இலங்கையின் இராஜதந்திரத்தினுள் அடங்கிப் போன இந்தியா

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வரப்போகிறார். போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவே அவர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்துக்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அப்படி அவர் வந்தாலும் போர் நிலையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுமா என்ற கேள்வி பலரிடமும் காணப்படுகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்த ஒரு கட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னரும் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வரப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

பின்னர் ஜனாதிபதி மஹிந்தவுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசி மூலம் பேசிய போது தனது சகோதரர் பசில் ராஜபக்ஷவை புதுடில்லிக்கு அனுப்பி வைப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் விஜயம் கைவிடப்பட்டது. பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு வந்தால் வழக்கம் போலவே பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கருத்துக்களை அறிந்து கொள்வார். ஆனால் அதற்கிடையில் இலங்கை அரசு பசில் ராஜபக்ஷவை புதுடில்லிக்கு அனுப்பி பிரச்சினையின் வேகத்தை தணித்து விட்டது.

அதுமட்டுமன்றி முன்னர் வலியுறுத்தப்பட்ட போர்நிறுத்தம் என்பது வலுவிழந்து போய் நிவாரண விநியோகம் என்று விவகாரம் திருப்பி விடப்பட்டது. இந்த விடயத்தில் இலங்கையின் இராஜதந்திரத்தினுள் இந்தியா அடங்கிப் போனதென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தமிழக முதல்வர் கருணாநிதியை இந்தியாவின் நிலைப்பாட்டுக்குள் வளைத்துப் போட்டுக் கொண்ட பிரணாப் முகர்ஜிதான் இப்போது இலங்கை வரவுள்ளார். பிரணாப் முகர்ஜியின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போன கருணாநிதி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு போய் மன்மோகன்சிங் முன்பாக நிறுத்தி முன் வைத்த கோரிக்கையின் பேரில்தான் அவரது விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது பேசப்படவுள்ள விடயங்கள் என்ன? என்பது முக்கியமானவை. அனைத்துக்கட்சித் தலைவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு முன்னர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்மோகன் சிங்கைச் சந்தித்து போர்நிறுத்தத்துக்கு இலங்கை அரசை நிர்ப்பந்திக்குமாறு வலியுறுத்தியிருந்தனர். அதற்கு மன்மோகன் சிங், இது குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுடன் பேசுவதாக குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரிலும் தான் பிரணாப் முகர்ஜியின் வருகை இடம்பெறவுள்ளது.

போர்நிறுத்தமே தமிழகத்தின் இப்போதைய ஒன்றுபட்ட குரலாக ஒலிக்கின்ற நிலையில் பிரணாப் முகர்ஜியின் பேச்சும் அது சார்ந்ததாகவே இருக்கும். அப்படி இல்லாமல் போனால் தமிழகத்தின் அழுத்தங்கள் மத்திய அரசுக்கு இன்னும் அதிகமாகலாம். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு போர்நிறுத்தம் என்பதற்கு முற்றிலும் மாறானதாகவே இருக்கிறது. புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடையும் வரை போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அரசாங்கம் திட்டவட்டமாகக் கூறுகிறது.

கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் போர்நிறுத்தம் என்ற பேச்சை அடியோடு நிராகரித்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி போர்நிறுத்தம் செய்யுமாறு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் ஆனால் எதற்கும் அரசாங்கம் அடி பணியாது என்றும் தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவோ, புலிகள் ஆயுங்களைக் கீழே போட்டு சரணடையும் வரை போர்நிறுத்தம் இல்லை என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் அழுத்தங்கள் இருந்தாலும் கூட போர் நிறுத்தம் என்பது சாத்தியமே இல்லை என்பது தான் அவரது கருத்தாக இருக்கிறது. போர்நிறுத்தம் என்ற விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் தென்படாத நிலையிலும் அதற்கு இந்தியா ஏற்கனவே ஆசீர்வாதம் அளித்திருக்கின்ற நிலையிலும் இப்போது பிரணாப் முகர்ஜியால் வலியுறுத்தக் கூடிய விடயங்கள் எதுவுமே இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் தமிழகக் கட்சிகளின் அழுத்தங்களை இந்திய மத்திய அரசினால் தட்டிக் கழிக்க முடியாதிருக்கிறது. அதேவேளை புலிகளை அழிக்கின்ற வேகத்தில் இருக்கின்ற இலங்கை அரசுக்கு தமது ஆசீர்வாதத்தையும் மன்மோகன்சிங் அரசினால் மறுக்க முடியாதிருக்கிறது.

இந்தக் கட்டத்தில் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு வருகை எதைச் சாதிக்கப் போகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு. முன்னர் ஒரு கட்டத்தில் கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் போர்நிறுத்தம் அறிவிப்பதென்று ஒரு இணக்கம் இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையில் ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், கிளிநொச்சிக்கான சண்டைகள் நீளுகின்ற நிலையில் அரசாங்கம் வலிந்து சென்று போரை நிறுத்த முன்வர வாய்ப்பே இல்லை. அதேவேளை இந்தியாவும் போர்நிறுத்தத்துக்கு வலியுறுத்தி இலங்கை அரசை இணங்க வைக்க முடியாத நிலையில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளுமேயானால் அதன் பிராந்திய வல்லாண்மை மீது கேள்வியை எழுப்ப வைக்கும்.

இந்தக் கட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு தர்ம சங்கடமான நிலை. அதாவது இலங்கையில் நடைபெறும் போருக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவும் இந்தியாவினால் முடியவில்லை. அதேவேளை போரை நிறுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவும் முடியவில்லை. இந்திய அரசாங்கம் போரை நிறுத்தத் தவறுமேயானால் அதன் பாதிப்புகள் இன்னும் சில மாதங்களில் வரப் போகின்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் நிச்சயம் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

எனவே பிரணாப் முகர்ஜியின் கொழும்பு வருகை பெரும் திருப்பங்களுக்கு இடம்கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும் இந்திய மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு தீர்வைத் தேடுகின்ற ஒரு பயணமாகவே இருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இவரது பயணம் தீர்வைக் கொடுக்கும் என்று எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாத நிலையே காணப்படுகிறது.

- சத்திரியன்

Comments