தடைஉடைக்க…

வேகமான இடப்பெயர்வுகளின் பின்னணி யில் எமது பொருளாதார பலம் நொருக்கப்பட்டு வருகிறது. பொருளாதார பலம் நொருக்கப்பட்டால், முதலில் தொழில்வாய்ப்புக்கள் அருகிப் போவதும், அன்றாட வருமானம் இல்லாது போவதும் தொடரும் இடர்களாகும்.

தனி நபராகவுள்ள தொழில் கொள்வோர், தமது வேலையாட்களிடம் அதிக வேலையைச் செய்விக்கவும், குறைந்த கூலியை வழங்கவும் முடிகிறது. குறிப்பாக சாதாரண மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்து போய் விட்டது.

இந்த நிலையில் வாழ்வாதாரத்தையும், அதேயளவு வாழ்க்கைத் துணையையும் இழந்த பெண்களின் நிலை மிக மோசமாகி வருகிறது. பெண்களால் செய்யப்பட்டு வந்த தொழில்களில் அதிகமானவை சந்தை வாய்ப்பை இழந்துள்ளன. இதேயளவுக்கு கட்டடப் பொருட்கள், மரவேலை செய்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆயினும் கூட, களமுனைகளுக்கான உலருணவுத் தயாரிப்பில் பெண்கள் அதிகமாகப் பங்கேற்றுள்ளனர்.

வெறுமனே அடுக்களையுள் கிடந்து அல்லாடுவதை விட்டுத் தமது பணிகளை நாட்டுக்கான பணிகளாக மாற்றிவிட்டிருப்பதும் தெரிகிறது.

மாவீரர்களுக்கான வேலைத்திட்டங்களில் பெண்கள், ஊர்ப்பெண்கள் முன்நின்று செயற்படுவதைப் பல இடங்களில் காணக் கூடியதாகவுள்ளது. இதேபோன்று குடும்பவிபரங்கள் திரட்டுவதிலும் முகவரி மாறிவிட்ட போராளிகளின் விபரங்களைச் சேகரிப்பதிலும் கூடப் பல பெண்கள் ஈடுபட் டுள்ளனர். இருந்தும் என்ன, மாவீரர்களாகி விட்டவர்களின் உறவினர் நண்பர்களைத் தேடும் பணியும் நடைபெறவே செய்கிறது.

சரி, மாலை கட்டவும், படங்களை வழங்கவும் அஞ்சலி செய்வதும்தான் தமது பணி என்றில்லாமல் தன் பிள்ளைகளின் சுமையைப் பேரன் பேத்தியாக உள்ளவர்களிடம் கொடுத்து விட்டுக் களமுனைக்குச் சென்ற பெண்களையும் தமிழீழம் கொண்டுள்ளது என்பது நம்மில் அநேகருக்குத் தெரியாது. தொழில் பயிற்சி அதனூடான வளர்ச்சி, நிரந்தர வருமானம் என்பது கேள்விக்குள்ளாகிவிட்டது. எந்தத் தொழிலையும் நிரந்தரமாகச் செய்ய முடியாது. எமக்கென் றொரு நிரந்தர எதிரி இருக்கும்வரை, நிரந்தரப் பகை உள்ளவரை அது முடியாது. ஆகவேதான் என் இரு பிள்ளைகளையும், என் அம்மாவிடம் கொடுத்துவிட்டு நான் போர்ப் பயிற்சியைப் பெற்றேன் என்றார் நந்தினி.

தேசியத் துணைப்படையில் இணைந்து கொண்ட அநேக பெண்கள் தாய்மார்களாகவும் உள்ளனர். பிள்ளைகளை விட்டுவரப் பெற்றோர் இல்லாதவர்கள் காப்பகங்களில் அவர்களைச் சேர்த்து விட்டுள்ளனர். நேர்த் தியான கல்வி, பாதுகாப்பு, உணவு, உடை, உறையுள் என்பன உறுதி செய்யப் பட்டிருப்பதால் நிம்மதியாகத் தமது தேசப்பணி யாற்றி வருகின்றனர்.

ஏற்கெனவே போராளி மாவீரர் குடும்பத்துப் பெண்களும் உள்ளனர். இப்போது நான் பழைய, மிகப் பழைய புறநானூற்றுச் சம்பவத் தைத் திருப்பிப் பார்த்தால் இன்று வரை எந்தப் பேச்சாளரும், கவிஞரும், இலக்கியப் படைப் பாளிகளும் திரும்பிப் பாராத பக்கமாக உள்ளது தமிழ் ஈழத்துப் பெண்களின் சாதனை.

