களநிலைவரங்கள் புலிகளுக்கு சாதகமாக மாறுகின்றனவா?

பயங்கரவாதத்தை தோற்கடித்து, எவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியுமென்ற கேள்வி, இலங்கையில் எழுந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் கவலை கொண்டுள்ளார். 1948 இல் ஐ.நா.வில் உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சாசனம், ஒரு மரணித்த சாசனமாக வாழ்வதை, அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனங்கள் புரிந்து கொள்கின்றன.

இறந்தவரின் "எட்டு' வீட்டில், அவர் விரும்பிய பொருட்களை படைப்பது ஐதீகம். அதில் ஒன்றாக மனித உரிமைச் சாசனத்தையும் இணைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தச் சாசனம் எழுதப்பட்ட நாள் முதல், இற்றை வரை, அமெரிக்க உலக நாயகன், வியட்னாமில் செய்த மனித உரிமை மீறல்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் மனித உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த சதிகளும் கொலைகளும் அழிவாயுத மாயமானைத் தேடுவதாக உலகை ஏமாற்றி ஈராக்கிய மக்களின் இயல்பு வாழ்வினைப் பறித்த கொடூரமும், பிலிப்பைன்ஸில் இராணுவத் தளம் தேடி, அங்கு போராடும் புதிய மக்கள் இராணுவத்தை அழிக்க முனைந்த கதையும் நீண்டு செல்கிறது.

உலகச் சண்டியரின் பெருமை பொருளாதாரச் சீரழிவினால் அம்பலமான நிலையில் வெற்றுப் பெருங்காய டப்பா போல் மணம் வீசுகின்றது ரொபேர்ட் ஓ பிளேக்கின் ஏகாதிபத்திய வார்த்தைகள். ஆகவே மனித உரிமைகள் சாசனத்தின் மேல் ஏறி நின்று பயங்கரவாதம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்பவர்களே தமிழர் தலைமையினை நிராகரிக்கின்றார்கள். அடிப்படை மனித உரிமைக் கோட்பாட்டிலிருந்து வளர்ச்சியுற்ற உன்னத பரிமாணப் படிநிலைதான் சுயநிர்ணயக் கோட்பாடு. அது ஒரு தேசிய இனத்திற்குரித்தானது. ஒரு தேசிய இன மக்கள் கூட்டத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட மனித உரிமை, சுயநிர்ணயமாகப் பரிணமிக்கின்றது.

இவ்வுரிமை, ஏனைய தேசிய இனங்களின் மனித உரிமையைப் பறித்தெடுப்பதாக வெளிப்படையாகக் கூறா விட்டாலும் நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு என்கிற வரையறைக்குள் உட்படவில்லையென்று அமெரிக்கா போன்ற நாடுகளால் கூறப்படுகிறது.ஆகவே தமிழ்த் தேசிய இறையாண்மைக்கும், பேரினவாதம் பேசும் ஒடுக்குமுறை இறையாண்மைக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு என்கிற தத்துவங்கள், எப்படி, எங்கே பொருந்துமென்பதை அமெரிக்காவும் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் தீர்மானிப்பதுதான் தொடர் வரலாறாகிக் கொண்டிருக்கிறது. தூதுவர் "ஓ பிளேக்' இன்னுமொரு விடயத்தையும், அமெரிக்க வர்த்தக சம்மேளனக் கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.

அதாவது "விடுதலைப் புலிகள் பல வழிகளிலும் தளர்வுற்ற நிலையில் இருப்பதால் தற்போது அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டும்' என்கிறார்.கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்தவர்களுக்கு ஜனநாயக பிரசங்கங்கள் நிகழ்த்திக் களைப்படைந்த "ஓ பிளேக்' வன்னியிலும் போதனைகள் நடத்தும் காலம் வருöமனக் கனவு காண்கிறார். அல்லது விடுதலைப் புலிகள் பாய்ச்சலை மேற்கொண்டு, இழந்த இடங்களை கைப்பற்ற முன், புலிகளை முல்லைத்தீவிற்குள் முடக்கி, தாயகக் கோட்பாடில்லாத அரசியல் தீர்வினை திணிக்கலாமெனவும் அந்த வெள்ளைச் சிங்கம் எண்ணலாம்.

இதில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விடயமே பிராந்திய நலனை அடையத் துடிக்கும், வல்லரசு நாடுகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. முத்தமிடும் தூரத்தில் "சிவந்த மண்' (கிளிநொச்சி) இருப்பதாக பாதுகாப்பு பேச்சாளர் கூறிய ஓரிரு தினங்களில் பெருஞ் சமரொன்று நிகழ்ந்துள்ளது. கிளிநொச்சிக்கு 5 கி. மீற்றர் மேற்கேயுள்ள புதுமுறிப்பு, ஊற்றுப் புலம் ஊடாகவும், தென்பகுதியிலுள்ள அறிவியல் நகர் ஊடாகவும் இரு முன்னகர்வுகளை முன்னெடுத்த இராணுவம், தமது முறியடிப்புச் சமரில் 120 படையினரை இழந்துள்ளதாகவும். 12 சடலங்கள் தம்மால் மீட்கப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த படையினரின் எண்ணிக்கை 280 க்கு மேல் இருக்கலாமென கூறப்படுகிறது. புலிகளின் பாய்ச்சல் எப்போது எனக் கேள்வி எழுப்பும் தமிழ் மக்களு க்கு அமெரிக்க தூதுவரின் அரசியல் தீர்வும் கரிசனை களும் இலங்கை இராணுவப் பலம் குறித்த இந்திய ஆய்வாளர்களின் சந்தேகங்களும் சில விடயங்களை கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த வாரக் கட்டுரையொன்றில் முன்னாள் அமைதிப் படையின் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன் எழுப்பிய மூன்று கேள்விகள் குறித்து சற்று விபரிக்க வேண்டும்.


