இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தமிழகத்தை செயலிழக்கும் 10 நாள் தொடர் போராட்டம்: மருத்துவர் இராமதாஸ் அறிவிப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காக தமிழகமே செயலிழக்கும் அளவில் 10 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்து வைத்து இராமதாஸ் ஆற்றிய உரையின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், "இன்று போய் நாளை வா'' என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்துவிட்டுத்தான் செல்வேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும்.

இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதல்மைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.

தமிழன் என்றால், மத்திய அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை என்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சமாதி கட்டி இருப்பார்கள். இந்த கருத்துக்கு மறுப்பு யாராவது தெரிவித்தால், அவர்கள் சென்னையில் மேடை போட்டு சொல்லட்டும். அதில் நானும், திருமாவளவனும் பேசுவோம்.

இதே மறைமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் கறுப்புச் சட்டை அணிந்து 1,000 தீபங்கள் ஏற்றினோம். 7 கோடி தமிழர்களும் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி, இலங்கை தமிழர்களை காக்க வேண்டும் என்றார் அவர்.



Comments