முன்னாள் தந்தை போருக்குப் போய் உயிர் விட்டான். மறுநாள் அண்ணன் போனான் அவனும் அக்களத்தில் மாண்டான். அந்தப் பெண் தன் பாலனைப் போருக்கு அனுப்பினா ளாம். தன் ஒன்பது வயது மகனைப் போருக்கு அனுப்பியவளுக்கு அவனைக் கட்டியழவும், பெருமைப்படமுடிந்ததே தவிர, தானும் களம்புக முடியவில்லை. ஆனால் எமது பெண்கள் வெற்றித் திலகமிட்டுக் கணவனை அனுப்பும் பெண்கள், போர்க் கோலத்தில்தான் நிற்கிறார்கள். குழந்தைகளை பெற்றோருடன் விட்டுவிட்டுக் களமுனையில் சாதனை படைத்து வீரச்சாவடைந்த தாய்மார் களையும் எமது மண், இந்த வீறார்ந்த போராட் டம் சந்தித்துள்ளது. இப்படி வீரச்சாவடைந்த பெண்ணுக்கு அவள் மகன் போராளியாகச் சீருடையில் நின்று மண்போட்டதையும், செந்தாளினி என்ற மாவீரருடைய வீரச்சாவின் போது சந்தித்தோம்.

மேஜர் செந்தாளினியின் கணவன் அண்மையில் வீரச்சாவைத் தழுவிக்கொண் டுள்ளார். வரலாறு என்ன சொல்கிறது தமிழீழப் போராட்ட வரலாற்றுக்கு முன்பே நடந்த சம்பவங்கள் உண்டு என்கிறது.

சோவியத் ரஸ்யா ஜேர்மனியப் படைகளுக்கெதிரான போரில் ஈடுபட்டிருந்த போது ஆழ ஊடுருவும் படையினரைக் கண்காணிக்கவெனக் காடுகளுள் போடப்பட்டிருந்த முகாம் ஒன்றில் ஒரு படைப்பிரிவில் பணியாற்றிய பெண்கள் பற்றிய கதையைப் படித்துள்ளேன் அற்புதமான கதை. படைத்தலைவனுக்குத் தெரியாமல் அயல் கிராமமொன்றில் வசிக்கும் தன் குழந்தையையும் பெற்றோரையும் பார்ப்பதற்காகத் தன் தோழியிடம் கூறிவிட்டு இரவில் நழுவுகிறாள் ஒருத்தி. அதிகாலை அமைதியில் அவள் முகாமுக்குத் திரும்புகிறாள். அப்போது அந்த முகாமுன் பின்புறக் காட்டில் புதியவர்களை அவள் கண்டு விடுகிறாள்.

படைத்தலைவனுக்கு அறிவித்தாயிற்று. அங்கு காணப்பட்டவர்கள் ஜேர்மானியர்கள் என்றால் அவர்கள் ஒரு குறித்த பாலத்துக்குக் கண்ணி வைப்பதற்காகவே போகிறார்கள். அவர்கள் போகும்பாதை அவர்களை ஒரு வாரத்தில் அந்த இடத்தில் சேர்ப்பிக்கும. அவர்களை எதிர்கொள்ள இவர்கள் போகவேண்டிய பாதையோ பத்து நாட்கள் பிடிக்கும். ஆகவே குறுக்கு வழிகளில் முன்னேறி எதிரியை மடக்கப் புறப்படுகின்றனர்.

ஆரம்பத்தில் பெண்களையா எனக்குத் தருகிறீர்கள்? என்று அலுத்துக் கொண்ட அந்தப் படைத்தலைவன், அவர்களது ஓர்மத்தையும், துணிவையும் கண்டு வியக்கிறான். அவர்களுக்குள் ஒரு உறவு நிலை ஏற்பட அவன் மிகவும் பரிவாக யுத்தக்களத்தின் நெளிவு சுழிவுகளைக் கற்பித்தவாறே நகருகின்றனர். கொடும் பனி, உணவுத்தட்டுப்பாடு, சேற்றுப் புதைகுழிகள் எனக் கடந்து இடையிடையே எதிரிகளுடன் மோதலையும் செய்து முன்னேறிப் பாலத்தை எதிரி எட்டாத வாறு அவர்களை முடித்து வெற்றி வாகை சூடினாலும், இறுதியில் படைத்தலைவனும் எதிரியை முதல் கண்டவளுமே மிஞ்சுகின்றனர். இந்நிலையில் எதிரிகளுள் மீதமிருந்த ஒருவன் எதிர்ப்பட மோதல் வெடிக்கிறது. அவள் படைத் தலைவனைக் காப்பாற்றும் முயற்சியில் தன்னுயிரை விடப் படைத்தலைவனுக்கும் ஒரு கை பறிபோக, ஒரு கையாலேயே எதிரியைக் கொல்கிறான் படைத்தலைவன்.

அற்புதமான மயிர்க்கூச்செறியவைக்கும் இந்த வரலாறுகளை இன்னும் நாங்கள் பார்க்க மறந்திருந்தால் இங்கே பார்ப்போம். தமிழீழப் பெண்களின் வரலாறுகள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும். அவர்களது சாதனைகள் கட்டு ரைக்குள் அடங்காமல், கதைகளுக்குள் வர வேண்டும். பொருளாதாரத் தடை தொழில் தடை என்பதெல்லாம் எதிரியால் வந்த தடைதான்.

தடையுடைக்கப் புறப்பட வேண்டுமானால், தாயென்ன? மகளென்ன, தட்டிக்குப் பின்னால் தலையை வைத்திராமல் தட்டிக்கேட்கப் புறப்பட வேண்டும் தந்தையரும்தான்.

-மாயா-

தமிழ்க்கதிர்



Comments