1. கிளிநொச்சி நோக்கிய இராணுவ நகர்வு ஏன் ஊர்ந்து செல்கின்றது?

2. விடுதலைப் புலிகளின் பலம் அதிகரித்து விட்டதா?

3. ஒரு பாரிய செயற்பாட்டுச் சிக்கலினை அல்லது அரசியல் அழுத்தத்தினை இராணுவத் தளபதி எதிர்கொள்கின்றாரா?


இத்தனை காலமாக, இராணுவச் செய்திகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக அடுக்கடுக்காக ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, அரசிற்குச் சார்பான பரப்புரைக் களப் பணியாற்றிய இவருக்கு திடீர் ஞானம் உதித்து விட்டதென ஏற்றுக் கொள்ளலாமா? ஆயினும் உண்மையான கள யதார்த்தம் வெளிவரத் தொடங்குகிறது. ஐந்து தடவைகள் முட்டி மோதிய 53 ஆவது படையணி, முகமாலையில் பேரிழப்புக்களை சந்தித்த சான்றுகள், சகல ஊடகங்களிலும் முன்பு வெளிவந்திருந்தன. ஆனாலும் விளாத்திக்குளம், குஞ்சுப் பரந்தன், பெரிய மடு, அடம்பன், நாச்சிக்குடா, அக்கராயன், மல்லாவி போன்ற பல இடங்களில் விடுதலைப் புலிகள் நடத்திய ஊடறுப்புச் சமர், முறியடிப்புச் சமர்களில் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகம்.

அதிலும் கொல்லப்பட்ட இராணுவத்தினர், எப்படைப் பிரிவைச் சேர்ந்தவர்களென்பது பற்றி ஹரிஹரனின் கேள்விகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பதிலுக்கான தரவு. இலங்கை காவல்துறைக்கு, ஒரு விசேட அதிரடிப்படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. அதேபோன்று இராணுவத்திற்கென, அதியுயர் பயி ற்சி பெற்ற சிறப்புப் படையொன்று கேணல் ஒருவர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.இச் சிறப்புப் படையணி, கிழக்கு படை நடவடிக்கையிலும் களமிறக்கப்பட்டது. பின்னர் வன்னியிலும் களமிறக்கப்பட்டனர்.

இவர்களின் இராணுவ முக்கியத்துவம் என்னவென்றால் கேந்திர மையங்களை நோக்கிய முன்னகர்வுகளில் முன் செல்லும் படையணியாக இருப்பதுதான். சகல படைத்துறைப் பரிமாணங்களையும் கற்றறிந்து பயிற்சி முடித்த இச் சிறப்புப் படையணி, கடும் இழப்புகளை எதிர்கொண்டால் புலிப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் இராணுவப் படையணிகள் பலமாக இருக்குமா? விடுதலைப் புலிகளுடன் வன்னியில் மேற்கொள்ளும் சமரில் புதிய கொமாண்டோ தாக்குதல் உத்திகள் கலந்த தந்திரோபாயமொன்று பிரயோகிக்கப்படுவதாக இராணுவத் தளபதி முன்பு கூறியதை நினைவுபடுத்திப் பார்க்கலாம்.

இந்த சிறப்புப் படையணியைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் சிறப்புப் படை என்பனவாகும். கிளிநொச்சி, கொக்காவில், ஒலுமடுவில் இந்தச் சிறப்புப் படையணியின் சிறு எண்ணிக்கையான குழுக்களே, முன்னகர்வு முயற்சியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு படைப்பிரிவை வன்னிக்கு அழைத்தால் நாகர்கோவிலுக்கு ஆபத்தென்பதை புரிந்துகொள்ளும் இராணுவம், மட்டக்களப்பிலிருந்து சிறு தொகையில் படையினரை நகர்த்த ஆரம்பித்துள்ளது.

இந்த சிறப்புப் படையணியைச் சிதைப்பதிலேயே, விடுதலைப் புலிகள் தமது தந்திரோபாய நகர்வுகளை இத்தனை காலமாக பொறுமையுடன் பிரயோகித்து வந்துள்ளார்களென ஊகிக்க இடமுண்டு. தமக்கான காலம் அண்மித்து வருவதாக புலிகளின் அரசியல் துறைச் செயலர் பா. நடேசன் அண்மையில் கூறியதை நினைவிற் கொள் ளலாம்.கிளிநொச்சி தாக்குதலில், மேற்கில் முன்னகர்ந்த சிறப்பு அணி 1 இன், 90 படையினர் கொல்லப்பட்டதாக கூறப்படுவது இப்படையணியின் கடும் இழப்புகளை சுட்டிக் காட்டுகிறது.

ஒக்டோபர் 31 இல் அக்கராயன் அணையைக் கடக்கும் போதும் நவம்பர் 15 இல் பூநகரியை கைப்பற்றும் போதும், நவம்பர் 17 இல் மாங்குளத்தில் காலடி வைக்கும் போதும், இச் சிறப்பு அணி பெரும் இழப்புகளை சந்தித்தது.இதேவேளை முன்பு எத்தனையோ விமானங்களைச் சுட்டு வீழ்த்திய விடுதலைப் புலிகள், முன்னரங்க நிலைகளில் பறக்கும் யுத்த உலங்கு வானூர்திகளை சுட்டு வீழ்த்தாமல் இருப்பதன் காரணத்தைப் புரிந்து கொள்ள, சிறப்புப் படையணி குறித்த முக்கியத்துவம் நோக்கப்பட வேண்டும்.

- சி.இதயச்சந்திரன் -



Comments