வெள்ளக்காடானது வன்னிப்பெரு நிலப்பரப்பு: பெரும் அவலத்தில் இடம்பெயர்ந்த மக்கள்



வன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் கடுமையாக மழை பெய்துகொண்டிருக்கின்றது. பகல் இரவாக அடை மழையாக கடும் மழை பொழிவதால் வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தற்காலிகக் குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் பெரும் துன்பத்துக்கு மீண்டும் அவர்கள் ஆளாகியுள்ளனர்.

கடும் மழையால் வன்னியின் அநேக குளங்கள் நிரம்பி வழிந்தோடுகின்றன. இதன் காரணமாக வன்னியின் பல வீதிகளையும் மூடி வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கின்றது. இதனால் மக்களின் போக்குவரத்துக்கள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நிரந்தரக் குடியிருப்புக்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.



கடந்த சில நாட்களாக ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சு மற்றும் படையினரின் அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

கடும் மழை பெய்து கொண்டிருப்பதனாலும் வெள்ளத்தினால் வீதிகள் துண்டிக்கப்படுள்ளமையினால் இம்மக்கள் மிகவும் துன்பத்துக்கு ஆளான நிலையில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

வெள்ளம் பல வீதிகளையும் மூடிப் பாய்ந்து கொண்டிருக்கின்றது.



புளியம்பொக்கணை, பெரியகுளம், கண்டாவளை, தர்மபுரம், நெத்தலியாறு, விசுவமடு, குமாரசாமிபுரம், தேறாங்கண்டல், வள்ளிபுனம் போன்ற பகுதிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதுடன் வீதிகளை மூடி வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருக்கின்றது.

தேறாவில் குளம் நிரம்பியுள்ளதால் வீதி மூடப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

பரந்தன் - முல்லைத்தீவு சாலையில் பல இடங்களில் வீதிக்குக் குறுக்காக வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கின்றது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களை மீட்கும் பணியிலும் வீதிகளைச் செப்பனிடும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக வட்டக்கச்சி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணை வீச்சுக்களாலும் மிகையொலி போர் வானூர்திகளின் குண்டு வீச்சுகளாலும் இரண்டுக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

அப்பகுதி மக்களும் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறனர். இம் மக்களும் மழை வெள்ளத்தினால் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.



Comments