ஆழிப்பேரலை அனர்த்த மீட்சியிலும் இனப்பாகுபாடும் ஓரவஞ்சனையும்


சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் - கடலுக்கு அடியில் - ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு - நினைவு - நாள் இன்றாகும்.
பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது.

இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்து களை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது.
இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் கிழக்குப் புற கடலோர மக்கள் இன்னும் மீளவேயில்லை.

அந்தப் பேரனர்த்தத்தின் நினைவழியா இந்த நாட்களில்தான் மீண்டும் ஒரு தடவை வெள்ளப் பேரனர்த்தம் வடக்கு, கிழக்கு மக்களைப் போட்டுப் புரட்டி எடுத்திருக்கின்றது.

அந்த ஆழிப்பேரலை ஏற்படுத்திய அழிவுகளும், நாசங்களும், கொடூரங்களும், அவலங்களும், அனர்த்தங்களும் இன்னும் மனதைவிட்டு அகலவில்லை என்றால், மறுபுறம் அப்பேரழிவில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம், புனர்வாழ்வு, மீள்கட்டமைப்பு வசதிகளை வழங்கல் என்ற பெயரில் இங்கு அரங்கேறிய அவலங்களும், அவலட்சணங்களும், அட்டூழியங்களும் சொல்லில் அடங்காதவை; கூறி மாளாதவை. அவை ஏற்படுத்திய வடுக்களும், காயங்களும் ஆழிப்பேரலை ஏற்படுத்தியவற்றை விட ஆழமானவை; நோகடிக்கக்கூடியவை.

வாழ்வாதார உரிமைகளாகட்டும், அபிவிருத்திப் பணிகளாகட்டும், பிரதேசக் கட்டுமானங்களாகட்டும், தொழில் வசதி மற்றும் வேலைவாய்ப்புப் போன்ற ஏனைய வசதி வாய்ப்புகளாகட்டும், அவற்றைத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு வழங்குவதில் ஓரவஞ்சனையும், பாகுபாடும் காட்டி, ஒதுக்கும் தென்னிலங்கை அரசு, ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணியிலும் அந்தப் பேரினவாதத் தலையீட்டைக் கனகச்சிதமாகக் காட்டி நிறைவேற்றத் தவறவில்லை என்பதே உண்மையாகும்.

இலங்கையில் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவை வடக்கும், கிழக்கும்தான். அதிகம் பாதிக்கப்பட்டோர் தமிழர்களும், முஸ்லிம்களும்தான். இலங்கையில் சுமார் எழுபத்தியைந்து வீதம் பாதிப்பை எதிர்கொண்டவர்கள் இவர்கள்தான்.

ஆனால், அதிக அளவில் அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு வசதிகள் தெற்குக்கே வழங்கப்பட்டிருக்கின்றன. ஆழிப்பேரலை அனர்த்த மீள் கட்டமைப்புக்காக சர்வதேசம் வழங்கிய உதவிகளை இலங்கைத் தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - பாதிப்பின் அடிப்படையில் - சமச்சீராகப் பகிர்ந்தளிக்காமல் அதிலும் தமிழ் பேசும் மக்களின் பங்கைச் சூறையாடி, சுத்தி, தென்னிலங்கைச் சிங்கள மக்களுக்கு வழங்கி ஏப்பம் விட்டிருக்கின்றது கொழும்பு.

ஆழிப்பேரலை மீள்கட்டுமானத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வீடுகள் பற்றிய புள்ளி விவரம் இதனை அம்பலப்படுத்தப் போதுமானதாகும். மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையிலும், அருகில் உள்ள களுத்துறை மாவட்டத்திலும் - பாதிப்பை விடக்கூடிய அளவுக்கு - தேவையிலும் விஞ்சிய எண்ணிக்கையில் - பல்லாயிரக் கணக்கில் மேலதிகமாக வீடுகள், இந்தத் திட்டத்திற்கு என சர்வதேச சமூகம் வழங்கிய உதவிகளைச் செலவிட்டுக் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வீடுகளில் அரைவாசி எண்ணிக்கை கூட இன்னும் மீளக் கட்டப்படவேயில்லை.

இதனால் அங்கு ஆழிப்பேரலையால் வீடு வாசல்களை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் - நான்கு ஆண்டுகள் கடந்தும் - அகதி முகாம்களிலும், நலனோம்பு நிலையங்களிலும் தங்கி, வாழ்வைத் தொலைத்து அந்தரிக்கின்றனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பல பாடசாலைகள் இன்னும் தற்காலிக கொட்டில்களில்தான் இயங்குகின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் இதே நிலைமை உள்ளது.
மக்களின் சகல வாழ்வியல் அம்சங்களிலும் இத்தகைய இனப்பாகுபாட்டைக் கொழும்பின் பௌத்த - சிங்களப் பேரினவாத அரசு வெளிப்படுத்தி வருவதனாலேயே ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணியையாவது சமச்சீராக முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, அப்பணியை மேற்கொள்ள சகல இனக் குழுமங்களின் தரப்புகளையும் உள்ளடக்கும் வகையில் ஒரு பொதுக் கட்டமைப்புக்கு பிரேரிக்கப்பட்டது. நீண்ட - ஆறுமாத கால - அரசியல் இழுபறிக்குப் பின்னர் அதற்கான ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், பௌத்தத்தையும் சிங்களத்தையும் மட்டும் பேணி வளர்ப்பதைத் தலையாய நோக்கமாகக் கொண்ட இந்த நாட்டின் சட்டங்களும், அவற்றை வியாக்கியானப்படுத்தும் நீதித்துறையும், அதன் முன்னால் இந்த விடயத்தை எடுத்துச் சென்ற பௌத்த - சிங்களப் பேரினவாதத் தரப்புகளும் சேர்ந்து அந்தப் பொதுக் கட்டமைப்பைக் குழிதோண்டிப் புதைத்து, சமாதி கட்டி, நல்லடக்கம் செய்தன.

விளைவு.........?

ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணிகளுக்கு எனத் தான் வழங்கிய நிதி இலங்கைத் தீவில் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் இனம், மொழி மற்றும் பிரதேச வேறுபாடு - பாகுபாடு - காட்டப்படாமல் - சரியாகவும், சமச்சீராகவும் பகிர்ந்தளிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணித்து உறுதிப்படுத்த இயலாத நிலையில் இருந்த சர்வதேசத்தை, வகையாக ஏமாற்றி இதில் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது கொழும்பு ஆட்சிப்பீடம். தமிழர் பிரதேசத்தைப் புறமொதுக்கி, ஓரங்கட்டிவிட்டுத் தென்னிலங்கைக்கு மட்டும் - மிதமிஞ்சிய அளவில் கொட்டிக் கொடுத்திருக்கிறது அரசு.

சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதிராக இத்தேசத்தில் அரங்கேறும் அட்டூழியங்களுக்கு ‘ஒரு சோறு பதம்’ போல ஆழிப்பேரலை மீள்கட்டுமானத்தில் காட்டப்படும் ஓரவஞ்சனை அமைகிறது.

Comments