கிறார்களே... அப்படியானால் எத்தனை முறை இலங்கை அரசு இதே தவறைச் செய்திருக்கிறது. எத்தனை முறை தான் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு மீறியிருக்கிறது? இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- தமிழகத்தில் இருந்து தமிழன்

Comments