மும்பைத் தாக்குதல்களுக்கு பின்புல மையமாக பாக்.!



பயங்கரவாதிகள் குழு ஒன்று மும்பையில் கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடத்திய வெறியாட்டத்தில் 183 பேர் வரை உயிரிழந்திருக்கின்றார்கள். மேலும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றார்கள். பல்லாயிரம் கோடி ரூபாவுக்கு சேதங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த அராஜகத்தால் நேரடியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகின்ற உல்லாசப் பிரயாணத்துறை, வர்த்தகத்துறை போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்படப்போகும் பேரிழப்பு கணக்கிட முடியாதது.

இந்தக் கொடூரத் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்கெட்டு, பகைமை முற்றி, இரு தரப்புகளுமே கறுவிக் கொண்டு மோதலுக்குத் தயாராகும் சூழலுக்கு நிலைமை போய்விட்டது. இரு நாடுகளினதும் எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்புகளுமே தங்களது துருப்புகளையும் ஆயுதத் தளபாடங்களையும் பெரும் எடுப்பில் எல்லைகளை நோக்கி நகர்த்தத் தயாராகி விட்டன. எச்சமயத்திலும் - எந்நேரத்திலும் - யுத்தம் வெடிக்கலாம் என்ற மோசமான நிலைமைக்கு சூழல் தள்ளப்பட்டு விட்டது.
தீவிரவாதிகளின் தாக்குதலினால் சீற்றமுற்றிருக்கும் இந்தியா, அத்தாக்குதலுக்குப் பழிவாங்காமல் அடங்கப்போவதில்லை, அடங்குவதில் அர்த்தமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாகத் தெரிகின்றது.

இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் நேரடியாகப் பின்னணியா - பாகிஸ்தானின் ஆசி, வழிகாட்டல், ஒத்துழைப்பு, உதவி ஆகியவற்றுடன்தான் இத்தாக்குதலை இந்தப் பயங்கரவாதிகள் குழு மேற்கொண்டதா - என்பவையெல்லாம் வேறு விடயங்கள்.

ஆனால், தாக்குதலை நடத்தியோர் நேரடியாகப் பாகிஸ்தானில் இருந்து - கராச்சியில் இருந்து புறப்பட்டு - வந்துதான் இந்தக் கொடூரத்தைப் புரிந்திருக்கின்றார்கள் என்பதை இந்தியா தெளிவாகக் கண்டுபிடித்து உறுதிப்படுத்தி விட்டது. இந்த நிலையில் இவ்விவகாரத்தை ஒட்டிப் பாகிஸ்தானின் செயற்பாடு இனி எப்படி அமையப்போகின்றது என்பதே முக்கிய கேள்வியாகும்.

இது தீவிரவாதிகளின் கைவரிசை என்றும், இதற்கும் பாகிஸ்தான் அரசுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிவ் அலி சர்தாரி கூறி, மெல்ல விடயத்தைக் கைகழுவி விடப் பார்க்கின்றார்.

சயேச்சையாகச் செயற்படும் இந்தத் தீவிரவாதிகள் இந்தப் பிராந்தியத்தில் நாடுகள் இடையே பிணக்கையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி யுத்தங்களைத் தோற்றுவிக்கக் கூடிய வல்லமை படைத்தவர்கள் என்றும் அவர் கூறுகின்றார். ஆகவே, தீவிரவாதிகள் செய்த தவறுக்காகப் பாகிஸ்தானைத் தண்டிக்க முயற்சிக்க வேண்டாம் என்று இந்தியாவைப் பார்த்து அவர் கோருகின்றார்.

அவரது கருத்தில் உண்மை இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயற்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுவந்து அயல்நாடான இந்தியாவில் இத்தகைய கொடூரங்களைப் புரியும்போது, இதற்கும் எமக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை என்ற மறுப்பை மட்டும் வெளியிடுவதுடன் இந்த விடயத்திலிருந்து பாகிஸ்தான் தப்பிவிட முடியாது.

தாக்குதலாளிகள் கராச்சியில் இருந்து புறப்பட்டிருக்கின்றார்கள். அச்சமயம் அவர்களது கப்பலில் இக் கொடூரத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் இருக்கவில்லை. இடைவழியில் அவை தாய்க்கப்பல் ஒன்றின் மூலம் விநியோகிக்கப்பட்டு, அதிலிருந்து றப்பர் படகுகள் மூலம் மும்பைக் கரையை அவர்கள் வந்தடைந்திருக்கின்றார்கள்.

மும்பையில் அவர்கள் நடத்திய தாக்குதல் கனகச்சிதமாகத் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. நீண்டகாலம் நன்கு திரட்டப்பட்ட உளவுத் தகவல்கள், அவற்றைக் கோத்து கனகச்சிதமாகத் தயாரிக்கப்பட்ட திட்டங்கள், உறுதியான வழிகாட்டல் நடவடிக்கைகள் போன்ற பின்புலங்களை நோக்கும்போது வலிமையான கை ஒன்றின் பின்னணி இல்லாமல் இந்தக் கொடூரம் ஒப்பேறியிருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமல்ல, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பேசிய மொழி அவர்கள் பாகிஸ்தானியப் பின்னணியினரே என்பதை உறுதிப்படுத்துகின்றது. தாக்குதல் சமயம் அவர்கள் உரையாடிய தொலைபேசிகளில் பதிவாகியுள்ள இலக்கங்கள், தாக்குதலுக்கு உரிமை கோரி இஸ்லாமியத் தீவிரவாதிகள் விடுத்த மின் அஞ்சல் லாகூரில் இருந்து அனுப்பப்பட்டவை போன்றவை எல்லாம் இக் கொடூரத்தின் பின்புல மையம் பாகிஸ்தான் என்பதை ஐயந்திரிபறத் தெளிவுபடுத்தி விட்டன.

இந்தப் பின்புலச் செயற்பாட்டில் பாகிஸ்தான் அரச நிர்வாகத்துக்கு நேரடிப் பங்கு உள்ளதா, இல்லையா என்பது வேறுவிடயம்.

ஆனால் தனது நாட்டை மையமாக வைத்து அயல்நாடு ஒன்றை மோசமாகப் பாதிக்கச்செய்யும்வகையில், தீவிரவாதிகள் இயங்குவதற்கு பாகிஸ்தான் இடமளித்து நிற்பது பெரும் தவறே.

பாகிஸ்தானை மையமாகக்கொண்ட தரப்புகளால் ஆப்கானிஸ்தான் இன்று குட்டிச்சுவராகிப் போயுள்ளது. அதே நிலைமை இப்பிராந்தியத்தின் பேரரசான இந்தியாவுக்கும் நேர அனுமதிக்கவோ - இடமளிக்கவோ - கூடாது.

இவ்விடயத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியா அதற்குத் தகுந்த - உறுதியான - பதிலடி நடவடிக்கை எடுப்பதையும் யாரும் தவறு என்று கூறமுடியாது.

அதேசமயம், இத்தகைய மதத் தீவிரவாதம் விளையும் மையங்களோடு, இப்பிராந்தியத்தில் நேசம் பாராட்டிச் செயற்படும் தேசங்கள் குறித்தும் இந்தியா முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.



Comments